Home » கோட்டாபய வெளிப்படுத்தும் இரகசியங்கள்
போராட்டத்தின் சதி!!

கோட்டாபய வெளிப்படுத்தும் இரகசியங்கள்

by Damith Pushpika
March 10, 2024 6:00 am 0 comment

சர்வதேச அனுசரணையுடன் கூடிய ‘ஆட்சி மாற்ற’ நடவடிக்கையால் இலங்கையின் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்ட முறை என்ற அறிமுகத்துடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ எழுதியுள்ள புத்தகத்தின் தலைப்பு, “ஜனாதிபதி பதவியிலிருந்து நான் வெளியேற்றப்பட்ட சதி” என்பதாகும். 2019ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி முதல் 2022 ஜூலை 14 வரை இரண்டு ஆண்டுகளும் ஒன்பது மாதமும் ஜனாதிபதி பதவியில் இருந்த அவர், அந்தக் காலத்தில் தனது அனுபவங்களை விபரித்துள்ளார். போராட்டத்தால் தான் ஜனாதிபதி பதவியை விட்டுச் செல்வதற்கு வழிவகுத்த காரணங்களையும் அதில் குறிப்பிட்டுள்ளார். அந்தப் புத்தகத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சில பகுதிகளை இங்கு தருகிறோம்.

நான் கொவிட் – 19 தொற்று நோய் நிலைமைக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்ததோடு, அதற்காக மக்களிடமிருந்து கிடைத்த வரவேற்பின் காரணமாக பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் எனக்குக் கிடைத்தது. அதன் பின்னர் 2021ஆம் ஆண்டில் நான் தடுப்பூசி போடும் வேலைத்திட்டத்தையும் வெற்றிகரமாக முடித்தேன். அதன் மூலம் 2021ஆம் ஆண்டின் இறுதியில் நாட்டில் இயல்பு வாழ்க்கையை மீள ஆரம்பிக்க முடிந்தது. 2022ஆம் ஆண்டு இரண்டாவது காலாண்டில் நாட்டை இயல்பு நிலைக்கு மாற்ற எனது எதிர்த்தரப்பினர் எனக்கு வழிவிட்டிருந்தால் அவர்களால் எனது அரசாங்கத்தை கவிழ்த்திருக்க முடியாது. யுத்த காலத்திலும் கூட இலங்கையில் நிலவிய பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையும் வளர்ச்சியும் சர்வதேச சக்திகளின் நிகழ்ச்சி நிரலை இலங்கையில் நடைமுறைப்படுத்த முடியாமல் போனதற்கு காரணமாகக் குறிப்பிட்டு முன்னைய அத்தியாயத்தில் நாம் மேற்கோள் காட்டிய 2021ஆம் ஆண்டில் நோர்வே அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட போன்ஸ் ஒஃப் பீஸ் என்ற அறிக்கையில் கூறப்பட்ட காரணத்தை மீண்டும் நாம் இங்கு நினைவு படுத்த வேண்டும். என்னை பதவியிலிருந்து வெளியேற்றும் ஒருங்கிணைந்த அரசியல் இயக்கம் 2022 மார்ச் 31ஆம் திகதி தொடங்கப்பட்டது இதனாலேயாகும்.

சர்வகட்சி ஆட்சி அமைப்பதற்கான கோரிக்கை 2022 ஏப்ரலிலிருந்து தொடர்ந்து கொண்டிருந்தது. அந்தக் குரல் அதிகமாக எழுந்தது ஒரு காலத்தில் என்னை ஆதரித்த தரப்பினரிடமிருந்தேயாகும். அந்த நேரத்தில், புதிய அமைச்சரவை பதவியேற்று சில நாட்களே கடந்திருந்தன. முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, சர்வகட்சி ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என்றும், சர்வகட்சி அரசாங்கத்திற்கு வழிவிடும் வகையில் பிரதமரும் அமைச்சரவையும் பதவி விலக வேண்டும் என்றும் கூறி எனக்கு கடிதம் அனுப்பியிருந்தார். மகாசங்கத்தினரிடமிருந்தும் இதே கோரிக்கை கிடைத்ததன் பின்னர் நான் இடைக்கால அரசு ஒன்றை அமைக்கச் சம்மதிப்பதாக அறிவித்திருந்தேன். வேறு தரப்பினரிடமிருந்தும் இடைக்கால அரசாங்கத்திற்கான கோரிக்கைகள் எமக்கு கிடைத்தன. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் இளம் பௌத்த சங்கம் என்பன இணைந்து நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது தொடர்பான கூட்டுப் பிரேரணைகளை மகாநாயக்க தேரர்களிடம் கையளித்தன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி, பிரதமர் தலைமையில் தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

2022 ஜூலை மாத ஆரம்பத்தில் எரிபொருள் தட்டுப்பாடு தீவிரமடைந்தது. பொதுப் போக்குவரத்துச் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் போக்குவரத்துக்கும் கடும் தாக்கங்கள் ஏற்பட்டன. அரச ஊழியர்கள் தமது பணியிடங்களுக்குச் செல்வது வரையறுக்கப்பட்டதோடு, தனியார் துறையினரும் அவ்வாறான மட்டுப்படுத்தல்களை மேற்கொண்டனர். வைத்தியசாலைகளில் வைத்திய சேவைகள் மற்றும் அம்பூலன்ஸ் வாகன சேவைகளுக்கும் தாக்கங்கள் ஏற்பட்டன. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சாதாரண தனியார் பயணிகள் பஸ் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது. 40 லீற்றர் டீசலைப் பெற்றுக் கொள்வதற்காக குறுகிய தூர பேருந்து உரிமையாளர்கள் நான்கு நாட்கள் எரிபொருள் வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்ததோடு, அவர்களால் அந்த டீசலைக் கொண்டு ஒரு நாள் மட்டுமே சேவையில் ஈடுபட முடியுமாக இருந்தது. நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் தாங்களாகவே ஊரடங்குச் சட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு வீட்டில் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவும் தெரிவித்திருந்தாார்.

2022 ஜூலை 04ஆம் திகதி கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இந்த நிலையில்தான் 2022 ஜூலை 09ம் திகதி பாரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஜூலை 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு, பொலிஸார் விடுத்த கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்தது.

ஜூலை 08ஆம் திகதி இரவு மேல் மாகாணத்தின் சில பிரதேசங்களில் அரசாங்கம் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்திருந்த போது, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மக்கள் ஆர்ப்பாட்டங்களை அடக்க பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படுவதை கண்டித்தது. இந்தச் செயற்பாடானது தெளிவாகவே கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தை அடக்கும் நோக்கைக் கொண்டது எனக் கூறியது. 2022 ஜூலை 8ஆம் திகதி, பாதுகாப்புப் படைத் தலைமையகத்திலிருந்து நடவடிக்கைப் பிரிவினை ஜனாதிபதி மாளிகைக்கு மாற்றுமாறு பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவுக்கு நான் அறிவுறுத்தினேன். 2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி இரவு அலரி மாளிகையில், முன்னாள் பிரதமர் உள்ளிட்ட தரப்பினரை வெளியேற்றுவதற்காக இராணுவத்தினரை அழைத்து வந்த போது எமக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் காரணமாக அனைத்து பாதுகாப்பு பிரதானிகளையும் ஜனாதிபதி மாளிகைக்கு அழைப்பதற்கு நான் இந்த நடவடிக்கை எடுத்தேன். 2022 ஜூலை 9 அன்று காலை 8:00 மணிக்கு மேல் மாகாணத்தின் சில பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டது.

2022 ஜூலை 9ஆம் திகதி அன்று காலை பாதுகாப்புச் செயலாளர், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் ஜனாதிபதி மாளிகையில் அமைக்கப்பட்டிருந்த செயற்பாட்டு அறைக்கு வந்திருந்தனர். அரசாங்கத்தின் திட்டமாக இருந்தது அனைத்து நுழைவாயில்களையும் மறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்புக்கு வருவதை தடுப்பதேயாகும். எனினும் அவ்வாறான வீதித் தடைகள் எங்கும் ஏற்படுத்தப்பட்டிருக்காததால், ஆர்ப்பாட்டக்காரர்கள் எந்தவித இடையூறும் இன்றி ஜனாதிபதி மாளிகையை அடைந்தனர்.

காலை 10.30 அளவில் நான் உடனடியாக ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேற வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இராணுவ பிரதானிகள் என்னிடம் கூறினர். அந்நேரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு ஒரு மணி நேரம் கூட ஆகியிருக்கவில்லை. அதற்கு முன்னைய நாள் எனது பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளது ஆலோசனையின் பிரகாரம் நாம் அவசர நிலையில் பயன்படுத்துவதற்காக ஆடைகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய இரண்டு பைகளை ஆயத்தப்படுத்தியிருந்தோம். நாம் அந்தப் பயணப் பொதிகளை எடுத்துக் கொண்டு கீழே வந்து எமது வாகனங்களில் ஏறும் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் முன் வாசல் கேட்டினை உடைத்துக் கொண்டு ஜனாதிபதி மாளிகை வளவினுள் பிரவேசித்தனர். இவை அனைத்தும் இடம்பெறும் சமயம் பெசிலும் ஜனாதிபதி மாளிகையில் இருந்ததோடு, அவரும் எமது வாகனங்களில் ஏறிக் கொண்டதன் பின்னர் நாம் ஜனாதிபதி மாளிகையின் பின்புற வாசலுக்கு அருகில் அமைந்துள்ள கடற்படை முகாமுக்குள் பிரவேசித்தோம். எம்மைப் பாதுகாப்பாக அவ்விடத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை கடற்படைத் தளபதி திட்டமிட்டிருந்தார். அந்நேரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையினுள் நுழைந்துள்ளதை கடற்படை முகாமில் தொலைக்காட்சித் திரையில் எம்மால் கண்டு கொள்ள முடிந்தது.

கடற்படையினர் துறைமுகத்தில் இரண்டு படகுகளை ஆயத்த நிலையில் வைத்திருந்ததோடு, அவற்றில் ஒன்றில் நாங்கள் ஏறினோம், மற்றைய படகு அதற்கு எதிர்த்திசையில் அனுப்பப்பட்டு நாம் எந்தப் படகில் இருக்கிறோம் என்பதை வெளியாட்கள் யாரும் அறியாதபடி திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டதையடுத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு எனக்கு கடிதம் எழுதி, ஜனாதிபதி பதவியை இராஜினாமாச் செய்யுமாறு கேட்டுக் கொண்டது. அந்தக் கடிதத்தில் டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் சன்ன ஜயசுமன, கலாநிதி நாலக கொடஹேவா, பேராசிரியர் சரித ஹேரத், வசந்த யாப்பா பண்டார, டிலான் பெரேரா உள்ளிட்ட பலர் கையொப்பமிட்டிருந்தனர். இதனிடையே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி தலைவர்களின் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். கட்சித் தலைவர்கள் எடுக்கும் எந்த முடிவையும் நான் மதிப்பேன் என்று பிரதமரிடம் தெரிவித்தேன். நான் ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறியவுடன் அமைச்சர்களான பந்துல குணவர்தன, மஹிந்த அமரவீர மற்றும் தம்மிக்க பெரேரா ஆகியோர் தமது அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்தனர்.

அதன் பின்னர் அன்றைய தினத்தினுள், ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகை ஆகியவற்றை போராட்டக்காரர்கள் விரைவாகக் கைப்பற்றினர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். நான் இரண்டு வருடங்கள் ஒன்பது மாதங்கள் இலங்கையின் ஜனாதிபதியாக இருந்தேன். இந்தக் காலத்தில் இரண்டு வருடங்களும் ஐந்து மாதங்களாகவும், நான் எனது சொந்த வீட்டிலேயே வாழ்ந்தேன். 2022 மார்ச் 31ஆம் திகதி இரவு, எனது சொந்த வீட்டைச் சுற்றி நடந்த போராட்டத்தின் காரணமாக, அதிக பாதுகாப்பு தேவைப்பட்டதால் நான் ஜனாதிபதி இல்லத்திற்குச் செல்ல நேர்ந்தது. தலைவர்கள் மாற்றத்தை உருவாக்க முற்படும்போது, பொதுமக்களும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். இல்லாவிட்டால் அனைத்தும் பின்னோக்கிச் சென்றுவிடும். 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவங்களின் பின்னர், தமது பாதுகாப்பு எவ்வாறிருந்தாலும், தமது அயலவர்களின் பாதுகாப்பு தொடர்பில் சிந்தித்தாவது எந்த ஒரு தலைவரும் ஜனாதிபதி, பிரதமர் அல்லது அமைச்சர்கள் போன்ற பதவிகளுக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் தமது சொந்த வீடுகளில் தொடர்ந்தும் வாழ மாட்டார்கள்.

அதன் பின்னர் அந்த நாளினுள் ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகை போன்றவற்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் மிக விரைவாகவே கைப்பற்றினர்.

கொழும்புத் துறைமுகத்திலிருந்து வெளியேறிய நாம் திருகோணமலைக்குச் சென்று அங்கு கடற்படை முகாமில் இரவு தங்கிவிட்டு மறுநாள் ஹெலியில் கட்டுநாயக்கா விமானப்படை முகாமுக்குச் சென்று இரண்டாவது இரவை விமானப் படை முகாமில் கழித்தேன். மறுநாள் இரவு நாம் விமானப்படை விமானத்தில் மாலைத்தீவுக்குப் புறப்பட்டு 2022ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் திகதி அதிகாலை 3.00 மணியளவில் மாலைதீவு தலைநகரைச் சென்றடைந்தோம். மாலேயிலிருந்து சுமார் 200 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள தீவின் ஹோட்டலில் நாம் தங்குவதற்கான ஏற்பாடுகளை மாலைதீவு அரசாங்கம் செய்திருந்ததோடு, நாம் படகின் மூலம் அந்த ஹோட்டலை சென்றடைந்த போது காலை நேரமாகியிருந்தது. அங்கிருந்து தனியார் விமானத்தில் சிங்கப்பூர் செல்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும், இந்திய அதிகாரிகள் அந்த தனியார் விமானத்திற்கு மாலைதீவு செல்வதற்கான அனுமதியை வழங்கியிருக்கவில்லை. எனவே வர்த்தக விமானத்தில் சிங்கப்பூர் செல்வதற்கான விமான டிக்கட்டுக்களை ஏற்பாடு செய்யுமாறு நான் ஆலோசனை வழங்கினேன். அதனடிப்படையில் நாம் சிங்கப்பூர் சென்றடைந்தோம்.

நான் ஹோட்டலிலிருந்து விமான நிலையம் வரை சென்று அங்கிருந்து சிங்கப்பூர் செல்வதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாலைதீவு அரசு செய்திருந்தது. என்னுடன் என் மனைவியும் இரண்டு பாதுகாப்புப் அதிகாரிகளும் வந்திருந்தனர். நான் மாலைதீவில் இருந்த சமயத்தில் நான் நாட்டிற்கு வெளியே இருந்ததால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக நியமித்திருந்தேன்.

சிங்கப்பூரில், என்னையும் என் குழுவையும் விமான நிலையத்தில் வரவேற்று ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றதோடு, அங்கு நான் தங்கியிருக்கும் தளத்தின் பாதுகாப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. சிங்கப்பூர் வந்ததன் பின்னர் அரசியல் கட்சித் தலைவர்கள் என்னிடம் விடுத்த கோரிக்கைக்கு மதிப்பளித்து அடுத்த சில நாட்களில் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அறிவித்தேன்.

அப்போது, நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டக்கூடிய ஒரே நபர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்ற முடிவுக்கு நான் வந்ததால், அவருக்கு ஜனாதிபதி பதவியை வழங்குவதற்கு நான் தீர்மானித்திருந்தேன்.

நாட்டினுள் சட்டம் ஒழுங்கு மீள உருவாக்கப்பட்டிருந்தால், பொருளாதாரத்துக்குத் தேவையான அந்நியச் செலாவணி தானாகவே கிடைத்திருக்கும்.

எவ்வாறாயினும், 2022 ஜூலை 13ஆம் திகதி இடம்பெற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைக் குழுவின் ஒருங்கிணைந்த கூட்டத்தில், ஆர்ப்பாட்டக்காரர்களை சமாதானப்படுத்துவதன் ஊடாக அப்போதைய நிலைமையினைக் கட்டுப்படுத்தும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலக வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகவில்லை. புதிய அரசாங்கம் ஒன்று அமையும் வரை தான் பதவியில் நீடிப்பதாக அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஜூலை 14ஆம் திகதி, நான் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை, பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பினேன்.

தமிழில் - எம். எஸ். முஸப்பிர்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division