அட்டைப்பூச்சி நீரினுள் வாழும் உயிரினம். ஈரமான சேறு நிறைந்த பகுதிகளில் வாழும் இவ் அட்டைப் பூச்சி ஒரு அங்குல நீளம் கால் அங்குலம் அகல தோற்றத்துடன் இருக்கும். இளநீர் பச்சை, கருப்பு கலந்த சிவப்பு நிறத்தில் இருக்கும்.
அட்டைகளுக்கு காது இல்லை. அவை அதிர்வுகளை தோல் மூலம் உணர்கின்றன. 2 முதல் 10 சிறிய கண்கள் மூலம் உணவை அடையாளம் காண்கின்றன. பொதுவாக அட்டைகள், அவற்றைக் கடந்து செல்லும் உயிரினத்தின் உடல் சூடு அல்லது வியர்வையை உணர்ந்து நெருங்கிவந்து ஒட்டிக்கொள்ளும்.
மழைக்காடுகளில் வெகு சாதாரணமாகக் காணப்படும் இந்த அட்டைகள் அவ்வளவு ஆபத்து இல்லையென்றாலும் பலராலும் ஒருவித பயத்துடன் தான் பார்க்கப்படுகின்றன. புலி, யானை போன்றவற்றுக்கு அச்சப்படுகிறார்களோ இல்லையோ நிச்சயமாக அட்டைகளுக்கு அஞ்சாமல் இருக்கமுடியாது. ஓர் அட்டை நம் உடலில் ஒட்டிக்கொண்டால் சுமார் இருபது முதல் முப்பது நிமிடங்கள் வரை நம் இரத்தத்தைக் குடித்துக் கொண்டிருக்கும்.
ஆனால், அதில் பயப்பட வேண்டிய அவசியமில்லை. அவை அப்படியொன்றும் அளவுக்கு அதிகமாக இரத்தத்தைக் குடிக்காது. நமக்குச் சூடு வெகுவாகத் தெரியாத தொலைவில் வைத்து நெருப்பு மூட்டினால் சூடு தாங்காமல் மடிந்து விழும். ஆனால், அட்டைகளைச் சூடேற்றுவதும் கைகளாலேயே பிடுங்கி எறிவதும் கூடாது. அப்படிச் செய்தால், அவை அதுவரை குடித்துக் கொண்டிருந்த இரத்தத்தை அப்படியே துப்பிவிட்டு இறந்து கீழே விழுமாம்.
அவற்றின் எச்சில் கலந்த இரத்தம் மீண்டும் நம் உடலிலேயே சேர்ந்தால் அது தொற்றுகளுக்கு வழி வகுக்கலாம். அப்படி நடக்காமல் இருக்க, அவற்றைப் பிரித்தெடுப்பதற்கு உப்புதான் சிறந்த தீர்வு. அல்லது மூக்குப்பொடியைத் தூவலாம். அட்டைகளின் மீது உப்பு தூவினால் உடலில் ஏற்படும் எரிச்சல் காரணமாக, அங்கிருந்து போனால் போதுமென்று அதை நகர வைக்கும். அதனால், நம் இரத்தத்தைக் குடிப்பதை நிறுத்தி தாமாகவே சுருண்டு கீழே விழுந்துவிடும். சில சமயங்களில் எரிச்சல் தாங்காமல் உயிரிழக்கவும் செய்யும்.
இவை தனது முழு உணவையும் செரித்து உறிஞ்சிக் கொள்ள ஓராண்டுக்கு மேலாகும்.