Home » அடுத்து இந்தியாவை ஆளப்போவது யார்?

அடுத்து இந்தியாவை ஆளப்போவது யார்?

by Damith Pushpika
March 24, 2024 6:12 am 0 comment

இந்திய மக்களவைத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு அனைத்துக் கட்சிகளும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கி விட்டன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 வாக்குப்பதிவு நடைபெறுகிறது.தேசிய கட்சியான பாரதிய ஜனதா தமிழ்நாட்டில் அதிக இடங்களை வென்றெடுக்க வேண்டும் என்று தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அண்மைக்காலமாக அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளை பின்னுக்குத்தள்ளிவிட்டு பா.ஜ,க ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்று முழுமுச்சாக பிரதமர் ஈடுபாட்டுடன் செயல்படுகிறார்.

தமிழ்நாட்டில் பேரிடர்கள் ஏற்பட்ட போது ஒரு முறை கூட எட்டிப்பார்க்காத பிரதமர் தேர்தலுக்காக அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வந்து போக எப்படி நேரம் கிடைக்கிறது? என்று தமிழ்நாட்டு மக்களும், கட்சிகளும் வினா எழுப்புவதற்கு பதில் சொல்லாமலும். தமிழ்நாட்டில் ஆளும்கட்சியான திமுகவை குறை கூறியும் பிரதமர் முன்னெடுக்கும் தேர்தல் பரப்புரை எந்தளவுக்கு கைகொடுக்கும் என்று உறுதிப்படச் சொல்ல முடியாது. ஏனென்றால் தமிழ்நாட்டு மக்கள் சிந்திக்காமல் வாக்களிக்க மாட்டார்கள்.

தமிழ் நாட்டில் அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று முனைப்புக் காட்டி வரும் பிரதமர் கொங்கு மண்டலத்தை குறிவைத்து தனது பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். கொங்கு மண்டலமான கோவையில் பா.ஜ.க ஏற்கனவே வெற்றி பெற்றிருப்பதால் மீண்டும் இது பா.ஜ.க.வுக்கான வெற்றிக் கோட்டையாகப் பார்க்கப்படுகிறது. கோவை தொகுதி தவிர பொள்ளாச்சி, திருப்பூர், சேலம் மற்றும் நீலகிரி தொகுதிகளையும் பா.ஜ.க குறிவைத்துள்ளது.

கொங்கு மண்டலம் முழுவதும் அ.தி.மு.கவின் கோட்டையாக இருந்து வரும் நிலையில் அந்தப் பகுதிகளை பா.ஜ.க குறிவைப்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அ.தி.மு.க, பா.ஜ.க.வோடு கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருப்பதால் அ.தி.மு.க.வின் ஓட்டுகளை பா.ஜ.க பறிப்பதில் முனைப்புக் காட்டி வருகிது. அ.தி.மு.கவுடன் பெரிய கட்சிகள் எதுவும் கூட்டணி வைக்காததால் தனித்துவிடப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிச்சாமி என்ன செய்வது என்று தெரியாமல் கையறு நிலையில் இருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியின் சின்னமான விவசாயி கரும்பு சின்னம் பறிக்கப்பட்டு வேறு ஒரு கட்சிக்கு வழங்கப்பட்டது போல அ.தி.மு.கவின் சின்னமான இரட்டை இலைச் சின்னமும் பறிக்கப்பட்டு விடுமோ என்ற பயமும் அ.தி.மு.க.வுக்கு இருக்கிறது. இரட்டை இலைச் சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என்று ஒ.பன்னீர்செல்வமும் வழக்குத்தொடுத்து நெருக்கடி கொடுத்து வருகிறார். இதை சாதகமாக வைத்துக் கொண்டு பா.ஜ.க, அ.தி.மு.கவின் வாக்குகளை பெற்று விடலாம் என்று நம்புகிறது.

இதற்கிடையே பா.ஜ.க.வின் திட்டத்தை தவிடுபொடியாக்கி வெற்றிக்கனியைப் பறிக்க தி.மு.க.வும். அ.தி.மு.கவும் பல்வேறு வியூகங்களை அமைத்து களமிறங்க உள்ளன. கடந்த சட்டசபைத் தேர்தலில் கோவையில் 10 தொகுதிகளை இழந்த தி.மு.க இம்முறை அது போல நடந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. இதன் காரணமாக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதியும் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி பாராளுமன்ற தொகுதிகளின் மீது அதிக அக்கறை காட்டி வருகின்றனர். அவர்களின் நேரடிப் பார்வையில் இந்த தொகுதிகளில் தேர்தல் பணியாற்ற வியூகம் அமைத்து வருகின்றனர்.

கடந்த தேர்தலில் கோவை தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தது. இந்த முறை கோவை தொகுதியை வென்று பலத்தை நிரூபிக்க வேண்டும் என, தி.மு.க கட்சியே போட்டியிட முடிவு செய்துள்ளது. இது வரவேற்கப்பட வேண்டியது. ஏனென்றால் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு என்ன செய்யவேண்டும் என்பது தமிழ்நாட்டை ஆளும் கட்சிக்குத்தான் நன்றாகத் தெரியும். மக்களும் இதைத்தான் நம்புவார்கள். தேசிய கட்சியால் தங்கள் கட்சிக்கு முழுமையான பலன் கிடைக்காது என்றும் மக்கள் நம்புகிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலைப் போலவே, இந்த முறையும் அனைத்து தொகுதிகளையும் வென்று விட வேண்டும் என்று தி.மு.க தலைமையிலான கூட்டணிக் கட்சிகளும் தேர்தல்களத்தில் பணியாற்றி வருகின்றன.

அதேசமயம் கோவையில் 9 சட்டசபை தொகுதிகளை கைப்பற்றிய அ.தி.மு.க அதனை தக்க வைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இயங்கிவருகிறது.

இதற்காக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பல்வேறு வியூகங்களை அமைத்து, தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர். பா.ஜ.க, தி.மு.க அறிவிக்கும் போட்டியாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் சரியான போட்டியாளரை களமிறக்க வேண்டும் என்று அ.தி.மு.கவும் காத்திருக்கிறது.

தமிழ்நாட்டின் இன்னொரு பெரிய கட்சியான பா.ம.க கடந்த தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. தற்போது அ.தி.மு.கவிலிருந்து வெளியேறி பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டது. பாரதிய ஜனதாவுக்கு பா.ம.க சில நிபந்தனைகளை முன்வைத்தே கூட்டணியில் இணைந்துள்ளது. கூட்டணியில் சேர்ந்தால் அமைச்சர் பதவி கட்டாயம் வேண்டும் என்று பா.ம.க அடம்பிடித்தே கூட்டணியில் சேர்ந்துள்ளது. முதலில் கூட்டணியில் சேருங்கள் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று பா.ஜ.க.வும் கூட்டணியில் சேர்த்துக்கொண்டது.

தி.மு.க.வில் விடுதலை சிறுத்தைகள் இருப்பதால் அங்கே செல்ல பா.ம.க.வுக்கு வாய்ப்பே இல்லை. தனித்துப் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் இல்லை, எவ்வளவு முரண்டு பிடித்தாலும் பா.ம.க-, பா.ஜ.க.வோடு இணைவதைத் தவிர வேறு வழியே இல்லை. என்ற நிலை ஏற்பட்டதால் பா.ம.க, – பா.ஜ.க கூட்டணி முடிவாகி இருக்கிறது. பா.ஜ.க.வும் தங்கள் கூட்டணியைப் பலப்படுத்தவே பல முயற்சிகளை எடுத்து வருகிறது. பா.ஜ.க.வின் கூட்டணி சரியாக அமைந்தால், வெற்றி வாய்ப்பும் கூடுதலாக இருக்கும். மக்களும் புதிய கூட்டணியை ஆதரித்து ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பார்க்கலாம் என்ற மனநிலைக்கு வருவார்கள்.

பா.ஜ.க இந்தியாவின் ஆளும் கட்சியாக இருப்பதால் தங்களை எதிர்க்கும் கட்சிகளை விமர்சனத்தால் மட்டுமல்லாமல் ஊழல் ஒழிப்பு என்ற கைது நடவடிக்கை மூலமாகவும் பல வழிகளில் நெருக்கடிகள் கொடுத்து வருகிறது. அதேநேரத்தில் தேர்தல் பத்திரம் மூலமாக, பா.ஜ.க மிகப்பெரிய ஊழல் செய்துள்ளதாக எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றன. பா.ஜ.க தங்களுடைய ஊழல் குற்றச்சாட்டை மறைக்க, எதிர்க்கட்சிகள் மீது பொய்ப்பிரச்சாரம் செய்வதோடு கைது நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டும் இங்கே முன்வைக்கப்படுகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுவது போல பா.ஜ.க.வை ஆட்சி பீடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டுமானால். இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றால். தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற வேண்டும். தி.மு.க வெற்றி பெற வேண்டுமென்றால் கூட்டணியின் வலுவை பாதுகாக்க வேண்டும். இதற்கு மக்களும் கைக்கொடுக்க வேண்டும் என்று அவர் விரும்புவதும் பெரும்பாலானவர்களின் விருப்பமும் அதுவாகவே இருக்கின்றது.

எல்லாக் கட்சிகளும் மக்களின் நலன் கருதியே தேர்தல் களத்தில் நிற்கின்றன. இதுவரையில் மக்கள் என்ன பயனடைந்தனர், இனி என்ன பயனடையப் போகிறார்கள் என்பதும் வினாவாக இருக்கிறது. எனவே யார் எத்தகைய கூட்டணி அமைத்தாலும் மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களே ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்ற முடியும். பத்து வருடத்திற்கு மேல் ஒரே கட்சியிடம் ஆட்சிப் பொறுப்பை மக்கள் ஒப்படைப்பதில்லை. இதுதான் இந்திய அரசியல் நிலைப்பாடு. அடுத்து இந்தியாவை ஆளப் போவது யார்? காத்திருப்போம்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division