Home » தவறுகளை தட்டிக்கேட்கும் மனோபாவம் வளரட்டும்!

தவறுகளை தட்டிக்கேட்கும் மனோபாவம் வளரட்டும்!

by Damith Pushpika
February 11, 2024 6:00 am 0 comment

மக்கள் மத்தியில் இக்காலத்தில் பலவிதமான கொடிய நோய்கள் அதிகரித்து வருவதற்குப் பிரதான காரணம் தவறான உணவுப்பழக்கம் என்பதுதான் மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கின்றது. இலங்கை மக்களின் பாரம்பரிய உணவுக் கலாசாரம் இன்று வெகுவாக அருகி விட்டது. எமது மக்களில் அநேகமானவர்கள் நவீன வகை உணவுகளுக்கு அடிமையாகிப் போயுள்ளனர்.

உணவுகளில் புதிய புதிய வகைகள் ஒருபுறத்தில் எமது சமூகத்தினுள் புகுந்து கொண்டிருக்கையில், மறுபுறத்தில் புதிய புதிய கொடிய வியாதிகளும் மக்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. நவீன உணவுகளுக்கு செலவிடுகின்ற பணத்தைப் போன்று, நோய்களைக் குணமாக்குவதற்காகவும் அதிக பணத்தைச் செலவிட வேண்டியுள்ளது. வாய்க்கு ருசியான உணவு எதுவென்றுதான் நமது மக்கள் இன்று தேடி வாங்குகின்றனர். ஆனால் அந்த உணவு சுகாதார முறையில் தயாரிக்கப்படுகின்றதா, உடலுக்கு கேடான நச்சு இரசாயனங்களைக் கொண்டுள்ளதா என்றெல்லாம் மக்கள் ஆராய்ந்து பார்ப்பதில்லை. நகரங்களில் மாத்திரமன்றி கிராமங்களிலும் இக்காலத்தில் புதிது புதிதாக உணவகங்கள் முளைவிடுகின்றன. மக்களை வசீகரிப்பதற்கென்றே உணவகங்கள் பலவிதமான உத்திகளைக் கையாளுகின்றன. நவீன உணவு வலையில் நமது மக்கள் இலகுவாகவே வீழ்ந்து விடுகின்றனர். சுவையான உணவுகளில் சேர்க்கப்படுகின்ற இரசாயனங்கள் படிப்படியாக தமது உடலை சீரழித்து வருவதையிட்டு பலர் அக்கறைப்படுவதில்லை.

நீண்ட தூர பஸ் பயணங்களின் போது உணவுக்காக இடைவழியில் பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. அந்த ஹோட்டல்கள் பலவற்றில் சுகாதாரம் என்பது முற்றாகவே பேணப்படுவதில்லை. கழிப்பறைகளும் சமையலறைகளும் அருகருகிலேயே அமைந்திருப்பதைக் காண முடிகின்றது. அந்த சுகாதார சீர்கேடு குறித்து மக்கள் நினைத்தால் உரிய இடத்தில் புகார் தெரிவிக்க முடியும். ஆனால் பயணிகள் சாதாரணமாகவே அதனைக் கடந்து சென்றுவிடுவர். நம் உடலுக்குக் கேடு விளைவிக்கும் உணவுகள் பற்றிய விழிப்புணர்வு மக்கள் ஒவ்வொருவருக்கும் அவசியம். தவறுகளை முறையிடுவதற்கு பின்னிற்கக் கூடாது. கொழும்பில் சில தினங்களுக்கு முன்னர் நடந்துள்ள சம்பவமொன்று இங்கே நினைவுக்கு வருகின்றது.

சமைத்த உணவில் மனித நுகர்வுக்கு தகுதியற்ற பூஞ்சணம் பிடித்த மிளகை சேர்த்துள்ள ஹோட்டல் ஒன்றுக்கு நீதிமன்றத்தினால் ரூபா 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த ஹோட்டலில் இரவு உணவருந்தச் சென்ற தம்பதியர் தமக்கு பழுதடைந்த சூப் வழங்கப்பட்டதாகத் தெரிவித்த முறைப்பாடு தொடர்பாகவே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான விழிப்புணர்வு நம் ஒவ்வொருவருக்கும் அவசியம். தவறுகளைக் கண்டுகொண்டு அலட்சியமாகச் செல்கின்ற மனோபாவம் நம்மிடம் இருப்பதால்தான், நம்மை ஏமாற்றுவதற்கு பலரும் முற்படுகின்றனரென்பதை மறந்து விடலாகாது!

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division