இவ்வாண்டின் தவக்கால முதலாம் வார ஞாயிற்றுக்கிழமை நற்செய்தியினைப் படிக்கும் எவரும் புனித மாற்கு நற்செய்தியின் முக்கியத்துவத்தை விளக்குவதற்கு ஆசைப்படலாம்.
இன்றைய நற்செய்தியானது நான்கு வசனங்களில் சுருக்கித் தரப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கூட அங்கு வழங்கப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் அதன் முக்கியத்துவம் என்பனவற்றை கருத்திற்கொண்டு, இந்ந நான்கு வசனங்களும் இயேசுவின் வாழ்வு மற்றும் அவரது பணி ஆகியவற்றின் சுருக்கமாகும்.
இப்பகுதியில் இயேசு தமக்கென நேரத்தை எடுத்துக்கொண்டு, தனது பணி குறித்த வேண்டுதலுக்காக பாலைவனத்தினை நோக்கி செல்கின்றார். பாலைநிலத்தில் நாற்பது நாட்கள் தங்கியிருந்தார். அங்கு அவர் அலகையினால் சோதிக்கப்பட்டார். அங்கு காட்டு விலங்குகளிடையே வாழ்ந்தார். வானதூதர் அவருக்கு பணிவிடை புரிந்தனர்.
இங்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுகின்ற செய்தியானது இயேசு அலகையினால் சோதிக்கப்பட்டாலும் அச்சோதனைகளில் வீழ்ந்து விடவில்லை அல்லது அதற்கு அடிபணிந்து விடவில்லை. தான் சந்தித்த சவாலைகளை இயேசு ஏற்றுக்கொண்டார். அவற்றை வெற்றி கொண்டார்.
வெற்றி கொண்டவராக நமக்கும் இத்தவக்காலமதில் அழைப்புத் தருகின்றார். இன்றைய நாளில் அவரது மறையுரையின் சுருக்கம் யாதெனில், “மனந்திரும்புங்கள், ஏனெனில் இறையரசு நெருங்கி வந்துவிட்டது” என்பதாகும்.
தவக்காலம் மனமாற்றத்திற்கான அழைப்பின் காலமாகும். இயேசு நாற்பது நாட்கள் அலகையினை வெற்றி கொண்டது போல நாமும் இத்தவக்காலமதில் வெற்றி கொள்வோம். வாழ்வின் மாற்றத்தினைக் கொணரும் விதமாக வேண்டாதவற்றை வாழ்வில் விட்டுவிடுவோம். கெட்டவற்றை பார்ப்பதையும், பேசுவதையும் தவிர்ப்போம். நல்லவற்றை பார்ப்போம் பேசுவோம். வாழ்வின் மாற்றத்தை இயேசுவோடு ஆரம்பிப்போம்.
-அருட்தந்தை நவாஜி