‘ரோயல் இலங்கை விமானப்படை’ என்ற பெயரில் 1951 மார்ச் 02 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்நாட்டு விமானப்படை 1972 இல் இலங்கை குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்டதும் ‘இலங்கை விமானப்படை’ என பாராளுமன்றத்தின் ஊடாக அங்கீகரிக்கப்பட்டது. அன்று தொடக்கம் இன்று வரையும் இலங்கையில் கீர்த்திமிக்க விமானப்படையாக விளங்கும் இலங்கை விமானப்படை நேற்று (மார்ச்) 02 ஆம் திகதி 73 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. இதன் பொருட்டு இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மாஷல் உதேனி ராஜபக்ஷ வாரமஞ்சரிக்கு விஷேட பேட்டி வழங்கினார்.
73 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இலங்கை விமானப்படையானது நாடு எதிர்கொள்ளும் சவால்களின் போது விஷேட பங்களிப்புக்களை நல்கி வருகிறது. அந்த வகையில் விமானப்படை கடந்து வந்த பாதை குறித்து குறிப்பிட முடியுமா?
ஆம். இலங்கை விமானப்படையின் 73 வருட வரலாற்றில் கடந்து வந்த பாதை தொடர்பில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ரோயல் விமானப் படையாக ஆரம்பிக்கப்பட்ட எமது விமானப்படை ஆரம்ப உறுப்பினர்களாக 6 உத்தியோகத்தர்களையும் ஏனைய தரத்திலான 24 உத்தியோகத்தர்களையும் கொண்டதாக இருந்தது. ஆரம்பத்தில் சிறிய நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட எமது விமானப்படை, 1972 இல் இலங்கை குடியரசானதும் இலங்கை விமானப்படையானது.
எமது பணிகளில் மாற்றங்கள் ஏற்படவில்லை. தற்போது எமக்கு சுமார் 20 பிராந்தியக் கிளைகள் காணப்படுகின்றன. அதற்கு மேலதிகமாக சுமார் 73 தொழில்வாண்மைப் பிரிவுகளும் உள்ளன. எமது ஒவ்வொரு பிரிவும் தொழில்வாண்மை மட்டத்தில் செயற்படுகின்றன. எமது படைவீரர்களின் எண்ணிக்கை 2009 இல் யுத்தம் முடிவுற்ற போது 35 ஆயிரமாகக் காணப்பட்டது. அது தற்போது 26 ஆயிரமாக உள்ளது.
யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் எமது படையினர் முக்கியமான பணிகளை முன்னெடுத்துள்ளனர். அரசாங்கத்தினால் விமானப்படையாக முன்னெடுத்துச் செல்லக்கூடிய மட்டத்தை அடைந்துள்ள எமது படையினர் தொழில்வாண்மையைப் பேணி முன்னோக்கிப் பயணிக்கத் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்.
எமது படையினர் தமது விஷேட திறமைகளை பல மட்டங்களில் வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக அரசாங்க நிறுவனங்களுக்கு மத்தியில் நடத்தப்பட்ட போட்டிகளில் தேசிய உற்பத்தி திறன் விருது, தர விருது என்பவற்றைப் பல வருடங்கள் நாம் வென்றெடுத்துள்ளோம். அதேபோன்று உலகின் ஏனைய விமானப் படைகளோடு பயிற்சிகளை நடத்துகிறோம். தொழில்நுட்ப படையணியை மாத்திரமல்லாமல் விமானப்படையினரையும் பராமரிப்பதற்காகப் பெருந்தொகை நிதி செலவாகிறது. அதனால் விமானப்படையை உரிய முறையில் பராமரிக்கவென நாம் பல நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறான சிரமங்களுக்கு மத்தியில் நாம் கடந்து வந்த பயணப்பாதை குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். அத்தோடு ஆரம்பம் முதல் இற்றைவரையும் பதவி வகித்த விமானப் படைத்தளபதிகளுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் ஏனைய பதவி நிலைகளினருக்கும் இச்சமயம் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விமானப்படையின் 73 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் எவை?
கல்வி மற்றும் சமூக சேவை வேலைத்திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து 73ஆவது ஆண்டு விழாவை கௌரவமான முறையில் சிறப்பாகக் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டோம். இம்முறை ஆண்டு விழாவை யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன் ஊடாக தொழில்நுட்ப அறிவை பெற்றுக்கொடுப்பதோடு விமானப்படை குறித்த சரியான தெளிவை வழங்கவும் எதிர்பார்த்துள்ளோம். ஐக்கிய நாடுகள் சபையின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுக்கு இணையாக எமது பணிகள் ஒழுங்கமைக்கப்பட்டன.
விமானப்படையினர் தினத்திற்கு இணையாக கல்வி மற்றும் சமூக சேவை வேலைத்திட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டன. இவ்வேலைத் திட்டங்களுக்காக 125 மில்லியன் ரூபாவுக்கு மேல் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சமூக சேவை வேலைத்திட்டங்களுக்கு ‘நட்புறவின் சிறகுகள்’ எனப் பெயரிட்டுள்ளோம். கடந்த வருடங்களில் விமானப் படையினர் தினம் கொழும்புக்கு மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தது. இம்முறை வடக்கையும் தெற்கையும் இணைக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் இவ்விழா நடத்தப்படுகிறது.
இவ்விழாவை சிறப்பாக நடத்தவென பெருந்தொகை நிதி செலவாகுமென மதிப்பிடப்பட்ட போதிலும் அவற்றில் சிறுதொகை நிதியும் அரசிடமிருந்தோ விமானப்படை மூலமோ ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
இவ்விழாவின் பிரதான வைபவங்கள் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டது பற்றிக் குறிப்பிடுங்கள்?
02 ஆம் திகதி காலை விமானப்படை ஆண்டு விழா அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வடக்கு தெற்கு ஒத்துழைப்பை இலக்காகக் கொண்ட ‘நட்புறவின் சிறகுகள்’ வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணம், முற்றவெளி விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளுக்கு வடக்கு சகோதரர்கள் மற்றும் இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸார், பெருந்தொகையான அரச நிறுவனங்கள் ஒத்துழைப்புக்களை நல்கின.
அந்த வகையில் கல்வி அமைச்சின் அங்கீகாரத்துடன் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 73 பாடசாலைகளில் 100 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும். ‘வடக்குக்கு என்னால் புத்தகம்’ என்ற வேலைத்திட்டத்தின் கீழ் 73 ஆயிரம் தமிழ், ஆங்கில மொழிப் புத்தகங்களை பகிர்ந்தளிக்கவென 25 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் வட மாகாணத்திலுள்ள பல பிரதேசங்களிலும் அப்பிரதேசங்களுக்கு பொருத்தமான 73 ஆயிரம் மரக்கன்றுகளும் நடப்படும்.
இவ்விழாவின் விஷேட நிகழ்வாக அமைந்துள்ள நிகழ்ச்சி யாது?
விஷேட நிகழ்வாக விமானப்படை பைசிக்கிள் ஒட்டம் இடம்பெறும். இது 25 ஆவது தடவையாக நடத்தப்படுகிறது. இன்று மார்ச் 3 ஆம் திகதி ஆரம்பமாகும் இப்போட்டி மார்ச் 07 ஆம் திகதியுடன் நிறைவடையும். கடந்த காலங்களில் இப்போட்டி மூன்று நாட்கள் நிகழ்வாக இடம்பெற்றது. இம்முறை இப்போட்டி ஐந்து நாட்கள் நிகழ்வாக இடம்பெறுகிறது. ஆண்களுக்கான சைக்கிள் ஒட்டப் போட்டியில் 100 பேரை இணைத்துக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம். மகளிருக்கான சைக்கிள் ஒட்டப் போட்டியில் 30, 40 பேர் பங்குபற்றுவர் என எதிர்பார்க்கிறோம்.
காலிமுகத்திடலில் (ஜனாதிபதி அலுவலகம்) ஆரம்பமாகும் இப்போட்டிகள் கண்டி, ஹபரணை, பொலன்னறுவை, திருகோணமலை, வவுனியா ஊடாக ஐந்து நாட்களில் யாழ்ப்பாணத்தை அடைய உள்ளது. ஆண்களுக்கான பைசிக்கிள் ஒட்டப் போட்டி சுமார் 700 கிலோ மீற்றர் தூரத்தையும் மகளிருக்கான போட்டி 100 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்டதாகும்.
மேலும் பொலன்னறுவை, திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இசைக்கச்சேரிகளை நடத்தவும் ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். அதேபோன்று நான்கு மாவட்டங்களை இணைத்து விமானப்படை தளபதி கிண்ணத்திற்கான சிநேகபூர்வ கரப்பந்தாட்டப் போட்டியை நடாத்த உள்ளோம்.
இப்போட்டிகளில் 11 விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்ற உள்ளன. வடக்கில் பெரும்பாலான மக்கள் கரப்பந்தாட்டப் போட்டிக்கு அதிக விருப்பம் கொண்டவர்களாவர். இதன் இறுதிப்போட்டி மார்ச் 06 ஆம் திகதி துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெறும்.
73 ஆவது வருட நிறைவை பெருமிதத்துடன் கொண்டாடும் இலங்கை விமானப்படை
வானின் பாதுகாவலர்கள் என்று அழைக்கப்படும் இலங்கை விமானப்படையானது தனது 73ஆவது வருட நிறைவை 2024 மார்ச் 02ம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவழிகாட்டல் மற்றும் தலைமையில் இலங்கை விமானப்படை தலைமையகத்தில் கொண்டாடியது.
இலங்கை விமானப்படையின் வரலாறு ஆரம்பமாவது 1951 மார்ச் 02ம் திகதி பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் “றோயல் சிலோன் எயார் போர்ஸ் “எனும் பெயரில் ஆரம்பமாகி பின்பு இலங்கை சுதந்திரம் அடைந்து 1972 ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி இலங்கை சோஷலிச குடியரசாக அறிவிக்கப்பட்டபின் “றோயல் சிலோன் எயார் போர்ஸ்” என்று இயங்கி வந்தது. இந்தப் படையானது இலங்கை விமானப்படை எனும் பெயருடன் மாற்றம்பெற்று இன்றுவரை இலங்கையின் வான் பரப்பின் பாதுகாப்பில் முக்கிய அங்கமாக செயற்பட்டு வருகின்றது. “வானின் பாதுகாப்பு” எனும் கருப்பொருளுடன் வெற்றிகரமாக அர்ப்பணிப்புடன் 73வது வருடத்தை கடந்து வந்துள்ளது.
இந்த வருடம் இலங்கை விமானப்படையின் 73ஆவது வருட நிறைவை முன்னிட்டு விமானப்படை தளபதியின் ஆலோசனைப்படி ஐக்கியநாடுகள் அமைப்பின் 17 நிலையான அபிவிருத்தி இலக்குகளில் உள்ளடங்கலான தரமான கல்வி, பசுமையான சுற்றுச்சூழல் ஆகிய இலக்குகளை முதன்மைப்படுத்தி சமூக சேவைகள் பல “நட்பின் சிறகுகள் ” எனும் கருப்பொருளை அடிப்படையாக கொண்டு வடமாகாணத்தை முதன்மைப்படுத்தி இடம்பெறுகின்றன.
இவற்றுள் வடமாகாணத்தில் இனங்காணப்பட்ட பின்தங்கிய 73 பாடசாலைகளை புனர்நிரமானம் செய்தல், வடமாகாண பின்தங்கிய பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை உயர்த்திடும் வகையில் அவர்களுக்கான பயிற்சிப் புத்தகங்கள், கடந்தகால பரீட்சை வினாத்தாள்கள் அடங்கிய புத்தகங்கள், மற்றும் கற்றல் உபகாரணம்கள் ஆகியவற்றை வழங்கிவைப்பதற்கான “எனது புத்தகமும் வடக்கில்” எனும் தொனிப்பொருளில் 73000 புத்தகங்களை நன்கொடையாக வழங்கும் திட்டமும் ஆரம்பமாகியுள்ளது.
தற்போதய விமானப்படை தளபதியான எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ உட்பட 19 தளபதிகள் இதுவரை விமானப்படைக்கு தலைமை தாங்கி 73 வருடங்களாக தாய்நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதுடன் எதிர்காலத்திலும் தாய்நாட்டிற்காக தனது மகத்தான சேவையினை தொடர்ந்து இலங்கை விமானப்படை வழங்க காத்திருக்கின்றது.
படங்கள்: வாசித பட்டபெந்திகே
பேட்டி கண்டவர்: மர்லின் மரிக்கார்