Home » தோட்டத் தொழிலாளரின் 1700 ரூபா சம்பள உயர்வு

தோட்டத் தொழிலாளரின் 1700 ரூபா சம்பள உயர்வு

ஏப்ரல் 10 ஆம் திகதிக்குள் நல்ல முடிவு கிடைக்கும் என்கிறார் அமைச்சர் ஜீவன்

by Damith Pushpika
March 31, 2024 6:00 am 0 comment

பெருந்தோட்ட கம்பனிகள் இதற்கு இணங்காத பட்சத்தில் சம்பள நிர்ணய சபையை கூட்டி தீர்வை பெற்றுத் தருமாறும் கோரிக்கை

நாட்டில் தற்போது அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. இதனால் வாழ்க்கைச் சுமையும் அதிகரித்து சாதாரண வருமானம் பெறும் மக்கள் பரிதவித்து வருகின்றனர். அஸ்வெசும உட்பட சில நலன்புரித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் மக்கள் மீதான பொருளாதாரச் சுமைகள் குறையவில்லை என்பதே கசப்பான உண்மையாகும்.

இந்நிலையில் அரச ஊழியர்களுக்கு இம்மாத சம்பளத்துடன் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. ஆனால் ஈராண்டுகளுக்கு மேலாக சம்பள உயர்வு கிடைக்குமென வழிமீது விழிவைத்து காத்திருக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்வு தொடர்பில் இன்னும் நிச்சயமற்ற நிலையே நீடிக்கின்றது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுவரும் நிலையில் தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கேற்ப குறைந்தபட்ச நாட் சம்பளமாக 1 700 ரூபா அவசியம் என்பதை இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார். இந்த கோரிக்கை நியாயமானது என்பதற்கான காரணிகளையும் அவர் முன்வைத்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களை நாட்கூலி என்ற வரையறையில் இருந்து வெளியேற்றி அவர்கள் சொந்தக்காலில் நிற்பதற்கு ஏதுவான வகையில் நிலையானதொரு பொறிமுறைையை உருவாக்கிக்கொள்வதே அமைச்சர் ஜீவனின் இலக்காகும். அந்த இலக்கை நோக்கி பயணிப்பதற்கான நகர்வுகளையே அவர் முன்னெடுத்துவருகின்றார்.

இந்த இலக்கை ஒரே இரவில் அடைந்துவிடமுடியாது. இலக்கை அடையும்வரை சம்பள உயர்வு அவசியம். அதனை பெற்றுக்கொடுப்பதற்கான தீவிர முயற்சியில் அமைச்சர் தற்போது ஈடுபட்டு வருகின்றார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் அண்மையில் நடைபெற்றது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்க பிரதிநிதிகள் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது சம்பள உயர்வு தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்களால் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவு குறித்து ஆராயப்பட்டுள்ளது. இந்த யோசனையானது கம்பனிகளுக்கு சார்பான வகையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது மூன்றாண்டுகளுக்கு ஒருமுறையே சம்பள உயர்வு, அடிப்படைச் சம்பள அதிகரிப்பு இல்லாமல் கொடுப்பனவு ஊடாக சம்பள உயர்வு, பறிக்கப்படும் கொழுந்தின் அளவு என முதலாளித்துவ நோக்கில் மட்டுமே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக 33 சதவீத சம்பள உயர்வுக்கான விருப்பமே பெருந்தோட்ட கம்பனிகளின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கம்பனிகளின் இந்த யோசனையை அமைச்சரும், இ.தொ.காவின் பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் அடியோடு நிராகரித்துவிட்டார். 1700 ரூபாவுக்கு குறைவான சம்பளத்தை ஏற்க முடியாது எனவும் அறிவித்துள்ளார்.பெருந்தோட்ட கம்பனிகள் இதற்கு இணங்காத பட்சத்தில் சம்பள நிர்ணய சபையை கூட்டி தீர்வை பெற்றுத் தருமாறு தொழில் அமைச்சரிடம், ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.இதற்கு தொழில் அமைச்சர் தரப்பில் சாதகமான பதில் வழங்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் ஏப்ரல் 10 ஆம் திகதிக்குள் நல்ல முடிவு கிடைக்கும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் எதிர்பார்க்கின்றார். சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு தொடர் அழுத்தங்களையும் பிரயோகித்து வருகின்றார்.

1 700 ரூபா என்ற யோசனைக்கு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன. இதர பிரதான தொழிற்சங்கங்களும் ஆதரவைத் தெரிவித்துள்ளன.

எனினும், சம்பளப் பிரச்சினை இழுபட வேண்டும் என்ற குறுகிய நோக்கில் மேலும் சில தொழிற்சங்கங்கள் 2,500, 3000 ரூபா என்றெல்லாம் யோசனைகளை முன்வைத்து வருகின்றன.

தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையில் அரசியலை புகுத்த முற்படக்கூடாது. அவர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க கட்சிகளும், தொழிற்சங்கங்களும் ஒன்றுபட வேண்டும். இதற்கான அழைப்பை அமைச்சர் ஜீவன் தொண்டமான் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறையும் இழுத்தடிப்புகளுக்கு மத்தியிலேயே தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கப்பெற்றது.

பெருந்தோட்டக் கம்பனிகள் இழுத்தடிப்பு செய்ததால் சம்பள நிர்ணயசபை ஊடாக தீர்வு வழங்கப்பட்டது. இம்முறையும் கூட்டு ஒப்பந்தத்துக்கான சாத்தியம் இல்லை என்பதால் சம்பள நிர்ணய சபை ஊடாகவே தீர்வுக்கான சாத்தியம் உள்ளது என தெரியவருகின்றது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமை, வீட்டுரிமை என்பவற்றை பெற்றுக்கொடுப்பதற்கு கச்சிதமான முறையில் அரசியல் – இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுத்துவரும் ஜீவன் தொண்டமான், சம்பள பிரச்சினைக்கும் நிலையானதொரு தீர்வை பெற்றுக்கொடுப்பார் என்ற நம்பிக்கை தொழிலாளர்கள் மத்தியில் உள்ளது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division