Home » படகை சீஷெல்ஸ் ​நோக்கி திசை திருப்பினேன்
கொள்ளையர்களுக்குத் தெரியாமல்

படகை சீஷெல்ஸ் ​நோக்கி திசை திருப்பினேன்

லோரென்சோ புத்தா 4 ஆள்கடல் வள்ள படகோட்டி ரகித

by Damith Pushpika
February 4, 2024 6:00 am 0 comment

சில காலங்களுக்கு முன்னர் வறுமைக் கோட்டின் கீழ்’ வாடும் நாடாக அறிவிக்கப்பட்டிருந்த சோமாலியாவின் எதிர்காலம், அதலபாதாளத்துக்குச் சென்றுள்ளது. 1991இல் அந்நாட்டின் அடிப்படைவாதக் குழுவினால் சர்வாதிகாரி ஆட்சியாளர் முகமது செயித் பாரியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதன் பின்னர் அந்நாடு அராஜகங்களுக்குப் பெயர்போன நாடாக மாறியது. அதன் பின்னர் சோமாலியா கடற்கொள்ளையர்களால் பிரபலமானது.

தற்போது கடற்பயணிகளையும் மீனவர்களையும் பயமுறுத்தும் சோமாலிய கடற்கொள்ளையர்களின் உருவாக்கத்தின் பின்னணி, அந்நாட்டின் கடற்படை உட்பட பாதுகாப்புத் துறையின் சரிவு, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் கப்பல்களிலிருந்து சோமாலியக் கடலில் தொடர்ந்தும் கழிவுகள் அகற்றப்படுவது மற்றும் வேறு நாடுகளிலிருந்து வரும் மீனவர்கள் பாரியளவில் சோமாலியா கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவது போன்ற பல காரணங்களால்தான் கடற்கொள்ளையர்கள் உருவானார்கள் என்பது உண்மையை அறிந்தவர்களுக்கு தெரியும். இந்த பிரச்சினைகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட சோமாலிய மீனவர்கள், பின்னர் ஆயுதங்களை ஏந்தி தங்கள் கடற்பரப்பு முழுவதிலும் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் அவர்கள் சிறிய ஆயுதமேந்திய படகுகள் மூலம் வணிகக் கப்பல்களைத் தங்கள் கடற்பரப்பிலிருந்து விரட்டும் அளவுக்கு அப்பாவிகளாக இருந்த போதிலும், காலப்போக்கில் மற்றொரு குழு அதனைத் தமது வாழ்வாதாரமாக ஆக்கிக் கொண்டது. அக்குழுக்கள் சிறிய குழுக்களாக வரும் வணிகக் கப்பல்களை வெற்றிகரமாக கடத்திச் சென்றன.

இவ்வாறு கப்பல்கள் மற்றும் மீன்பிடி படகுகளை கொள்ளையடிக்கத் தொடங்கிய அவர்கள், காலப்போக்கில் கொள்ளையிட்டு ஈட்டிக் கொண்ட பணம் மற்றும் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் அதிவேக படகுகள், தானியங்கி துப்பாக்கிகள் மட்டுமின்றி, அதிநவீன தொழில்நுட்ப உபகரணங்களையும் கொண்ட மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவாகினர். கடற்பயணிகளும் மீனவர்களும் சோமாலியா கடற்கொள்ளையர்கள் என்ற பெயரைச் சொன்னாலே பயந்து நடுங்கும் அளவுக்கு சோமாலிய கடற்கொள்ளையர்கள் உருவானது இத்தகைய பின்னணியில்தானாகும்.

சோமாலிய கடற்கொள்ளையர்கள் இலங்கை கடற்பணிகளுக்கும் மீனவர்களுக்கும் புதியவர்கள் அல்ல, கடந்த சில வருடங்களினுள் இந்த நாட்டைச் சேர்ந்த பல மீனவக் குழுக்கள் அரபிக்கடலில் வைத்து சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட போதிலும், அதிர்ஷ்டவசமாக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட பல முயற்சிகளின் விளைவாக அவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப முடிந்தது. அதேபோன்ற கடந்த 27ஆம் திகதி அரபிக்கடலில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கையின் லோரென்சோ புத்தா 04 என்ற பல்நாள் மீன்பிடிப் படகும், அதிலிருந்த ஆறு மீனவர்களும் மூன்று நாட்கள் என்ற குறுகிய காலத்தில் கடற்கொள்ளையர்களின் பிடியில் இருந்து மீட்கப்பட்டது இலங்கை கடற்படையின் முறையான முன்னெடுப்புகளால்த்தான்.

இலங்கை கடற்படை, பிராந்திய தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்துடன் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கை தொடர்பான மேலதிக விபரங்களை இலங்கை கடற்படையின் ஊடகப் பணிப்பாளர் கப்டன் கயான் விக்கிரமசூரியவிடம் கேட்டோம்.

“இந்தச் சம்பவத்தைப் பற்றி எமக்கு முதலில் கடந்த 27ஆம் திகதி கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டது. IMUL-A- 2590- CHW என்ற பதிவிலக்கத்தைக் கொண்ட லோரென்சோ புத்தா 04 என்ற பலநாள் மீன்பிடிப் படகு ஆறு மீனவர்களுடன் மீன்பிடிப்பதற்காக ஆழ்கடலுக்கு திக்வோவிட மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஜனவரி 12ஆம் திகதி புறப்பட்டுச் சென்றுள்ளது. அந்தப் படகு அரேபியக் கடலில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவர்கள் கடற்கொள்ளையர்களின் பிடியில் சிக்கியிருப்பதாக எமக்கு அறிவிக்கப்பட்டது. இந்த அறிவித்தல் கிடைத்தவுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, கப்பலையும் மீனவர்களையும் எவ்வாறு மீட்பது என்பது குறித்து உடனடியாக ஆலோசனைகளை வழங்கினார். இதன்படி, கடற்படையினர் உடனேயே செயற்படுத்தப்பட்டனர். கடற்படையினர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பல நாள் மீன்பிடிப் படகு இருக்கும் இடத்தை அடையாளம் கண்டனர். நாம் கண்காணித்தபோது இந்த மீன்பிடிப் படகு சோமாலியா மற்றும் சீஷெல்ஸ் என்பனவற்றுக்கு இடையே சர்வதேச கடல் பகுதியில் அடையாளம் காணப்பட்டது. கடத்தல்காரர்கள் படகினை சோமாலியாவை நோக்கி எடுத்துச் செல்வதை அவதானிக்க முடிந்தது. அதன்பிரகாரம் நாம் அந்தப் படகினை மீட்கும் பணியை உடனடியாக தொடங்கினோம்”

காணாமல் போன மீனவப் படகு பற்றி இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா பஹ்ரைனில் உள்ள இலங்கை உட்பட 39 நாடுகளை உள்ளடக்கிய கூட்டு கடல்சார் செயலணிக்கு அறிவித்தார். சோமாலிய கடற்கொள்ளையர்களை ஒடுக்கவும், பயங்கரவாதச் செயற்பாடுகளைத் தடுப்பதற்காகவும் அமைக்கப்பட்டுள்ள இந்த படையணி தொடர்ந்தும் கடலில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதால் அவர்களால் இந்த மீனவப் படகினை எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

“அதனடிப்படையில் நாம் இந்தியா, சீஷெல்ஸ், சீனா போன்ற நாடுகளுக்கு இந்தப் படகு பற்றி அறிவித்தோம். அந்நேரம் இந்திய கடற்படைக்குச் சொந்தமான படகு ஒன்று எமது படகினைத் தேடிப் புறப்பட்டிருந்தாலும் அவர்களால் எமது படகினைக் கண்டு கொள்ள முடியாமல் போனது. அதற்குள் கடற்கொள்ளையர்களின் கட்டுப்பாட்டில் இருந்த படகின் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட போதிலும், கடற்படையின் சிறப்பு தொழில்நுட்பத்தின் மூலம் கப்பலின் போக்கை தொடர்ந்து கண்காணித்து வந்தோம். பல மணி நேரங்களுக்குப் பிறகு, முதலில் சோமாலியாவை நோக்கிச் சென்ற கப்பல் சீஷெல்ஸ் நோக்கிச் செல்வதை நாங்கள் அவதானித்தோம். சீஷெல்ஸில் அதிக எண்ணிக்கையிலான தீவுகள் இருப்பதால், அத்தகைய தீவுக்குள் படகினைக் கொண்டு சென்றால், அதை மீண்டும் கண்டுபிடிப்பது கடினம் என்பதையும் நாங்கள் உணர்ந்தோம். எனவே, இது தொடர்பாக சீஷெல்ஸ் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், பிராந்திய தேடல் மற்றும் மீட்பு மையம் மற்றும் இந்தியாவுக்கும் அறிவித்தோம். அதன்பிரகாரமே எமது மீனவப் படகினைத் தேடிக் காப்பாற்றும் கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் கடற்படைத் தளபதியின் பணிப்புரையின் பேரில் இந்த நடவடிக்கைக்கு எங்களுடைய கப்பலைத் தேவையான நேரத்தில் விரைவாக அங்கு அனுப்புவதற்கான சகல ஏற்பாடுகளையும் ஏற்கனவே செய்திருந்தோம்.

இதற்கிடையில், கிடைத்த தகவலின் அடிப்படையில், தொடர்ச்சியாக எம்மோடு ஒருங்கிணைப்பில் ஈடுபட்ட சீசெஷல்ஸ் கடலோர காவல்படையினர், இந்திய கடற்படையுடன் இணைந்து படகினை மீட்கும் நடவடிக்கையை திங்கட்கிழமை (29ஆம் திகதி) தொடங்கினர். கடற்படைத் தளபதி தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்ட தலைவர்களுடன் உரையாடி, இந்த நடவடிக்கை தொடர்பில் தொடர்ச்சியாக மேற்பார்வை செய்ததோடு, அனைத்து தரப்பினருக்குமிடையில் நல்ல ஒருங்கிணைப்பை தொடர்ந்து பேணி வந்தார். குறிப்பாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களமும் எமக்கு நல்ல ஒத்துழைப்பை வழங்கியது”

பல தரப்பினரின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட அந்த கூட்டு நடவடிக்கையில் சீஷெல்ஸ் கடலோரப் பாதுகாப்பு படையணியினால் அந்நாட்டு கடலோர காவல்படைக்குரிய ‘டொபெஸ்’ என்ற கப்பலானது அந்நாட்டின் பிரதான தீவான மாஹோ தீவிலிருந்து சுமார் 230 கடல் மைல் தூரத்தில் அமைந்துள்ள சீஷெல்ஸ் பொருளாதார வலயத்தில் ‘லோரென்சோ புத்தா 04’ஐ தேட ஆரம்பித்தது.

“இதன்போது அவர்களால் ஆயுதம் தாங்கிய மூவருடனான மீனவப் படகு ஒன்று அடையாளம் காணப்பட்டது. அது லொரேன்சோ புத்தா 04 என்ற மீனவப் படகாக இருக்கலாம் என்பதை உறுதி செய்ததன் பின்னர் அவர்கள் பாதுகாப்புடன் அந்த மீனவப் படகை நெருங்கினார்கள். அந்தப் படகை நெருங்கும்போது தான் அதில் இருந்தவர்கள் சோமாலியா கடற் கொள்ளையர்கள் என்பதை அடையாளம் கண்டு கொண்டார்கள். கடற்படையை கண்டதும் குழப்பமடைந்த கொள்ளையர்கள் கடலோர பாதுகாப்பு அணியினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர், பின்னர் இரு தரப்புக்கும் இடையில் துப்பாக்கிப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. என்றாலும் இந்த துப்பாக்கி பிரயோகத்தில் எவருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாத நிலையில், கொள்ளையர்களை கைது செய்வதற்கு இலங்கை மீனவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கும் வாய்ப்பேற்பட்டது.

சீஷெல்ஸில் உள்ள மொபிடாஸ் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள லோரென்சோ புத்தா 04 என்ற மீன்பிடிப்படகில் அந்த மீனவர்கள் தற்போது தங்கியுள்ளார்கள். அந்த மீன்பிடிப்படகின் படகோட்டியான வர்ணகுலசூரிய ரகித துஷான் பெர்னாண்டோ (வயது 35) தாம் எதிர்கொண்ட பயங்கர அனுபவங்கள் தொடர்பில் தினகரனுக்கு இவ்வாறு விபரித்தார்.

“நான் மீன்பிடித் தொழிலை ஆரம்பித்து தற்போது 13 வருடங்களாகின்றன. படகோட்டியாகச் செயற்பட ஆரம்பித்து 8 வருடங்களாகின்றன. இவ்வாறான சம்பவத்திற்கு முகங்கொடுத்த முதல் தடவை இதுவாகும். அன்று 27ஆம் திகதி காலை 10.30 மணியளவில் எமது படகின் பின்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தையடுத்தே நாம் அவர்களைக் கண்டோம். அவர்கள் வந்தது சுமார் 60 அடி நீளத்தைக் கொண்ட ஈரானுக்குச் சொந்தமான படகிலாகும். அதில் சோமாலியாவைச் சேர்ந்த 10 பேரளவில் இருந்தார்கள். அவர்கள் ஆகாயத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு எம்மை பிடித்துக் கொண்டார்கள். அங்கு எமக்கு முன்னர் அவர்களால் பிடிக்கப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களும் இருந்தார்கள்.

அவர்கள் வந்த உடனேயே என்னைத் தாக்கிவிட்டு எமது படகினை சோமாலியாவை நோக்கித் திருப்புமாறு கூறினார்கள். எம்மிடம் செட்டிலைட் போன் உள்ளதா எனத் தேடினார்கள். அதன் பிறகு பெரிய படகுடன் வந்த டிங்கிப் படகில் எமது படகிலிருந்த உணவுகளிலிருந்து அரைவாசியை ஏற்றிக் கொண்டு அவர்கள் வந்த படகை அதிலிருந்தவர்களுடன் அனுப்பி வைத்தார்கள். சோமாலியா நாட்டவர்கள் மூவரின் தலைவன் எமது படகின் ரேடியோ கருவியை நிறுத்துமாறு உத்தரவிட்டான். அவர்கள் பேசிய மொழி எமக்கு விளங்கவுமில்லை. நாம் கொச்சையாகப் பேசிய ஆங்கிலமும் அவர்களுக்கு விளங்கவில்லை. சைகை மொழிகளால்தான் பேசிக் கொண்டோம். சில விடயங்களை எழுதியும் காட்டினோம். சோமாலியாவுக்குச் செல்வோம் என அவர்கள் கூறினார்கள். சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி சோமாலியாவுக்குச் சென்றதன் பின்னர் எம்மால் தப்பிக்க முடியாது என எனக்குப் புரிந்தது. எனவே நான் எம்மிடமிருந்த பழைய கைப்பேசியை உடைத்து அதிலிருந்து சிறிய காந்தத்தை எடுத்து திசைகாட்டியில் பயன்படுத்தி படகினை மெதுவாக சீஷெல்ஸ் பக்கத்தை நோக்கித் திருப்பினேன். அவர்களுக்கு இது பற்றிய எந்த அறிவும் இல்லை என்பதை அறிந்து கொண்டதால்தான் நான் அவ்வாறு செய்தேன். அதேபோன்று அவர்கள் மூவரும் படகின் மேல் தளத்திற்குச் சென்றதும், இரண்டு நிமிடங்கள் என் குறுகிய நேரத்திற்குள் நான் ரேடியோவை ஓன் செய்து எங்கள் குழுவினரிடம் நாம் கடல் கொள்ளையர்களிடம் சிக்கிக் கொண்ட தகவலைத் தெரிவித்தேன்.

நான் தகவலைக் கூறி முடித்தவுடன் அவர்கள் கீழே இறங்கினர். நான் அப்படிச் செய்யாவிட்டால், அவர்கள் எங்களை சோமாலியாவுக்கு அழைத்துச் சென்றிருப்பார்கள். அவ்வாறு நடந்திருந்தால் நாம் தப்பியிருக்க மாட்டோம். அந்த இரண்டு நிமிடங்கள்தான் எங்கள் உயிரைக் காப்பாற்ற உதவியது என்றார் ரகித.

சுரேகா நில்மினி இலங்கோன் தமிழில் - எம். எஸ். முஸப்பிர்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division