Home » செல்… வா ….சேர் நினைவேந்தல் இதழ் வெளியீடு

செல்… வா ….சேர் நினைவேந்தல் இதழ் வெளியீடு

by Damith Pushpika
February 18, 2024 6:00 am 0 comment

ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியின் ஓய்வுபெற்ற உப பீடாதிபதியும் பிரபல ஆசிரியருமான வ.செவ்வராஜா காலம் சென்று நாற்பது நாட்கள் நிறைவில் தினகரன் நோட்டன் வாசகர் வட்டம் வெளியீடாக வந்திருக்கும் செல்..வா ..சேர் நினைவுச் சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு தலவாக்கலை நண்பர்கள் வட்டத்துடன் இணைந்து தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் அதிபர் கிருஸ்ணசாமி முன்னிலை வகிக்க சாகித்ய ரத்ன மு.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது. திருமதி சுகிர்தகலா செல்வராஜா ஆசிரியை அவரது துணைவர் வ.செல்வராஜாவின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்த வருகை தந்த அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தியும் மலர் தூவியும் அன்னாருக்கு மிகவும் உணர்வுபூர்மாக தமது அஞ்சலியை செலுத்தினர்.

தலவாக்கலை நண்பர் வட்டத்தின் சார்பாக குணரட்ணம் வரவேற்புரையை வழங்க தலைமையுரையை சாகித்தியரத்னா மு.சிவலிங்கம் ஆற்றினார். ஆசிரியராக மாத்திரம் அல்லாமல் அரசியல்வாதியாகவும் செல்வராஜா எவ்வாறு இயங்கினார் என்பதையும் தன்னை கட்சி அரசியல் செயற்பாடுகளுக்குள் இழுத்து வந்தவர் எம்.நாகலிங்கம் மற்றும் – வ.செல்வராஜா ஆகியோரே என்பதையும் பதிவு செய்தார். அத்தோடு ஸ்ரீ பாத கல்வியியல் கல்லூரி உருவாக்கத்துக்கு செல்வராஜாவின் பங்களிப்பு எவ்வாறு அமைந்திருந்தது என்பதையும் பெய்த்திலி தோட்டத்தில் காணியைப் பெற்றுக்கொள்வதில் செல்வராஜா வகித்த பங்களிப்பு மகத்தானது என்றும் பின்னாளில் இது ஒரு மலையகப் பல்கலைக்கழகத்திற்கான அடித்தளமாக அமைய வேண்டும் என்பதிலும் அவரது அக்கறை இருந்தமையையும் எடுத்துரைத்தார்.

முன்னிலை வகித்து உரையாற்றிய பாடசாலை அதிபர் கிருஷ்ணசாமி தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய உருவாக்கத்துக்கும் அபிவிருத்திக்கும் தம்மை அர்ப்பணித்துக்கொண்ட குடும்ப உறுப்பினரான செல்வராஜாவின் நினைவேந்தலையும் மலர் வெளியீட்டையும் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடத்துவதில் பெருமை அடைகின்றோம் என்று குறிப்பிட்டார். ஆசிரியர் செழியன் கவிதாஞ்சலி செலுத்தினார், ஆசிரியர் தாஸ் பெர்னாண்டோ அஞ்சலியாக பாடல் பாடினார்.

ஆசிரியர் செல்வராஜா இசையை எந்தளவு நேசித்தார் என்பதையும் எடுத்துக் கூறினார்.

வெளியீட்டுரை நிகழ்த்திய நூலைப் பதிப்பித்த பாகயா பதிப்பக நிறுவனர் மல்லியப்புசந்தி திலகர், பன்முக ஆளுமை கொண்ட செல்வராஜா ஆசிரியரிடம் அடி வாங்கிக் கற்ற அவரது முதலாவது தொகுதி மாணவர்கள் தாங்கள் எனக் குறிப்பிட்டதுடன் அவரது பல்கலைக்கழக வாழ்க்கை குறித்த கட்டுரைகளும் படங்களும் இந்த தொகுப்பில் சேர்க்கப்பட்டிருப்பது சிறப்பு எனத் தெரிவித்தார். அவரது பல்கலைக் கழக நண்பர்களான சிவா முருகுப்பிள்ளை, சேரன் உருத்திரமூர்த்தி, அகியோரின் கட்டுரைகள் நமக்கு தெரியாத அவரின் பக்கங்கங்களைக் காட்டி நிற்கின்றன. கவிஞர் சேரன், ஈழத்தின் பெருங்கற்பண்பாட்டு அகழ்வாய்வில் பேராசிரியர் ரகுபதி தலைமையில் செல்வராஜா வழங்கியிருக்கக் கூடிய பங்களிப்பு மகத்தானது எனக் குறிப்பிட்டுள்ளார். இன்று சேரன் கனடா பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக இருக்கிறார். நாம் செல்வராஜாவை தமிழாசிரியராக மாத்திரமே அடையாளம் கண்டோம். அவரது வரலாற்றுத் தொல்லியல் ஆய்வுப்பின்னணி, கல்வியியற் கல்லூரி உருவாக்க பின்னணி எனப்பார்க்கும்போது மலையகத்தில் உருவாகியிருக்கவேண்டிய பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக வந்திருக்க வேண்டியவர் வ. செல்வராஜா என உரைத்தார்.

ஸ்ரீ பாத கல்வியியற் கல்லூரியின் உப பீடாதிபதி அந்தனி மெத்யூஸ் கல்லூரியில் செல்வராஜாவின் செயற்பாடுகள் பங்களிப்புகள் குறித்து குறிப்பிட்டதோடு, அந்தக் கல்லூரியின் பதில் பீடாதிபதியாக செல்வராஜா சில காலம் பணி புரிந்திருந்தார் என்றும், அரசியல்வாதியின் அனுசரணை இருந்தால் அந்தப்பதவி நிரந்தரமாக்கப்பட்டிருக்கும் என்ற நிலையில் அதனை மறுத்து அவர் பீடாதிபதியாக வரவில்லை. ஆனாலும் ஆயிரமாயிரம் ஆசிரிய மாணவர்களின் அன்புக்குப் பாத்திரமான ஆசானாகத் திகழ்ந்தார் என்று குறிப்பிட்டார். நினைவிதழ் குறித்த ஆய்வுரையை ஆசிரியரும் வ.செல்வராஜாவின் முதன்மை மாணவர்களில் ஒருவருமான ஸ்ராலின் சிவஞானசோதி நேர்மையான விமர்சனத்தையும் ஆதங்கங்களையும் பகிர்ந்து கொண்டார். கூடவே தனது அபிமான ஆசியருடனான தனது அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.

கருத்துரை வழங்கிய கொத்மலை கோட்டக் கல்விப் பணிப்பாளர் சு.இங்கர்சால், எங்களது ஆசான் வ.செல்வராஜா சேர் மலையகத்தினுடைய அடையாளம். ஓர் அடையாளத்திற்கான நிகழ்வு தான் இது. இன்று இந்நிகழ்வுக்கு வருகை தந்தவர்களுக்கும் ஒரு பெருமை இருக்கின்றது. என்று கூறிய அவர், இந்த தொகுப்பு நூலை வெளிக்கொணர்ந்தவர்கள் பாராட்டுக்குரியவர்கள் என்றும் போற்றப்படக் கூறியவர்கள் என வாழ்த்தி விரிவான பலகருத்துக்களை முன்வைத்தார். அவற்றைச் சுருக்கமாக இங்கு தருகின்றாம், சமூகத்திற்கு நல்ல மாணாக்கனை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கல்வியுடன் சமூக உணர்வையும் கற்றுக்கொடுத்த சிறந்த ஆசான் செல்வா சேர். உண்மையில் ஓர் ஆய்வாளன், ஒரு விமர்சகர் எவ்வாறு இருக்க வேண்டும் என்றால் அது செல்வராஜா சேர் போல இருக்க வேண்டும். அவரை மிஞ்சிய ஒருவரை மலையக சமூகத்தில் பார்ப்பது தற்போது கடினமாக இருக்கின்றது. அந்தளவிற்கு ஒரு நேர்மையான விமர்சகராக அவரை எனது அறிவுக்கெட்டியவரை நான் பார்த்திருக்கின்றேன் என்றார்.

விரிவுரையாளர் அகிலன் உரையாற்றுகையில், இவ்வாறானதொரு இதழ் விரைவில் வெளி வந்தமையை வரவேற்றுக்கொண்டு, செல்வா சேரின் வீட்டாரது அனுமதியுடன் சேரினால் எழுதப்பட்டுள்ள முக்கிய ஆவணங்கள் நூலுருப் பெறவேண்டும். அதற்கு நாம் அனைவரும் முன்வர வேண்டும். குறுகிய காலத்தில் இவ்வாறான இதழ் வௌிவந்தது சமூகத்தின் வெற்றி எனக் குறிப்பிட்டார். சிறப்பிதழ் குறித்த உரைகள் என்றவகையில் இவர்கள் மூவரினதும் உரைகள் தனியாக எழுத்தில் பதிவு செய்யப்பட வேண்டியவை.

ஆசிரியர் மோகன் வழங்கிய அஞ்சலிப் பாடலைத் தொடர்ந்து திருமதி சுகிர்தகலா செல்வராஜாவின் நன்றியுரை அமைந்தது. தனது கணவரையும் பிள்ளைகளின் தந்தையையும் இழந்த குடும்பத்துக்கு அவசியமான பகிர்வாக அமைந்த உரை அவருடையது. ஒரு சமூக ஜீவியான செல்வராஜா குடும்பத்தில் எப்படி இணைந்திருந்தார் என்பதையும் அவர்களது எதிர்பார்ப்பு என்னவாக இருந்தது என்பது பற்றியும் தன்னைத் தானே ஆற்றுப்படுத்தல் செய்துகொண்ட உரையாகவும் சமூகத்துக்கு எடுத்துச்சொல்ல வேண்டிய உரையாகவும் அமைந்தது. இறுதியாக சிறப்பிதழ் வெளியீட்டு முயற்சியில் பங்குகொண்ட நோட்டன் வாசகர் வட்டத்தின் தலைவர் பிராந்திய ஊடகவியலாளர் மு. ராமச்சந்திரன் தமது பங்களிப்புகளைக் கூறியதுடன் இதழ் தொகுப்பில், பதிப்பில், வெளியிட்டு நிகழ்வில் பங்குகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். தொகுப்பாசிரியர் ஜீவா சதாசிவம் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். வருகை தந்த அனைவருக்கும் சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன. அச்சுச் செலவுகள் அதிகரித்துள்ள இந்த கால கட்டத்தில் மிகக் குறைந்த அளவான பிரதிகளே அச்சிடப்பட்டுள்ளன என்றும் பிரதிகள் தேவைப்படுவோர் தங்களிடம் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் அச்சிட்டுத் தரமுடியும் என்றும் இதழ் தொகுப்பாசிரியர் தெரிவித்தார். மிகக் குறுகிய காலத்தில் வ.செல்வராஜா நினைவுகளைப் பதிவு செய்யும் அவரது மாணவர்கள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், அபிமானிகள் என பலரும் எழுதிய 40க்கும் மேற்பட்ட ஆக்கங்களைக்கொண்டதாகவும் அரிய பல புகைப்படங்களைக் கொண்டதாகவும் வெளிவந்துள்ள ‘செல்..வா.. சேர்’ சிறப்பிதழ் வாசிப்பதற்க மாத்திரமல்ல வைத்துப் பாதுகாக்கவும் வேண்டிய ஒரு வரலாற்று ஆவணம் என்பதில் ஐயமில்லை.

தொகுப்பு நோட்டன் பிரிட்ஜ் நிருபர்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division