தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு தீர்வு காண முன்னுரிமை வழங்கினால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். அதற்கு தாம் ஒத்துழைப்பு வழங்க தயாரென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.சிறிதரன் எம்.பி. தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (09) நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் அவர் மேலும் உரையாற்றிய போது,
“தமிழ்த் தேசிய இனத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் எவ்வாறு முன்னேற முடியுமென்பதுடன், பிரச்சினைகளுக்கு தீர்வு காண பெரும்பான்மையின தலைவர்கள் முன்வர வேண்டும். எமக்கான தீர்வு கிடைத்தாலே ஒன்றிணைந்து செயற்பட முடியும்.
இனங்களுக்கு இடையில் சமாதானம் மற்றும் ஒற்றுமையை உறுதிப்படுத்தாமல் பொருளாதாரத்தை முன்னேற்றுவது தொடர்பாக பேசுவது எந்தளவுக்கு சாத்தியம் அடையுமென்பது தெரியவில்லை.
முன்னாள் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாண விவசாயிகளின் சுய பொருளாதாரம் இலங்கையின் பொருளாதாரத்துக்கு ஊன்றுகோலாக அமைந்தது. விவசாயிகள் முன்னேறினர்.
ஆனால் 1977ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், மூடிய பொருளாதார கொள்கையை இரத்துச் செய்து திறந்த பொருளாதார கொள்கையை அமுல்படுத்தியது. இதனால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்தது.
நாட்டின் தேசிய உற்பத்தி பொருளாதாரம் இல்லாமல் போய், இறக்குமதி பொருளாதாரத்துக்கு தஞ்சமடைய நேரிட்டு இன்று உலக நாடுகளிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டின் அடிப்படை பிரச்சினைகளை முதலில் அடையாளப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.