Home » திருகோணமலையில் கோலாகலமாக நடைபெற்ற 10ஆவது தேசிய சாரணர் ஜம்போரி

திருகோணமலையில் கோலாகலமாக நடைபெற்ற 10ஆவது தேசிய சாரணர் ஜம்போரி

இலங்கையின் தலைமை சாரணர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்து வைத்தார்

by Damith Pushpika
February 25, 2024 7:35 am 0 comment

சாரணர் இயக்கம் 1907ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ரொபர்ட் ஸ்டீவன்சன் ஸ்மித் பேடன் பாவல் என்பவரால் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சாரணர் இயக்கத்தின் செயற்பாடுகளைக் கண்ட இளம் யுவதிகளும் இந்தச் செயற்பாடுகளில் விருப்பத்தைத் தெரிவித்ததால் 1909ஆம் ஆண்டில் அம்மையார் பேடன் பாவல் பெண்களுக்கான சாரணர் இயக்கத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

பேடன் பாவலின் மகளான செல்வி எக்னஸ் பேடன் பாவலிடம் அதன் அடுத்த கட்ட செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான பணிகள் ஒப்படைக்கப்பட்டன. எக்னஸ் பேடன் பாவலினால் பெண் சாரணர்களுக்கான Girl Guiding என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

பெண்களினதும், யுவதிகளினதும் ஆற்றல்களை கூடியளவில் மேம்படுத்தி அவர்கள் உலகில் பொறுப்புள்ள பிரஜைகளாக ஆக்குவதே இதன் நோக்காகும்.

உலகில் அதிக இளைஞர்கள் கைகோர்த்துள்ள இயக்கமாக சாரணர் இயக்கத்தைக் குறிப்பிட முடியும். தற்போது சுமார் 174 நாடுகளில் வியாபித்துள்ள இந்த இயக்கத்தில் சுமார் 570 இலட்சம் பிள்ளைகள் இணைந்துள்ளனர். இவ்வாறான பெரும் இயக்கத்தை ஆரம்பித்த பேடன் பாவல் 1857ஆம் ஆண்டு பெப்ரவரி 22ஆம் திகதி இங்கிலாந்தின் லண்டனில் பிறந்தார். அவரது தந்தை ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகும். சிறியவனான பேடன் மூன்று வயதாக இருக்கும் போது அவரது தந்தை மரணித்தார்.

பேடன் பாவல் சிறு வயதிலிருந்தே தனது சகோதரனுடன் இணைந்து ஆறுகள், ஓடைகளில் படகுகளில் பயணிப்பதற்கும், முகாம்களை அமைத்து குதூகலமாக இருப்பதற்கும் ஆர்வத்தைக் காட்டினார். 13ஆவது வயதில் புலமைப் பரிசில் பெற்ற சாட்டர் ஹவுஸ் பாடசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு ஒரு சிறந்த நடிகராகவும் ஆனார். அத்துடன் பாடசாலை கால்பந்தாட்டக் குழுவிலும், வாத்திய இசைக் குழுவிலும் மிளிரக் கூடியவராகவும் ஆனார். 19ஆவது வயதில் இராணுவத்தில் லெப்டினன் ஒருவராக நியமனம் பெற்ற அவர் இந்தியாவில் பத்து வருடங்கள் பணியாற்றியுள்ளார்.

சாரணர் இயக்கம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்து 1912ஆம் ஆண்டிலாகும். பேடன் பாவலின் நண்பராக இருந்த பிரபல பொறியியலாளரான எப். ஜீ. ஸ்டீவன்ஸ் இதற்காகச் செயற்பட்டார். தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் அமைந்துள்ள மாத்தளை கிறிஸ்துவ வித்தியாலயத்தின் அதிபர் டீ. அல்பிரட் ஜயசிங்கவின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டு அதன் பின்னர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விளக்கமளித்தார். அதற்குப் பிறகு சில நாட்களில் இலங்கையின் முதலாவது சாரணர் குழு உருவாக்கப்பட்டது. நான்கு சிங்கள மாணவர்களும், இரண்டு தமிழ் மாணவர்களும், ஒரு முஸ்லிம் மற்றும் பறங்கி மாணவர்களும் அந்த குழுவில் அடங்கியிருந்தார்கள். அந்த குழு இரண்டு பகுதிகளைக் கொண்டதாக அமைந்தது. கழுகு மற்றும் சிங்கம் என அவற்றுக்குப் பெயரிடப்பட்டது. ஆர். பி. கொட்டுவேகெதர, தம்போ நடராஜா, ஏ. எம். ஹமீட், ஜோன் கருணாரத்ன, பீட்டர் போலின், ஆர். பி. கபுவத்தை, எம். ஸஹாப்தீன் மற்றும் பீட்டர் குணதிலக ஆகியோர் முதலாவது சாரணர் இயக்கத்தின் அங்கத்தவர்களாயினர்.

அதன் பின்னர் 1913ஆம் ஆண்டு கண்டி தர்மராஜவிலும், 1914ஆம் ஆண்டு காலி மஹிந்தவிலும், 1914ஆம் ஆண்டு முதலாவது கொழும்பு குழு காலி முகத்திடலில் அமைந்துள்ள கிறிஸ்து தேவாலயத்திலும் ஆரம்பிக்கப்பட்டது. அது ஆளுநரின் குழு என்றும் அழைக்கப்பட்டது.

1955ஆம் ஆண்டு இடம்பெற்ற 8 ஆவது உலக சாரணர் ஜம்போரி ஐரோப்பாவிற்கு வெளியில் இடம்பெற்ற முதலாவது உலக சாரணர் ஜம்போரியாகும். அதேபோன்று இலங்கையில் முதலாவது சாரணர் இயக்க ஜம்போரி 1952ஆம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்றது. அதேபோன்று 1962ஆம் ஆண்டு இலங்கை சாரணர் இயக்கத்தின் பொன்விழா ஜம்போரி கொழும்பில் இடம்பெற்றதோடு, இலங்கையில் இறுதியாக இடம்பெற்ற 9 ஆவது சாரணர் ஜம்போரி 2016ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இலங்கையின் தலைமை சாரணர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 10ஆவது தேசிய சாரணர் ஜம்போரியை பெப்ரவரி 21 ஆம் திகதியன்று திருகோணமலையில் ஆரம்பித்து வைத்தார்.

இலங்கை மற்றும் 28 நாடுகளைச் சேர்ந்த 11,500 சாரணர்களின் பங்குபற்றுதலுடன் தேசிய சாரணர் ஜம்போரி திருகோணமலையில் பெப்ரவரி 26ஆம் திகதிவரை நடைபெற்றது. ஜம்போரியை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம் இலங்கையின் விரைவான அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை வலியுறுத்தினார். சாதி மற்றும் மதத் தடைகளைத் தாண்டி நிகழ்வின் உள்ளடக்கிய தன்மையை அவர் வலியுறுத்தினார். மேலும் பொதுவான இலக்குகளை அடைவதில் தேசிய ஒற்றுமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

பொறுப்புள்ள குடிமக்களை வளர்ப்பதில் அதன் பங்கை அங்கீகரித்து, சாரணர் சங்கத்தை விரிவுபடுத்துவதற்கான ஆதரவை ஜனாதிபதி வழங்குவதாக உறுதியளித்தார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division