குழந்தையின்மை பற்றி பேசும்படமாக ‘வெப்பம் குளிர் மழை’ உருவாகியுள்ளது. இந்தப் படத்தை எஃப்டிஎஃப்எஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து ஹீரோவாக நடிக்கிறார் திரவ். இஸ்மத் பானு நாயகியாக நடிக்கிறார். ஷங்கர் ரங்கராஜன் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு பிருத்வி ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் பாஸ்கல் வேதமுத்து.
படம் பற்றி அவர் கூறும்போது, “இது குழந்தையின்மையை பற்றி பேசும்படம். விஞ்ஞான ரீதியாக நாம் வளர்ந்திருந்தாலும் உயிர், பிறப்பு பற்றிய அறிவியல் பார்வை மக்களிடம் குறைவாகவே இருக்கிறது. அதை ஒரு குடும்பத்தின் வழியாக இந்தப் படத்தில் சொல்கிறேன். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவிடுதிக்கோட்டை என்ற கிராமத்தில் கதை நடக்கிறது. இந்த தலைப்புக்கும் கதைக்கும் அறிவியல் பூர்வமான விளக்கம் இருக்கிறது. நாயகன் திரவ், பெத்தபெருமாள் என்ற கதாபாத்திரத்தில் விவசாயியாக நடிக்கிறார். இஸ்மத், பாண்டி என்ற கேரக்டரில் நடிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், ஆடுகளம் ஸ்டெல்லா, ரமா உட்பட பலர் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. விரைவில் வெளியாக இருக்கிறது” என்றார்.