Home » குறிப்புகள்

குறிப்புகள்

by Damith Pushpika
February 11, 2024 6:25 am 0 comment

இரட்டை சத சாகசம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பல்லேகலவில் கடந்த வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் பத்தும் நிசங்க பெற்ற இரட்டைச் சதம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மாத்திரமன்றி முதல் தர ஒருநாள் கிரிக்கெட்டில் கூட இலங்கை ஆடவர் ஒருவர் பெற்ற முதல் இரட்டைச் சதமாகும்.

இது 23 ஆண்டுகளுக்கு முன்னர் பெறப்பட்ட இலங்கை வீரர் ஒருவரின் அதிகூடிய ஒருநாள் ஓட்டங்களான சனத் ஜயசூரியவின் 189 ஓட்ட சாதனையை முறியடித்தது தெரிந்ததே. ஆனால் இலங்கை ஆடவர் ஒருவர் கழக அல்லது ஏ நிலை மட்டத்தினால் ஒருநாள் போட்டி ஒன்றிலும் நிசங்கவுக்கு முன்னர் எவரும் இரட்டைச் சதம் அடித்ததில்லை. ஆனால் மகளிர் முதல்தர ஒருநாள் போட்டிகளில் இலங்கையின் நான்கு வீராங்கனைகள் இரட்டைச் சதம் பெற்றிருக்கிறார்கள். இவ்வாறு கடைசியாக 2013 இல் இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து ஆட்டமிழக்காது 201 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

2013 இல் கொழும்பில் நடந்த தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் குமார் சங்கக்கார 169 ஓட்டங்களை பெற்றதே இதற்கு முன்னர் இலங்கை மண்ணில் ஒருநாள் போட்டி ஒன்றில் வீரர் ஒருவர் பெற்ற அதிக ஓட்டங்களாக இருந்தது. இந்த சாதனையையும் பத்தொடு பதினொன்றாக பத்தும் நிசங்க முறியடித்தார்.

இது மட்டுமல்ல பத்தும் நிசங்க ஆட்டமிழக்காது பெற்ற 210 ஓட்டங்களும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் சர்வதேச போட்டி ஒன்றில் வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாக இருந்தன. இதன்போது அண்மையில் நடந்த உலகக் கிண்ண போட்டியில் அவுஸ்திரேலியாவின் கிளன் மென்ஸ்வெல் ஒற்றையாளாக ஆட்டமிழக்காது 201 ஓட்டங்களை பெற்று அந்த அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்த சாதனையே முறியடிக்கப்பட்டது.

பத்தும் நிசங்கள் 200 ஓட்டங்களை எட்டுவதற்கு 136 பந்துகளுக்கு முகம்கொடுத்தார். அதாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மூன்றாவது அதிவேக இரட்டைச் சதமாக இது சாதனை படைத்தது. இதில் 2022இல் பங்களாதேஷுக்கு எதிராக இந்தியாவின் இஷான் கிஷன் 126 பந்துகளுக்கு இரட்டைச் சதம் பெற்றது முதல் இடத்திலும் மெக்ஸ்வெல் ஆப்கானுக்கு எதிராக 128 பந்துகளில் இரட்டைச் சதம் பெற்றது இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன.

நிசங்கவின் 210 ஓட்டங்களில் பௌண்டரிகள் மூலம் பெற்ற ஓட்டங்கள் 128. இதுவும் இலங்கை வீரர் ஒருவரின் அதிகபட்சமாகும். முன்னதாக 1996 இல் பாகிஸ்தானுக்கு எதிராக சனத் ஜனசூரிய 134 ஓட்டங்களை பெற்றபோதும் 2019 இல் நியூசிலாந்துக்கு எதிராக திசர பெரேரா 140 ஓட்டங்களை பெற்றபோதும் தலா 110 ஓட்டங்களை பௌண்டரிகள் மூலம் பெற்றதே சாதனையாக இருந்தது.

நிசங்க இரட்டைச் சதம் பெறும்போது அவரது வயது 25 ஆண்டுகள் மற்றும் 267 நாட்கள். இரட்டைச் சதம் பெற்ற இளம் வயதானவர் வரிசையில் அவர் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இதன் முதல் இடத்தில் 23 ஆண்டுகள் மற்றும் 132 நாட்களில் இரட்டைச் சதம் பெற்ற சுப்மன் கில்லும் இரண்டாவது இடத்தில் 24 ஆண்டுகள் 145 நாட்களில் சதம் பெற்ற கிஷானும் உள்ளனர்.

மாமா–மருமகன் கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட்டில் அண்ணன்–தம்பிகள் ஆடுவது வழக்கமானது. ஆனால் 13 வயது இடைவெளியுடன் மாமா–மருமகன் சமகாலத்தில் ஆடுவது மிக மிக அரிதானது. இலங்கைக்கு எதிராக கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆப்கான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய 22 வயது இப்ராஹிம் சத்ரானும் 35 வயது நூர் அலி சத்ரானும் உண்மையில் மாமா மருமகன்தான். இருவரும் சேர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் 106 ஓட்டங்களை இணைப்பாட்டமாகவும் பெற்றிருந்தார்கள்.

ஆப்கானிஸ்தானுக்குத்தான் இப்படி தலைமுறைகள் கிரிக்கெட் ஆடும் சிறப்பு இருக்கிறது போல். டெஸ்ட் வரலாற்றில் இப்படியாக மற்றொரு சம்பவம் நிகழ்ந்ததும் ஆப்கான் அணியில்தான். 2019 மார்ச்சில் டரடுனில் இடம்பெற்ற அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஆடிய வக்கார் சலாம்கைல், அந்தப் போட்டியில் ஆப்கான் அணித் தலைவராக செயற்பட்ட அஸ்கர் அப்கானின் மருமகனாவார்.

மாமா–மருமகன் டெஸ்ட் வீரர்களால் இருந்த சம்பவங்கள் ஏகத்திற்கு பதிவாகி இருந்தபோதும், அவர்கள் வெவ்வேறு காலகட்டத்திலேயே கிரிக்கெட் ஆடி இருக்கிறார்கள். தலைமுறைகள் ஒரே போட்டியில் ஆடுவது அரிதாகத்தான் இருந்து வருகிறது. ஏன் பாகிஸ்தான் முன்னாள் அணித் தலைவர் இன்ஸமாமுல் ஹக்கும் தற்போது பாகிஸ்தான் அணியில் ஆடும் இமாமுல் ஹக்கும் கூட மாமா–மருமகன்கள்தான்.

ஆனால் முதல்தர போட்டிகளில் அது நிகழ்ந்திருக்கக் கூடும். கடந்த பருவத்தில் இங்கிலாந்து முதல்தர போட்டிகளில் இங்கிலாந்து முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஜோ டென்லி, தனது மருமகன் ஜேய்டின் டென்லி ஆடும் கென்ட் அணியில் இணைந்ததை குறிப்பிடலாம்.

கன்னி டெஸ்டிலேயே அணித் தலைவரா!

நியூசிலாந்து சென்றிருக்கும் தென்னாபிரிக்க அணி கடந்த பெப்ரவரி 4 தொடக்கம் 8 ஆம் திகதி வரை முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆடியது. அந்தப் போட்டியின் விசித்தரம் என்னவென்றால் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் ஆட களமிறங்கிய 27 வயது நீல் பிராண்ட் தான் தென்னாபிரிக்க அணியின் தலைவராக செயற்பட்டார்.

ஒவ்வொரு அணியும் தலைவரை தேர்வு செய்வதற்கு தலையை பீய்த்துக்கொள்ளும்போது, இதுவரை முதல்தர போட்டிகளில் மாத்திரம் ஆடி இருக்கும் ஒரு வீரரை டெஸ்ட் அணித் தலைவராக அழைப்பதென்றால் உண்மையில் அது விசித்திரமானது தான்.

ஒரு அணி தனது முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவதைத் தவிர்த்துப் பார்த்தால் கடந்த அரை நூற்றாண்டில் இது போன்ற சம்பவம் ஒன்று இதற்கு முன் ஒரே ஒரே தடவை தான் நிகழ்ந்திருக்கிறது. 1995 ஆம் ஆண்டு பெங்களுரில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது கன்னி டெஸ்டில் ஆட அழைக்கப்பட்ட லீ கெர்மொன் நியூசிலாந்து அணியின் தலைவராகவும் செயற்பட்டார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும் சுழற்பந்து வீச்சாளராகவும் செயற்படும் பிராண்ட் முதல் இன்னிங்ஸில் 119 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதாவது அணித் தலைவராக தனது முதல் போட்டியிலே சிறந்த பந்துவீச்சை வெளிக்காட்டியவராக அவர் சாதனை படைத்தார். இதற்கு முன்னர் 2000 ஆம் ஆண்டு நவம்பரில் டாக்காவில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முதல்முறை பங்களாதேஷ் அணித் தலைவராக களமிறங்கிய நைமுர் ரஹ்மான் 132 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division