Home » அரசியலமைப்புக்கு உட்பட்ட சர்வாதிகாரம்
ஜனாதிபதி புட்டினின்

அரசியலமைப்புக்கு உட்பட்ட சர்வாதிகாரம்

by Damith Pushpika
March 17, 2024 6:00 am 0 comment

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஐந்தாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றார். இதில் புட்டின் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது. அவ்வாறு வெற்றி பெறும் நிலை ஏற்படும் போது புட்டின் 2031 வரை ஆட்சியில் அமர வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. 2012 முதல் பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் ஆட்சியில் தொடர்ச்சியாக புட்டின் ஆதிக்கம் செய்துவருகிறார். அவரது தலைமைத்துவத்தை அதிகம் ரஷ்ய மக்கள் நேசிப்பதாக சர்வதேச ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன. அண்மைய பிபிசி செய்தி அறிக்கை கூட அத்தகைய செய்தியை முதன்மைப்படுத்தியுள்ளது. புட்டினை எதிர்த்து போட்டியிடும் ரஷ்ய சோஷலிஸ்டுகள் கூட புட்டினின் வெற்றியை விரும்புவதாக தெரிகிறது. காரணம் மேற்குலகத்திற்கு எதிராக புட்டினின் தலைமைத்துவம் ரஷ்யாவை ஒன்றிணைக்கவும் பாதுகாக்கவும் உதவுவதாக கருதுகின்றனர். புட்டின் மீதான எதிர்ப்புவாதமும் தேர்தல் வெற்றிக்கான வாய்ப்புக்களும் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமானதாக உள்ளது.

விளாடிமிர் புட்டினின் ஆளுமையும் தனித்துவமும் அவர் அண்மையில் தக்கர் கார்சன் எனும் பிரபல ஊடகவியலாளருக்கு வழங்கிய செவ்வியில் கண்டு கொள்ளக் கூடியதாக அமைந்திருந்தது. மேற்குலகத்துடனான ரஷ்யாவின் முரண்பாட்டை வரலாற்று ரீதியாக ஆதாரப்படுத்தியதுடன் அமெரிக்கர்களது உலகம் மீதான ஆதிக்கத்தின் வடிவத்தையும் அது கட்டியெழுப்பப்பட்ட விதத்தையும் தெளிவாக வெளிக்கொண்டுவந்தார். அவரது வரலாற்று அறிவு என்பதும் யதார்த்த அரசியலுக்கான அணுகுமுறையும் உலகளாவிய மட்டத்தில் திகைப்பைத் தந்துள்ளது. மகாபீட்டர் முதல் இன்றுவரை ரஷ்யா மேற்குலகத்திற்கு எதிராக மட்டுமல்லாது நாஸிசத்துக்கும் நவீன நாஸிசத்திற்கும் எதிராக ரஷ்யாவின் எதிர்ப்பு போராட்டத்தையும் தெளிவுபடுத்தியிருந்தார். நெப்போலியன் போரிலிருந்து தற்போதைய உக்ரைன் மீதான போர்கள் வரை ரஷ்யா பாதுகாப்புக்காக போர்களை எதிர் கொண்டதை நிராகரித்துவிட முடியாது. ஆனால் அவற்றை எல்லாம் அரசியலாக கையாண்டு மேற்குலகம் தனது பிடிக்குள் ரஷ்யாவையும் உலகத்தையும் ஆதிக்கம் செலுத்திவருகிறது. புட்னின் எழுச்சி மேற்குலகத்தின் நலனுக்கு எதிரான அல்லது ரஷ்யா மீதான ஆதிக்கத்திற்கு தடையானதாக கருதப்படுகிறது. அதனால் புட்டினை அகற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் அரசியல், பொருளாதார, இராணுவ, மற்றும் ஊடகத் துறைகளை மேற்குலகம் கட்டிவளர்க்கிறது. அத்தகைய அனைத்து கட்டியெழுப்பல்களையும் புட்டின் தகர்த்து வருகிறார் என்பது நகர்வுகளில் கண்டு கொள்ளக்கூடியதாக உள்ளது.

புட்டின் மீதான எதிர்ப்புவாதத்தை மேற்குலகம் பல்வேறு தளத்தில் மேற்கொண்டு வருகிறது. அத்தகைய எதிர்ப்புவாதங்கள் புட்டினுக்கானதாக மேற்குலகம் கருதுகிறபோது ரஷ்ய மக்களையும் உலகளாவிய மக்களையும் பாதிப்பதாக மேற்குலகம் கருதவில்லை. ஏறக்குறைய உக்ரையின் மீதான போர் என்பது அத்தகையதாகவே உள்ளது. மேற்கு ஐரோப்பிய மக்களது பொருளாதார பாதிப்புகளை கூட புட்டினுக்கு எதிரான அரசியல் பிரச்சாரமாக மாற்ற மேற்குலக அரசியல் தலைவர்கள் முயற்சித்தார்கள். ஆனால் அதனை எல்லாம் தக்கர் கார்சன் முன்பே போட்டுடைத்திருந்தார் புட்டின். உக்ரைனில் பொம்மை அரசாங்கத்தை மேற்குலகம் அமைத்துக் கொண்டு ரஷ்யாவுக்கு எதிரான போரை நிகழ்த்துகிறது. மேற்குலகத்தின் நலன்களுக்காக உக்ரைன் மக்களையும் வளங்களையும் அழித்தொழிக்கும் தலைவராகவே ஜெலன்ஸ்கி கணிப்பிடப்படுகிறார். புட்டின் எப்படி ஒரு சர்வாதிகாரியாக எழுச்சியடைகிறரோ அவ்வாறே ஜெலன்ஸ்கி ஒரு பொம்மை ஆட்சியாளராகவும் நவீன நாஸிக்களை உருவாக்குபவராகவும் புட்டினால் அளவீடு செய்யப்படுவதற்கு பொருத்தமானவராகவே காணப்படுகின்றார். புட்டின் கூறுவது போன்று ஜெலன்ஸ்கி அழைத்துச் சென்ற முன்னாள் நாஸிப்படைகளின் தளபதியை கனேடியப் பாராளுமன்றத்தில் உரையாற்ற அனுமதித்தமை அதனை ஆதாரப்படுத்துகின்ற தகவலாகவே உள்ளது. அப்படியாயின் நாஸிகளுக்கு எதிராக ரஷ்யா தற்போதும் போராடிக் கொண்டிருக்கிறதாகவே தெரிகிறது.

ஆனால் தற்போது ஹிட்லரால் உருவாக்கப்பட்ட நாஸிசம் என்பது மேற்குலகத்தால் பின்பற்றப்படுகிறபோது அது நவீன வடிவத்தை தனதாக்கியுள்ளதாகவே புட்டினால் அளவிடப்படுகிறது. உக்ரைனில் உருவாக்கப்பட்டுவரும் நாஸிசமானது மேற்குலக நாடுகளின் பொருளாதார இராணுவ உதவிகளால் வளர்த்தெடுக்கப்படுவதாக புட்டின் கருதுகிறார். ஆனால் நாஸிசமும், பாஸிசமும் தேசத்தை அதீதமாக நேசிப்பதென்பதை எல்லாத் தளத்திலும் மறுதலிக்கப்படுகிறது. இரு சித்தாந்தங்களும் தனது தேசத்தை விசுவாசிப்பதுவும் அதற்கு தேசத்தின் பிரஜை தனது உயிரையும் அர்ப்பணிக்க தயாராக இருத்தலையுமே கருதுகின்றது. இங்கு தேசமே முதன்மையானது என கருத்தியல் கூறுகிறது. ஆனால் அத்தகைய சிந்தனை ஆக்கிரமிப்பாகவும் அழித்தொழிப்பாகவும் நடைமுறைத் தன்மை பொருந்தியதாக மாறியதுடன் அதனையே நாஸிசம், பாஸிசம் ஆகிய சித்தாந்தங்களும் கொண்டுள்ளதாக மதிப்பிடப்படுகிறது. அத்தகைய கருத்தியல் தவறானது. நாஸிசமும், பாஸிசமும் தேசத்தை அதீதமாக நேசிப்பதைக் குறிப்பதாகும்.

புட்டினை வெற்றியாளராக மாற்றுவதில் மேற்குலகம் அதிக பங்காற்றுகிறதாகவே தெரிகிறது. அதனை விரிவாக விளங்குவது அவசியமானது.

முதலாவது, புட்டின் முன்னாள் கே.ஜி.பி.இன் தலைமை அதிகாரியாவார். முன்னாள் சோவியத் யூனியனின் புலனாய்வுத் துறையின் தலைமையிலிருந்த புட்டினது தேசத்தின் மீதான விசுவாசிப்பு தனித்துவமானது. அமெரிக்காவும் மேற்குலகமும் சோவியத் யூனியனை வீழ்த்திய போது அதனை நேரில் இருந்து பார்த்து துயரப்பட்டவராகவே காணப்பட்டார். மிகையில் கோர்ப்பச்சோவின் வீழ்ச்சிக்கு பின்னர் அமெரிக்கா ரஷ்யாவில் பெறிஸ் ஜெல்சின் எனும் பொம்மை ஆட்சியாளரை அமர்த்தியது. அப்போது மேற்குலகத்தினதும் அமெரிக்காவினதும் உண்மை முகத்தை உலகம் கண்டு கொண்டது. அமெரிக்காவும் அதன் மேற்கு ஐரோப்பிய நண்பர்களும் தமது பிடிக்குள் ரஷ்யா மட்டுமல்ல ஏனைய கண்டங்கள் அனைத்தும் இருத்தல் வேண்டும் எனக் கருதுகின்றன. இந்த சந்தர்ப்பத்தையே புட்டின் தெளிவாக இனங்கண்டதுடன் உலக நாடுகளின் தலைவர்களுக்கு சவாலாக விளங்கும் மேற்குலகத்தின் போலிமுகத்தை இனங்காட்டுகின்றார். அதனாலேயே ஆசிய, ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் முன் ஆளுமை மிக்கவராக புட்டின் காட்டப்படுகின்றார்.

இரண்டாவது, புட்டினது அமெரிக்க எதிர்ப்புவாதம் ரஷ்ய மக்கள் மத்தியில் வரவேற்கப்படும் விடயமாக உள்ளது. காரணம் ரஷ்ய மக்கள் உலக வரலாறு முழுவதும் போருக்கும் அமைதிக்காகவும் பங்காற்றியிருப்பதுடன் அமெரிக்காவின் உலக அதிகாரத்திற்காக பலியிடப்பட்டதையும் நினைவில் கொள்கின்றனர். அதனால் தமது தேசத்தை அதிகம் நேசிக்கும் தலைவர்கள் மீது அதிக நேசிப்பினை வெளிப்படுத்துகின்றனர். குறிப்பாக எதிர்க்கட்சி தலைவராக கருதப்பட்ட நவால்னி மீதான அனைத்து அடக்கு முறைகளையும் எதிர்த்த ர‌ஷ்யர்கள் மேற்கினது நலனுக்குள் நவால்னி அகப்பட்ட போது அவரை கைவிட்டனர் என்பதை கண்டு கொள்ள முடிந்தது. இருதய நிலமான ரஷ்ய மக்களின் வாழ்வு மேற்கு ஐரோப்பிய- அமெரிக்க எதிர்ப்புவாதத்தால் கட்டிவளர்க்கப்பட்ட புவிசார் அரசியலைக் கொண்டது. ரஷ்யாவின் புவிசார் அரசியல் மட்டுமல்ல அரசியல் புவியியலும் அத்தகைய தனித்துவத்தால் கட்டப்பட்டுள்ளது. ரஷ்யா தனித்துவமான தேசம். ஆசிய-, ஐரோப்பிய அரசியல், பொருளாதார,கலாசார மரபுகளைக் கொண்ட நாடு.

மூன்றாவது, முடியாட்சியாளனாக இருந்த போதும் மகா பீட்டரை இன்றுவரை நேசிக்கும் மக்கள் ரஷ்யர்கள். அவ்வாறே ஜார் மன்னர் பரம்பரையை முற்றாக நிராகரித்த மக்களும் ரஷ்யர்களே. அதற்கு பின்னால் மார்க்ஸிச மரபுகளையும் லெனினிஸத்தையும் அதிகம் விசுவாசிக்கும் மக்களாக ரஷ்யர்கள் விளங்குகின்றனர். சோஷலிஸ்ட் என்பதற்காக ஸ்டாலின் செய்த அனைத்தையும் ஏற்றுக்கொண்ட போதும், ஸ்டாலின் சகாப்தத்தை நிராகரிப்பவர்களாக விளங்குகின்றனர். கோர்பச்சேவின் நியாயமான மறுசீரமைப்பு கோரிக்கைகளை அமெரிக்கா தோற்கடித்த போது அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பியர் மீது வெறுப்புக் கொண்டவர்கள் ரஷ்யர்கள். அதனையே புட்டின் வலுவான அரசியலாகக் கொண்டு இயங்குகிறார். புட்டினின் அரசியல் இருப்பானது மேற்குலகத்தின் பலவீனமான அணுகுமுறைகளால் வளர்ச்சியடைந்து வருகிறது. ஒரு புலனாய்வு ஆட்சியாளனை எப்படிக் கையாள்வதென்ற உத்தியில் மேற்குலகம் தோல்வியையே அடைந்துள்ளது. அத்தகைய புட்டினது இருப்பானது ர‌ஷ்ய தேசத்திற்கே உரித்தானதொன்றாகும்.

நான்காவது, புட்டினது அரசியல், இராணுவப் பக்கத்தைக் கடந்து ரஷ்யப் பொருளாதாரத்தின் இருப்பையும் சாதகமான நிலைக்குள் நகர்த்துகின்றார். அதிலும் ரஷ்யாவின் உற்பத்தியில் தங்கியிருக்கும் பொருளாதாரத்தை கோர்ப்பச்சேவின் திறந்த பொருளாதாரக் கொள்கைக்கூடாக ரஷ்யாவில் புட்டின் கட்டிவளர்த்து வருகிறார். இது உள்நாட்டுப் பொருளாதாரத்தில் நிலையெடுக்கும் தன்மையை கொண்டது. சோஷலிஸப் பொருளாதாரத்திலும் தாராளப் பொருளாதாரத்திலும் இயங்கும் திறனைக் கொண்ட நாடு ரஷ்யா. குறிப்பாக நவதாராளப் பொருளாதாரத்திற்குள் நுழையும் ஏனைய ஆசிய, ஆபிரிக்க நாடுகள் போலல்லாது தனித்துவமான இரு பக்க அனுபவத்தையும் கொண்ட நாடு ரஷ்யா. அதனால் ரஷ்யப் பொருளாதாரம் நிலைத்திருக்கும் வலுவைக் கொண்டது. அது மட்டுமன்றி அதன் பெற்றோலியம் மற்றும் எரிவாயுவின் இருப்பு அதன் நாணயத்தில் ஏற்பட்டுள்ள வலு தனித்துவமானது. பிறிக்ஸ் அமைப்பின் பொருளாதாரத்தின் வளர்ச்சியும் ஜி-7 இன் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுவரும் நெருக்கடியும் ரஷ்யாவின் எதிர்கால இருப்புக்கு சாதகமானதே. பிறிக்ஸ் அமைப்பினை உருவாக்குவதில் சீனா கவனம் கொண்டாலும் அதனை கட்டிவளர்ப்பத்தில் புட்டினது பங்கு தனித்துவமானது. ஆபிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளின் பொருளாதார பரிமாற்றத்திற்கான முறைமையை உருவாக்கியதில் அதிக கவனம் கொண்டதோடு டொலரை நிராகரித்த நாடாக ரஷ்யாவை மாற்றியுள்ளார். உக்ரைன் போர் தொடங்கும் போது 80 சதவீத கொடுக்கல் வாங்கலை டொலரில் மேற்கொண்ட ரஷ்யா தற்போது 12 சதவீதத்தை மட்டுமே டொலரில் பரிமாற்றம் செய்வதாக புட்டின் குறிப்பிடுகின்றார்.

இது புட்டின் ரஷ்யாவுக்கு மட்டுமல்ல கீழைத்தேசங்களுக்கே வழங்கிய வாய்ப்பாக உள்ளது.எனவே புட்டினின் தேர்தல் வெற்றி உறுதியாகிறது. மீண்டும் ரஷ்ய ஜனாதிபதியாகும் புட்டினின் வருகை மேற்கலகத்திற்கு சவாலானதே. மேற்கின் புட்டின் எதிர்ப்புவாதமே புட்டினை தொடர்ச்சியாக ஆட்சியாளனாக மாற்றுகிறது. ஆனால் புட்டின் சர்வாதிகாரியாகவே எழுச்சியடைகிறார். அது அரசியலமைப்புக்கு உட்பட்ட சர்வாதிகாரமாகவே தெரிகிறது. மேற்குலகம் குறிப்பிடுவது போலல்லாது சட்டங்களையும் மரபுகளையும் அனுசரிக்கும் அதே வேளை ஆட்சி அதிகாரத்தின் மூலமே மேற்குலகத்தை எதிர்கொள்ள முடியுமென புட்டின் கருதுகிறார். அதனால் அவர் தனது ஆயுட்காலம் முழுவதும் ஆட்சியாளனாக இருக்கவே அதிகம் முனைப்புக் கொண்டவராக விளங்குவார். அது சோஷலிசத்தினது இயல்பாக உள்ளது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division