Home » தீங்குகளை கட்டுப்படுத்தும் நிகழ்நிலைக் காப்புச் சட்டம்!

தீங்குகளை கட்டுப்படுத்தும் நிகழ்நிலைக் காப்புச் சட்டம்!

by Damith Pushpika
January 28, 2024 6:23 am 0 comment

பாராளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் (Online Safety Bill) தற்பொழுது நாட்டில் அதிகம் பேசப்படும் ஒரு விடயமாக மாறியுள்ளது.

குறித்த சட்டமூலம் தொடர்பில் எதிராகவும், ஆதரவாகவும் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், இச்சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதற்கு ஆதரவாக 108 வாக்குகளும், எதிராக 62 வாக்குகளும் பதிவாகியிருந்தன.

கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி விசேட வர்த்தமானி மூலம் பிரசுரிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம் முதலாவது வாசிப்புக்காக கடந்த வருடத்தின் ஒக்டோபர் மாதம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் 45 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானதாக இல்லாதபோதும், திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை உயர் நீதிமன்றம் வலியுறுத்தியிருந்தது. நிகழ்நிலைக்காப்புச் சட்டமூலத்தில் 34 திருத்தங்கள் உயர்நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

குறித்த சட்டமூலம் ஊடகங்கள், இளைஞர், மரபுரிமை மற்றும் புதிய பிரஜைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கீகரிக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்களுக்கு உட்பட்டதாக இச்சட்டமூலத்துக்கு துறைசார் மேற்பார்வைக் குழு அங்கீகாரம் வழங்கியது.

இதன் அடிப்படையிலேயே கடந்த 23ஆம் 24ஆம் திகதிகளில் நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டிருந்தது.

இன மத ரீதியான வெறுப்புகளைத் தூண்டும் வகையில் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட நிகழ்நிலைத் தளங்களின் ஊடாக வெளியிடப்படும் கருத்துக்கள் மற்றும் பிரசாரங்களைத் தடுப்பதே இந்தச் சட்டமூலத்தின் நோக்கம் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு ஆகும்.

இருந்தபோதும் அரசாங்கம் தமக்கு எதிராகச் செயற்படக் கூடிய அனைவரையும் ஒடுக்குவதற்காகவும், அரசியல் ரீதியில் தமக்கு எதிரானவர்களைக் கட்டுப்படுத்துவதற்குமே இந்தச் சட்டமூலத்தைக் கொண்டுவந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன.

இந்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டதன் பின்னணியில் அரசியல் நோக்கங்கள் இருக்கின்றனவா இல்லையா என்ற வாதப்பிரதிவாதங்களுக்கு அப்பால், சமூக ஊடகங்களின் செயற்பாடு தொடர்பில் சமூகத்தின் மத்தியில் விமர்சனம் இருப்பதை எவரும் மறுக்க முடியாது.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் முன்னேற்றத்தினால் உலகம் உள்ளங்கையில் சுருங்கியிருக்கும் இன்றைய சூழ்நிலையில் இலங்கையும் இதற்கு விதிவிலக்காக அமையவில்லை. ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்கள் இன்று நம்முடைய வாழ்க்கையை முழுமையாக ஆட்கொண்டுள்ளன.

அண்மையில் ஏற்பட்ட உலகத் தொற்றான கொவிட் தாக்கம் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டின் தேவையை மேலும் அதிகரித்து விட்டது என்றே கூற வேண்டும். குறிப்பாக கல்வித்துறையில் இந்த சாதனங்களின் பயன்பாடு மற்றும் இணையத்தின் தேவை என்பன அத்தியாவசியமாகி விட்டன.

மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் கரங்களிலும் ஸ்மார்ட் தொலைபேசி சாதனங்கள் வந்துவிட்டமையால் அதனால் அவர்கள் பயனடைவது ஒருபுறமிருக்க, அதனைப் பயன்படுத்தி இடம்பெறக் கூடிய துஷ்பிரயோகங்களும் அதிகரித்து விட்டன.

அது மாத்திரமன்றி பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களும் இந்த சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்த முறைப்பாடுகளும் அதிகரித்துள்ளன.

இணையப் பாதுகாப்புக்குரிய நிலையத்தின் தகவல்களுக்கு அமைய 2023 ஆம் ஆண்டில் பதிவான 21 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகளில் சுமார் 5 ஆயிரம் முறைப்பாடுகளைத் தவிர ஏனைய அனைத்து முறைப்பாடுகளும் சமூக ஊடகங்கள் குறித்த முறைப்பாடுகளாக அமைந்துள்ளன.

இணையப் பாதுகாப்பு குறித்த விடயங்களைக் கையாள்வதற்கான ஏற்பாடுகளே குறித்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. எனினும், சமூக ஊடகம் போன்ற தளங்களினால் ஏற்படுகின்ற குற்றங்கள் மற்றும் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கான எந்த சட்ட ஏற்பாடும் குறித்த நிறுவனத்திடம் இல்லை.

அது மாத்திரமன்றி இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி அரசியல் ரீதியாகவும், வேறு காரணங்களுக்காகவும் ஒருவர் மீது சேறுபூசும் செயற்பாடுகளும் அதிகரித்துள்ளன.

கடந்த 2022ஆம் ஆண்டு அரகலய காலப்பகுதியில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தியே பல்வேறு தரப்பினர்கள் ஒன்றுகூடினர். குறிப்பாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு மக்களை ஒன்றுகூடுமாறு அழைப்புக்களும் இந்த நிகழ்நிலைத் தளங்களைப் பயன்படுத்தியே விடுக்கப்பட்டன.

இதனால் சமூக ரீதியாகத் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு நாட்டின் அமைதிக்குப் பங்கம் ஏற்பட்டிருந்தது. இது அரசியல் ரீதியான விடயமாகப் பார்க்கப்பட்டாலும் அனைவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. எனவே, இவ்வாறான நிலைமைகளைக் கட்டுப்படுத்துவதற்கு நிகழ்நிலைக் காப்புச் சட்டத்துக்கான தேவைப்பாடு பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது என்பதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அவ்வாறாயின் இவ்வாறானதொரு சட்டத்தை எதிர்ப்பவர்கள் யார்? கருத்துச் சுதந்திரத்துக்கு இடமளிக்கப்பட வேண்டும் என்றாலும் சமூக ரீதியாக ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் மற்றும் தனிநபர்களுக்கு ஏற்படுத்தப்படக் கூடிய தீங்கிழைப்புக்களைத் தடுப்பதற்கு விரும்பாதவர்களா இதனை எதிர்க்கின்றனர் என்ற கேள்வியும் எழுகின்றது.

சமூக ஊடகங்கள் மற்றும் நிகழ்நிலைத் தளங்களில் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளால் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன என்பதை நன்கு உணர்ந்தவர்களே இதனை எதிர்க்கின்றனர். இருந்தபோதும், அரசாங்கம் கொண்டுவரும் புதிய சட்டமானது கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் வகையில் இருக்கக் கூடாது என்பதும் மற்றுமொரு கருத்தாகும்.

இது விடயத்தில் அரசாங்கம் பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தியதன் அடிப்படையிலேயே இச்சட்டமூலத்தைக் கொண்டுவந்துள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரையும் சந்தித்து கலந்துரையாடியதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அதேநேரம், குறித்த சட்டத்தில் மேலும் திருத்தங்களைக் கொண்டுவர எதிர்பார்த்திருப்பதாகவும், விரைவில் அதனை அமைச்சரவையின் அனுமதியுடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் கூறியிருந்தார். இந்தத் திருத்தங்களின் ஊடாக அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய சிறந்ததொரு சட்டமூலத்தை நடைமுறைப்படுத்தலாம் என்பதே எதிர்பார்ப்பாகும்.

பி.ஹர்ஷன்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division