Home » புண்ணிய பூமி மாத்தளை
அன்னை முத்துமாரி அருள்பாலிக்கும்

புண்ணிய பூமி மாத்தளை

by Damith Pushpika
January 28, 2024 6:00 am 0 comment

மாத்தளை‌ மலையகத்தின்‌ தலைவாயில்‌. இராமேஸ்வரம்‌ கரையிலிருந்து படகுகள்‌ மூலமும்‌ பாய்மரக்‌ கப்பல் மூலமும்‌ கடலைக்‌ கடந்து, கொடிய காடுகளுக்கிடையே கால்நடையாக உயிர்தப்பி வந்ததற்காக நன்றி கூறும்‌ முதல்‌ தெய்வம்‌, எங்கள்‌ மாத்தளை முத்துமாரி. எங்களது வரலாறு மாத்தளை முத்துமாரியம்மன்‌ வரலாற்றுடன்‌ இணைந்துள்ளது. வரலாற்று சிறப்பும்‌ புராதன தொன்மையும்‌ கொண்ட ஆலயத்தின்‌ மாசி மகோற்சவம்‌ எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ம்‌ திகதி கொடியேற்றத்துடன்‌ ஆரம்பமாகி தினமும் காலை, மாலை திருவிழாக்கள்‌ நடைபெற்று, சுவாமி உள்வீதி, வெளிவீதி வந்து அடியார்களுக்கு அருள்பாலிக்கின்றார். காரைநகர் ஈழத்து சிதம்பரம் மங்களேஸ்வரர் குருக்களின் பேரனும் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் பிரதான குருக்களுமான சுப்பிரமணிய குருக்களின் மருமகனும், சிவஸ்ரீ மணி சரவணபவாநந்த குருக்கள் மற்றும் சாமி விஸ்வநாத குருக்களிடம் வேதங்களை கற்றவருமான சிவஸ்ரீ கிரியா பானு சு.கிருஸ்ணகுமார் கிரியைகளை நடத்துவார்.

தமிழ்‌ மக்கள்‌ எங்கெல்லாம்‌ புலம்‌ பெயர்ந்து சென்றார்களோ, அங்கெல்லாம்‌ மாரியம்மனையும்‌ உடன்‌ கூட்டிக்‌ கொண்டே சென்றிருக்கின்றார்கள்‌. பிரித்தானியப்‌ பேரரசின்‌போது உலகத்தின்‌ பல நாடுகளுக்கும்‌ குடிபெயர்ந்த தமிழக மக்கள்‌ அங்கெல்லாம்‌ மாரியம்மனைக்‌ கொண்டு சென்று வழிபட்டு வருகின்றார்கள்‌. தென்னாபிரிக்கா, சிங்கப்பூர்‌, மலேசியா, மொரிசியஸ்‌, தாய்லாந்து மற்றும்‌ பிஜி, மாட்டினிக், குவாதலோப்‌ சென்‌ வின்ஸ்டன்‌, ரீ நாட்‌இ டூபாக்கோ, சுரிநாம்‌, பிரெஞ்‌ கயானா உட்பட பிரெஞ்சு மொழி பேசுகின்ற தீவுகளில்‌ கூட மாரியம்மனைப்‌ போற்றி அருள்பாலித்து வழிபடும்‌ பாங்கினை இன்று காண்கின்றோம்‌. மாத்தளை‌ முத்துமரியம்மையின்‌ தெய்வீக‌ கோலத்தில்‌ சிந்தை இழந்து போனவர்கள் பலர். சைவப் பெரியார்‌ முருகேசுப் பிள்ளை, கவிஞர் நவாலியூர் சு. சொக்கநாதன், கவிஞர்‌ ஈழவாணன், கவிஞர்‌ வி. கந்தவனம்‌ என அம்பிகையைப் பாடி பரவியவர் பலர். 1983ஆம்‌ ஆண்டு ஜுலை மாதக்‌ கலவரத்தில்‌ அசுரர்களால்‌ தீயிட்டுக்‌ கொழுத்‌தப்பட்ட பஞ்சரதங்களையும்‌ மீள நிர்மாணித்து மாத்தளை நகர வீதிகளில்‌ 10 ஆண்டுகளுக்குப்‌ பின்னர்‌ 1993 அம்பாள்‌ பவனி வரப்‌ பணி செய்த ஸ்ரீமான்‌ மாரிமுத்துச்‌ செட்டியார்‌ மற்றும்‌ பூரண ஒத்துழைப்பு வழங்கிய பரிபாலன சபை உறுப்பினர்கள் என்றும்‌ நினைவு கூரத்தக்கவர்கள்‌.

மாத்தளை முத்துமாரியம்மன்‌ தெய்வீகக் கோலத்தில்‌ சிந்தை இழந்துபோன கவிஞர் நாவலியூர் சொக்கநாதன்‌, 1964ஆம் ஆண்டு எழுதிய “மாத்தளை முத்துமாரியம்மன்‌ குறவஞ்சி” என்ற நூலை பலரும்‌ மறந்து போயிருந்த நிலையில்‌ பெரும்‌ பொக்கிஷம்‌ எனப் பேணப்படுவதுடன்‌ இளைய தலைமுறையினர்‌ கற்றறிந்து பயன்பெறும்‌ வகையில்‌ மாத்தளை எச்‌. எச். விக்கிரமசிங்க மறுபதிப்பு செய்து 1993ஆம் ஆண்டு தலைவராக இருந்த ஸ்ரீமான்‌ மாரிமுத்துச்‌ செட்டியாரிடம் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது‌. முருகேசுபிள்ளை அன்னை முத்துமாரியை பற்றி பகிரும் அந்தாதி ஊரில் பாடிப்பரவியமை குறிப்பிடத்தக்கது. மலரன்பனின்‌ “மூங்கிலின்‌ நாதம்‌, தென்றலின்‌ கீதமும்‌” சிலை வடித்து உயிர்‌ கொடுத்த சிற்பி வாழனும்‌ மலையகம்‌ மாத்தளையில்‌ தேரும்‌ ஓடனும்‌ (சீர்காழி சிவ சிதம்பரம்‌) “பன்னாகமம்‌ என்னும்‌ பொன்னகர்‌ மாத்தளையில்‌” ஆவணி சதுர்த்தியில்‌ அருளும்‌ சக்தி என மாத்தளை வடிவேலனின்‌ வரிகளில்‌ சங்கீத ரத்னம்‌, என்‌. ரகுநாதன்‌ குரலின்‌ பாடல்‌ ஒலிக்க, ஈழத்து ரத்தினத்தின்‌ வரிகளில்‌, மாத்தளையில்‌ மாசிமாதம்‌ திருவிழா” முதலான பாடல்‌ காதுக்கினிய கீதமாக காற்றில்‌ மிதந்து பக்திப்‌ பரவசத்தை இன்றும்‌ ஊட்டுவனவாகும்‌. மாத்தளையில்‌ மாசிமக திருவிழா என்ற பாடல்‌ வரிகளோடு ‘அவள்‌ ஒரு ஜீவநதி’ என்ற திரைப்படத்தின்‌ ஊடாக மாத்தளை தேர்த்திருவிழா காட்சிகளை பூஜை வழிபாடுகளை மாத்தளை கார்த்திகேசு பதிவுசெய்திருக்கிறார்‌. மாத்தளை பெ. வடிவேலன்‌ மலையகத்தில்‌ ‘மாரியம்மன்‌ வழிபாடும்‌ வரலாறும்‌’ உட்பட பல நூல்களை எழுதி வெளியிட்டமை சிறப்பு நிகழ்வாகும்.

மாசிமகமும் பஞ்ச இரத பவனியும் சிறப்பாக நடைபெற அயராது உழைக்கும் ஆலய பரிபாலன சபை தலைவர் விக்கினேஸ்வரர் சர்வானந்தா, செயலாளர் செல்லையா ஜெயராஜ், பொருளாளர் பெரியசாமி மனோகரன், மற்றும் வேலாயுதம் சுதர்ஷன், அங்கமுத்து யோகராஜா செட்டியார், கந்தையா கனகரட்ணம், வேலு அழகேஸ்வரன், அங்கமுத்து திருச்செல்வம் ஆசாரியார், வீரையா முத்துசாமி, இராமசாமி கிருஷ்ணகுமார், சுப்பையா பிரதீபன், மாரிமுத்து நாகேந்திரன், செல்லதுரை விஸ்வநாதன், தியாகராஜா கிஷோகுமார் ஆகியோர் ஆலயத்தை சிறந்த முறையில் பரிபாலித்து வருகின்றனர்.

மாத்தளை முத்துமாரியம்மன்‌ அருளின்‌ அன்பின்‌ இரக்கத்தின்‌ கருணையின் ஒரு குறியீடு. வன்முறையும்‌ கோரமும்‌ தலைவிரித்தாடும்‌ இன்றைய சூழலில்‌ பொறாமையும்‌ எரிச்சலும்‌ பிறர்‌ வாழப்‌பொறுக்காத தன்மையும்‌, சமூக வாழ்வில்‌ நன்கு வேரூன்றி விட்ட காலகட்டத்தில்‌ மாத்தளை முத்துமாரி அம்பிகையைத்‌ தரிசித்து தேர்திருவிழாவில்‌ கலந்து அன்பையும்‌ இரக்கத்தையும்‌ யாசிப்பது தார்மீகக்‌ கடமையாகும்‌.

காயத்திரி விக்கிரமசிங்க

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division