அகில இலங்கைக் கம்பன்கழகம் ஆண்டுதோறும் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலுமாக கம்பன் விழாக்களை நடத்திவருகிறது. அவ்விழாக்களின் வரிசையில் 2024ஆம் ஆண்டுக்கான கொழும்புக் கம்பன் விழாவினை எதிர்வரும் ஜூன் மாதம் நடாத்தவுள்ளது. இவ் விழாவை முன்னிட்டுக் கழகம் ஆண்டுதோறும் நடத்திவரும் அமரர் துரை விஸ்வநாதன் ஞாபகார்த்தப் பேச்சுப்போட்டி, அமரர் பொன்.பாலசுந்தரம் ஞாபகார்த்த கவிதைப்போட்டி, நாவலர் நற்பணிமன்ற அனுசரணையுடன் நடாத்தப்படும் திருக்குறள் மனனப்போட்டி, இலக்கியப்புரவலர் ஹாஷிம் உமரின் அனுசரணையுடன் நடாத்தப்படும் இஸ்லாமிய இலக்கியப் பேச்சுப் போட்டி என்பவை பற்றிய விபரங்களைக் கொழும்புக் கம்பன் கழகம் அறிவித்துள்ளது.
மேற்படி பேச்சுப் போட்டி 02 பிரிவுகளாக நடைபெறவுள்ளது. மத்திய பிரிவுப் போட்டிகளில் 13 முதல் -16 வயதுக்குட்பட்ட மாணவர்களும், மேற்பிரிவு போட்டிகளில் 17- முதல் 30 வயதிற்குட்பட்ட போட்டியாளர்களும் கலந்து கொள்ளலாம்.
கவிதைப் போட்டி ஒரே பிரிவாக மட்டுமே இடம்பெறும். இதில் 14 முதல் -30 வயதுக்குட்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்ளலாம். ஏலவே இப்போட்டிகளில் கலந்து தங்கப்பதக்கப் பரிசில்களைப் பெற்றோர் தவிர்ந்த, மற்றையோர் மேற்படி போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
நாவலர் நற்பணி மன்றத் தலைவர் அமரர் என். கருணையானந்தனின் அனுசரணையுடன் நடைபெறும் திருக்குறள் மனனப் போட்டி ஒரேபிரிவாக மட்டும் நடைபெறும். இப்போட்டியில் தரம் 5 முதல் 8 வரையான வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்வோர் அறத்துப்பாலின் இல்லறவியலில் உள்ள அன்புடைமை முதல் அழுக்காறாமை வரையுள்ள பத்து அதிகாரங்களை (100 குறள்கள்) மனனம் செய்வதோடு அக்குறள்களுக்கான பொருளறிவையும் பெற்றிருத்தல் வேண்டும்.
இலக்கிய புரவலர் ஹாஷிம் உமரின் அனுசரணையோடு கழகம் இஸ்லாமிய தமிழிலக்கியப் பேச்சுப் போட்டியை பாடசாலை மாணவர்களுக்காக நடாத்தவுள்ளது. இப் போட்டி ஒரே பிரிவாக மட்டுமே நடைபெறும். இதில் பாடசாலை மாணவர் எவரும் கலந்து கொள்ளலாம்.
இப் போட்டியில் கலந்து கொள்வோர் சீறாப்புராணம் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள பின்வரும் தலைப்புக்களில் நடுவர் குழாமினால் உடன் தரப்படும் தலைப்பு ஒன்றில் தம் ஆற்றலை வெளிப்படுத்தவேண்டும்.
1. தமிழ்க் காப்பிய மரபில் சீறாப்புராணம்.
2. உமறுப் புலவரின் கவித்துவம்.
3. சீறாப் புராணம் காட்டும் இஸ்லாமியப் பண்பாடு.
4. சீறாப் புராணம் காட்டும் அறம்
5. கம்பரும் உமறுப் புலவரும்
போட்டியாளர்கள் சுயமாகத் தயாரிக்கப் பெற்ற விண்ணப்பப் படிவத்தில் தமது முழுப் பெயர், வயது, பிறந்ததிகதி, முகவரி, தொலைபேசி இலக்கம், மாணவராயின் பாடசாலையின் பெயர், ஆகியவற்றைக் குறிப்பதோடு தாம் கலந்து கொள்ளவுள்ள போட்டி விபரங்களையும் குறிப்பிட்டு, இல. 12, இராமகிருஷ்ண தோட்டம், கொழும்பு – 6 எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
கடித உறையின் மேற்பக்கத்தில் போட்டியாளர் விண்ணப்பிக்கும் போட்டி விபரத்தையும் எழுதுதல் வேண்டும். 2024 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்க வேண்டும். விரும்பினால் ஒருவரே இரு போட்டிகளிலும் கலந்துகொள்ளலாம். போட்டி நடைபெறும் திகதி போட்டியாளர்களுக்குத் தனித்தனியே அறிவிக்கப்படும்.
பாடசாலை மாணவர்களது விண்ணப்பங்களைத் தனித்தோ, தமிழ் மன்றங்களின் ஊடாக ஒரே தொகுதியாகவோ அதிபரின் உறுதிப்படுத்தலுடன் அனுப்பி வைக்கலாம்.
பேச்சு மற்றும் கவிதை போட்டிகளில் கலந்து கொள்வோர் உடன் தரப்படும் தலைப்புகளில் தம் ஆற்றலை வெளிப்படுத்தவேண்டும். தலைப்புக்கள் இலக்கியம், கலை, வாழ்வியல் தொடர்பில் அமைந்திருக்கும்.
தரமான நடுவர் குழுவினால் தெரிவு செய்யப்பெறும் முதல் மூன்று போட்டியாளர்களுக்கும் நடைபெறவுள்ள கம்பன் விழாவில் தங்க, வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும், சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கப்படும் எனவும் போட்டிகளில் இயல்பாளுமையை வெளிப்படுத்தும் போட்டியாளர்கள் கம்பன் விழா நிகழ்ச்சிகளில் இணைத்துக் கொள்ளப்படுவர் எனவும் கொழும்புக் கம்பன் கழகம் அறிவித்துள்ளது.