இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு, தேசிய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் வெளிநாட்டு இராஜதந்திர உறவு என்பன சுதந்திரம் பெற்ற நாடு ஒன்றின் இருப்புக்கு மிகவும் முக்கியமானதும் இன்றியமையாததுமாகும். இவை வலுப்பெற்று மேம்படுத்தப்படும் பட்சத்திலேயே அந்த நாடு வளர்ச்சியை நோக்கியும் சிறந்த எதிர்காலத்தை நோக்கியும் வெற்றிகரமாக பயணிக்க முடியும்.
அதேபோன்று நாடொன்றின் முன்னேற்றத்துக்கு அரசியல், பொருளாதார, பொது மக்கள் பாதுகாப்பு பலமும், சர்வதேசத்தின் ஒத்துழைப்பும் அத்தியாவசியமானதாகும்.
சுதந்திரம் என்பது சகலருக்கும் தேவையான ஒன்று உலகில் வாழும் தனிநபர் தொடக்கம் நாடுகள் ஒவ்வொன்றும் அதற்காகவே தொடர்ந்தும் போராடி வருகின்றன. அதேபோன்று இலங்கை சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் தொடர்ந்தும் பல்வேறு விதமான போராட்டங்களுக்கும் சவால்களுக்கும் அவ்வப்போது முகம் கொடுத்து வந்த, முகம் கொடுத்து வரும் ஒரு நாடாகும். இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசத்தில் எமது நாடு அமைந்துள்ளமையே இதற்கு பிரதான காரணமாகும்.
மூன்று தசாப்தங்களாக நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக அற்றுப் போயிருந்த சுதந்திரத்தை, எமது நாட்டின் பாதுகாப்பு படையினர் தங்களது முழுமையான அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புடன் இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் பெற்றுக்கொடுத்துள்ளனர். யுத்தத்திற்கு பின்னரான தற்போதைய காலகட்டத்தில் அதேபடையினரின் பங்களிப்புடன் சகல இன மக்களும் சுதந்திரமாகவும் நல்லிணக்கத்துடனும் வாழக் கூடிய சிறந்த ஒரு சூழலையும் உருவாக்கியுள்ளனர். இதனால் மூன்று தசாப்தங்களுக்கு பின்னர் மக்கள் உண்மையான சுதந்திரக்காற்றை சுவாசித்து வருகின்றனர். தற்பொழுது ஜனநாயகத்தின் ஊடாக நல்லாட்சியை நிலைநாட்டவும் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
நீண்ட கால போராட்டத்திற்கு பின்னர் நாட்டில் தேசிய பாதுகாப்பு, பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகள், வெளிநாடுகளுடனான இராஜதந்திர, பாதுகாப்பு உறவுகள் நாளுக்கு நாள் மேம்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இலங்கை தனது 76ஆவது தேசிய சுதந்திர தினத்தை இன்று (2024.02.04) கொண்டாடுகின்றமை விஷேட அம்சமாகும்.
நீண்டபோராட்டத்தின் வெற்றிக்கனியாகக் கிடைப்பதே சுதந்திரமாகும். இந்த சுதந்திர போராட்டத்துக்கு அந்த நாட்டின் பாதுகாப்பு படையினரது முழுமையான பங்களிப்பு மிகவும் முக்கியமானது. எனவே தான் சில நாடுகள் குடியரசு தினம் அல்லது சுதந்திர தினம் என்பதை தமது நாட்டினதும் படைத் தரப்பினரதும் பலத்தை வெளிக்காண்பிக்கும் ஒரு பிரதான வைபவமாகவே கொண்டாடுகின்றது. இதனை உலகின் பலம் பொருந்திய நாடுகள் தொடக்கம் சாதாரண நாடுகள் வரை வருடாந்தம் கொண்டாடும் சுதந்திர, குடியரசு தின பிரதான வைபவங்களில் காணமுடியும். இதன் ஓர் அங்கமாகவே பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற 1948ஆம் ஆண்டிலிருந்து இலங்கையும் வருடா வருடம் பெப்ரவரி 4ஆம் திகதி தேசிய சுதந்திர தினத்தை வெகுவிமர்சையாகக் கொண்டாடி வருகின்றது.
இதற்கமைவாகவே இம்முறையும் இலங்கையின் 76ஆவது சுதந்திர தின பிரதான வைபவம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு காலி முகத்திடலில் இன்று காலை மிகக் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
தேசத்தின் அபிமானத்தை காக்கும் வகையில் வழக்கம் போன்று எவ்வித குறைப்பாடுகளுமின்றி கம்பீரமானதாகவும் எளிமையான முறையிலும் மேலதிக செலவுகள் எதுவுமின்றியும் இந்த நிகழ்வை நடத்த சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொது மக்கள் தத்தமது வீடுகளில் இருந்தவாறே தொலைக் காட்சியின் ஊடாக பாதுகாப்பாக அதனைக் கண்டுகளிப்பதற்கான ஏற்பாடுகளையும் ஏற்பாட்டுக் குழு மேற்கொண்டுள்ளது.
இம்முறை சுதந்திர தின பிரதான அணிவகுப்பில் முப்படையினர், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் சுமார் ஆறாயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இவர்களில் இராணுவத்தைச் சேர்ந்த 3163 பேரும், கடற்படையைச் சேர்ந்த 950 பேரும், விமானப் படையைச் சேர்ந்த 740 பேரும் பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையைச் சேர்ந்த 504 பேரும் சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 380 பேரும் தேசிய மாணவர் படையணியைச் சேர்ந்த 551 பேரும் அடங்குவர்.
தாய்லாந்து பிரதமர்
ஏழு தசாப்த்த தேரவாத பௌத்த தொடர்பை வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விஷேட அழைப்பின் பேரில் தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின், விஷேட அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளமை விஷேட அம்சமாகும். இந்த விஜயத்தின் ஓர் அங்கமாக பல்வேறு இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. இதன் மூலம் இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதுடன் நாம் எதிர்நோக்கும் பொருளாதார சவால்களை முறியடிக்கவும் ஓர் உந்து சக்தியாக அமையும்.
பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக் ஷ, மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் த எயார்போஸ் ரொஷான் குணதிலக்க, அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரண்ணாகொட மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
சுதந்திர தின பிரதான நிகழ்வை முன்னிட்டு கொழும்பு காலி முகத்திடல் உட்பட அதனை அண்டிய பிரதேசம் எங்கும் தேசிய கொடி மற்றும் வர்ணக் கொடிகள் பறக்கவிடப்பட்டு அலங்கரிக்கப்பட்டுக் காணப்படுவதுடன் இந்தப் பிரதேசம் எங்கும் விழாக்கோலம் பூண்டிருக்கின்றது.
இராணுவம், கடற்படை, விமானப் படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு படை, தேசிய இளைஞர் படை ஆகியவற்றை பிரதிநிதித்துவப் படுத்திய சுமார் ஆறாயிரத்திற்கும் அதிகமான படைவீரர்களினது அணிவகுப்பும் விமானப் படையின் வான் சாகசங்களும் இன்றைய நிகழ்வை மேலும் அலங்கரிக்கும் வகையிலும், தமது பலத்தையும் தரத்தையும் வெளிக்காண்பிக்கும் வகையிலும் அமையவுள்ளது.
வழமைபோன்று பதில் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன், விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே, பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன, பிரதமரின் செயலாளர் டீ. எம். அநுர திஸாநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் ஈ. எம். எஸ். பீ. ஏக்கநாயக்க ஆகியோரின் வருகை இடம்பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் த எயார்போஸ் ரொஷான் குணதிலக்க, அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரண்ணாகொட, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக் ஷ, சந்திரிக்க பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரின் வருகையும் இடம்பெறவுள்ளது.
அதன் பின்னர் பொலிஸாரின் விஷேட வாகன பவனிக்கு மத்தியில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அவரது பாரியார் ஆகியோர் அழைத்து வரப்படவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து பாரம்பரிய முறையில் பொலிஸ் வாகன பவனி மற்றும் பொலிஸ் குதிரைப் படையின் அணிவகுப்புக்கு மத்தியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது பாரியார் திருமதி மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோரின் வருகை இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதியின் வருகையைத் தொடர்ந்து பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, முப்படைத் தளபதிகள் மற்றும் பதில் பொலிஸ் மாஅதிபர் ஜனாதிபதியை பிரதான கொடிக்கம்பத்துக்கு அழைத்துச் சென்றவுடன் மங்கள வாத்திய முழக்கத்துக்கு மத்தியில் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தின பிரதான வைபவத்தை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதன்போது பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த 100 மாணவ, மாணவிகளினால் தேசிய கீதம் பாடப்படும். ஜனாதிபதி விஷேட மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் ஜயமங்கள கீதம் மற்றும் தேவ வஸ்து என்பன பாடப்படவுள்ளன.
இதனைத் தொடர்ந்து இலங்கையின் சுதந்திரம், இறைமை, தேசிய ஒருமைப்பாடு என்பவற்றை நிலைநாட்டும் பொருட்டு தாய் நாட்டுக்காக உயிர் நீத்த சகல தேசாபிமானிகளையும் நினைவு கூர்ந்து இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்படும். அதனைத் தொடர்ந்து முப்படைகளினால் ஜனாதிபதிக்கு மரியாதை அணிவகுப்பு வழங்கப்படுவதுடன், மரியாதை நிமித்தம் 21 பீரங்கி வேட்டுக்களும் தீர்க்கப்படும்.
அதன் பின்னர் முப்படைகள், பொலிஸ், சிவில் பாதுகாப்பு படை மற்றும் மாணவர் படையணியினரின் மரியாதை அணிவகுப்பு இடம்பெறவுள்ளது. இம்முறை மத்திய பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித்த அலுவிஹார தலைமையில் நடைபெறவுள்ள இந்த மரியாதை அணிவகுப்பில் சுமார் ஆறாயிரம் படைவீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
இராணுவம்
–இராணுவ அணிவகுப்பில் இராணுவத்தின் ஆயுதங்கள், கனரக கவச வாகனங்கள், யுத்த தளபாடங்கள், உபகரணங்கள். ஆட்டிலறி, பீரங்கி தாங்கிய வாகனங்கள், மோப்ப நாய்கள் பொறியியல் உபகரணங்கள் உட்பட யுத்த காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் இராணுவம் பயன்படுத்தும் பல்வேறு வாகனங்களும் அணிவகுத்து செல்லவுள்ளன.
கடற்படை
–அதேபோன்று, கடற்படையினர் அணிவகுப்பும் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளது. கடற்படையின் கொமொடோர் புத்திக் ஜயவீர தலைமையில் நடைபெறவுள்ள இந்த அணிவகுப்பில் கடற்படையின் பல்வேறு வகையான பிரிவினர் அணிவகுப்பில் கலந்து கொள்ளவுள்ளனர். இவர்களில் கடற்படையின் விஷேட படகுப் பிரிவினர், மீட்புப் பிரிவினர், மெரைன் படைப் பிரிவினர், பெண்கள் படைப்பிரிவினர் அடங்குவர்.
கடற்படையிடம் உள்ள பெரிய கப்பல்களான கஜபாஹு, சயுர மற்றும் சமுதுர ஆகிய மூன்று கப்பல்களும் காலி முகத்திடலில் கடலில் இருந்தவாறே மரியாதை செலுத்தும்.
அத்துடன் தேசத்திற்காக அர்ப்பணித்தவர்களை நினைவு கூர்ந்து காலி முகத்திடல் கடலில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான சமுதுர கப்பலில் இருந்து 25 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்படவுள்ளமை விஷேட அம்சமாகும்.
விமானப்படை
விமானப் படையினரும் தரையில் தமது பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தி விமானப் படையினரால் பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன் அணிவகுத்து செல்லவுள்ள அதேசமயம் காலி முகத்திடல் மற்றும் அதனை அண்டிய வான் பரப்பில் விமானப் படையின் பல்வேறு ரக விமானங்கள், ஹெலிகொப்டர்கள், தாக்குதல் விமானங்கள் உள்ளடங்கலாக 19 வகை விமானங்கள் தேசிய கொடியை பறக்க விட்ட நிலையில் வானில் சாகசங்களை காண்பித்த வண்ணம் அணிவகுத்து பறந்து செல்லவுள்ளன. எப்7 ரக தாக்குதல் விமானங்களும், எம்ஏ 60, வை12, பிரி6, ரக விமானங்களும், பெல் 412, பெல் 212, எம்ஐ 17 ரக ஹெலிகொப்டர்களுமே கொழும்பு வான் பரப்பில் தமது சாகசங்களை காண்பிக்கவுள்ளன.
பொலிஸ், பொலிஸ் விஷேட அதிரடிப் படை
பொலிஸாரின் அணிவகுப்புக்கு மேலதிகமாக பொலிஸாரின் மிகவும் பழைமை வாய்ந்ததும் பாரம்பரியமானதுமான பாண்ட் வாத்தியங்களுடன் பொலிஸார் அணிவகுத்து செல்லவுள்ளனர். அத்துடன் இம்முறையும் மரியாதை அணிவகுப்பில் பொலிஸ் குதிரைப் படையினரும் கலந்து கொள்ளவுள்ளனர். பொலிஸாரை தொடர்ந்து பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் அணிவகுத்து செல்லவுள்ளனர்.
இதேவேளை, சுதந்திரத்தினத்தில் முப்படையினர் அணிவகுத்து செல்வதும் தரை, கடல் மற்றும் வான் பரப்பில் சாகசங்களை காண்பிப்பதும் வெறுமனே சாகசங்களை காண்பிப்பதல்ல நோக்கம். மாறாக எமது நாட்டிற்கே உரித்தான முப்படைகளின் பலத்தையும் தரத்தையும் வெளிக்காண்பிப்பது ஆகும்.
பரசூட் சாகசங்கள்
இம்முறையும் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பரசூட் சாகசங்கள் இடம்பெறவுள்ளன.
சமய வழிபாடுகள்
இதேவேளை சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் உள்ள பௌத்த, இந்து, கிறிஸ்தவ, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மத தலங்களில் சமய வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் இடம்பெறவுள்ளன.
இதேவேளை, இம்முறை சர்வமத ஆசிர்வாதங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதுடன் பெப்ரவரி 04ஆம் திகதி பௌத்த மத அனுஷ்டானம் கொழும்பு 3, பொல்வத்த தர்மகீர்த்தியராமயவிலும், இந்து மத அனுஷ்டானம் கொழும்பு – 04 பிள்ளையார் கோயிலும், கத்தோலிக்க மத ஆராதனை பொரளை, அனைத்து புனிதர்கள் தேவாலயத்திலும், கிறிஸ்தவ சமய ஆராதனை கொழும்பு 3, கிறிஸ்தவ புரொட்டஸ்டன்ட் தேவாலயத்திலும், இஸ்லாமிய சமய நிகழ்வு கொழும்பு – 11 ஜாமிஉல் அல்பர் சம்மாங்கோட்டை (சிவப்பு) பள்ளிவாசலிலும் நடைபெறவுள்ளன.
ஸாதிக் ஷிஹான்