Home » விலகிய தடையும் விலகாத பிரச்சினைகளும்

விலகிய தடையும் விலகாத பிரச்சினைகளும்

by Damith Pushpika
February 4, 2024 6:00 am 0 comment

எதிர்பார்த்தது போன்று சர்வதேச கிரிக்கெட் கெளன்ஸில் இலங்கை கிரிக்கெட் மீதான தடையை நீக்கியது. “அங்கத்துவத்திற்கான கடப்பாட்டை இலங்கை கிரிக்கெட் தொடர்ந்தும் மீறவில்லை என்பதில் தற்போது திருப்தி அடைந்துள்ளோம்” என்று ஐ.சி.சி. தடையை நீக்குவதற்கான காரணத்தை கூறியிருந்தது.

அண்மைக்காலத்தின் சாதகமான நகர்வுகள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் எதிர்வுகூறலைத் தொடர்ந்தே கடந்த ஜனவரி 28 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் மீதான தடை நீக்கப்பட்டது.

கடந்த நவம்பர் 10 ஆம் திகதி ஐ.சி.சி. இலங்கை கிரிக்கெட் மீது தடை விதிப்பதற்கு உடனடிக் காரணம், அப்போது நடந்து கொண்டிருந்த ஒருநாள் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் படு தோல்வியைத் தவிர வேறு எதுவும் இல்லை.

ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திற்கும் அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க மற்றும் அவரின் சகாவான அர்ஜுன ரணதுங்கவுக்கும் இடையே நீடித்த முறுகல் இலங்கையின் தோல்வியோடு உச்சம் பெற்று இலங்கை கிரிக்கெட் சபையை நீக்கி, அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் இடைக்கால சபை ஒன்றை அமைக்க, மறு நாளே நீதிமன்றம் மீண்டும் கிரிக்கெட் சபையை கொண்டுவர, அதற்குள் அரசியலில் இந்த விவகாரம் பேசுபொருளாக மாற, எல்லாமாக சேர்த்து இலங்கை கிரிக்கெட் சபையின் தடையில் முடிந்தது.

ஒருவேளை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தால் கதையே மாறியிருக்கும். ஐ.சி.சி. இலங்கை கிரிக்கெட்டின் மீது தடை விதிப்பதற்கு காரணம் அரசியல் தலையீடு. எனவே, தடைக்கு பின்னர் இலங்கை அரசியலிலும் இது மாற்றத்தைக் கொண்டுவந்தது.

விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவி நிக்கப்பட்ட பின் புதிதாக நியமிக்கப்பட்ட ஹரீன் பெர்னாண்டோ இலங்கை கிரிக்கெட்டுடன் ஒத்துப்போவதைப் பார்க்க முடிந்தது.

தேர்வுக் குழுவில் மாற்றம், பயிற்சி குழாத்திலும் மாற்றங்கள், அதனை ஒட்டி அணியின் கட்டமைப்பில் மாற்றம் என்ற தொடர்ச்சியில் தடை நீக்கம் வந்திருக்கிறது.

இந்த மாத ஆரம்பத்தில் ஐ.சி.சி. தலைமை நிர்வாக அதிகாரி இலங்கை வந்திருந்தார். அவர் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவை சந்தித்து பேசி இருந்தார். அப்போதே தடை விலகப்போவதற்கான சமிக்ஞை கிடைத்தது.

ஆனால் தடையை விலக்கிக் கொள்வதற்காக கடந்த இரண்டு மாதங்களில் இலங்கை சில விட்டுக்கொடுப்புகளை செய்திருக்கிறது. அது மைதானத்தில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இப்போதே கணிக்க முடியாது. என்றாலும் தடை நீக்கப்பட்டது பெரிய ஆறுதல்.

தடையை அடுத்து இலங்கையில் நடக்க வேண்டிய 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணப் போட்டி தென்னாபிரிக்காவுக்கு மாற்றப்பட்டது. இந்தத் தடையால் இதுவே இலங்கை சந்தித்த பெரிய இழப்பு. மற்றபடி, ஐ.சி.சியின் தடை என்பது ஓர் அடையாள நடவடிக்கையாகவே இருந்தது. இலங்கையின் அன்றாட கிரிக்கெட் செயற்பாடுகள் வழக்கம் போலவே இடம்பெற்றது. தடைக் காலத்திலேயே இலங்கை வந்த சிம்பாப்வே அணி இலங்கைக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் ஆடியது. இலங்கைக்காக ஐ.சி.சி. நிதியிலும் எந்தக் குறையும் இருக்கவில்லை.

என்றாலும் தடை என்ற கறுப்புப் புள்ளியோடு இலங்கைக் கிரிக்கெட்டில் முன்னோக்கிப் பயணிக்க முடியது என்ற வகையில் முதலில் தடையில் இருந்து விடுதலை பெறுவது மிக முக்கியமாக இருந்தது.

இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் அரசியல் மட்டத்தில் அதனை அடைவதற்கே முக்கியத்தும் அளிக்கப்பட்டு வந்தது.

மற்றபடி தடைக்குக் காரணமான பிரச்சினைகள் முழுமையாக தீர்ந்துவிட்டதாக எடுத்துக் கொள்ள முடியாது. இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதில் அனைத்து தரப்புக்கும் இடையே ஒருமித்த நிலைப்பாடு இருக்கிறது. ஆனால் அதனை செயற்படுத்துவதிலேயே முரண்டபாடு நிலவுகிறது.

இதனையொட்டி கிரிக்கெட் நிர்வாகத்திற்கும் அரச நிர்வாகத்திற்கும் இடையே முரண்பாடுகள் ஏற்படுவது காலம் காலமாக நிகழ்ந்து வரும் ஒன்றாக மாறி இருக்கிறது. கடந்த காலங்களிலும் இலங்கை கிரிக்கெட் கலைக்கப்பட்டு இடைக்கால சபைகள் நியமிக்கப்பட்டிருக்கின்றன.

என்றாலும் அது உள்ளுர் மட்டத்தில் தப்பித்ததோடு சர்வதேச தடை ஒன்றுக்கு செல்லாததால் அதன் பாரதூரம் புரியாமல் இருந்தது. என்றாலும் இப்போது நிலைமை மாறி இருக்கிறது.

மைதானத்தில் தோல்விகளை சந்திக்கும்போதெல்லாம் முரண்பாடுகள் உச்சம் பெறுவதும் பின்னர் ஒரு சில போட்டிகளில் வெல்லும்போது அது தணிவதுமாக தொடர்ந்து பயணிக்க முடியாது.

இதற்கான நிரந்தரத் தீர்வுகளை நோக்கிச் செல்வது அவசியம். இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்துவது, அதன் வாக்குரிமை கட்டமைப்பில் மாற்றத்தை கொண்டுவருவது, நிதி விவகாரத்தில் முறையான கட்டமைப்பை உருவாக்குவது பற்றி அனைத்துத் தரப்புகளும் பேசி வருகின்றன. எனவே அந்தப் பிரச்சினைகளை தீர்ப்பது அடிப்படையானது.

ஐ.சி.சி. இப்போது விதித்த தடை இலங்கை கிரிக்கெட்டில் பெரிதாக பாதிப்பு செலுத்தும் அளவுக்கு தீவிரமாக இருக்கவில்லை.

இதற்கு முன்னர் 2019 இல் இதே அரசியல் தலையீட்டை காரணம் காட்டி ஐ.சி.சி. சிம்பாப்வேயுக்கு தடை விதித்தது. ஆனால் அப்போது சிம்பாப்வேயுக்கான நிதியை நிறுத்தி ஐ.சி.சி. அந்த அணி சர்வதேச கிரிக்கெட்டில் ஆடுவதையும் தடை செய்தது. நல்ல வேளையாக மூன்று மாதங்களில் தடை நீங்கியது.

தவிர சியூபா, ரஷ்யா, மொரோக்கோ போன்ற இணை அங்கத்துவ நாடுகளுக்கு தடைகள் விதிக்கப்பட்டபோதும் அங்கே கிரிக்கெட் பெரிதாக இல்லாததால் தடையும் பெரிதாக உள்நாட்டில் தாக்கத்தை செலுத்தவில்லை.

இலங்கையின் தடை தற்போது நீக்கப்பட்டபோதும் தடைக்கான காரணத்தை தூண்டக்கூடிய விவகாரங்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை. முதலில் அதனை தீர்ப்பது முக்கியமாகும். அதுவே ஒரு வலுவான இலங்கை அணியை கட்டமைப்பதற்கு உதவியாக இருக்கும்.

எஸ். பிர்தெளஸ்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division