இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி அனுசரணையில் நடைபெற்ற வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கு இடையிலான 107 ஆவது பொன் அணிகளின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.
புனித பத்திரிசியார் கல்லூரி அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இரண்டாவது மற்றும் கடைசி நாளான நேற்று (02) 137 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி கடைசி நாள் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் தனது இரண்டாவது இன்னிங்ஸை துடுப்பெடுத்தாடிய புனித பத்திரிசியார் கல்லூரி அணி ஆட்ட நேர முடிவின்போது 5 விக்கெட்டுகளை இழந்து 24 ஓட்டங்களை பெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி ஆர். ஜோன்சனின் அரைச்சதத்தின் (65) உதவியோடு முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 189 ஓட்டங்களை பெற்றது. இதன்போது டி.அபிலாஷ் மற்றும் எஸ். ஷெஹான் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த புனித பத்திரிசியார் கல்லூரி அணியால் சகல விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களையே பெற முடிந்தது. மத்திய பின் வரிசையில் வந்த பீ. மதூசன் அதிகபட்சமாக 39 ஓட்டங்களை பெற்றார்.
இதன்போது அபாரமாக பந்துவீசிய லெக் சுழற்பந்து வீச்சாளர் வாசுதேவன் விஷ்னுகோபன் 6 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் 43 ஓட்டங்களால் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய யாழ்ப்பாணக் கல்லூரி 7 விக்கெட்டு இழப்புக்கு 93 ஓட்டங்களை பெற்ற நிலையில் அட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
புனித பத்திரிசியார் கல்லூரி சார்பில் சிறப்பாக பந்து வீசிய வலது கை சுழற்பந்து வீச்சாளர் குமனதாசன் சரூஷன் 16 ஓவர்களின் 30 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
1917 ஆம் ஆண்டு தொடக்கம் நடைபெற்று வரும் இந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியில் 31ஆவது முறையாகவே ஆட்டம் சமநிலை கண்டுள்ளது. எனினும் கடந்த முறை போட்டியில் புனித பத்திரிசியார் கல்லூரி அணி இன்னிங்ஸ் மற்றும் 23 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டிகளின் 2024 ஆம் ஆண்டு பருவத்திற்கான அனுசரணைகளை டயலொக் நிறுவனம் பெருமையுடன் அறிவித்து வருகிறது. இலங்கை பாடசாலை மட்ட கிரிக்கெட் போட்டிகள் எதிர்கால கிரிக்கெட் நட்சத்திரங்களை உருவாக்கும் அடித்தளமாக இருப்பதோடு அவை தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் இலங்கை கிரிக்கெட்டுக்கு வலுவூட்டுவதாகவும் உள்ளன.
இந்தப் பருவத்தில் பெருமதிப்புமிக்க ஏழு மாபெரும் கிரிக்கெட் போட்டிகளுக்கு டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி பெருமையுடன் அனுசரணை வழங்குகிறது.