Home » ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னியின் கொலையும் அது ஏற்படுத்திய தாக்கங்களும்

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னியின் கொலையும் அது ஏற்படுத்திய தாக்கங்களும்

by Damith Pushpika
February 25, 2024 6:00 am 0 comment

உலகளாவிய அரசியலின் முக்கியத்துவம் புவிசார் அரசியல் கோட்பாட்டிற்கு உரியதாகவே காணப்படுகிறது. அத்தகைய புவிசார் அரசியல் கோட்பாட்டை உருவாக்கிய இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலப்பகுதி ரஷ்யாவை தனித்துவமான உலகளாவிய மையமாக அடையாளம் கண்டிருந்தது. அதன் முக்கியத்துவம் என்றுமே அருகியதாக கருத முடியாததன் விளைவே புவிசார் அரசியலுக்கு உரிய முக்கியத்துவமாக உள்ளது. அது மட்டுமன்றி ரஷ்யாவானது மூடியவடிவத்தையும் சர்வாதிகார ஆட்சியையும் ஐரோப்பாவுக்கான நெருக்கடியையும் வழங்கும் தேசமாக நிலவுகிறது. மகாபீட்டர் காலம் முதல் (1672-_1725) அதற்கான இயல்புகளில் அதிக மாற்றம் கண்டதாக தெரியவில்லை. ஜார் நிக்கலஸ்ன் ஆட்சியும் விளாடிமிர் புடின் ஆட்சியும் அதிக வேறுபாடுடையதாக கருதமுடியாதளவுக்கு ரஷ்யாவின ஆட்சி காணப்படுகிறது. இக்கட்டுரையும் ரஷ்ய எதிர்க்கட்சியின் தலைவராக இருந்து பின்னர் சிறையில் அடைக்கப்பட்டு கொல்லப்பட்ட அலெக்ஸி நவால்னி பற்றிய தேடலாக உள்ளது.

உலகம் முழுவதும் அதிகம் அறியப்பட்ட ரஷ்யர்களின் பெயர்ப் பட்டியலில் முதன்மை பெறுபவர் அலெக்ஸி நவால்னி என்பது குறிப்பிடத்தக்கதாகும். ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவராக அடையாளம் காணமுன்னர் மனித உரிமை சட்டத்தரணியாகவும், ஊழல் எதிர்ப்புவாதியாகவும் அடையாளம் காணப்பட்டவர். Alexei Anatolyevich Navalny,(1976-_2024) தண்டனை காலனியில் சிறைவைக்கப்பட்டு 16.02.2024 அன்று இறந்ததாக ரஷ்யா அறிவித்தது. ரஷ்யாவின் எதிர்காலம் எனும் அரசியல் கட்சியை நிறுவி புட்டின் அரசாங்கத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டி போராட்டம் நடாத்தியவர். பலதடவை அவர் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டதுடன் கொல்வதற்கு பல முயற்சிகள் புட்டினால் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் உண்டு. தற்போது கூட புட்டினது நடவடிக்கையினாலேயே நவால்னி கொல்லப்பட்டதாக நவால்னியின் மனைவி யூலியா குற்றச்சாட்டை முன்வைத்தள்ளார். அவரது மரணம் கொலை எனவும் படுகொலை எனவும் மேற்கு ஊடகங்கள் கூறிவருகின்றன. 2020 இல் கொல்லத் திட்டமிட்ட போதும் ஜேர்மனிக்கு கொண்டு செல்லப்பட்டு நவால்னி பாதுகாக்கப்பட்டார். அதன் பின்பே நாட்டுக்குள் வருகைதந்த போது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சிறையில் அடைக்கப்பட்டார். நவால்னியின் மரணம் சர்சைக்குரியாதாக இருப்பதுடன் அவரது உடல் மறைக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

யூலியா நேரடியாகவே ரஷ்ய ஜனாதிபதிக்கு நவால்னி கொல்லப்பட்டத்தில் தொடர்புள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட காணொளியொன்றில் சுதந்திர ரஷ்யாவுக்காக போராடப் போவதாக உறுதிமொழி செய்துள்ளார். தொடர்ந்து தாய்நாட்டுக்காக போராடப் போவதாகவும் நவால்னி விட்டுச் சென்ற நடவடிக்கைகளை தொடரப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். யூலியாவின் எண்ணத்தை வரவேற்கும் உலகம் லெனினின் மனைவியான கிறுப்ஸ்ஹாயாவுக்கு நிகழ்ந்ததையும் நினைவு கொள்வது அவசியமானது. நீண்ட போராட்டத்தை நடாத்தியது மட்டுமல்ல ஒரு புலமைத்தளத்தில் முதலாளியத்திற்கு எதிராக கோட்பாட்டு அடிப்படையிலான எண்ணத்தை உருவாக்கியதுடன் நீண்ட தலைமறைவுக்கும் அயல் நாடுகளில் மறைந்திருந்தும் ரஷ்யாவை ஜார் ஆட்சியிலிருந்து மீட்டெடுத்ததுடன் சமவுடமையை கட்டியெழுப்பும் போராட்டத்திலும் ஈடுபட்டார். ஆனால் அவரது மரணம் ரஷ்யாவை ஸ்டாலின் சர்வாதிகாரத்திற்கு கொண்டு சென்றதுடன் அனைத்துவகை சுதந்திரத்தையும் இல்லாமல் செய்திருந்தமை தெரிந்ததே. அத்தகைய புரட்சியாளனின் மனைவியின் இறுதிக்காலம் ஸ்டாலினால் அதிகம் துயரமானதாகவே அமைந்திருந்தது. ஸ்டாலினதும் அவரது சகாக்களதும் நெருக்கடியினாலேயே அவரது மரணம் நிகழ்ந்ததாகக்கூட வரலாறு பதிவு செய்துள்ளது. இத்தகைய இயல்பு ரஷ்யாவுக்கு மட்டுமானதல்ல. ஏனைய நாடுகளின் புரட்சியாளர்களது மரணத்திற்கு பின்னான மனைவிகளினது நிலைமை மோசமானதாகவே அமைந்துள்ளது. அதுவே நவால்னியினது யூலியாவுக்கும் நிகழ வாய்ப்புள்ளது. ஆனால் ரஷ்யாவின் அரசியல் முழுவதும் ஏன் இத்தகைய சர்வாதிகாரிகளது எழுச்சி சாத்தியமாகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஒன்று, ரஷ்யாவின் இயற்கையினது கட்டமைப்பு அத்தகைய இருப்பை தவிர்க்க முடியாததாக்கியுள்ளது. உலக வரலாற்றிலேயே அதிக நிலத்தினைக் கொண்ட தேசமாக அமைந்தாலும் பாலைவனமும் பனிப்பொழிவும் அதிகமுள்ள நிலம் என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது. ஆயிரக்கணக்கான மொழிப்பிரிவுகள் காணப்படும் பல் தேசிய இருப்பைக் கொண்ட நாடு ரஷ்யா. அதனால் ரஷ்யாவின் மரபுகளும் பண்பாட்டம்சங்களும் பழங்குடிக் கலாசாரத்தினால் வடிவமைக்கப்பட்டது. அதனை ஐரோப்பா போன்றோ அமெரிக்கா போன்றே கணித்துக் கொள்ள முடியாது. அதன் மரபு தனித்துவமானது. அதிலிருந்தே ஆட்சியும் அதிகாரமும் தோற்றம் பெற்றன. ஐரோப்பா அல்லது அமெரிக்கா போன்று குடியேறிகள் தேசமல்ல ரஷ்யா. அது மட்டுமன்றி அதன் பண்பாட்டுக்குள் ஆசிய மரபும் ஐரோப்பிய மரபும் கலந்துள்ளது. அதனாலேயே அது ஐரோ -ஆசியக் கண்டத்து நாடாக கருதப்படுகிறது. அதனால் அது ஆசியாவுடனும் ஐரோப்பாவுடனும் இயங்கும் திறனைக் கொண்டது. இதுவே அதன் ஆட்சி அ டக்குமுறையானதாக நகர்கிறது. அந்த தேசத்து மக்களது இயல்புக்கு அமைவாக ஆட்சிகளும் அதிகார வடிவங்களும் கட்டமைக்கப்படுகின்றன. அதனால் அந்த மக்கள் அத்தகைய ஆட்சியை அங்கீகரிக்கின்றனர்.

இரண்டு, ரஷ்யாவின் புவிசார் அரசியல் சர்வாதிகாரத்தை நோக்கிய ஆட்சியை அங்கீகரிக்கிறதாகவே தெரிகிறது. காரணம் மேற்கு ஐரோப்பாவால் அல்லது அமெரிக்க ஏகாதிபத்தியத்தினால் விழுங்கப்படாது ரஷ்யாவை பாதுகாக்கும் ஆட்சியாளனை சர்வாதிகாரியாகினும் ரஷ்ய மக்கள் ஏற்கத் தயாராக உள்ளனர். அதனையே புட்டின் மேற்கொள்வதாக ரஷ்ய மக்களில் அனேகமானவர்கள் கருதுகின்றனர். அதனால் தவிர்க்க முடியாது ஆட்சிக்கு எதிரான சக்திகளை தோற்கடிப்பதில் ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும் செய்முறைகளை அங்கீகரிக்கும் நிலை காணப்படுகிறது. அனைத்து ஏகாதிபத்திய அரசுகளுக்கும் சர்வாதிகாரமே பிரதான கொள்கையாக உள்ளது. அந்தவகைக்குள்ளேயே ரஷ்ய ஆட்சியாளர்கள் மேற்கு ஐரோப்பாவையும் விட அமெரிக்க எதிர்ப்புவாதியாக இருந்தால் அவர்களது ஆட்சியை ரஷ்ய மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். அதுவே புட்டினது இருப்புக்கான அடிப்படையாகும். அமெரிக்காவுடன் சமாதானமாக பயணிக்க முயன்ற மிகையில் கோர்பச்சேவ்வுக்கு நிகழ்ந்ததையோ சோவியத் யூனியனுக்கு நிகழ்ந்ததையோ ரஷ்ய மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

மூன்று, நவால்னி முழுமையாக மேற்குலகத்தின் நலன்களை நோக்கியே நகர்ந்திருந்தார். அவருக்கு நெருக்கடி வரும் போதெல்லாம் அமெரிக்காவும் மேற்கும் ஆதரவுகரம் நீட்டியதுடன் ரஷ்யாவுக்கும் புட்டினுக்கும் எதிராக பிரசாரம் செய்தது. அதனை ஒரு அரசியலாக மேற்குலகம் மேற்கொண்டது. மேற்கினது எண்ணம் முழுவதும் உலக வரைபடத்தில் ரஷ்யா என்ற அரசு மிகப்பலவீனமான துண்டு துண்டாக மேலும் உடைக்கப்பட வேண்டிய பகுதி என்பதாகும். அதனையும் கடந்து ஏகப்பெருவல்லரசாக மேற்கு நாடுகளே இருத்தல் வேண்டும் என்பதாகும். அந்த நாடுகளது ஏகாதிபத்திய முகத்தை காஸாவில் கண்டு கொள்ளலாம். அதனைவிட ஒரு புதிய உதாரணம் தேவையில்லை. ஏறக்குறைய நவால்னி அத்தகைய ஏகாதிபத்தியத்திற்கு கூலியாளாக ரஷ்யாவில் செயல்பட்டார் என்பதை நிராகரிக்க முடியாது. இதன் நோக்கம் ரஷ்ய மக்களது விடுதலையல்ல மாறாக அமெரிக்காவினதும் மேற்கினதும் நலன்களை நிறைவு செய்ய ரஷ்யாவில் முயன்றார் என்ற விமர்சனம் ரஷ்ய மக்களிடமே உண்டு.

நான்கு, நவால்னி ஒரு புரட்சியாளனாக விளங்கினாரா என்ற கேள்வி அனைத்துத் தரப்பிடமும் உண்டு. காரணம் புரட்சியின் எல்லையை தரிசித்த தேசம் ரஷ்யா என்பதை மறுக்க முடியாது. லெனின் அத்தகைய எல்லையை தந்தவர். அவரது ஜார் ஆட்சிக்கு எதிரான புரட்சி என்பது தெளிவான சித்தாந்தத்துடன் கட்டமைக்கப்பட்டிருந்தது. இலகுவில் அத்தகைய வரலாற்றை மறந்துவிட முடியாது. புரட்சிக்கான வரலாற்றையே லெனின் வரைந்திருந்தார். அவர் முதலாளித்துவத்தையும் அதன் வளர்ச்சிக்கட்டமான ஏகாதிபத்தியத்தையும் எதிர் கொள்ள அறிவு ரீதியிலும் போராட்ட ரீதியிலும் தயாரானார். அதற்கான கருத்துநிலையையும் வழிமுறைகளையும் ரஷ்ய மக்களிடம் ஏற்படுத்த விளைந்தார். அதன் கூட்டுப்பலமே ரஷ்யப் புரட்சியாகும். அவருடன் நவால்னி எந்த அடிப்படையிலும் ஒப்பிடக் கூடியவராக கண்டுகொள்ள முடியாது. இதனாலேயே நவால்னி மேற்குலகத்தின் கூலியாகச் செயல்பட்டார் என்பதை பதிவு செய்ய வேண்டியுள்ளது. இது புட்டினுக்கு கிடைத்த வாய்ப்பாகவே தெரிகிறது. புட்டின் உலக அரசியலில் அதிக போட்டியாளனாகவும் மேற்குக்கு சவாலான ஆட்சியாளனாகவும் கணிப்பிடப்படுகிறார். அது மட்டுமல்ல ரஷ்யாவின் பொருளாதாரத்தை நிமிர்த்தியதுடன் கீழைத்தேச நாடுகளது பொருளாதாரத்தை திசைதிருப்பியவராகவும் கணிப்பிடப்படுகிறார். மேற்குலகம் அதிகம் புட்டினை விமர்சனம் செய்தாலும் மேற்கு நாடுகளின் புலமையாளர்கள் புட்டினது எண்ணத்தை பாராட்டத்தவறவில்லை. அதனால் நவால்னி போன்றவர்கள் புட்டினுக்கு நிகரானவராக எழுச்சி பெறுவது கடினமானதாகவே தெரிகிறது.

எனவே நவால்னி படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பது ரஷ்ய மக்களுக்கும் தெரிந்தவிடயம். உலகத்தைப் போன்று அந்த மக்களும் அதனைப் பார்க்கிறார்கள். அதற்காக மேற்குலகம் கோருவது போல் புட்டினுக்கு எதிரான புரட்சியாக பார்க்க முடியுமா என்பதில் அவர்களுக்கு உடன்பாடு இருப்பதாக தெரியவில்லை. இதனையும் ரஷ்ய மக்கள் கடந்து செல்வார்கள் என்பதே அவர்களது வெளிப்படாகத் தெரிகிறது. இது புரட்சிவாதத்திற்கான யுகமுமல்ல. ரஷ்யாவுக்கு சர்வாதிகாரம் ஒரு பொருட்டான விடயமுமல்ல.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division