மெக்சிகோ சிட்டிக்கு அருகில் இருக்கும் ஒரு தீவின் பெயர் “The Island of Dolls”. பெயரைப் பார்த்துவிட்டு அழகழகாக பொம்மைகள் கிடைக்குமோ என்று கற்பனை செய்துகொண்டு இந்தத் தீவிற்குச் சென்றால் மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சும். தீவில் இருக்கும் அத்தனை மரங்களிலும் பழைய, வீணாய்ப்போன, சிதைக்கப்பட்ட, பார்த்தால் பயம்தரக்கூடிய பொம்மைகள் எக்கச்சக்கமாக கட்டித்தொங்கவிடப்பட்டுள்ளதாலேயே இந்தத் தீவிற்கு “Island of dolls” என்று பெயர்.
கிட்டத்தட்ட 50 வருடங்கள் குடும்பத்தைப் பிரிந்து, உலகைப் பிரிந்து தன்னந்தனியே இத்தீவில் வாழ்ந்த Don Julian Santana என்ற துறவி செய்த வேலை தான் பொம்மைகள் இத்தீவிற்கு வரக்காரணம்.
தன் வீட்டின் பக்கத்திலிருந்த கால்வாய் ஒன்றில் தவறி விழுந்து இறந்துபோன ஒரு குட்டிப்பெண்ணின் ஆவி தன்னைத் துன்புறுத்துவதாக நம்பிய Santana, அந்த ஆவியை திருப்திப்படுத்தவே சிதைக்கப்பட்ட பழைய பொம்மைகளை வாங்கி, குப்பைகளிலிருந்து எடுத்துவந்து மரத்திற்கு மரம் கட்டிவைத்தார். ஒரு கட்டத்தில் தன் வீட்டில் விளைந்த பழங்களையும் காய்களையும் பண்டமாற்று முறையில் கொடுத்து பொம்மைகளை வாங்கியிருக்கிறார்.
2001ஆம் ஆண்டு, அந்தக்குட்டிப்பெண் விழுந்து இறந்த அதே கால்வாயில் Santanaவின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது.
ஆவிக்கு பயந்தெல்லாம் அவர் பொம்மைகளைக் கட்டவில்லை, வீட்டை விட்டுத் தனியே இருந்த தன்னை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காகவும் மற்றவர்களைப் பயமுறுத்தவுமே இப்படி பொம்மைகளைக் கட்டித் தொங்கவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.