மூத்த ஊடகவியலாளரும் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான லூஷன் ராஜகருணாநாயக்கவின் இறுதிக்கிரியை இன்று (03) மாலை 4.00 மணியளவில் பொரளை மயானத்தில் நடைபெறும். தனது 85ஆவது வயதில் நேற்று முன்தினம் (01) காலமான மூத்த ஊடகவியலாளர் லூஷன் ராஜகருணாநாயக்கவின் பூதவுடல், ஏ.எஃப். ரேமண்ட் மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
பல வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பத்திரிகைகளுக்கு செய்தி சேகரிப்பு, கட்டுரை, செவ்விதாக்கமென இதழியலின் அனைத்து அம்சங்களிலும் 50 வருடங்களுக்கும் மேற்பட்ட காலம் அனுபவம் கொண்ட அன்னாரின் இழப்பு பத்திரிகைத் துறைக்கு பேரிழப்பு ஆகும்.
அவர் தனது பத்திரிகைத்துறை வாழ்க்கையை டைம்ஸ் ஒப் சிலோன் மற்றும் சண்டே டைம்ஸின் நிருபராக 1960 இல் ஆரம்பித்தார்.
1972 முதல் 2000ஆம் ஆண்டுவரை சண்டே ஐலண்ட், த சண்டே டைம்ஸ், த சண்டே லீடர், சண்டே ஒப்சர்வரின் புகழ்பெற்ற கட்டுரையாளராக விளங்கினார். இறக்கும்வரை த ஐலண்ட் மற்றும் டெய்லி நியூஸில் கட்டுரை எழுதி வந்தார். 2000ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அவர் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியை வகித்தவரென்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலம் மற்றும் சிங்கள இதழியல் துறையில் பரந்த மற்றும் வளமான அனுபவம் கொண்ட லூஷன் ராஜகருணாநாயக்க, ஊடக சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளுக்காக அதிகம் பாடுபட்டவர்.
ஜனாதிபதிகள் சிலரின் மூத்த ஊடக ஆலோசகராகவும் அவர் பணியாற்றியிருந்தார். இந்நிலையில் அவர் இறுதியாக மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த போது அவருடன் பணியாற்றியிருந்ததுடன், அவ்வேளையில் அவர் ஜனாதிபதி அலுவலகத்தில் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பணிப்பாளராகவும் பணியாற்றியிருந்தார்.