அமெரிக்க பொது இராஜதந்திரத்துக்கான துணைச் செயலாளர் எலிசபெத் எம்.அலன் (Under Secretary of State for Public Diplomacy and Public Affairs of United States) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இம்மாதம் 12ஆம் திகதி முதல் எதிர்வரும் 22ஆம் திகதிவரை ஜோர்தான், இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இவர் விஜயம் செய்யவுள்ளார்.
நாடுகளுக்கிடையிலான கூட்டாண்மை மற்றும் கூட்டணிகளை வலுப்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் அமெரிக்காவின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கும் இவரது இந்த விஜயம் அமைகிறது.
அமெரிக்க வெளியுறவுக்கொள்கை மற்றும் பொது இராஜதந்திர முயற்சிகளின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதுடன் கருத்துச் சுதந்திரம், பொருளாதாரத்துக்கு அதிகாரமளித்தல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கும் அலனின் விஜயம் முக்கியத்துவமாக உள்ளது.
மூன்று நாடுகளுக்குமான விஜயத்தில் ஜோர்தானுக்கு சென்ற அலன், ஜோர்தானிய இளைஞர்கள் மீது ஆங்கிலமொழி திட்டங்களின் மாற்றத்தக்க தாக்கத்தை ஆராய்ந்தார்.
தேசிய பாதுகாப்புக்கான ஒரு கருவியாக ஒருங்கிணைந்த, புதுமையான மூலோபாய தகவல் தொடர்புகள் குறித்து ஆராய, அந்நாட்டு வெளியுறவுத்துறை பொது விவகார நிபுணர்கள் மற்றும் ஜோர்தான் அரசாங்க அதிகாரிகளுடன் சந்திப்புகளை நடத்தினார்.
அத்துடன் அமெரிக்க பொது இராஜதந்திர திட்டங்களின் முன்னாள் மாணவர்கள் மற்றும் சிவில் சமூகத் தலைவர்களுடன் பிராந்திய முன்னோக்குகள் குறித்தும் கலந்துரையாடினார்.
ஜோர்தானுக்கான விஜயத்தின் பின்னர் இலங்கைக்கு வருகை தரும் அலன், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான அமெரிக்க ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தவும், சுதந்திரமான மற்றும் இந்தோ-பசுபிக் பகுதியை ஊக்குவிக்கும் நோக்கில் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கைக்கான விஜயத்தின் போது ஊடகவியலாளர்கள், சிவில் சமூக உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் இளைஞர் மன்றம் உட்பட பலதரப்பட்டவர்களுடன் கருத்துச் சுதந்திரம் மற்றும் ஜனநாயக விழுமியங்கள் பற்றிய கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.
அலனின் இறுதி விஜயமாக இந்தியாவுக்கான பயணம் அமைவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.