வரலாற்றுப் புகழ் வாய்ந்த தமிழ் தேசிய பத்திரிகையாக ஒன்பது தசாப்தங்களுக்கு மேல் வெற்றிப் பயணத்தை தொடரும் தினகரன் நாளை தனது 92 வது வருட நிறைவை சிறப்பாக நினைவு கூருகிறது. இந்த நாள் தமிழ் கூறும் நல்லுலகம், குறிப்பாக, நாட்டின் தமிழ் பேசும் மக்கள் பெருமையுடன் நினைவு கூர வேண்டிய நாளாகும். இலங்கையில் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஊடகங்களைப் பயன்படுத்தும் செயற்பாடுகள் ஆரம்பமாயின.
அதனூடாக மக்கள் மத்தியில் சுதந்திர வேட்கையை ஊக்குவிக்கவும் அதன் அவசியத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்குக் கொண்டு செல்லவும் முடியும் என்ற நம்பிக்கை அப்போது தோன்றியது. அதற்கு லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகரான டி.ஆர். விஜேவர்தன முன்னோடியாக அமைந்தார்.
அந்த வகையில் 1914ஆம் ஆண்டு தேசிய பத்திரிகையான ‘தினமின’ அவரது முயற்சியில் வெளியிடப்பட்டது. சகோதர மொழியில் வெளிவந்த இந்த பத்திரிகைக்கு மக்கள் மத்தியில் உருவான ஆதரவும் வரவேற்பும் அதன் பின்னர் சிறிது காலத்திலேயே ஆங்கில மொழி பத்திரிகையை ஆரம்பிக்க அடித்தளமாகியது.
இத்தகைய பின்னணியில் நாட்டுக்கான சுதந்திரத்தின் தேவையையும் அதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் கொண்டு சென்று அதனூடாக சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை முழுநாட்டிலும் உணர்த்தும் வகையில் 1932 மார்ச்15 ஆம் திகதி தினகரன் பத்திரிகையை டி.ஆர். விஜேவர்தன ஆரம்பித்ததை குறிப்பிட முடியும்.
நாட்டின் முதலாவது தமிழ் தினசரி பத்திரிகையாக 1930ஆம் ஆண்டு முதல் வீரகேசரி பத்திரிகை வெளியான போதும். அப்போது அப் பத்திரிகை முற்றிலும் இந்திய சுதந்திரப் போராட்டம் தொடர்பான விடயங்களுக்கே முக்கியத்துவம் வழங்கியது. அதனால் இலங்கையின் சுதந்திரப் போராட்டத்தை தமிழ் பேசும் மக்களுக்குக் கொண்டு செல்வதற்கான ஊடகத்தின் தேவை உணரப்பட்டது.
அந்த தேவையை நிறைவு செய்யவே டி.ஆர். விஜேவர்தன தினகரன் பத்திரிகையை ஆரம்பித்தார். தமிழ் பேசும் மக்களின் சமய, கலாசார மொழிப் பாரம்பரியங்களின் ஊடாக நாட்டின் சுதந்திரப் போராட்ட செயற்பாடுகள் தொடர்பான செய்திகளை தமிழ் பேசும் மக்களுக்கு கொண்டு செல்வதே இப்பத்திரிகையின் பிரதான நோக்கமாக அமைந்தது.
அந்நோக்கத்தை ஆரம்பத்தில் முழுமையாக நிறைவேற்ற முடியாமற் போனது என்றே கூற வேண்டும். அதற்கு முக்கிய காரணம் பத்திரிகைத் துறையில் அனுபவம் கொண்டவர்களை உள்நாட்டில் தேடிக் கொள்வது சிரமமாக அமைந்தமையே.
அந்த நிலையில் தமிழ் பத்திரிகையை கொண்டு நடத்துவதற்காக பத்திரிகை ஆசிரியர், உதவியாசிரியர்கள் மற்றும் ஊழியர்களையும் தமிழகத்திலிருந்து அழைத்து வரவேண்டிய நிலைமை அவருக்கு ஏற்பட்டது.
தினகரனும் ஆரம்பத்தில் தமிழ்நாட்டு பத்திரிகைகளின் சாயலிலேயே காணப்பட்டது. பத்திரிகையின் மொழிநடை மற்றும் ஏனைய பிரயோகங்களில் தமிழகத்தின் தாக்கமே அதிகமாகக் காணப்பட்டது. அத்தகைய நிலையிலும் இலங்கை எழுத்தாளர்களின் ஆக்கங்களும் குறிப்பிடத்தக்க அளவில் தினகரனில் வெளிவந்தன. அதற்கு தினகரன் சிறந்த களம் அமைத்துக் கொடுத்தது எனலாம்.
தினகரனின் முதலாவது இதழில் பத்திரிகையின் நோக்கத்தை தெளிவாக வெளிப்படுத்த டி.ஆர். விஜேவர்தன நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
‘நமது நோக்கம்’ என்ற தலைப்பில் வெளியான அத்தலைப்பில், ‘இப்பத்திரிகை யாருக்காக பிரசுரம் செய்யப்படுகின்றதோ அவர்கள் எம் மீது வைக்கும் நம்பிக்கைக்கு நாம் பொறுப்பானவர்களாக செயல்படுவோம். அதற்கு ஏற்றதாகவே எமது செயற்பாடுகள் அமையும் என்றும் தெரிவித்திருந்தார்.
உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ உள்ள அரசியல் தலைவர்கள் அல்லது பிரமுகர்களின் தேவையை நிறைவேற்றுவது எமது நோக்கம் அல்ல. என்பதை தெளிவாக சுட்டிக்காட்டிய அவர், எமது பத்திரிகை கட்சி பேதங்களுக்கு அப்பாற்பட்டதாகும் என்றும் எவராவது நபர்களுக்காகவோ ஏதாவது விஷேட உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவோ இந்த பத்திரிகை ஆரம்பிக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தார்.
தமிழ் பேசும் மக்களின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாப்பதில் தினகரன் தனிப்பெரும் பங்காற்றும் என்பதையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அந்த வகையில் அனைவருக்கும் பொதுவானதாக சிறந்த நன்மை தரக்கூடிய நீதியான வழியில் மாத்திரமே செயற்படுவது எமது நோக்கமாகும்’ என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்
இந்த நோக்கத்திலேயே தினகரன் அன்றிலிருந்து இன்று வரை பணியைத் தொடர்கிறது. தினகரனின் ஆரம்பகாலம் கலை இலக்கிய விடயங்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்த காலமாகும். கல்விமான்கள், இலக்கியத்துறை சார்ந்தவர்களின் பேரபிமானத்தைப் பெற்ற காலம் அது.
புகழ்பெற்ற இலக்கிய கர்த்தாவான பேராசிரியர் கைலாசபதி பத்திரிகையின் ஆசிரியராக இருந்து அதன் ஊடாக இலக்கியத்திற்கு பெரும் பணியாற்றியுள்ளார்.
செய்திகளுக்கு மேலதிகமாக இலக்கியத்திற்கு தினகரன் அதிக முக்கியத்துவம் அளித்த காலம் தொடர்பில் இன்றும் பலரும் பெருமையுடன் நினைவு கூருவதை காண முடிகிறது. அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக இன்று வரை தினகரன் கலை இலக்கிய விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கி வருகின்றதையும் குறிப்பிட வேண்டும்.
தினகரன் பதிப்பாக பல இலக்கிய நூல்கள் வெளிவந்துள்ளன. பல இலக்கியப் போட்டிகள் அவ்வப்போது நடத்தப்பட்டு சிறந்த பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோன்று வரலாற்றை பதிவு செய்யக்கூடிய பல்வேறு கட்டுரைகள், கல்வி, சுகாதாரம் சுற்றாடல், அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த காத்திரமான கட்டுரைகளுக்கும் தினகரன் பேர் போனது. அவ்வாறான கட்டுரைகள் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் ஆய்வுகளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் குறிப்பிட வேண்டும்
அத்துடன் இந்திய சுதந்திரப் போராட்டம், டொனமூர் ஆணைக்குழுவின் யோசனைகளுக்கு இலங்கையர் காட்டிய எதிர்ப்பு, சர்வதேச அரசியல் நிலைமை என்பவற்றைத் தெளிவாக வெளிப்படுத்துவதற்கு கட்டுரைகள் ஒரு தேவையாக இருந்ததுவும் அதற்கான காரணமாகும். இலக்கியம் உட்பட அத்தகைய பல்வேறு துறை சார்ந்த படைப்புக்களை தினகரனில் வெளியிடுவதற்கு நிறுவனமும் பெரும் ஊக்கமளித்தது.
கவிதை இலக்கியத்திற்கும் தினகரன் ஆரம்பம் முதலே இடமளிக்கத் தவறவில்லை. 1932ல் மகாத்மா காந்தியின் உண்ணாவிரதப் போராட்டம் இந்தியாவில் மாத்திரமல்லாமல் இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் தாக்கத்தினால் மு. நல்லதம்பி புலவர் பத்துப் பாடல்களை எழுதினார். அப்பாடல்களை பிரசுரித்து தினகரன் அமோக வரவேற்பைப் பெற்றது.
அத்தோடு தொடர்கதை, சிறுகதை, உரைநடை இலக்கியங்களுக்கும் தினகரன் இடமளித்தது. நாடகத்துறை வளர்ச்சிக்கும், சமய இலக்கிய மேம்பாட்டுக்கும் தினகரன் ஆரம்ப காலம் முதல் பங்களிப்பு நல்கி வருகிறது. அத்தகைய செயல்பாடுகளின் பிரதிபலனாக 1940 காலங்கள் தமிழ்ப் பத்திரிகைத் துறையில் முன்னேற்றக் கொள்கையையும், தேசியத் தன்மையையும் முன்னெடுத்துச் செல்வதில் தினகரன் பிரதான பாத்திரம் வகித்தது.
1949 இல் இலங்கைத் தமிழ் நடைமுறைக்கு மாற்றம் பெற்றபோது தினகரன் அக்காலப் பகுதியில் எமது தமிழ் அறிஞர்களாக விளங்கிய பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, பேராசிரியர் வி. செல்வநாயகம், இளமுருகனார், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, நவாலியூர் சோமசுந்தரப் புலவர் உள்ளிட்ட பலரின் படைப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்கியது
சு. வித்தியானந்தன் லண்டன் சென்று கலாநிதி பட்டம் பெற்ற போது அவர் தம் லண்டன் பயணம் தொடர்பாக எழுதிய பயணக் கட்டுரையைத் தினகரன் தொடராக வெளியிட்டது. அதுவே பயணக் கட்டுரை இலக்கியத்திற்கு முன்னோடியாக விளங்கியது. அத்தோடு உரை நடை இலக்கியத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த 1950களில் தினகரன் முக்கிய பங்களிப்பை நல்கியது.
தமிழ்பேசும் மக்களின் மனஉணர்வுகள், வாழ்வு முறை, பாரம்பரியம், அடிப்படை இயல்புகள், அவர்களது பேச்சுமொழி வழக்கு, பிரதேச உணர்வுகளின் ஊடாக வெளியிடப்பட வேண்டும் என்ற கருத்துருவம் ஒரு செழுமையான வடிவம் பெறத் தினகரனே முன்னோடியாக அமைந்தது என்றால் அது மிகையில்லை.
இக்காலப் பகுதியில் தினகரனில் வெளியான கட்டுரைகள் அறிவுச் செறிவு மிக்கவையாக இருந்ததால் தினகரன் முன்னெடுத்து வந்த தேசியத்தன்மை, தேசிய இலக்கியப்பற்று, விடயச் செறிவு என்பனவும், புதிய அரசியல் போக்கும் புதிய கண்ணோட்டமும் புதிய இலக்கியப் பார்வையை 1956இல் தமிழ்ப் படைப்பாளர்கள் மத்தியில் தோற்றுவித்தது.
இக்காலகட்டத்தில் பேராசிரியர் கைலாசபதி, இளங்கீரன் சுபைர், கே. டானியல், என். கணேசலிங்கன், புலவர்மணி ஆ.மு. ஷெரிப்தீன், எஸ். பொன்னுத்துரை, சொக்கன், டொமினிக் ஜீவா, என்.கே. ரகுநாதன், தாழையடி சபாரெத்தினம், நீர்வை பொன்னையன், வரதர், சிற்பி, சொக்கன், அ.ந. கந்தசாமி, சில்லையூர் செல்வராசன், அம்பி, பேராசிரியர் ம.மு. உவைஸ், இ. முருகையன், பேராசிரியர் கா. சிவத்தம்பி, தெளிவத்தை ஜோசப், அந்தனி ஜீவா போன்ற எழுதிய எழுத்தாளர்கள், கனக செந்திநாதன், அருள் செல்வம் போன்ற படைப்பாளர்கள் தேசிய இலக்கியம் என்ற கோட்பாட்டைத் தழுவி அடிக்கடி எழுதி வந்தனர். இவர்களது எழுத்தில் ஏற்பட்ட கவர்ச்சி, தினகரன் அளித்த ஊக்கம் என்பன காரணமாக புதிய தலைமுறை எழுத்தாளர்கள் உருவாக அது வழிவகுத்தது.
தேசிய இலக்கியமாக உருவெடுத்த ஈழத்து இலக்கியம், உலக இலக்கியங்களோடு தன்னைப் பரிச்சயம் செய்து கொள்ள வேண்டும்’ என்ற சிந்தனை தோற்றம் பெற வழிவகுத்தது. அந்த வகையில் உலகின் சிறந்த நாவலாசிரியர்களின் படைப்பிலக்கியங்கள் தொடர்பில் இலங்கை எழுத்தாளர்கள் தினகரனில் ஆய்வுகளை எழுதினர்.
பல்வேறு தடைகள் சவால்களைத் தாண்டி தினகரன் தனது தனித்துவத்தை தொடர்ந்து பேணி கலை இலக்கிய வளர்ச்சிக்கு தொடர்ந்தும் தனது பங்களிப்பை நல்கி வருகின்றது. இதன் பாசறையில் ஆரம்பம் முதல் இற்றைவரை நூற்றுக்கணக்கான கலை, இலக்கிய படைப்பாளர்களும் ஊடகவியலாளர்களும் உருவாகியுள்ளனர். தொடர்ந்தும் உருவாக்கப்பட்டு வருகின்றனர். இத்தகைய அரிய பணியை தினகரன் தொடர்ந்து முன்னெடுத்து அது வாசகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் என்பதை இந்த 92வது வருட நிறைவில் பெருமையுடன் குறிப்பிட முடியும்.