Home » காசா போரின் இனப்படுகொலையும் பூகோள முறைமையின் யதார்த்தமும்!

காசா போரின் இனப்படுகொலையும் பூகோள முறைமையின் யதார்த்தமும்!

by Damith Pushpika
February 11, 2024 6:00 am 0 comment

சித்தாந்தங்கங்களினூடாகவே வல்லாதிக்க அரசுகள் தமது ஆதிக்கத்தை சர்வதேச ஒழுங்கில் உறுதிப்படுத்துகின்றன. இப்பின்னணியிலேயே, ஒற்றைமைய உலக ஒழுங்கில் அமெரிக்க ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டங்கள் என்பவற்றை நிலைநாட்டுதல் என்ற போர்வையிலேயே ஏனைய அரசுகள் மீது தனது ஆதிக்கத்தை பலப்படுத்தி வந்துள்ளது. குறிப்பாக 1991ஆம் ஆண்டு வளைகுடா போர் முதல் இன்று செங்கடலில் ஹவுதிகள் மீதான தாக்குதல் வரையில் ஈராக், ஈரான், சிரியா, யெமன் போன்ற மேற்காசிய நாடுகள் மீதான அமெரிக்காவின் நேரடி தாக்குதல்களும், ஆதரவுக் கூட்டணி தாக்குதல்களும் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டம் எனும் சொல்லாடல்களூடாகவே நியாயப்படுத்தப்பட்டு வந்தன. எனினும் சமகாலத்தில் இஸ்ரேல் காசாவில் நிகழ்த்தும் இனப்படுகொலை விவகாரங்களின் பின்னால், அமெரிக்காவின் முழுமையான ஆதரவு குவிக்கப்பட்டுள்ளமையானது, அமெரிக்காவின் ஜனநாயக முகம் மீது பலமான எதிர்ப்பையும் விமர்சனத்தையும் உருவாக்கியுள்ளது. அதேவேளை, சீனாவின் அமைதியான நிலைப்பாடு, உலக ஒழுங்கில் சீனாவின் நிலையை உயர்த்துவதாக வரலாற்றை அடிப்படையாய் கொண்டு சர்வதேச அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். இக்கட்டுரை காசா போர் வெளிப்படுத்தும் பூகோள முறைமையின் யதார்த்தத்தை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி -08 அன்று அமெரிக்க செனட் 95 பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவிப் பொதிக்கு வாக்களித்திருந்தது. இவ்உதவித் தொகையில், ​​இஸ்ரேலுக்கு 14 பில்லியன் டொலர் உதவி உட்பட உக்ரைன் மற்றும் இந்தோ-, பசிபிக் நட்பு நாடுகளுக்கான உதவித்தொகைகளும் உள்ளடங்கியிருந்தது. இவ்வாக்களிப்பின் போது, நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்கள் மதிப்பிலான அமெரிக்க ஆயுதங்களைப் பெற்ற இஸ்ரேல், காசாவில் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளில் சர்வதேச சட்டத்தை பின்பற்றுகிறதா என்பது குறித்து ஜனநாயக கட்சியினை சார்ந்த செனட்டர்களே கேள்வி எழுப்பியிருந்தார்கள். ஜனநாயகக் கட்சி செனட்டர்கள் நெதன்யாகு, போரைத் தொடுத்த விதம் குறித்து எச்சரிக்கைகளை எழுப்பியுள்ளனர். குறிப்பாக, அமெரிக்க ஜனாதிபதி பைடன், ஒருமுறை ‘கண்மூடித்தனமான குண்டுவீச்சு’ என்று விபரித்ததில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மற்றும் பேரழிவிற்குள்ளான பகுதிக்கான உதவி இஸ்ரேலிய அரசாங்கத்தால் நிறுத்தப்பட்டிருந்தது என்பதையும் செனட்டர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். இவ்விவாதம், ஐனநாயக கட்சியை சேர்ந்த செனட்டர் கிறிஸ் வான் ஹோலன் வெளிநாட்டு உதவி மசோதாவைத் திருத்துவதற்கு வழிவகுத்தது. இது உதவி பெறும் எந்த நாடும் சர்வதேச சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறது. இதனை மேலும் பலப்படுத்தி, அமெரிக்க ஆயுதங்களைப் பெறும் நாடுகள் கடைப்பிடிக்க வேண்டிய தரநிலைகளை வகுக்கும் குறிப்பாணையை அமெரிக்க ஜனாதிபதி பைடன் வெளியிட்டுள்ளார். முதல் முறையாக, நாடுகள் தேவைகளைப் பூர்த்தி செய்கிறதா என்பது குறித்த வருடாந்திர அறிக்கையை அமெரிக்க காங்கிரசுக்கு நிர்வாகம் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பாணையில் புதிய வழிகாட்டுதல்கள் அல்லது நிபந்தனைகள் இல்லை. மாறாக அமெரிக்க ஆயுதங்களைப் பெறும் நாடுகளிடம் இருந்து எழுத்துபூர்வ உத்தரவாதத்தைப் பெறுவதற்கு வெளியுறவுத் துறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச சட்டத்தை கடைப்பிடிப்பது மற்றும் அமெரிக்க மனிதாபிமான உதவியை எளிதாக்குவது ஆகியவை அடங்கும்.

அமெரிக்க செனட், குறிப்பாக ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சியை சார்ந்த செனட்டனர்களே வெளிநாடுகளுக்கான ஆயுத உதவிகள் தொடர்பில் சிறப்பு மசோதாவை வலியுறுத்தியுள்ளனர். இது, அமெரிக்க அரசின் முரணான நடத்தைகள் தொடர்பில் பலமான எதிர்ப்பு, அமெரிக்க நிலப்பரப்புக்குள்ளேயே வளர்ந்துள்ளமையையே வெளிப்படுத்துகின்றது. மக்களின் எண்ணங்களையே செனட்டர்களின் எச்சரிக்கை உணர்த்தியுள்ளது. காசா போரின் இனப்படுகொலைக்கான நகர்வுகள் மேலும் பல பூகோள முறைமையின் யதார்த்தத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதனை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகின்றது.

முதலாவது, அரசுகள் மற்றும் மக்கள் இறைமை தொடர்பிலான புனித பிரசாரங்களின் பொய்மையை காசா போர் வெளிப்படுத்தியுள்ளது. அதாவது யதார்த்தவாத அரசியல் நகர்வை உறுதிசெய்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்க யதார்த்தவாதத் திட்டமானது, ஒரு நிலையான விதிகள் அடிப்படையிலான சர்வதேச அமைப்பை வலுக்கட்டாயமாக உருவாக்குவதாகும். மேற்கத்தேய அரசாங்கங்களும் நீண்ட காலமாக இந்த முறைக்கு அடிபணிந்து வருகின்றன. கொரியா, வியட்நாம், குவைத், கொசோவோ, ஈராக், சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் இது போரால் பராமரிக்கப்படும் ஒரு அமைப்பாகும். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் கற்கையின் பேராசிரியர் டங்கன் பெல் குறிப்பிடுவது போல் யதார்த்தவாதம், “சர்வதேச உறவுகளின் தேசிய பாதுகாப்புப் படிப்புகளில் யதார்த்தவாதத்தின் முக்கியத்துவத்தின் விளைவாக, அரசாங்கங்கள் போர் எப்போதும் சாத்தியமாக இருக்கும் ஒரு சோகமான உலகத்தைக் காண முடிவு செய்கின்றன. “யதார்த்தவாதிகள் மற்றவர்களின் ஏமாற்றப்பட்ட இலட்சியவாதம், அல்லது சுய-நீதியான ஒழுக்கம் என எதைப் பார்க்கிறார்கள் என்பதை எதிர்த்து, இந்த யதார்த்தவாதிகள் மனித இயல்பு மற்றும் சர்வதேச உறவுகளின் அவசியமான கட்டமைப்பு பற்றிய போலியான உண்மைகளை சுட்டிக்காட்டி, அரசியல் நடத்தையின் செயல்பாட்டுச் சட்டங்கள் குறித்து சந்தேகத்திற்குரிய முடிவுகளை எடுக்கிறார்கள். யதார்த்தவாதத்தின் செல்வாக்கின் கீழ் அரசியல் தலைவர்கள் சர்வதேச அராஜக நிலையில் அனைத்து அரசுகளும் சர்வதேச சட்டத்தின் மீது உண்மையான மதிப்பைக் கொண்டிருக்கவில்லை மற்றும் அதைச் செயல்படுத்துவதற்கான எந்த வழியையும் அங்கீகரிக்கவில்லை என்றும் கருதுகின்றனர். மேலும் அவை முதன்மையாக தங்கள் சொந்த பாதுகாப்பிற்குத் தேவையான அதிகாரத்தை அதிகப்படுத்துவதில் அமைக்கப்பட்டுள்ளன. அதனையே காசா போரின் விளைவுகள் உறுதி செய்கின்றன. சர்வதேச சட்டத்தை வலியுறுத்தி உக்ரைன் போரில் சர்வதேச நீதிமன்றத்தை நாடிய அமெரிக்கா, காசா போரில் சர்வதேச நீதிமன்றத்தை நாடிய தென்னாபிரிக்கா மீது கண்டனங்களை வெளிப்படுத்தி இருந்தது.

காசா மக்கள் மீதான கொலைகாரத் தாக்குதல், ‘ஒழுக்கமற்ற அரசியல் நெறிமுறையின்’ சாத்தியக்கூறுகள் மீதான போட்டியின் மூலம் யதார்த்தவாதம் பற்றிய கல்வி விவாதங்களுக்கு மிகத் தெளிவாக அருகில் கொண்டு வரப்பட்டுள்ளது. தத்துவஞானி பெர்னார்ட் வில்லியம்ஸ் அரசியல் நெறிமுறை என்பது ஒரு தனித்துவமான கருத்து எனத் தெரிவித்துள்ளார். அரசியல் நெறிமுறையின் கருத்துடன் ஒத்துப்போவது, அரசியல் மதிப்புகள், தார்மீக மதிப்புகள் அல்ல. சர்வதேச விவகாரங்களில் அரசியல் முடிவெடுப்பதை வழிநடத்த வேண்டும்.

அங்கு அதிகாரம் மற்றும் நலன்கள் மட்டுமே முக்கியமானவையாகும். அதிகாரம் மற்றும் நலன் புனிதமானதல்ல. அவை குறுகிய சுயத்தன்மைக்கு உட்பட்டதாவே அமைகின்றது. இரண்டாவது, வல்லரசு தன் இலக்கினை நோக்கிய நகர்வில் மக்களின் உயிர்களை பெரும்பொருட்டாக கொள்வதில்லை என்பது மீளவொரு தடவை காசாவிலும் உறுதிப்படுத்தப்படுகின்றது. காசாவில் நிராயுதபாணியான அப்பாவிப் பொதுமக்கள் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டு இடம்பெயர்ந்தமை ஒரு தெளிவான மற்றும் வெறுக்கத்தக்க போர்க் குற்றங்களின் தொகுப்பாகும். அமெரிக்கா பயங்கரவாதத்தை அழித்தல் அல்லது ஜனநாயகத்தை பாதுகாப்பதாக ஆரம்பிக்கும் போர்களில் மனித உயிர்களின் செலவே அதிகமாக காணப்படுகின்றது. மேற்கு ஆசியாவில் ஈராக் முதல் சிரியா வரை அமெரிக்காவின் உள்நுழைவால் ஏற்பட்ட அழிவுகளே அதிகமானதாகும். வியட்நாம், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க இராணுவத்தின் வெளியேற்றங்கள் அமெரிக்காவின் செலவீனம் அதிகரிக்கப்பட்டதன் விளைவே ஆகும்.

அவற்றில் அமெரிக்காவின் ஜனநாயகத்தின் பாதுகாப்பு விமர்சனத்திற்குரியதாகவே அமைகின்றது. ரிச்சர்ட் ஹாஸ், “போர் என்பது சூழ்நிலைகளைப் பொறுத்து விருப்பமாகவோ அல்லது அவசியமாகவோ இருக்கலாம். போர் ஒரு கருவி. தேர்வுக்கான போர்கள் தீவிர கவனத்துடன் மற்றும் சாத்தியமான செலவுகள் மற்றும் நன்மைகளை கருத்தில் கொண்டு மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்” என்கின்றார். அமெரிக்கா தெரிவு செய்யும் போர்கள் அமெரிக்கர்களுக்கானதொரு ஆவேசமாக உள்ளது.

இவை பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களின் மீட்பு மற்றும் உயிர்வாழ்வு போன்ற நீதியான காரணங்களுக்காக அல்ல, மாறாக குறுகிய அமெரிக்க தேசிய நலன்களுக்கானதாகவே அமைகின்றது. பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்களின் உயிர்கள் மற்றும் மில்லியன் கணக்கான மக்களை வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்வதை விட, அமெரிக்கா தலைமையிலான ஐரோப்பிய ஜனநாயக அரசாங்கங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக ஒழுக்கமற்ற அரசியல் மதிப்பு உள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

மூன்றாவது, மனித உரிமை பற்றிய உரையாடல்களின் நலன்கள் வல்லரசுக்கான பாதுகாப்பு உத்தியே அன்றி மக்களுக்கானது இல்லை. ஒரு அராஜக சர்வதேச அமைப்பில், அரசின் பாதுகாப்பு மற்றும் நலன்கள் மிக உயர்ந்த முன்னுரிமையை பெறுகின்றது. மோதல் மற்றும் அதிகாரம் ஆகியவை சர்வதேச அரசியலின் தவிர்க்க முடியாத மற்றும் மைய அம்சங்கள்; மேலும், சர்வதேச விவகாரங்களில் மனித உரிமை விவகாரம் என்பது அரசியல் ஒழுங்கு மற்றும் ஸ்திரத்தன்மையை விட குறைந்த முன்னுரிமையை ஈர்க்கிறது. யதார்த்தவாதத்தின் கட்டளைகளுக்கு அர்ப்பணிப்பினால் மட்டுமே, காசாவில் படுகொலைகள் மற்றும் அழிவிலிருந்து அரசியல்வாதிகளை தள்ளிப்போடுவதையும் தூர விலக்குவதையும் விளக்க முடியும்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான இஸ்ரேலின் போரின் ஆயுதக் களஞ்சியமான அமெரிக்காவைக் கண்டிக்காமல், ஏழை பாலஸ்தீனர்களுக்காக அரசாங்கங்களிலிருந்து முதலைக் கண்ணீர் பெருக்கெடுப்பதை யதார்த்தவாத தர்க்கத்தால் மட்டுமே பார்க்க முடியும். இந்த தர்க்கம் மட்டுமே இஸ்ரேலுக்கு எதிரான பலவீனமான கண்டனங்களையும், உக்ரைனில் நடந்த குற்றங்களையும் காசா குற்றங்களையும் பிரித்தறிய முடியாதவையாக பார்க்கத் தவறியதை விளக்க கூடியதாகவும் உள்ளது. காசாவைப் புறக்கணிப்பதன் மூலம் அரசியல் தலைவர்கள் போரை மேலும் ஒரு புவிசார் அரசியல் கருவியாக சட்டபூர்வமாக்கும் நிலையாகவே அமைகின்றது. இது மனித உரிமைகளை தொடர்ச்சியான செயற்பாடற்ற பிரசார உத்தியாக கைக்கொள்ளும் ஒழுக்கமற்ற உலகையே உறுதி செய்கின்றது.

நான்காவது, காசா போரின் வெளிப்பாடுகளில் பலமானதாக சீனாவின் வரலாற்று எழுச்சியையும் சர்வதேச அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக வரலாற்றில் பிரித்தானியாவிடமிருந்து அமெரிக்காவிற்கு ஏகாதிபத்தியம் கைமாறிய வரலாற்றை அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

முதலாம் உலகப் போர் வெடித்தபோது நடுநிலைக் கொள்கைக்குப் பிறகு, வில்சன் அமெரிக்காவை போருக்கு வழிநடத்தி உலகத்தை ஜனநாயகத்திற்காகப் பாதுகாப்பாக ஆக்கினார். இந்தப் பின்னணியிலேயே சர்வதேச சங்கத்தின் உருவாக்கத்திற்கும் அமெரிக்க ஜனாதிபதி வூட்றோ வில்சன் ஆதாரமாக இருந்தார். இவ்வாறானதொரு உத்தியையே இரண்டாம் உலகப்போரிலும் அமெரிக்கா கையாண்டிருந்தது.

இதன் பின்னணியிலேயே அமெரிக்கா 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானியாவிடமிருந்த ஏகாதிபத்தியத்தை 20ஆம் நூற்றாண்டின் மத்தியில் கைமாற்றியது. சமகாலத்தில் முதன்மை பெறும் ரஷ்சியா-, உக்ரைன் போர் மற்றும் காசா போரில் சீனா உலகப்போர்களில் அமெரிக்கா கையாண்ட உத்தியையே பின்பற்றி வருகின்றது. நேரடியான தலையீடின்றி அமைதியையே வலியுறுத்தி வருகின்றது. இது வரலாற்று அனுபவத்தில் 21ஆம் நூற்றாண்டில் ஏகாதிபத்தியம் சீனாவுக்கு கைமாறுவதற்கான வாய்ப்பாக அமையக்கூடியதெனும் வாதம் மேலெழக் காரணமாகியுள்ளது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division