இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்தும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தாய்லாந்து பிரதமர் ஷ்ரேத்தா தவீசின் முன்னிலையில் நடைபெற்றது.
சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் தாய்லாந்து பிரதிப் பிரதமரும் வர்த்தக அமைச்சருமான பூம்தம் வெச்சயச்சாய் மற்றும் இலங்கையின் வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இலங்கை 22 மில்லியன் சனத்தொகையை கொண்டிருக்கும் அதேநேரம், இலங்கையின் 37ஆவது ஏற்றுமதி நாடாக காணப்படும் தாய்லாந்து 71.6 மில்லியன் சனத்தைகையை கொண்டிருக்கிறது. இலங்கையின் முக்கிய ஏற்றுமதியான தேயிலை, மிளகு, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களுக்கான கட்டண தீர்வை வரியை தாய்லாந்து விதித்துள்ளது. இலங்கை 2022ஆம் ஆண்டில் 58.82 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை தாய்லாந்துக்கு ஏற்றுமதி செய்தது. 2022ஆம் ஆண்டில் 495 மில்லியன் அமெரிக்க டொலரை மொத்த தேசிய வருமானமாக ஈட்டிய ஆசியான் (ASEAN) நாடாக தாய்லாந்து காணப்படுகிறது.
தாய்லாந்து நாடுகள் 17.3 மில்லியன் அமெரிக்க டொலரை வௌிநாடுகளில் முதலீடு செய்திருந்த நிலையில் 2021ஆம் ஆண்டில் ஆசியான் சங்கத்தில் மிகப்பெரிய முதலீட்டு நாடாகவும் தாய்லாந்து மாறியிருந்தது. 2005 – 2022 வரையான காலப்பகுதியில் இலங்கையில் தாய்லாந்து 92 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான நேரடி முதலீடுகளை மேற்கொண்டிருக்கிறது.
2018ஆம் ஆண்டில் 550 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்ட இருதரப்பு வர்த்தக பெறுமதியை 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்வரை மூன்று மடங்காக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தாய்லாந்துடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தமும் இலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கான முதன்மை சாத்தியமாக காணப்படுகிறது.
இந்த ஒப்பந்தம், பொருட்கள் வர்த்தகம், வர்த்தக சட்ட அனுமதி, சுகாதார மற்றும் மூலிகை சுகாதார செயன்முறைகள், வர்த்தகத்துக்கான தொழில்நுட்பத் தடைகள், வர்த்தகத் தீர்வுகள், சேவை வர்த்தகம், முதலீடுகள், சுங்கச் செயற்பாடுகள் மற்றும் வர்த்தகச் செயற்பாடுகளை இலகுபடுத்தல், பொருளாதார ஒத்துழைப்பு, அறிவுசார் சொத்துகளின் உரிமம், அடிப்படை ஏற்பாடுகள், நிறுவன மற்றும் இறுதி செய்யப்பட்ட ஒதுக்கீடுகள், வௌிப்படைத்தன்மை மற்றும் பிரச்சினைகளை தீர்த்தல் உள்ளிட்ட துறைகளை உள்வாங்கும் வகையில் 14 அத்தியாயங்களுடன் கூடிய விரிவான 09 சுற்றுகளில் வர்த்தக பேச்சுவார்த்தைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு விமான சேவை ஒப்பந்தமும் இங்கு கைச்சாத்திடப்பட்டது. 1950 இல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை வலுப்படுத்தும் வகையிலும், இந்த புதிய ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான விமான சேவை உறவுகள் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பை மேம்படுத்தும் வகையிலும் கையெழுத்தானது.
இலங்கை தரப்பில் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் தாய்லாந்துக்கான பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜக்கபொங் சங்மானி(Jakkapong Sangmanee) ஆகியோர் இதில் கைச்சாத்திட்டனர்.
இலங்கை இரத்தினக்கல் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (GJRTI) மற்றும் தாய்லாந்தின் இரத்தினக்கல் ஆபரண நிறுவனம் (GIT) ஆகியவற்றுக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இதன் பின்னர் கைச்சாத்திடப்பட்டது.