Home » ஜெயித்தது மரணம்

ஜெயித்தது மரணம்

by Damith Pushpika
February 4, 2024 6:00 am 0 comment

பகல் நேரம் 2.45

வைத்தியசாலை அம்பியூலன்ஸ் மஹரகம அபேக்‌ஷா நோக்கி பயணிக்க தயார் நிலையில் இருந்தது. ஷஹ்மியும் அவனது தந்தையும் கண்ணீர் ததும்ப பெரும் கவலைகளைச் சுமந்தவர்களாக வைத்தியசாலையிலிருந்து விடைபெற ஆயத்தமானார்கள்.

ஆம். அன்றைய நாள், வைத்தியசாலை முழுக்க ஆரவாரமாகவே காணப்பட்டது. பரபரப்பு நிறைந்த அந்த சூழல், வழமைக்கு மாறான சனக் கூட்டம், எல்லோர் முகத்திலும் கவலையின் வெளிப்பாடு. கண்கள் கலங்கியவர்களாக எல்லோரும். அவ்வழியாக போவோர் வருவோர் எல்லோரும் ஒரு நிமிடம் நின்று என்ன என விசாரிக்காமல் போகத் தவற வில்லை.

நேரம் சரி புறப்படுவோமா ஷஹ்மி………?

விடுதிக்கு பொறுப்பான வைத்தியரின் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்த ஷஹ்மி சரியென தலையசைத்தவாறு எத்தனை நாளைக்கு அங்க இருக்கனும் டாக்டர் எனக் கேட்டவாறே தனது வாட்டிலிருந்து விடைபெற்றான்.

வெறும் மூன்று நாளைக்குத்தான். அங்கிருந்தே இந்தியா போக ஏற்பாடு செய்திருக்கன் என்றார் டாக்டர்.

சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு வாட்டிலிருந்து விடைபெற்ற ஷஹ்மி லிப்டின் உதவியோடு கீழ்த் தளத்துக்கு வந்து அங்கு நின்ற உறவுகளைப் பார்த்து புன்முறுவலோடு கையசைத்தவாறு அம்பியூலன்சில் ஏறிப் படுத்துக் கொண்டான்.

கூடவே, செயற்கை சுவாசத்திற்குரிய ஏற்பாடுகளும். அதிதீவிர வைத்திய தேவைகளுக்கான சகல வசதிகளுடனும் வைத்தியர்கள் குழுவுடனும் அம்பியூலன்ஸ் ஆயத்தமானது.

‘மருமகன் மஹரகம போய் சேர்ந்ததும் கோல் எடுங்க. நாங்க பாக்க வருவோம்’ இது ஷஹ்மியின் அன்பு மாமி றமீஸாவின் குரல்.

இதனைக் கேட்ட ஷஹ்மி நான் உசிரோடு இருந்தால் கோல் எடுப்பேன் மாமி என்றான். எதிர்பாராத இந்த பதில் சுற்றி நின்ற அனைவரையும் கவலைக்குள்ளாக்கியதுடன் கண் கலங்கவும் வைத்தது. இதற்கிடையில் தனது இளைய சகோதரனையும் முத்தமிட்டு ஸலாம் கூறவும் தவறவில்லை ஷஹ்மி.

விடைபெற்றது அந்த அம்பியூலன்ஸ் வேகமாக. கூடவே ஷஹ்மியின் தந்தையும் கவலைகளோடு மகனின் தலையினை வருடியவாறு அருகில்……

நிலைமையினை சுதாகரித்துக் கொண்டு தாங்க முடியா வேதனைகளையும் கவலைகளையும் சுமந்து கொண்டு ஒன்றுமே நடக்காத மாதிரி அனைவரது முன்னிலையிலும் தன்னை சமாளித்தாலும் அன்பு மகனின் நிலைமையினை நினைத்து கவலைப்படாமல் இருக்க முடியவில்லை ஹஸனால்.

மகனுக்கு இப்பதான் 15 வயது………இந்த சின்ன வயதில் இப்படி ஒரு நிலை. பாடசாலையும் பள்ளிவாசலும் என்று தானும் தன்ட பாடும் என்றிருந்த மகனுக்கு இப்படி ஏற்பட்டு விட்டதே என்பதுதான் அவரது கவலையாக இருந்தது.

இருந்தாலும் வைத்தியர்களின் ஆறுதலான வார்த்தைகளும் தொடர்ச்சியான சிகிச்சையும் இறைவன் உதவியினால் இக் கொடிய நோயிலிருந்து மகனை மீட்டெடுத்து விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் தளர வில்லை ஹஸனுக்கு.

வேகமாகச் சென்ற அம்பியூலன்ஸின் ஒலிக்கு மத்தியில் பல கோணங்களிலும் யோசித்துக் கொண்டிருந்த ஹஸன் சற்று பின்னோக்கி கடந்த காலங்களை அசை போடத் தொடங்கினான்…

ஆம்,…அன்று சுமார் பத்து மாதங்களுக்கு முன்பு ஒரு நாள்……புனித நோன்பு 27

கடுமையான காய்ச்சலினால் படுத்திருந்தான் ஷஹ்மி. நோன்புடன் இருந்ததால் மாத்திரை உட்கொள்ள முடியவில்லை. இது வழமையாக எற்படும் சாதாரண காய்ச்சல் என நினைத்த தாய் றபீக்கா இப்தார் முடிந்ததும் பரசிட்டமோலை கொடுத்திருந்தாள்.

ஒரு நாள்…..தன் கணவனிடம்….இஞ்ச பாருங்க

மூத்தவருக்கு உடம்பு நல்லா இல்ல. பரசிடமோலைக் குடுத்தா காய்ச்சல் குறையுது. பிறகு திரும்பவும் வருது… முன்னப் போல உசாரும் இல்ல. எப்ப பார்த்தாலும் சோந்து போயே இருக்காரு…. சும்மா இருந்தவருக்கு இப்படி அடிக்கடி காய்ச்சல் வர்ரதோட கழுத்துப் பகுதியில் சின்னச்சின்ன கட்டி மாதிரி நிறைய இருக்கு என்றாள்…

விரைந்தார்கள் வைத்திசாலை நோக்கி.

ஷஹ்மியை பரிசோதித்த டாக்டர் அவசரமாக அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன் ரிப்போட் செய்து பார்த்து விட்டு சின்ன ஆபரேசன் ஒன்று செய்து கட்டி ஒன்றை எடுத்து பரிசோதிப்போம் என்றார்.

ஓப்பரேசன் முடிஞ்சு. இருந்த கட்டியில் பெரியதை மட்டும் எடுத்திருக்கின்றேன் என்று தியட்டரிலிருந்து வெளியில் வந்த டொக்டர் ஒரு பிளாஸ்டிக் போத்தலில் அடைக்கப்பட்டிருந்த அந்த கட்டியையும் காட்டினார்.

எழுந்து டொக்டரை அணுகிய ஹஸன்…தழுதழுத்த குரலில் மகன் நல்லா இருக்காரா டொக்டர். அவருக்கு நினைவு திரும்பிட்டா என்று கேட்டதோடு இதனையா பரிசோதனைக்கு அனுப்புற என்று கேட்டான்.

ஓ….. கொழும்புக்கு அனுப்பி பார்ப்போம் இரண்டு கிழமைக்கு பிறகுதான் முடிவு வரும் என்றார். அது வரையில்…ஷூ…….ஷூ……..

மனப்போராட்டம்……பல உச்சங்களைத் தொட்டு வந்தது. பரிசோதனை முடிவு ‘நோமல்’ என்று வரணும் என்பதே எல்லோரினதும் பிரார்த்தனை. அதற்காக பல நேர்ச்சைகளையும் செய்தாள் றபீக்கா.

அந்த நாளுக்காய் காத்திருந்தார்கள். இதற்கிடையில்…ஆளுக்கொரு கதைகள். இதெல்லாம் றபீக்காக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியதால், ஆழ்ந்த கவலையோடு தூக்கத்தையும் பசியையும் மறந்தே நாட்களைக் கடத்தினாள்.

இஞ்ச வார எல்லார்ர கதையையும் கேட்டு நாம யோசிக்கப்போடா. மகனுக்கு பயப்படுற மாதிரி ஒன்றுமில்லை. இறைவன் போதுமானவன் என்று ஒரே வார்த்தையில் மனைவியை ஆறுதல்படுத்தினான் ஹஸன். நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார்கள். ஷஹ்மிக்கு காய்ச்சல் அடியோடு விட்டபாடில்லை.

ஹொஸ்பிடலிருந்து வந்த தொலைபேசி அழைப்பிற்கு பதிலளித்த ஹஸன்…..உங்க மகன்ட ரிப்போட் வந்திருக்கு. இங்க வந்து எடுங்க என்று கூறியவாறு துண்டிக்கப்பட்டது.

நேரம் மாலை 6 மணியைக் காட்டி பெல் அடித்தது சுவரில் தொங்கிய கடிகாரம். எல்லோருக்கும் ஒரு வித பதற்றம். மகன் புறப்படுங்க என்றவாறு ஹொஸ்பிட்டல் போக ஆயத்தமானான் ஹஸன்.

கவலையோடு மகனையும் அழைத்துக் கொண்டு காரில் புறப்பட்ட ஹஸனின் எண்ணமெல்லாம் மகனைப் பற்றியே சுற்றிக் கொண்டிருந்தது. மாலை நேரமாதலால்….அலுவலக கடமைகள் முடிந்து தத்தமது வீடு நோக்கி அதிகமானவர்கள் திரும்பிக் கொண்டிருக்கும் நேரமது. வீதியில் வாகன நெரிசல் காணப்பட்டாலும் அந்த நெரிசலுக்குள் புகுந்து புறப்பட்டது ஹஸனின் கார்.

ஹொஸ்பிட்டல்…..மகனின் ரிப்போட்……டொக்டர்……

என்ற வட்டத்துக்குள்ளேயே சுற்றி நின்றது. ஹொஸ்பிட்டலை அடைந்த ஹஸன் மகனோடு வேகமாக உள் நுழைந்தான். லிப்டுக்காக காத்திருக்காமல் படிக்கட்டில் 3ஆம் மாடிக்கு ஏறிச் சென்று ஆய்வு கூடத்திற்குள் நுழைகின்றான்.

ஷஹ்மி….ஆ…நீங்களா..

ஆம் என்று ஹஸன் கூறி முடிப்பதற்குள் இந்தாங்க ரிப்போட்… என்று நீட்ட அதனை வாங்கிய ஹஸன் டொக்டரை விசாரிக்கின்றான். டொக்டர் 303ஆம் இலக்க அறையில் நோயாளிகளை பார்வையிடுவதாக அறிந்து அங்கு விரைகின்றான். ஷஹ்மியை முன் காத்திருப்பு இருக்கையில் அமரச் செய்து விட்டு தனியாக உள் நுழைகின்றான் ஹஸன்.

குட்டீவினிங் டொக்டர், மகன்ட ரிப்போட் வந்திருக்கு…..என்றவாறு ரிப்போட்டை நீட்டுகின்றான் ஹஸன். வாங்கி படித்த டொக்டர் அமைதியாகின்றார். என்ன டொக்டர் ….என்னவாம்… மகனுக்கு ஒன்றுமில்லைதானே. வழமையான வெறும் காய்ச்சல்தானா…..என்று கேட்க..

‘இல்லை’ டொக்கடரின் பதில் ஹஸனைத் தூக்கிப்போட்டது….அப்ப….ஆச்சரியம் கலந்த பதற்றத்துடன் குரல் நடுநடுங்க கண்கள் கலங்கியவாறு ஹஸன் டொக்டரை நோக்க..

மகனுக்கு சின்ன பிரச்சினை இருக்கு, பயப்பட வேணா…..இந்த கட்டிகள் மோசமானவை, இதற்கு ஊசி போட்டால் சரியாக்கி விடலாம். நான் வேறு டொக்டருக்கு கடிதம் தாரன் அவசரமாக அவரைச் சந்திங்க என்று அமைதியாகக் கூறியவாறு சற்று நேரத்தில் கடிதத்தை நீட்டுகின்றார் டொக்டர்.

‘ஓன்கோலொஜி கென்சல்டன்ட்’…………. என ஆரம்பித்த அந்த கடிதத்தை பார்த்த ஹஸனால் தாங்க முடியவில்லை. கண்ணீர் சிந்தியவனாக தழுதழுத்த குரலில் டொக்டர் புற்று நோய் டொக்டருக்கிட்டயா காட்டணும்…….என்றான்

ஓம்…

அப்ப இது புற்று நோய்க் கட்டியா டொக்டர்……ஓம்…இந்தக் கடிதத்தை கொடுங்க, நானும் போனில் கதைக்கிறேன் என்றார். சொற்ப நேரத்திற்குள் மனமுடைந்து, மிகுந்த வலியோடு வைத்தியரின் அறையினை விட்டு அகலுமுன் கண்களை நன்கு துடைத்துக் கொண்ட ஹஸன்….

அது வரையில் ஸ்மார்ட் போனில் மூழ்கியிருந்த ஷஹ்மி வெளியில் வரும் வாப்பாவைக் கண்டதும் சிரித்த முகத்தோடு.. என்ன வாப்பா….. என்னவாம் எனக்கு……. பயப்படும் அளவுக்கு ஒன்றுமில்லைதானே….என்று அடுக்கிக் கொண்டிருக்கவே…

பதிலுக்கு வாங்க வீட்ட போவோம் என்று கூறி வேகமாக புறப்படுகின்றார்கள் ஊர் நோக்கி காரில்.

ஆனால்… நம்பவே முடியவில்லை ஹஸனால்…தனது மூத்த பிள்ளை. தோளுக்கு மேல் வளர்ந்து விட்டவன்;… நல்லது கெட்டது எல்லாம் புரிந்து குடும்ப சுமைகளை பகிர்ந்து கொள்கின்ற வகையில் பக்குவமாக வளர்க்கப்பட்ட அன்பு மகன். தனது எல்லா வேலைகளிலும் வலது கை போல் பங்கெடுத்து கொள்ளும் திறமைசாலி… அமைதியான சுபாவமுடைய ஷஹ்மி…

ஸ்மாட் போன்….தனது தாய் தந்தைக்கு ஸ்மாட் போனை படிப்பித்தவனும் அவன்தான். வீட்டு வேலைகளில் பெற்றோருக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக நிற்கின்ற குடும்ப பொறுப்பு மிக்கவன். இப்படிப்பட்ட மகனுக்கு ‘கென்சரா’….. உச்சரிக்கவே முடியவில்லை ஹஸனால். இதனை றபீக்காவிடம் எப்படி பக்குவமாக எடுத்துச் சொல்வது? தாங்கிக் கொள்வாளா?

இவ்வாறு பல வழிகளிலும் யோசித்து மனதை குழப்பிக் கொண்டிருந்த ஹஸன் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனாய் வீதியோரத்தில் காரை நிறுத்துகின்றான். ஷஹ்மியிடம் இருந்த போனை வாங்கிக் கொண்டு காரை விட்டு இறங்கிய ஹஸன்… தனது சகோதரியிடம் கதைக்க தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்துகின்றான்.

ஆம்,….

ஹஸனின் சிறு பராயம் முதல் இற்றை வரைக்கும் எல்லா வகையிலும் ஆறுதல் என்றால் அவனது உடன் பிறப்புகள்தான். எந்த விடயத்திலும் தனது உடன் பிறப்புக்களின் ஆலோசனைகள் இல்லாமல் இருப்பதில்லை. இதுதான் இற்றைவரைக்கும் பல தலைமுறைகள் தாண்டியும் அந்த குடும்பத்தின் ஒற்றுமைக்கு சிறந்த அத்திவாரம் என்று கூட கூறலாம்.

காணாக்குறைக்கு ஹஸனின் சகோதரிகளின் திருமணம் மூலம் கிடைத்த ‘மச்சான்’ என்ற உறவுகள்…. அது வெறும் வார்த்தைகளால் சொல்லக் கூடிய உறவுகளல்ல. கஷ்டப்பட்டு தமது பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி சமூகத்தில் நல்ல நிலையில் வைத்திட பாடுபட்ட ஹஸனின் பெற்றோருக்கு…..அது இறைவனால் கொடுக்கப்பட்ட வரம்…

அடிக்கடி தனது சகோதரிகளையும் மச்சான்மாரையும் நினைத்து ஹஸன் பெருமைப்படுவதுண்டு. அந்தக் குடும்பத்தை ஒற்றுமையாய் வைத்திருப்பதில் அவர்களுக்கு தனிப் பங்குண்டு.

ஹலோ…. ஹலோ….நானும் இப்ப எடுப்பம்டுதான் இருந்த…அதுக்குள் நீயே எடுத்திட்டா. என்ன நடந்த? டொக்டரை பார்த்தயா? என்ன சொன்னாறு? ஷஹ்மிக்கு ஒண்டுமில்லையாமா? கேள்விகள் தொடர்கின்றன. ஹஸனால் பதில் சொல்ல முடிய வில்லை.

ஹலோ .ஹலோ

ஓ…..ஏன் பேசாமல் இருக்கா? என்ன நடந்த? ஒண்டுமில்லை, அப்ப? ஷஹ்மிக்கு ஷஹ்மிக்கு, ஹஸனால் உச்சரிக்க முடியவில்லை. இரு முனைகளிலும் கதறல்கள், ஹஸன் வாய் விட்டு அழுது விட்டான். சொல்லன் டொக்டர் என்ன சொன்னாறு……?

மீண்டும், மௌனமானான் ஹஸன்.

ஓரளவு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, ஷஹ்மிக்கு ‘ சாதாரண கென்சர் கட்டியாம்’ என்று அவசரமாக கென்சர் டொக்டருக்கிட்ட காட்டச் சொல்லி கடிதம் தந்திருக்காரு என்று ஒருவாறு விடயத்தை கூறி முடித்தான்.

எண்டல்லாவே கென்சராமா…? பதறினாள் சகோதரி நிஹாறா. சற்று நேரத்தில் தன்னைச் சுதாகரித்துக் கொண்ட நிஹாரா- ஹஸன், அழாத அது பெரிசா ஒண்டும் இருக்காது. கவலப்படாம தைரியமா இரு. ஷஹ்மியை டென்சனாக்கி விடாத. இறைவன் உதவி என்றும் கிடைக்கும். பிரார்த்தனையோடு இரு என்றாள். சகோதரியின் ஆலோசனைக்கமைவாக உடனடியாக செயற்பட்ட ஹஸன், அன்றிரவே கென்சருக்கான டொக்டரை சந்தித்து கடிதத்தை நீட்டுகின்றான்.

ஷஹ்மியை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க சிபாரிசு செய்த வைத்தியர் கென்சர் தொடர்பாக இன்னும் பல பரிசோதனைகளுக்கு சிபாரிசு செய்கின்றார். எல்லாம் அவசர அவசரமாக நடந்தேறுகின்றது.

சிறிய வயது என்பதால் எல்லாவற்றிலும் ஷஹ்மிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. மறுநாள் ஹஸனை அழைத்த பெரிய டொக்டர், உங்க மகனுக்கான ‘ வேடின் மெரோ’ என்ற ஒரு முக்கியமான டெஸ்ட் ஒன்டு மஹரகமவில்தான் செய்யலாம். அம்புலன்சில் அங்க போவதற்கு ஆயத்தமாக இருங்க என்றார்.

‘மஹரகம அபேக்‌ஷா’க்கு அம்பியூலன்சில் அனுப்பப்பட்ட ஷஹ்மிக்கு அவசரமாக ஆய்வுகூடத்தில் ‘வேடின் மெரோ’ டெஸ்ட் முடிக்கப்படுகிறது. இவரது கென்சர் சுகப்படுத்தக் கூடிய வகையைச் சேர்ந்தது. தொடர்ச்சியான சிகிச்சை முறை நிச்சயம் வெற்றியளிக்கும்.

ஷஹ்மியை பரிசோதித்த ‘மஹரகம அபேஷா’ இன் கென்சருக்குரிய பெரிய டொக்டரின் ஆறுதல் வார்த்தைகள் இவை. வைத்தியரின் பரிசோதனை அறிக்கையுடன் அடுத்த நாளே மீண்டும் தனது பழைய ஹொஸ்பிடலுக்கு மாற்றப்படுகிறான் ஷஹ்மி.

ஹஸனை அழைத்த டொக்டர், இதனை சாதாரண கீமோதெரபி மூலம் சுகப்படுத்தி விடலாம். பயப்படத் தேவையில்லை. தொடர்ச்சியாக சிகிச்சை பெற வேண்டும் என்றார். ஹஸனின் உள்ளம் கனக்கின்றது. கண்ணீர்த் துளிகள் கண் இமைகளைத் தொட்டு நிற்கின்றது. டொக்டர் ‘சுகப்படுத்திடலாம்தானே’ என்று தடுமாற்றமாய் திக்கித் திக்கி கேட்கின்றான் ஹஸன்.

அதற்குள் கண்ணீர்த் துளிகள் முகத்தை நனைத்துக் கொள்ள, மகனை ஒரு முறை திரும்பிப் பார்த்துக் கொண்டே டொக்டர் எப்படியாவது மகன சுகப்படுத்தி தாங்க என்று அழுது கேட்கின்றான் ஹஸன்.

நீங்க பயப்படுற மாதிரி இல்ல. இறைவனிடத்தில் பிரார்த்தியுங்கள். சுகப்படுத்தி விடலாம் என்ற டொக்டரின் வார்த்தைகள் ஹஸனுக்கு ஆறுதலாக இருந்தது. நாட்கள் உருண்டோடின. தந்தையும் மகனுமாக ஆஸ்பத்திரி வாழ்க்கைக்கு பழகி விட்டார்கள்.

ஷஹ்மியோ தனது வருத்தத்தை பொருட்படுத்தாது தான் எதிர் நோக்கும் க.பொ.த (சா/த) பரீட்சைக்கு தன்னை ஆயத்தப்படுத்துவதிலேயே குறியாக இருந்தான். எப்படி இருந்தாலும் கட்டாயம் இம்முறை பொதுப் பரீட்சைக்கு தோற்றியே ஆக வேண்டும் என்பதில் ஷஹ்மி குறியாக இருந்தான்.

எல்லோரும் ஷஹ்மியை இரக்கத்தோடு அணுகினார்கள். பரிதாபம் காட்டினார்கள். ஹொஸ்பிட்டல் தாதிகளின் அன்பான கவனிப்பு, கனிவான வார்த்தைகள், மென்மையான அணுகுமுறைகள், அத்தனையும் ஷஹ்மிக்கு நன்றாக பிடித்து விட்டது. நாளுக்கு நாள் சிகிச்சையின் பின்பு எடுக்கப்படுகின்ற மருத்துவ ரிப்போட்களும் ஷஹ்மியின் முன்னேற்றத்தையே காட்டி நின்றன.

மகனுக்கு உணவு விடயத்திலோ அல்லது ஏனைய விடயங்களிலோ எவ்வித குறைவும் இல்லாது நிறைவாகவே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஹஸனின் விடாப்பிடி, ஓய்வின்றி முழு நாட்களும் இரவு பகல் பாராது 24மணி நேரமும் மகனுடனேயே தங்கியிருக்க முடிவெடுத்தான் ஹஸன். இடையில் வந்த பெருநாட்கள் மற்றும் பண்டிகைகளையும் ஹொஸ்பிட்டலிலேயே கொண்டாட வேண்டிய நிலைமையினையும் பொறுமையோடு ஏற்றுக் கொண்டான் ஷஹ்மி.

பிரயாணம் ஆரம்பித்து சுமார் 3மணி நேரம் கடந்திருக்கும். வாப்பா, வாப்பா, இடையில் ஹஸனின் சிந்தனையை திசை திருப்பியது ஷஹ்மியின் அழைப்பு.

என்ன மகன்? இந்த அம்பியூலன்ச கொஞ்சம் நிப்பாட்டி எனக்கு குடிக்க தண்ணீர் தாங்க வாப்பா. டொக்டர் உடம்பு வலியா இருக்கு ரெண்டு பெனடோல் தாங்க என்றான். ஷஹ்மிக்காக ஆம்பியூலன்ஸ் சற்று நிறுத்தப்படுகின்றது.

தண்ணீர் பருகிய பின் மீண்டும் ஓய்வு. அமைதி நிலவியது. நிறுத்தப்பட்டிருந்த ஆம்பியூலன்ஸ் மீண்டும் தனது பயணத்தை தொடர்ந்தது. அது ஒலி-, ஒளி எழுப்பியவாறு வீதித் தடைகளையோ, ஒரு வழி பாதையையோ, நாற்சந்தியையோ பொருட்படுத்தாது எப்படி வேண்டுமானாலும் போகலாம். யாரும் கேட்க இயலாது என்றாப் போல் தான் விரும்பியவாறு வேகமாகச் சென்று கொண்டிருந்தது. வீதியில் கடமையில் நின்ற போக்குவரத்துப் பொலிஸாரும் இதற்கு உதவினார்கள்.

இடையிடையே வீட்டிலிருந்து வந்த தொலைபேசி அழைப்புகளும், பாசத்தை பறைசாற்றி நின்றது. அத்தனைக்கும் பதிலளித்தே ஆக வேண்டும். தந்தையையும் மகனையும் அம்பியூலன்சில் வழியனுப்பி விட்டு அனைவரும் தவித்துப் போய் நின்றதன் பிரதிபலிப்புதான் அத்தனை தொலைபேசி அழைப்புகளும்.

வீட்டில் தாய்க்கு பெண் பிள்ளை வெற்றிடத்தையே ஷஹ்மி நிரப்பி இருந்தான். இதனால் ஷஹ்மியின் நோய் நிலை றபீக்காவை வெகுவாக பாதித்திருந்தது. துடியாய் துடித்தாள். இதையும் தாண்டி ஹஸனின் நிலை, அன்று மஹரகம் அபேக்ஷாவில் தொடங்கியது இன்று வரை வேறு வேலைகள் எதுவுமின்றி 24மணி நேரமும் மகனோடு இவ்வாறு இறுக்கமான பிணைப்பில் சிக்கிக் கொண்டது இக்குடும்பம்.

அன்றொரு நாள் வைத்தியசாலை விடுதிக்கு தொலைபேசி அழைப்பொன்று வருகின்றது. தொலைபேசி அழைப்புக்கு பதிலளித்த வைத்தியசாலை தாதியொருவர்’ ஷஹ்மியின் அப்பாவை பெரிய டொக்டர் அவரது அறைக்கு வரட்டாம்’ என்றாள்

செய்தி கேட்டு பதறிப்போனான் ஹஸன். விரைகின்றான் டொக்டரின் அறையை நோக்கி. உங்க மகனின் நிலை நேற்று வரையில் நல்ல முன்னேற்றமாகத்தான் இருந்தது.

இப்ப டொக்டர்?? என்று ஹஸன் பதற, இப்ப மகனின் நிலையில் சற்று வித்தியாசம் தென்படுகின்றது. மீண்டும் முதலிலிருந்து புதிதாக ஆரம்பிக்கிற மாதிரி தோணுது. இந்தியாவுக்கு கொண்டு போய் இதற்கு சிறந்த சிகிச்சை செய்யக் கூடிய சந்தர்ப்பம் நிறைய உண்டு.

டொக்டர் சொல்லி முடிக்கு முன், .எவ்வளவு பணம் செலவாகும்? இஞ்ச செய்ய ஏலாதா டொக்டர்? கேள்விகளை தொடுத்துக் கொண்டே போனான் ஹஸன் மிகுந்த பதற்றத்துடன்.

இல்ல ஹஸன். இந்தியாதான் இதற்கு சிறந்த இடம், எப்படியும் இரண்டு கோடி செலவாகும். அவசரமாக பயண எற்பாடுகளைச் செய்ய முயற்சியுங்கள். அதற்கு முன்,

முதலில் மகனை ‘மஹரகம அபேக்‌ஷாவுக்கு’ மாற்றுகின்றேன். அங்கு மூன்று நாட்கள் தங்கியிருந்து இவருக்கு சில மருந்துகள் செலுத்த வேண்டும். இதனை அவசரமாக செய்வதற்கு நான் தனிப்பட்ட ரீதியில் அங்குள்ள எனது நண்பர் ஒருவரிடம் பேசியுள்ளேன்.

எல்லா ஏற்பாடுகளும் உடன் நடக்கும். அங்க அவசர சிகிச்சைப் பிரிவில் இவருக்கான கட்டிலும் ஆயத்தமாக உள்ளது. பிறகு அங்கிருந்து இந்தியா செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள். நீங்கள் ஒன்றையும் யோசிக்க வேண்டாம் நானும் தொடர்பில் இருப்பேன் என்றார் டாக்டர்.

அதுவரையில் டாக்டரின் முன், சிலை போல் திகைத்துப் போய் நின்றிருந்த ஷஹ்மியின் தந்தை ஹஸனால் அடுத்த நகர்வுக்கு கால் எடுத்து வைக்கவே முடிய வில்லை.

இரண்டு கோடி. இரண்டு கோடி.

டொக்டரின் அறையினை விட்டகன்ற ஹஸன் நேராக மகனிடம் சென்றான். தன்னை சுதாகரித்துக் கொண்ட ஹஸன் நாம் இந்தியாக்கு போவமா எனச் சிரிப்போடு கேட்டான். சிரித்துக் கொண்ட ஷஹ்மி, ஏன் டொக்டர் போகயா சொல்ராரு. காசு கூடுதலாக வேணும. என்ன செய்யப் போறிங்க??

அதல்லாம் வாணா. விடுங்காப்பா. அங்க போகத் தேவல. எனக்கு ஒண்டுமில்லைதானே. நான் நல்லாத்தானே இருக்கன். இறைவன் உதவியால் எனக்கு சுகம் கிடைத்திடும். சும்மா என்னத்துக்கு இந்தியா போய் கடன்பட்டு செலவழிக்கப் போறிங்க? என்று சிம்பிலாக பதிலளித்தான் ஷஹ்மி.

அவனது நோயின் தற்போதைய வீரியம் அவனுக்குத் தெரியாதுதானே? அதான் அவன்…ஆனால், ஹஸனோ எப்படியாவது மகனை இந்தியா இல்ல அமெரிக்கா கொண்டு போயாவது சுகப்படுத்திட வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். அன்றே இந்தியாவின் வேலூர் வைத்தியசாலையை தொடர்பு கொண்டான் ஹஸன்.

அவசர உதவிக்கு அவர்களும் ஹஸனுக்கு பல ஆலோசனைகளை வழங்கினார்கள். அவசரமாக இருவரதும் கடவுச் சீட்டுகள் அனுப்பப்பட்டு ஏற்பாடுகள் நடைபெற்றன மறு புறம், இரண்டு கோடி, இரண்டு கோடி, நினைத்துக் கூட பார்க்க முடிய வில்லை. பணத்திற்கான ஏற்பாடுகளில் குடும்ப உறுப்பினர்கள். அடுத்த நாள், வெள்ளிக்கிழமை. ஷஹ்மியைப் பார்க்க வந்த பெரிய டொக்டர், இன்றைக்கு நான் சொன்ன மாதிரி மஹரகம அபேக்‌ஷா செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்று உத்தரவிட்டார். ஷஹ்மியும் சிரித்துக் கொண்டு ஹஸனைப் பார்த்து இண்டைக்கு போயிடுவோம் வாப்பா என்றாப்போல் தலையசைத்தான். அதற்கிணங்கவே இவ்வனைத்து ஏற்பாடுகளும்…….

******

டொக்டர், டொக்டர், திடீரென அம்புலன்சில் இருந்த தாதியின் சத்தம். பழைய நினைவுகள் கலைந்து சத்தம் வந்த திசையை நோக்கினான் ஹஸன்….

டொக்டர் ஷஹ்மிக்கான ஒட்சிசன் சிலிண்டரின் வாசிப்பு குறைவாக காட்டுவதால் இதனை எங்காவது மீள் நிரப்ப நடவடிக்கை எடுங்கள் என்ற தாதியின் கோரிக்கை காதில் விழுந்தது.

ஹஸன் பதறிப்போனான். ஷஹ்மியோ எந்தவொரு சஞ்சலமுமின்றி உறங்கிக் கொண்டிருந்தான். ஷஹ்மியின் சுவாச வாசிப்புகள் திருப்தியாகவே இருந்தன. உடனடியாக செயற்பட்ட வைத்தியர்கள் குழு, தொலைபேசியில் பல கோணங்களிலும் தொடர்புகளை ஏற்படுத்தி விட்டு அண்மையில் உள்ள வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸை விடும்படி சாரதியை பணித்தனர்.

நேரம் மாலை 6.10மணி, அதுவரையில் வேகமாகச் சென்ற அம்பியூலன்ஸ் குருநாகல் போதனா வைத்தியசாலையை அண்மித்ததும் வேகத்தைக் குறைத்து உள் நுழைந்தது.

பரபரப்பாக இருந்த அந்த மாலைப் பொழுது, ஒரே சனக் கூட்டமாய்க் காணப்பட்ட வைத்தியசாலையின் முன்றலில், ஒலி, -ஒளியெழுப்பி வருகின்ற அம்பியூலன்ஸை கண்டு வழி விடுகின்றார்கள். குருநாகல் வைத்தியசாலை ஷஹ்மிக்கு புது இடமாகும்.

உடன் செயற்பட்ட மருத்துவக் குழுவினர் ஒட்சிசனை மீள் நிரப்பிக் கொண்டு மஹரகம அபேக்‌ஷா நோக்கிய பயணத்தை தொடர்வதற்காக ஷஹ்மியை தற்காலிகமாக குருநாகல் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க யோசித்தார்கள்.

அம்பியூலன்ஸ் படுக்கையில் இருந்த ஷஹ்மி, மிகவும் கவனமாக அவசரப்பிரிவு கட்டிலுக்கு தற்காலிகமாக மாற்றப்படுகின்றான். அங்கு நேரடியான ஒட்சிசன் சுவாசம் கொடுக்கப்படுகின்றது. உடன் வந்த உதவியாளர்களினால் சிலிண்டர்கள் மீள் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்படுகின்றது.

அவசர சிகிச்சைப் பிரிவில் ஷஹ்மியை சுற்றி பல வயர்கள் இணைக்கப்படுகின்றன, பரிசோதனைக்காக. சற்று நேரத்தில் அந்த அவசர சிகிச்சைப் பிரிவில் பரபரப்பு. நேரம் செல்லச் செல்ல பரபரப்பு அதிகரிக்கின்றது. தாதிய உத்தியோகத்தர்கள் ஓடோடித் திரிகின்றார்கள்.

ஷஹ்மியின் கட்டிலை குருநாகல் வைத்தியசாலையின் டொக்டர்கள் பலர் சூழ்ந்து கொள்கின்றார்கள். எல்லோரும் பதற்றமாய் காணப்பட்டார்கள். ஆச்சரியமாய் எல்லோரும் திகைத்துப் போய் நிற்கின்றார்கள்.

நேரம் மாலை 6.25மணி.

அந்த அவசர சிகிச்சைப்பிரிவில் ஷஹ்மி திடீரென ஒரேயடியாக கண்ணை மூடிவிட்டான் என்ற செய்தி, காற்றலைபோல் பரவ, ஷஹ்மியின் தந்தை ஹஸனின் அழுகுரல் குருநாகல் வைத்தியசாலையையே ஒரு முறை அதிரச் செய்தது.

உடன் சென்ற அவசர சிகிச்சைக்கான மருத்துவக் குழு, என்ன நடந்த, ஷஹ்மியை கட்டியணைத்த ஹஸன், ஷஹ்மி, மகன் ஷஹ்மி, வாப்பாவை ஒரு முறை பாருங்க மகன்.

என்னை விட்டுட்டு போயிடாதிங்க மகன். உம்மா தம்பியெல்லாம் தாங்க மாட்டாங்க மகன்.

ஹஸன் செய்வதறியாது கொஞ்சிக் கொஞ்சிக் கெஞ்சுகிறான். ஹஸனின் கண்ணீரால் ஷஹ்மியின் பூப்போன்ற அழகிய முகம் நனைகின்றது. வைத்தியசாலை ஊழியர்கள் கண் கலங்கியவர்களாக இறுதி அஞ்சலி செலுத்துவதுபோல் அமைதியாக நின்று கொண்டிருக்கின்றார்கள்.

ஹூம் ….. ஒன்றுக்கும் பதிலில்லை…. புன்முறுவல் பூத்த முகத்துடன் ஷஹ்மி தூங்கிக் கொண்டிருந்தான் அமைதியாக…அழகாக.

எல்லாம் முடிந்து விட்டது. மஹரகம அபேக்‌ஷா, இந்தியா, வேலூர், எவ்வளவு கற்பனைகள், எவ்வளவு ஏற்பாடுகள். அத்தனையும், எதிர்பாராத விதத்தில் எல்லாம் ஒரு நொடியில் முடிந்து விட்டது. அதுவும் குருநாகலில். எதுக்கோ அம்பியூலன்ஸை நிறுத்த, எதுவோ நடந்து விட்டது.

முடியவில்லை ஹஸனால். வைத்தியசாலையின் ஒரு மூலையில் கிடந்து அழுது புரண்டான் ஹஸன், அவனை ஆறுதல்படுத்த அவ்விடத்தில் உறவுகள் ஒருவரும் அருகில் இல்லை. ஹஸன் மட்டும் தனியாக…. அப்போதைக்கு அவனால் அது மட்டுமே சாத்தியமாயிற்று.

ஆம், ஹஸன் மனதுக்குள் சொல்லிக் கொண்டான்…

‘பத்து மாத பாச போராட்டங்களைத் தாண்டி மட்டுமல்ல அனைத்து நவீன மருத்துவ நுட்பங்களையும் தாண்டி ஜெயித்தது மரணம்’ என்று.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division