தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியின் இறுதியாட்ட இன்று நடைபெறப்போகிறது. வழக்கம்போல இந்திய இறுதிப் போட்டிக்கு வந்திருக்கிறது. மறுபக்கம் அவுஸ்திரேலிய இளையோர்களும் சரிசமமான பலத்துடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.
எனவே, நடப்புச் சம்பியனாக இந்தியா ஆறாவது முறை கிண்ணத்தை வெல்லுமா, இல்லை 14 ஆண்டுகளுக்குப் பின்னர் அவுஸ்திரேலிய இளையோர்கள் உலக சம்பியனாவார்களா என்று இன்று (11) நடைபெறும் இறுதிப் போட்டியில் தெரியவரும்.
எப்படியோ இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியை பிரதிபலிப்பதாகவே இந்த இறுதிப் போட்டியும் அமையப்போகிறது. அப்போது, இந்தியா மற்றும் ஆஸி. அணிகள் தான் இறுதிப் போட்டியில் மோதின. அவுஸ்திரேலியா கிண்ணத்தை வென்றபோதும் அந்த கோட்பாடு இந்த இறுதிப் போட்டிக்கு பொருந்தும் என்று எடுத்துக் கொள்ள முடியாது.
அடிப்படையில் இளையோர் உலகக் கிண்ணத்தில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் ஆரம்ப சுற்று, சுப்பர் சிக்ஸ் சுற்று ஆகிய எந்தப் போட்டியிலும் தோற்காமலேயே இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
அரையிறுதியில் இந்தியா போட்டியை நடத்தும் தென்னாபிரிக்காவை வீழ்த்தியதோடு அவுஸ்திரேலியா, பாகிஸ்தானை கடைசி ஓவர் வரை போராடி தோற்கடித்தது.
எதிர்கால கிரிக்கெட்டை எதிர்வுகூறுவதற்கு இந்த இளையோர் உலகக் கிண்ணம் முக்கியமானது. இளையோர் உலகக் கிண்ணத்தின் கடந்த நான்கு தொடர்களிலும் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறி இரண்டு தடவை கிண்ணத்தை வென்றிருக்கிறது. அதன் விளைவு தேசிய அணியின் ஆட்டத்தில் தெரிகிறது.
இம்முறை தொடரிலும் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர்கள் வரிசையில் முதல் மூன்று இடங்களில் இருப்பவர்கள் இந்திய வீரர்கள் தான். அதிகபட்சமாக உதை சஹர் 389 ஓட்டங்களை பெற்றிருப்பதோடு ஓட்ட சராசரி கூட 64.83. என்றாலும் அதிக ஓட்டங்கள் பெற்றவர் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் முஷீர் கான் மீது அதிக அவதானம் சென்றிருக்கிறது. மொத்தம் 338 ஓட்டங்களை பெற்றிருக்கும் அவரின் ஓட்ட வேகம் கூட 100ஐ தாண்டுகிறது. சுழற்பந்து வீச்சாளராகம் முக்கிய நேரங்களில் விக்கெட்டுகளை சாய்க்கிறார்.
அந்த அணியின் பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பும் சிறப்பாக இருக்கிறது. எதிர்காலத்திலும் இந்தியா கிரிக்கெட் உலகில் தனது ஆதிக்கத்தை தக்கவைக்கப்போகிறது என்பதற்கு இந்த அணி நல்ல உதாரணம்.
அதேபோன்று அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் இளையோர்களும் சோபித்தார்கள். இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகள் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தின. நியூசிலாந்து தேசிய அணியை இளையோர் அணியை வைத்து கணிக்க முடியாது என்பது கடந்த கால வரலாறு. இந்தத் தொடரில் அந்த அணி போதுமாக சோபிக்கவில்லை.
கொழும்பு, றோயல் கல்லூரியைச் சேர்ந்த சினத் ஜனவர்தன தலைமையில் உலகக் கிண்ணத்தில் ஆடச் சென்ற இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களின் ஆட்டம் திருப்தி தருவதாக இல்லை. பலவீனமான அணிகளிடம் வெல்வதும் பலமான அணிகளிடம் தடுமாற்றம் காண்பதுமாக தேசிய அணியின் மட்டத்திற்கே ஆட்டங்கள் இருந்தன.
ஆரம்ப சுற்றில் சிம்பாப்வே, நமீபிய அணிகளை வீழ்த்தி சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறிய இலங்கை, மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்க அணிகளை எதிர்கொண்ட இரண்டு சுப்பர் சிக்ஸ் போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து வெளியேறியது. ஏற்கனவே ஆரம்ப சுற்றில் அவுஸ்திரேலியாவிடமும் தோற்றது.
இலங்கை இளையோர்களின் துடுப்பாட்டத்தில் தடுமாற்றம் தெரிந்ததோடு பந்துவீச்சும் குறிப்பிடும்படியாக இல்லை. குறிப்பாக நமீபியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியால் 133 ஓட்டங்களையே பெற முடிந்தது. நல்லவேளை அனுபவம் இல்லாத எதிரணியாக இருப்பதால் அந்த அணியை 56 ஓட்டங்களுக்கு சுருட்ட முடிந்தது.
காலி, மஹிந்த கல்லூரியின் தினுர கலுபஹன இலங்கை சார்பில் அதிக ஓட்டங்களை பெற்றிருந்தார். அவர் ஐந்து இன்னிங்ஸ்களில் பெற்ற 196 ஓட்டங்களுமே அதிகபட்சமாகும். இதன் ஓட்ட சராசரி 39.20 ஆகும். எனவே, மற்ற வீரர்களின் ஆட்டத்தை கணிக்க இது போதுமாக இருக்கும். பந்துவீச்சில் பாணந்துறை, ஸ்ரீ சுமங்கல கல்லுௗரியின் சுழற்பந்து வீச்சாளர் விஷ்வ லஹிரு ஐந்து போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியது அதிகமாகும்.
கொழும்பு மற்றும் மேல் மாகாணத்திற்கு சுருங்கி இருக்கும் இலங்கை பாடசாலை கிரிக்கெட் கட்டமைப்பை விரிவுபடுத்தினாலேயே இளையோர் கிரிக்கெட் மற்றும் தேசிய கிரிக்கெட்டுக்கு இன்னும் திறமையான வீரர்களை கண்டுபிடிக்க முடியும்.
இளையோர் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி இதுவரை ஒரு முறை கூட கிண்ணத்தை வென்றதில்லை என்பதோடு 2000ஆம் ஆண்டில் இறுதிப் போட்டி வரை முன்னேறியது தான் உச்சம்.
இன்று நடைபெறும் இறுதிப் போட்டி என்பது அதிர்ச்சி தருவதாக இருக்காது. ஏற்கனவே கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்தும் இரு அணிகளே மோதப்போகின்றன. அதாவது அடுத்த தசாப்தத்திலும் இந்த அணிகளின் ஆதிக்கம் தொடரப் போகிறது என்பதை உறுதி செய்வதாகவும் இந்த ஆட்டம் இருக்கும்.
எஸ்.பிர்தெளஸ்