பொருளாதார நெருக்கடியின் தற்போதைய நிலை பற்றி மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தினகரனுக்கு வழங்கிய செவ்வி
எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் இந்தப் பாதையில் மாத்திரம்தான் பயணிக்க வேண்டும் என நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்?
இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட அரச நிதிக் கொள்கைகள் மற்றும் பிற கட்டமைப்புக் கொள்கைகளின் திசையை யாரேனும் மாற்ற முயற்சித்தால், அதனால் இடம்பெறப் போவது மீண்டும் பின்னோக்கித் திரும்புவது மாத்திரமேயாகும். தற்போது நிதிக் கொள்கையின் படி பணவீக்கத்திற்குப் பொருத்தமான வகையில் வட்டி விகிதம் கூடிக் குறைந்து செல்கின்றது. அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கு, செலவுகளைக் கட்டுப்படுத்த, கடன் பெறுவதைக் குறைப்பதற்கான செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கின்றோம். அரசாங்கத்திற்குச் சொந்தமான மின்சார சபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் போன்ற நிறுவனங்கள் பாரியளவில் இழப்புக்களை அடைந்துள்ளன. இப்போது செலவு குறைந்த விலை நிலைப்படுத்தும் முறை அமுல்படுத்தப்படுகிறது. அரசு நிறுவனங்கள் முறையாக நஷ்டத்தைச் சந்திக்காத திசையில் நகர்கின்றன. நாட்டின் வரி வருவாய் குறைந்ததாக யாராவது சொன்னால் மீண்டும் கடன் வாங்குவது அதிகரிக்கும். அதன்பின்னர் அதே பழைய தவறான முறையைப் பின்பற்றி நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படும். யார் போனாலும் அடுத்த நான்கு வருடங்களுக்குள் அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும், அடுத்த வருடம் மொத்த உள்நாட்டு உற்பத்தி 15% ஆக உயர்த்தப்பட வேண்டும். அதனுடன், பணவீக்கத்தை 5% ஆக வைத்திருக்க வேண்டும். மின்சாரக் கட்டணம், எண்ணெய்க் கட்டணத்தை சர்வதேச அளவில் ஏதேனும் ஒரு முறை மூலம் குறைக்கலாம்.
2022ம் ஆண்டு நாடு பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு, வங்குரோத்து நிலையை அடைந்த ஆண்டாகும். 2023ஆம் ஆண்டு அந்த நிலைமை மாறியதா?
நாம் ஒரு போதும் பொருளாதார வங்குரோத்து நிலைக்குச் செல்லவில்லை. அரசாங்கமோ, தனிநபர்களோ பெற்றுக் கொண்ட கடனை மீளச் செலுத்தாமையே வங்குரோத்து நிலை என்ற சொல்லுக்கு அர்த்தத்தை வழங்குகின்றது. என்றாலும் நாம் 2022ஆம் ஆண்டு கடனில் ஒரு பகுதியை செலுத்துவோம் என்றும், மற்றொரு பகுதியின் கடன் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்றும், மறுசீரமைப்பு செய்யப்பட்டு திருப்பிச் செலுத்தப்படும் என்றும் அறிவித்தோம். இது கடனை செலுத்துவதற்கான தற்காலிக இடைநிறுத்தமே தவிர வங்குரோத்து நிலை அறிவிப்பு அல்ல. ஆனால் பொருளாதார நெருக்கடி இருந்ததை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். சுதந்திரத்திற்குப் பிறகு, மிக மோசமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தோம். அதுபற்றி எந்த விவாதமும் இல்லை.
நீங்கள் அவ்வாறு கூறினாலும் அவ்வாறான நம்பிக்கையான நிலையை மக்கள் இன்னும் உணரவில்லையே?
ஆம். இன்று பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. அதற்கு ஏற்ற வகையில் நாட்டு மக்களின் வருமானம் இன்னமும் அதிகரிக்கவில்லை. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் போது உணரப்படும் வேதனை நிறைந்த நிலை இன்னமும் இருக்கின்றது. இது ஓரளவுக்கு இலகு படுத்தப்பட்டதே தவிர முழுமையாகக் குறைந்துவிடவில்லை. இதன் நேர்மறையான பிரதிபலன்கள் கிடைப்பதற்கு சில காலம் எடுக்கும். பணவீக்கம் 6 வீதமாகக் குறைந்த போதிலும் பொருளாதாரம் 6 வீதத்துக்கு இன்னமும் வளர்ச்சியடையவில்லை. மக்களின் வருமானம், பொருட்களின் விலை ஏற்றத்துக்கு ஏற்ற வகையில் அதிகரிக்க வேண்டும். அதற்கு சில காலம் எடுக்கும். அதன் பின்னரே பொருட்களின் விலையேற்றத்திற்கு ஏற்றவாறான வருமானம் மக்களுக்கு கிடைக்கும்.
2024ஆம் ஆண்டில் எம்மால் புதிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் போகுமா?
இந்த வருடத்தில் 3 வீத பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம். நாட்டின் உற்பத்தி செயல்முறை 3 வீதமாக அதிகரிக்க வேண்டும். எனவே பொருளாதாரம் அதிகரிப்பது முக்கியமாகும். அதற்கான பின்னணியையே உருவாக்கிக் கொண்டு செல்கின்றோம். அதன் மூலமே மக்களால் ஏதாவது நிவாரணங்களைப் பெற்றுக் கொள்ள முடியுமாக இருக்கும். வருமானம் அதிகரித்தால் மாத்திரம்தான் அரசு ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்க முடியும். கடன் வாங்கி சம்பளத்தை அதிகரிக்க முடியாது. இதற்கு சிறிது காலம் எடுக்கும். பொருட்களின் விலை அதிகரிப்பு ஏற்பட்ட மட்டத்துக்கு வித்தியாசத்தை ஈடுகட்டுவதாயின், அரசின் வருமானம் அதிகரிக்க வேண்டும். அதனை ஒரேயடியாகச் செய்ய முடியாது.
ஒரு பொருளாதார நிபுணராக இந்த நிலை ஏற்படுவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்று கூறுவீர்களா?
இந்த ஆண்டு 3% பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டால், மக்களின் வருமானம் 8வீதமாவது அதிகரிக்க வேண்டும். அடுத்த ஆண்டில் 5% அதிகரித்தால், மக்களின் வருமானம் 10 வீதமாக அதிகரிக்க வேண்டும். பணவீக்க விகிதம் 5% என்றால், அவற்றின் உண்மையான மதிப்பு மேலும் 5% அதிகரிக்கும். அப்போது பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட இழப்பை மூன்று முதல் நான்கு வருடங்களில் இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும். எனவே, இத்திட்டம் தொடர்ந்தால் மட்டுமே எதிர்காலம் வெற்றியளிக்கும். சிலவேளை பணவீக்கம் 15 – 20 வீதமாக அதிகரித்தால், நிலைமை இதனைவிடவும் மிகவும் கடினமாகிவிடும். அப்போது வருமானம் வாழ்வதற்குப் போதுமானதாக இருக்காது. எனவே, இந்த வழியைப் பின்பற்றினால் மட்டுமே, வருமானத்திற்கு ஏற்ப வாழ முடியும்.
அரசாங்கத்தின் வரிக் கொள்கையின் மூலம் அரசாங்க வருமான அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் அல்லவா? ஏன் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது?
அதிகரிப்பு ஏற்படும். மத்திய வங்கியின் ஆளுநர் என்ற வகையில் இது குறித்து நான் கூறுவது சரியல்ல. இது அரச நிதிக் கொள்கை, பாராளுமன்றம், திறைசேரி ஆகியவற்றின் செயற்பாடாகும். அரசின் வருமானத்தை அதிகரித்துக் கொண்டால் அதன் பலனை மக்களால் பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு அதிகரித்த வருமானத்தை அத்தியாவசிய விடயங்களுக்கு எவ்வாறு ஒதுக்குவது என்பதை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும்.
எதிர்காலத்தில் வெளிநாட்டுக் கடனை செலுத்தத் தொடங்கிய பின்னர் இதனை விடவும் அதிக சிரமங்களை அனுபவிக்க வாய்ப்பு இருப்பதாக மக்கள் கூறுகிறார்களே?
அது அவ்வாறு நடக்காது. கடன் மறுசீரமைப்பு முக்கியத்துவம் பெறுவது அதனால்தான். அரச வருமானத்தை விட அதிக கடன் சுமையினைச் செலுத்த வேண்டியிருந்தது. அதனால் அரசாங்கத்தினால் கடனைச் மீளச் செலுத்தமுடியாமல் இருந்தது. அதனால் தற்காலிகமாக கடனைச் செலுத்துவது நிறுத்தப்பட்டது. ஒரு பகுதி மாத்திரம் செலுத்தப்பட்டது. வெளிநாட்டு கடன்கள் மற்றும் வெளிநாட்டு சந்தைகளிலிருந்து பெறப்பட்ட வணிக கடன்களைச் செலுத்துவதே நிறுத்தப்பட்டது. உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, தொடர்ந்து திருப்பிச் செலுத்தப்பட்டது. 6 பில்லியன் வெளிநாட்டு கடனை செலுத்த வேண்டியிருந்தது. இன்னமும் ஆண்டுக்கு 6 பில்லியன் செலுத்துவதற்கான வாய்ப்பில்லை. எதிர்காலத்தில், முன்னரைப் போல கடனைச் செலுத்த மாட்டோம். அதனைவிடவும் குறைந்த அளவிலேயே செலுத்தப்படும். 3 பில்லியனுக்கும் குறைந்தளவிலாகும்.
எதிர்காலங்களில் வங்கி வட்டி வீதத்தினை தனி இலக்கத்திற்குள் கொண்டு வர முடியுமா?
வட்டி வீதங்கள் தங்கியிருப்பது பணவீக்கத்தின் அடிப்படையிலாகும். எதிர்காலத்தில் பணவீக்கம் 5 வீதமாக இருந்தால், நல்ல வாடிக்கையாளர்களால் ஒற்றை இலக்க வட்டி விகிதத்தில் பெற்றுக் கொள்ள முடியும். இப்போது பணவீக்கம் 6.4%. ஆனால் பணவீக்கம் 5% ஆக நிலையானதாக இருக்க வேண்டும். அதுவே எங்களின் இலக்காகும். அந்தக் குறிக்கோளைக் கடைப்பிடித்தால், நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ள முடியும். அரசின் வருவாய் அதிகரிப்புக்கு ஏற்ப இந்த மாற்றங்கள் அனைத்தும் செய்யப்படலாம்.
2024ல் மத்திய வங்கியின் பொறுப்பு மற்றும் சவால் பற்றிக் கூற முடியுமா?
பணவீக்கத்தை 5% ஆக தொடர்ந்து வைத்திருப்பதே எங்கள் முக்கிய நோக்கமாகும். அதேபோன்று அதன் மூலம், வைப்பாளர்களுக்கு நியாயமான வட்டியை வழங்கி, கடன் பெறுபவர்களுக்கு இலகுவான வட்டியையும் வழங்கி பொருளாதாரத்தை மீட்டெடுப்பதும் எமது நோக்கமாகும். பணவீக்கம் அதிகரித்தால் அதுதான் எமக்கு சவால். அப்படி நடந்தால் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். எனினும் அவ்வாறு நடக்காது என நாங்கள் நம்புகிறோம். ஏதாவது வகையில் கையிருப்பை அதிகரிக்க வேண்டும். சர்வதேச நெருக்கடிகளால் எண்ணெய் விலை அதிகரிக்கலாம். உற்பத்திச் செயற்பாடுகளை நிறுத்தி, இயற்கை சீற்றங்களால் உணவு உற்பத்தி தடைப்பட்டால் அது எமக்கு சவாலாகும். வங்கி கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை பராமரிப்பது மற்றொரு சவாலாக உள்ளது. உங்கள் வைப்புத்தொகையுடன் வங்கியை நம்பகத்தன்மையுடன் பாதுகாப்பது எங்கள் பொறுப்பு.
மக்கள் விளங்கிக் கொள்ளும் படியான மாற்றங்கள் இந்த வருடத்தில் இடம்பெறுமா?
கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு இயல்புநிலை ஏற்பட அவகாசம் தேவை. இன்னும் அந்த நிலைக்கு வரவில்லை. இதே பாதையில் பயணிக்க வேண்டுமானால் அந்தப் பாதையில்தான் செல்ல வேண்டும். மாறினால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாக நேரிடும். வலி மிகுந்ததாக இருந்தாலும், முடிவுகள் நீண்ட காலம் நீடிக்கும். இதற்கு சிறிது காலம் எடுக்கும். மக்கள் பொறுமையாக இருந்தால் அந்த நிம்மதி அவர்களுக்குக் கிடைக்கும். இவ்வாறான பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளான நாடுகள் பல ஆண்டுகள் கடந்தும் இன்னமும் அதிலிருந்து மீளவில்லை. நாம் ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திற்குள் அந்தப் பாதையில் பயணித்துள்ளோம். அந்த நிலையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்