மெல்லிய மழைத்தூறல்கள் யன்னலூடாக மேனியைத் தொட்டபோதுதான் கண்களை விழித்தேன். விடிந்த பின்னரும் இவ்வளவு நேரம் தூங்கியிருப்பதை சுவர்க் கடிகாரம் காட்டித் தந்தது. இன்று விடுமுறை என்பதால் வழமையாக தூங்கமுன் நேரத்திற்கு எழுந்திட வைக்கும்- அலாரமும் வைக்கல.
இருந்தாலும் கோழி கூவுதல் இன்னும் பறவைகள் பறந்து செல்லும்போதில் எழுகின்ற ஒலிகள் நகரத்தின் விடியலில் காண முடிவதில்லை. மாறாக வாகன சத்தங்களின் பேரிரைச்சல்களே இங்கு வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் விரும்பாத சங்கீதமாகின்றன. கிராமத்தின் விடியல்களில் காண்கின்ற இன்பங்கள் எத்தனை? அழகான காட்சிகள்தான் எத்தனை?
இங்கு தலை நகரத்திலோ வேலை செய்யுமிடம் தங்குமிடம் இரண்டுடனே காலம் விரைகிறது. ஊரில உள்ள மாதிரி தெருவிலே சுற்ற முடியாது. நண்பர்களுடன் சேர்ந்து நடுச் சாமம்வரையில் கதைத்துக் கொண்டிருக்க முடியாது எல்லாம் அளவுடன் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்தாகவேண்டும். அதற்குக் காரணமும் இல்லாமலில்லை. பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கின்ற நாட்டின் சூழ்நிலை மற்றும் கொவிட் – 19 முடிவுற்றதா? இல்லை தொடருமா? என்ற அச்ச நிலையுடனான இந்த வாழ்வின் நகர்வினில் எனதூரின் நினைவுகளை கொஞ்சம் மீட்டித் தந்தன.
தோலைத் தட்டித் தடவிச்செல்லும் தோனாக்கடற்கரையும் உப்பாறு பாலமும் கழிச்சி இருமருங்கிலும் இழுத்தெடுக்கும் கனிந்து நிற்கும் நாவற்பழ மரமும் மகாவலி நதி வந்து பாயும் கொட்டியாரக் குடாவை வளைத்து நிற்கும் கண்டல் மரங்களையும் இறால்குழி, உப்பாறு,கண்டலடியூற்று, கங்கையாறு, உப்பாறு,தோனாறு போன்ற சின்னச் சின்ன கடலோர ஊர்களையும் கடந்து பயணிகளை கவர்ந்த வண்ணம் திருகோணமலையை நோக்கிப் புறப்படும் அரச பேரூந்தில், டிக்கட் எடுங்க, டிக்கட் எடுங்க, ‘கண்டக்டர் பஸ்லி நானா வின் குரல் ஒலித்தது. முன்னுக்கு இடமிருக்குது போங்க. பின்னாலையும் பார்த்து அமருங்க. பெண் பிள்ளைகளுக்கு பார்த்து இடம் கொடுங்க, அழகான தமிழை ஊருக்குள் பேரூந்து வரும் போதெல்லாம் கேட்கக் கூடியதாகயிருக்கும். நகைச் சுவையாகவும் பஸ்லி நானா பேசக் கூடியவர்.
அன்று ஒருவர் மலைக்குப் போறதிற்கு எவ்வளவு தம்பி என்று கேட்க, மலைக்குப் போறதுக்கு காசில்லை பஸ்ஸிலே போறவங்களுக்கு மட்டும்தான் காசு என்று நகைச்சுவையாகப் பதில் சொன்னார். இல்ல தம்பி திருகோணமலையை ‘மலை, என்று சுருக்கிச் சொன்னேன். அப்படியா? 40 ரூபா தாங்க.
அதிகமான பஸ் கண்டக்டகளைப் பாத்திருக்கிறேன் மிகுதிக் காசு கேட்டால் எரிந்து விழுவார்கள். ஏதோ அவர்களின் காசைக் கேட்பதைப்போல. இன்னும் சிலர் பொறுங்க பொறுங்க என்று காலத்தை ஓட்டிடுவாங்க. நாம இருக்கிற பக்கமும் திரும்பிப் பார்க்கவே அவர்களது மனசு இடம் தராது.
நம்மிடம் ஒரு ரூபா இரண்டு ரூபாய் குறைந்தால் டிக்கட்டே தரமாட்டாங்க. ஆயிரம் கதைகள் கதைப்பார்கள். வீட்டிலிருந்து வரும்போது காசில்லாமலா வாரது என கடைசி கேள்வியில் வந்து நிப்பாங்க. அப்படியானவர்கள் மத்தியில் பஸ்லி நானா கொஞ்சம் வித்தியாசமானவர். சில்லறைக் காசுகளை மாத்தி வெச்சுக்குவார். பலர் அவர் நடத்துனராக இருக்கும் பஸ்ஸை பார்த்துதான் ஏறுவாங்க.
ஒரு நாள் கொழும்பிலிருந்து ஊருக்குச் செல்லும் நீண்ட பயணத்தில் அவரைச் சந்திக்கக் கிடைத்தது. எனது பக்கத்துச் சீட்டிலேதான் அமர்ந்திருந்தார். ‘என்ன நானா” வேலையிலிருந்து ஓய்வு பெற்றிட்டிங்களா? எனக் கேட்டேன். ஓய்வு பெற்ற பின் மனசு கொஞ்சம் தேய்வு பெற்றிட்டு என அவரது மனக்குமுறல்களை திறந்தார்.
குடும்ப விசயம் சொல்லக் கூடாது. இருந்தும் சொல்கிறேன். தம்பி நான் வேலையில் இருக்கும்போது நல்ல நிலையில் இருந்தேன். உங்களுக்குத் தெரியும்தானே. அப்போது என் மனைவியும் கூடயிருந்தாள். கூட்டுக்குடும்பமாக சந்தோஷமாக வாழ்வு கழிந்தது. நான் பென்ஷன் போவதற்கு மூன்று வருடத்திற்கு முன்னாலே அவளும் என்னைவிட்டுப் போய்விட்டா.
நம்மட மனைவி இல்லாததால வாழ்க்கையும் இனி பிள்ளைகளோடுதான் என்ற நம்பிக்கையுடன் பென்சன் நேரம் கிடைச்ச பணத்திலே ஒரு சதமும் எடுக்காமல் என் பிள்ளைகள் மூவருக்கும் சமமாக கொடுத்தேன் கொடுத்த பின்னும் அவர்களுக்குள் தினமும் சண்டை தான் பிடித்தார்கள்.
ஆனால் நான் நீதியாக நடந்து கொண்டேன். மேலும் எனக்கு வருகிற மாதாந்த பென்சன் பணத்திலே தேவையான மரக்கறி, இறைச்சி என வாங்கிக் கொடுக்காமல் நான் இருந்ததில்லை. தந்தை என்ற வகையில் பிள்ளைகளுக்கு என்னசெய்யேலுமோ என்னால் முடிந்தவரை சின்னச் சின்ன உதவிகளையும் செய்து வருகிறேன். வயது போனாலும் என்ற உடுப்புக்களையும் இத்தனைக்கும் நானே கழுவிக் கொள்கின்றேன். அவர்களுக்கு தொல்லை கொடுக்கவேண்டாம் என என் மனசு சொல்வதால்,
ஒரு நாளைக்கு ஒரு வீட்டிலே எனக்கு சாப்பாடு தருவாங்க. இது அவங்களாகவே எடுத்த முடிவு சாப்பாடு தரும்போது ஒரே முணுமுணுப்பு. மூத்த தாத்தாவுக்கு எவ்வளவு கொடுத்தீங்க என்று இளைய மகளும், தம்பிக்கு எவ்வளவு கொடுத்தீங்க என்று மூத்த மகளும் மாறி மாறி என்னிடம் கேட்டு, சாப்பாடு வாயினுள்ளே நுழைவது பெரும் பாடாகி விடும்.
ஒருத்தர் வீட்டிலேயும் நிம்மதியாக சாப்பிட முடியல. என்னென்னவோ நினைவுகளை நெஞ்சினிலே சுமந்து பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் சந்தோஷமாய் வாழ ஆசைகளை அடுக்கி வெச்சிருக்கேன் அதெல்லாம் மாறிடுமோ? என இப்போது தடுமாறி நிற்கிறேன்.
பிறகொருநாள் மகண்ட வீட்டில தங்கலாம் என்று முடிவெடுத்து அவரது வீட்டுக்குப் போனேன். அங்கு போன புதிசில கவனிப்பு நான்றாக இருந்தது என் மகனுக்கு மூன்று பெண்குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையுமாக நான்கு பிள்ளைகள் உண்டு. எல்லாரும் பள்ளிக்குச் செல்கின்றனர்.
கடைசியாகப் பிறந்தவன்தான், சுதைஸ் அடுத்த வருடம் பாடசாலை செல்கின்ற வயதை அடைந்துள்ளான். அவனோ? சரியான குறும்புத் தனம் கொண்டவன். சின்னப் பிள்ளைகள் அப்படித்தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன். மகனும், மருமகளும் அதிகம் செல்லம் கொடுத்து விட்டார்கள். என்ன சொன்னாலும் கேட்பது குறைவு. இருவரும் வேலை விட்டு வரும்வரை நான் பார்த்துக் கொள்வேன். என்னையும் மீறி சில சம்பவங்கள் நடந்து விடுகின்றன.
அன்று தீப் பெட்டியை எங்கிருந்து எடுத்தானோ தெரியாது கேட்றீன் சீலையை எரித்துவிட்டு பார்த்துக் கொண்டிருந்தான். எரியும் வாசம் எழும்பி ஓடி வந்து அணைத்து விட்டேன். இல்லை என்றால் வீடோ முழுதும் பத்தியிருக்கும். அவனை அன்று கொஞ்சம் கண்டித்தது மகனுக்கும் மருமகளுக்கும் பிடிக்கல. முகம் பார்த்து என்னோடு இருவரும் கதைப்பதும் குறைந்து விட்டது.
பிள்ளைகளை கண்டிப்பது அந்தப் பிள்ளைகளின் எதிர் கால வாழ்வு நலமாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான் என்ற விடயத்தை மகனும் மருமகளும் விளங்கிக் கொள்ளல.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என பழமொழி சொல்வார்கள் இது அவர்களுக்கும் தெரியாமலில்லை. எல்லாம் அனுபவித்து தெரிந்து கொள்ளும்போது என்னைப் புரிந்து கொள்வார்கள் அந்நேரம் நானிருப்பேனோ யாருக்குத் தெரியும்.
அதனால, இனி யாருக்கும் நான் பாரமாக இருக்க விரும்பல. அதுதான் தம்பி கொழும்பிலே ஒரு வேலை ஒன்று இருக்குன்னு கூட்டாளி சொன்னான். தங்குமிடம், சாப்பாடு என வசதிகள் உள்ளன. அடுத்த கிழமை வேலையில் வந்து சேர்ந்துகொள்கின்றேன் என்று சொல்லிவிட்டு வருகிறேன். உடலில் சக்தி உள்ளவரை பூமியிலே பயணிப்போம் என கடவுளிடம் பிரார்த்திக்கின்றேன்.
பஸ்லி நானாவின் அந்த வார்த்தைகள் அவரது தொண்டைக்குழிக்குள் இருந்து தடுமாறி வெளியானதை காணும்போது ஒரு நல்ல மனிசருக்கு வந்த நிலைமையைப் பார் என்று மனதிற்குள் கேட்டிட என் கண்களும் மெல்ல கசிந்தது.
அவர் இறங்கும் இடம் வரும்வரை ஆறுதலான வார்த்தைகளை பேசிக் கொண்டேன். அந்த வார்த்தைகள் கூட அவரை சோகத்தில் இருந்து மீட்டெடுப்பதாகத் தெரியவில்லை. நிழல் வாழ்வுக்காக ஒவ்வொருவரும் ஓடியோடி உழைக்கின்றோம் என்ற பாடத்தை அவரது வாழ்வு எனக்கு கற்றுத் தந்தது.
கவிச்சுடர் ஏ.எம்.கஸ்புள்ளா