Home » இறுதி விருப்பம் நிறைவேறாமல் பரிதாபமாக உயிரிழந்த சாந்தன்!

இறுதி விருப்பம் நிறைவேறாமல் பரிதாபமாக உயிரிழந்த சாந்தன்!

by Damith Pushpika
March 3, 2024 6:17 am 0 comment

இந்தியாவின் பிரதமராகவிருந்த ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சாந்தன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருந்தார்.

பல வருடங்களின் பின்னர் தனது தாயாரைப் பார்ப்பதற்காக இலங்கை திரும்பவிருந்த நிலையிலேயே அவர் மரணமடைந்தார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக முன்னர் அடையாளம் காணப்பட்டிருந்தவர்களில் ஒருவாக சாந்தன் காணப்பட்டதுடன், இவருடன் நளினி மற்றும் பேரறிவாளன் ஆகியோரும் தண்டனை விதிக்கப்பட்டிருந்தார்கள்.

1991 மே 21 ஸ்ரீபெரும்புதூரில் நிகழ்ந்த ராஜீவ் காந்தி கொலைச் சம்பவத்தில் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்ட நிலையில், 1991 ஜூலை 22 ஆம் திகதி சாந்தன் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.

சுமார் ஏழு வருடங்களாக நடைபெற்ற விசாரணைகளைத் தொடர்ந்து 1998 ஜனவரி 28 ஆம் திகதி சாந்தன் உட்பட 26 பேருக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 1999 ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் திகதி தண்டனை வழங்கப்பட்ட 26 பேரில் 19 பேர் விடுவிக்கப்பட்டனர். இருந்தபோதும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நான்கு பேருக்கு தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்டது.

1999ஆம் ஆண்டு ஒக்டோபர் 8 ஆம் திகதி தமக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையைக் குறைக்கக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 1999 ஒக்டோபர் 10ஆம் திகதி நான்கு பேரும் தமிழக ஆளுநருக்கு கருணை மனுவை அனுப்பி வைத்திருந்தனர். எனினும் இந்த மனுவை அப்போது ஆளுநராக இருந்த பாத்திமா பீவி தள்ளுபடி செய்தார்.

1999 நவம்பர் 25 ஆம் திகதி ஆளுனரின் உத்தரவை இரத்துச் செய்து அமைச்சரவை முடிவு தொடர்பில் ஆளுநர் தீர்மானிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. இதற்கு அமைய 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் திகதி நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

ஆனால் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத்தண்டனை இரத்துச் செய்யப்படவில்லை. 2000 ஏப்ரல் 26 ஆம் திகதி பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட மூவரும் இந்தியாவின் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி வைத்தனர். அப்போது இந்தியக் குடியரசுத் தலைவராக கே.ஆர்.நாராணயன் இருந்ததுடன், அதன் பின்னர் பதவிக்கு வந்த அப்துல் கலாமும் இந்த மனுக்கள் குறித்து முடிவை எடுத்திருக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவராக இருந்த பிரதீபா பாட்டீல் 2011 ஓகஸ்ட் 12 ஆம் திகதி இவர்களின் கருணை மனுக்களை இரத்துச் செய்தார்.

பின்னர் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் சேர்ந்து, தாங்கள் அதிக வருடங்கள் சிறையில் கழித்து விட்டதால் தண்டனையை இரத்துச் செய்ய வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

2014 பெப்ரவரி 19ஆம் திகதி ‘ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய கைதிகள் விடுதலை’ என ஜெயலலிதா அறிவித்திருந்தார். குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி சி.பி.ஐ விசாரித்த வழக்குகளில் எடுக்கும் முடிவை மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டுமென்று கூறி, மத்திய அரசுக்கு தெரிவித்த போது, அப்போது இருந்த காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றத்தை நாடி விடுதலைக்குத் தடையைப் பெற்றிருந்தது.

பின்னர் நடைபெற்ற அந்த வழக்கில், 2015 டிசம்பர் 2 ஆம் திகதி மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் அவர்களை விடுவிக்க முடியாது என நீதிபதி அறிவித்தார்.

2016 மார்ச் 2 ஆம் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தது. 2018 மார்ச் 6 ஆம் திகதியன்று 7 பேர் விடுவிப்பு தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்கலாம் என ரஞ்சன் கோகாய் அமர்வு தீர்ப்பளித்தது.

2018 டிசம்பர் 6 ஆம் திகதி ஆளுநர் இறுதி முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் அதிகாரம் வழங்கியது. அதனைத் தொடர்ந்து பேரறிவாளன் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நிலையில், சாந்தன், முருகன், ெராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர். இருப்பினும் அவர்களில் பேரறிவாளனைத் தவிர மற்றையவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள். அதனால் அவர்கள் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர்.

சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான இணக்கப்பாடு இந்திய மத்திய அரசாங்கத்திடமிருந்து வழங்கப்பட்டிருந்தது. இரு நாடுகளும் இதற்கான இணக்கப்பாட்டைத் தெரிவித்திருந்ததுடன், இவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருந்த நிலையில், சாந்தனின் உடல்நிலை மோசமடைந்திருந்தது.

குறிப்பாக சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோதே அவர் உடல்நிலை குன்றியிருந்ததாக அவருடைய சகோதரர் கூறியிருந்தார். இந்த நிலையில் இரவு இலங்கைக்குத் திரும்பவிருந்த நிலையில் காலையில் உடல்நிலை மோசமடைந்து வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

சாந்தனின் வருகைக்காக அவருடைய தாயார் பல வருடங்களாகக் காத்திருந்த நிலையில், அவர் சடலமாக நாடு திரும்புவது உறவினர்களை வேதனையடையச் செய்துள்ளது. அவருடைய உடலுக்குத் தமிழகத்தில் உள்ள தமிழ் உணர்வாளர்கள் பலரும் தமது அஞ்சலிகளைச் செலுத்தியுள்ளனர்.

அவருடன் தண்டனை அனுபவித்த நளினி உள்ளிட்டவர்கள் இதில் அடங்குகின்றனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கு விவகாரத்தைப் பலரும் தமது அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்தியிருந்ததாகவும் விமர்சனங்கள் காணப்படுகின்றன. அது மாத்திரமன்றி சாந்தனை இலங்கைக்கு அழைத்துவரும் விடயத்தில் இதற்கு முன்னரே இந்தியா தீவிரமாகச் செயற்பட்டிருந்தால் அவரை உயிருடன் நாட்டுக்கு அழைத்து வந்திருக்க முடியும் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.

சாந்தன் தனது தாயாரையும் உறவினர்களையும் சந்திப்பதற்கு விரும்பியிருந்ததாகவும், அதற்கிடையில் அவர் உயிரிழந்து விட்டதாகவும் பலரும் வேதனை வெளியிட்டுள்ளனர்.

பி.ஹர்ஷன்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division