அரசியலில், தம்மைத் தவிர மற்றைய அனைத்து அரசியல் கட்சிகளையும் கடுமையாக விமர்சிப்பதும், அவர்களின் குறைகளைச் சுட்டிக் காட்டுவதும், ‘எம்மிடம் தந்தால் எப்படிச் செய்வது என்பதைக் காட்டுவோம்’ என்று கூறுவதும் ஜே.வி.பி.யின் பாணியாகிவிட்டது. “எம்மிடம் தந்து பாருங்கள்” என ஜே.வி.பி மற்றும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி தலைவர்கள் கூறுவது அவர்கள் பற்றி அதிகமானோர் அறியாமல் இருப்பதனாலேயே.
எவ்வாறாயினும் ஜே.வி.பி என்பது நல்ல விடயங்களில் தன்னைக் குழப்பிக் கொண்ட கட்சியாகும். 1971ஆம் ஆண்டைப் போன்று 1986/90ஆம் ஆண்டுகளிலும் ஜே.வி.பி நல்ல விடயங்களைக் குழப்பிக் கொண்டது. அதன் காரணமாக ஆயிரக்கணக்கான இளைஞர்களின் உயிர்களும், பல பில்லியன் கணக்கான சொத்துக்களும் அநியாயமாகின. நாடு சர்வதேச அளவில் அவமானத்திற்குள்ளானது. ஜே.வி.பி கலவரத்தினால் இழந்த மனித உயிர்களுக்கான இழப்பீட்டை ஒரு போதும் வழங்கி முடிக்க முடியாது. தேசிய பொருளாதாரத்தையும் இன்னும் பல தசாப்தங்கள் சென்றாலும் முழுமைப் படுத்த முடியாது.
அதேபோன்றுதான் ஜே.வி.பி 2004ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தில் அமைச்சு மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டு குழப்பிக் கொண்ட கதையும். இன்று அவற்றையெல்லாம் மறந்து, தமது வாக்குகளை வழங்கக் காத்திருக்கும் இளம் வாக்காளர்களைப் போன்று, திசைகாட்டிக்கு புகழ் பாடும் அனேகமானோர் அறியாத அல்லது மறந்து போன இந்தக் கதையை நாம் மீண்டும் வாசித்துப் பார்க்க வேண்டும்.
ஜே.வி.பி – /ஸ்ரீ.ல.சு.கட்சி கூட்டணி
பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் 2001 செப்டெம்பர் மாதத்தில் (05ம் திகதி) அரசாங்கத்தை உருவாக்கிக் கொண்டு கட்சி அரசியல் தொடர்பில் புதிய அனுபவத்தைப் பெற்றுக் கொண்டிருந்த ஜே.வி.பி 2001 டிசம்பர் 05ம் திகதி பாராளுமன்றத் தேர்தலில் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ச்சியான எதிர்ப்புக்களை முன்னெடுத்துச் சென்றது. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், பொதுஜன ஐக்கிய முன்னணிக்கும் ஜே.வி.பி.க்கும் இடையில் புதிய அரசியல் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் ஏறக்குறைய 10 மாதங்களாக இடம்பெற்றன. அதனடிப்படையில் 2004ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி ஜே.வி.பியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ‘கூட்டணி உடன்படிக்கையில்’ கைச்சாத்திட்டன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜே.வி.பி.க்கும் இடையில் உருவாக்கப்பட்ட புதிய அரசியல் கூட்டணி தொடர்பில், ஜே.வி.பி.க்குள் கூட கடுமையான முரண்பாடுகள் இருந்ததாகவும், ‘கட்சி’ (ஜே.வி.பி.) தரப்பில் தேவையற்ற அவசரம் காட்டப்பட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. 2012 ஏப்ரல் மாதம் “திசைகாட்டி பிரகடனம்” மூலம் வெளியிடப்பட்ட ‘1978_-2012 ஜே.வி.பியின் பாதை’ என்ற நூலிலிருந்து இதைப் பற்றிய தெளிவான விளக்கத்தைப் பெறலாம். அதில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “கூட்டணி அமைப்பது தொடர்பான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையின் பின்னர், ஆரம்பச் சுற்றில் ஸ்ரீ.ல.சு.கட்சி தரப்பில் தோன்றிய விருப்பமின்மையினை அடிப்படையாகக் கொண்டு பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. பேச்சுவார்த்தை தோல்வியடைந்த பின்னர், திடீரென மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் கட்சித் தரப்பில் தேவையற்ற அவசரம் ஏற்பட்டது என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும். இங்கு எழுந்த அரசியல் சாராத அவசரத்தினால் அத்தியாவசிய அரசியல் விடயங்கள் தொடர்பான அக்கறையை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது” – 1978_2012 ஜே.வி.பியின் பாதை – பக்கம் 221.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் புதிய அரசியல் கூட்டணிக்குள் பிரவேசிப்பதற்கான ஜே.வி.பியின் ‘அரசியல் சார்பற்ற அவசரம்’ பற்றி ஜே.வி.பி.க்குள்ளும் பொதுவாக அரசியல் சமூகத்திலும் அக்காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க விவாதம் எதுவும் இடம்பெறவில்லை என்பது சிறப்பம்சமாகும்.
ஜே.வி.பி மற்றும் ஸ்ரீ.ல.சு.க இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்டதுடன், புதிய அரசியல் கூட்டணி உருவானதன் பின்னர் ஜே.வி.பி.யின் எதிர்ப்புக்கள் மேலும் உக்கிரமடைந்ததுடன் ஜனாதிபதிக்கு அழுத்தங்களைச் செய்யும் திறனும் வளர்ந்தது. இதற்கிடையில், ஐ.தே.க அரசாங்கத்தை உடனடியாக கலைத்து விட வேண்டும் என்ற ஜே.வி.பி.யின் அழுத்தங்களும் அதிகரித்தன. ஜனாதிபதி தனது கட்சி மற்றும் ஜே.வி.பி ஆகியவற்றின் வலுவான அழுத்தங்களை எதிர்கொண்டு தீர்க்கமான அரசியல் முடிவை எடுத்ததோடு, இறுதியில் ஐ.தே.க அரசாங்கத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்வதற்கான ஆபத்தான நடவடிக்கையை எடுத்தார். அதன்படி, 2004 ஏப்ரல் 2ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெற்றது.
அந்தப் பாராளுமன்றத் தேர்தலில் ஜே.வி.பியினால் கடைப்பிடிக்கப்பட்ட அரசியல் வியூகம் மற்றும் தன் பக்கத்தை வலுப்படுத்திக் கொள்வதற்கு எடுத்த கடும் முயற்சி தொடர்பில் நாம் கடந்த கட்டுரையில் பேசியிருந்தோம். எனவே அது தொடர்பில் அவதானத்தைச் செலுத்தாமல் இந்த புதிய அரசாங்கத்தினுள் ஜே.வி.பி பெற்றுக் கொண்ட அமைச்சுப் பதவிகள் மற்றும் ஏனைய சலுகைகள் குறித்து தொடர்ந்து பார்ப்போம்.
அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றல்
2004 ஏப்ரல் 06ம் திகதி 13ஆவது பாராளுமன்றத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்து கொண்டதோடு, ஏப்ரல் 10ஆம் திகதி அமைச்சரவையும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டது.
13ஆவது பாராளுமன்றத்தின் அமைச்சரவை இலங்கையின் முக்கிய அமைச்சரவையாகக் கருத முடியும். அது 1965ஆம் ஆண்டில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த நாளிலிருந்து நான்கு தசாப்தங்களின் பின்னர் ஜே.வி.பி அரசாங்கம் ஒன்றில் நேரடியாக தொடர்புபட்டு நான்கு அமைச்சரவை அமைச்சுக்களையும், நான்கு பிரதி அமைச்சர் பதவிகளையும் பெற்றுக் கொண்டதனாலாகும். அதனடிப்படையில் பின்வருவோர் அமைச்சர்களாகவும், பிரதி அமைச்சர்களாகவும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
அமைச்சர்கள்,
1. அனுர குமார திசாநாயக்கா – விவசாய, காணி மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சர்.
2. விஜித ஹேரத், – கலாசார மற்றும் தேசிய மரபுகள் அமைச்சர்
3. கே. டி. லால்காந்த, – கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்
4. சந்திரசேன விஜேதீர – கடற்றொழில் மற்றும் கடள் வள அமைச்சர்
பிரதி அமைச்சர்கள்
1. விமல் ரத்நாயக்க – விவசாய, காணி மற்றும் நீர்ப்பாசனத் துறை
2. சமந்த வித்யாரத்ன – கலாசார மற்றும் தேசிய மரபுகள் துறை
3. சுனில் ஹந்துனெத்தி – கிராமிய பொருளாதார அபிவிருத்தி துறை
4. நிஹால் கலப்பத்தி – கடற்றொழில் மற்றும் கடல் வளத் துறை
2004ஆம் ஆண்டு அரசாங்கத்தில் ஜே.வி.பிக்கு நான்கு ‘பலமான’ அமைச்சரவை அமைச்சுப் பதவிகள் கிடைத்தன, என்பதை புதிதாகச் சொல்லத் தேவையில்லை. விவசாயம், காணி, நீர்ப்பாசனம் போன்ற துறைகள் அரசியலில் உச்சத்துக்கு வரவேண்டும் என்ற நினைக்கும் அரசியல்வாதிகள் ‘கனவு’ காணும் துறைகள் என்பதைப் புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை. அதேபோன்று லால்காந்தவுக்கு வழங்கப்பட்ட கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, ஜே.வி.பி போன்ற அரசியல் செய்யும் கட்சிக்கு ‘தேவையான சக்தி வாய்ந்த அமைச்சாகும். விஜித ஹேரத்திற்கு வழங்கப்பட்ட கலாசார மற்றும் தேசிய மரபுகள் அமைச்சு சிறந்த பணி செய்யக்கூடிய அமைச்சாகும். பெரும்பான்மையான அமைச்சரவை அமைச்சர்கள் எதிர்கொள்ள வேண்டிய ‘பிரச்சினைகள்’ ஜே.வி.பியின் அமைச்சரவை அமைச்சர்களுக்கு இருக்கவில்லை.
ஜே.வி.பி. அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டமை அன்றைய அரசியல் மற்றும் ஊடக சமூகத்தில் ‘அதிக புகழாரம்’ பெற்றது, அவர்களுக்கு ‘நாடு உணரக் கூடிய வேலையை’ செய்யக்கூடிய அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டதால் மாத்திரமல்ல, நான்கு ஜே.வி.பி அமைச்சரவை அமைச்சர்களாலும் அமைச்சரவையிலும், பொதுவாக அரசாங்கத்திலும் ‘வலுவான’ வேலைகளை நிறைவேற்ற முடியும் என்ற கருத்து மக்கள் மத்தியில் வலுவாக இருந்ததால்.
ஜே.வி.பி என்ன கூறுகிறது?
‘அமைச்சுச் செயற்பாடுகளில் எமது அமைச்சர்களிடம் இருந்த அறிவியல் இயலாமையும் நெருக்கடியும் கட்சியை படிப்படியாக பாதித்து வந்தது. இது கட்சி தொடர்பில் எழுந்த வலுவான எதிர்மறை அனுபவமாக இருந்தது, முழுக் கட்சியையும், கட்சியின் ஒட்டுமொத்த சக்தியையும், கட்சி பொறுப்பேற்ற அமைச்சுக்களையும் வெற்றிகரமாக மக்கள் முன் காட்டுவதற்கான சவாலை அதனால் எதிர்கொள்ள முடியவில்லை.”
இங்கு என்ன சொல்லப்படுகின்றது? “…. அமைச்சுச் செயற்பாடுகளின் போது அமைச்சர்களின் அறிவியல் இயலாமை நெருக்கடி” பற்றியாகும். அது மாத்திரமின்றி ஜே.வி.பி அன்று அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுக் கொண்டது மக்களுக்கு வேலை செய்யவென்றே. மக்களுக்கு வேலை செய்யச் சென்று எல்லாவற்றையும் குழப்பியதை மக்கள் இலகுவாகப் புரிந்து கொள்வர்.
2004 ஆம் ஆண்டு ஜே.வி.பி.யின் மிகவும் சக்தி வாய்ந்த நபரும் பேச்சாளருமான விமல் வீரவன்சவின் கூற்றையும் மேற்கோள் காட்டுவது முக்கியமானதாகும். உண்மைக்குப் பதிலாக என்ற புத்தகத்தின் பக்கம் 143இல், “கூட்டணியில் எமது பிரதான நோக்காக அமைந்தது” என்ற தலைப்பில் விமல் வீரவன்ச இவ்வாறு கூறுகிறார்: “… பல முதலாளித்துவ சீர்திருத்தங்களைச் செய்வதும், குறிப்பாக பல அமைச்சுக்கள் ஊடாக எமது திறமையை நாட்டுக்குக் காட்டி, ஜே.வி.பியால் நாட்டை ஆள முடியும் எனக் காரணம் காட்டி மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதும் . இங்கு விமல் வீரவன்ச என்ன சொல்கிறார்? குறிப்பாக பல அமைச்சுக்கள் ஊடாக திறமையை வெளிப்படுத்தி ஜே.வி.பி.யால் நாட்டை ஆள முடியும் என நம்பவைத்து மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதாகும்.
எனவே, நாம் இன்னும் ஏதாவது கூறவா வேண்டும்? பொதுத் தேர்தலின் பின்னர், 2005அம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த ஜே.வி.பி., இறுதியாக அரசாங்கத்தை விட்டு ‘வெளியேறி’ தனது பாவங்களைக் கழுவ பலவற்றைச் செய்தது.
இப்படிப்பட்ட வரலாற்றைக் கொண்ட கட்சியையும் தலைமையையும் இன்னமும் நம்ப முடியுமா? அதைப் பற்றி நாம் தொடர்ந்து பேசுவோம்.
மாதவ விஜேசேன