இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற பரபரப்பான வாக்களிப்பில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனைவிட 47 வாக்குகளை அதிகமாகப் பெற்று பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தலைவராகத் தெரிவாகியுள்ளார்.
தலைவர் பதவிக்கு ஆரம்பத்தில் மும்முனைப் போட்டி நிலவி வந்தது. சிறிதரன், சுமந்திரன் ஆகியோருடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனும் தலைவர் பதவிக்காகக் களமிறங்கியிருந்தார்.
தமிழரசுக் கட்சித் தலைவர் பதவிக்காக மூவர் போட்டியிட்டாலும் சுமந்திரனுக்கும், சிறிதரனுக்கும் இடையிலேயே கடுமையான போட்டி நிலவியது. இரு தரப்பினரும் தமக்கு ஆதரவு வேண்டி கட்சி உறுப்பினர்கள் மத்தியிலும், அதில் தாக்கம் செலுத்தக் கூடிய புலம்பெயர் சமூகத்தின் மத்தியிலும் பிரசாரங்களை முன்னெடுத்திருந்தனர்.
அதேசமயம் இவர்களின் ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் இருவர் மீதும் மாறிமாறி வசைபாடும் வகையிலான பதிவுகளை மேற்கொண்டு வந்தனர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வரலாற்றில் முதல் தடவையாக தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இது கட்சியின் ஜனநாயகத்தைப் பறைசாற்றும் விடயம் எனக் கூறப்பட்டாலும், கட்சியின் ஒற்றுமை மற்றும் பதவிக்கான போட்டி என்பவற்றை வெளிக்காட்டும் ஒன்றாகவே இத்தேர்தல் பார்க்கப்பட்டது.
தலைமைப் பதவிக்குப் போட்டியிட்ட இரு பிரதான வோட்பாளர்கள் பற்றிய பார்வை வெவ்வேறாக இருந்தது.
பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தமிழ்த் தேசியம் பற்றி அதிகம் குரல் கொடுப்பவராகப் பார்க்கப்படுகிறார்.
மறுபுறத்தில் சட்ட நுணுக்கங்கள் மற்றும் சர்வதேச உறவுகள் விடயத்தில் பாண்டித்தியம் பெற்றவராக சுமந்திரன் எம்.பி பார்க்கப்பட்டார். தமிழ் மக்களின் பிரச்சினைகளை உலகறியச் செய்யவும், தென்னிலங்கை மக்களிடம் தமிழர் தரப்பு கருத்துகளை எடுத்துச் செல்வதற்கும் சுமந்திரனின் தலைமைத்துவம் அவசியம் என்ற கருத்துக்கள் தலைமைத்துவத்துக்கான தேர்தல் காலத்தில் முன்வைக்கப்பட்டன.
இந்தத் தலைமைத்துவப் போட்டியின் காரணமாக இலங்கைத் தமிழரசுக் கட்சி பிளவுபடும் ஆபத்து இருப்பதாகவும், தேர்தலின் பின்னர் அக்கட்சி இரண்டாகப் பிரிந்துவிடும் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இது தவிரவும், இலங்கைத் தமிழரசுக் கட்சியானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிகளில் ஒன்று என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும். இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு கூட்டணியாகச் செயற்படுவதில் இந்தக் கட்சி கணிசமான பங்காற்றியிருந்தது.
இருந்தபோதும், கடந்த காலங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுடைய ஒருசில செயற்பாடுகள் அக்கட்சி கூட்டணியின் பங்காளிக் கட்சிகளிலிருந்து சற்று விலகிச் செல்வது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தியிருந்தது. பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் எடுக்கும் ஒரு சில தீர்மானங்களில் தமிழரசுக் கட்சி உடன்படாமல், தானே தனித்து முடிவெடுத்த சந்தர்ப்பங்களும் இருந்தன.
இலங்கையிலுள்ள தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் மாத்திரமன்றி இதற்கு ஆதரவாக வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்து வாழும் சமூகம் மத்தியிலும் தலைமைத்துவப் போட்டி தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தன. ஒரு தரப்பினர் சிறிதரனுக்கு ஆதரவாகவும் மற்றுமொரு தரப்பினர் சுமந்திரனுக்கு ஆதரவாகவும் செயற்பட்டனர்.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்துக்கான தேர்தல் ஜனநாயக ரீதியில் நடைபெற்று புதிய தலைவராக சிறிதரன் எம்.பி தெரிவு செய்யப்பட்டார். இரகசியமாக நடைபெற்ற வாக்கெடுப்பில் சிறிதரனுக்கு ஆதரவாக 184 வாக்குகளும், எம்.ஏ.சுமந்திரனுக்கு ஆதரவாக 137 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. 47 மேலதிக வாக்குகளால் சிறிதரன் தலைவராகத் தெரிவானார்.
குறித்த கட்சியின் வரலாற்றில் போட்டியிட்டுத் தெரிவான தலைவர் என்ற ரீதியிலும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளதாலும் சிறிதரன் எம்.பிக்கு பல்வேறு சவால்கள் எதிர்காலத்தில் காத்திருக்கின்றன.
குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் உள்ளிட்ட ஏனைய தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்து தமிழர்களின் பேரம்பேசும் பலம்மிக்க தமிழ் அரசியல் தரப்பொன்றைக் கட்டியெழுப்ப வேண்டிய பாரிய சுமை அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது என்றுதான் கூறவேண்டியுள்ளது.
தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் கருத்துத் தெரிவித்த சிறிதரன் எம்.பி, தமிழ் மக்களின் தேசிய அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக, 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த தமிழ் தேசியவாத சக்திகளின் அணிதிரட்டலை மீளக்கட்டியெழுப்பவும், அனைவரையும் ஒன்றிணைப்பதற்கும் முழுமையான முயற்சிகளை மேற்கொள்ளப் போவதாக வலியுறுத்தினார்.
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக எத்தகைய விட்டுக்கொடுப்புக்கும் தயாராக இருப்பதாகவும், தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை வென்றெடுக்கும் பயணத்தை நோக்கி அனைவரையும் அரவணைத்து தியாக உணர்வோடு உழைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கூட்டணிக் கட்சிகளுடன் ஜனநாயக ரீதியான உரையாடல்களைத் தொடங்குவதற்கு மற்றைய கட்சித் தலைவர்களைச் சந்தித்து உரையாடவிருப்பதுடன் வடக்கு, கிழக்கில் உள்ள சிவில் சமூகம் மற்றும் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களை ஒன்றிணைத்து அவர்களுடன் வெளிப்படையான ஜனநாயக உரையாடலை உருவாக்கவிருப்பதாகவும் சிறிதரன் எம்.பி தெரிவித்தார்.
“இதற்கும் அப்பால் புலம்பெயர் நாடுகளில் உள்ள அமைப்புகளுடன் உரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும். இத்தகைய ஜனநாயக முன்முயற்சிகள் மூலம், நாம் அனைவரும் ஒரு பொதுவான தளத்தில் கவனம் செலுத்த முடியும். இது கோரிக்கைகளை முன்னெடுப்பதற்கும் பொதுவான அரசியல் கொள்கையை உருவாக்குவதற்கும் வழிவகுக்கும்” எனவும் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிறிதரன் எம்.பி தெரிவித்தார்.
இதற்கும் அப்பால், இலங்கையில் தமிழ் மக்களின் அரசியல் செயற்பாடுகளுக்கும் பல்வேறு அபிவிருத்திகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கும் மற்றுமொரு தரப்பாக புலம்பெயர்ந்து வாழ் தமிழ் சமூகம் விளங்குகிறது. இவ்வாறான பின்னணியில் புலம்பெயர்ந்துவாழ் தமிழர்களின் ஒத்துழைப்பையும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் பெற்றுக் கொள்வது முக்கியம் என்றே தமிழர் தரப்பிலுள்ள புத்திஜீவிகள் அபிப்பிராயம் தெரிவிக்கின்றனர்.
புலம்பெயர்ந்த வாழ் சமூகத்தைப் பொறுத்தவரையில் பல்வேறு நிலைப்பாடுகளின் அடிப்படையில் அவர்கள் பிரிந்து நிற்கின்றனர். அங்குள்ள ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொருவருக்கு ஆதரவைத் தெரிவிக்கும் நிலைமையே காணப்படுகிறது. அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரே சமூகமாகக் கொண்டுவர முடியுமா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும், இலங்கையில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பொதுவான நிலைப்பாடொன்றை ஏற்படுத்தி அதன் அடிப்படையில் புலம்பெயர்ந்துவாழ் தமிழ் சமூகத்தை ஒன்றிணைத்து, அதன் ஒத்துழைப்பையும் பெற வேண்டும் என்பது முக்கியமானதாகின்றது. இது விடயத்தில் சிறிதரன், சுமந்திரன் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயற்படுவதே எதிர்காலத்தில் நன்மையை உருவாக்குவதாக அமையும் என்று தமிழ்ப் புத்திஜீவிகள் கூறுகின்றனர்.
இதுபோன்ற சவால்களுக்கு தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் முகங்கொடுக்க வேண்டியிருக்கும் நிலையில், தலைமைத்துவத்துக்குப் போட்டியிட்டு தோல்வியடைந்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது வாழ்த்துக்களைப் புதிய தலைவருக்குத் தெரிவித்திருப்பதுடன், அவருக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.
‘உட்கட்சி ஜனநாயகத்தை நாட்டுக்கு வெளிப்படுத்தியுள்ளோம். சிறிதரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தலைவராக இருந்த மாவை சேனாதிராஜா அவர்கள் வழிநடத்திச் சென்ற கட்சியின் பொறுப்பு தற்பொழுது சிறிதரன் மீது சுமத்தப்பட்டுள்ளது. இது சந்தோசமான விடயம். இந்தப் பயணத்தில் நாம் ஒன்றாகவே பயணிப்போம். தேர்தல் காலத்திலேயே இதனைத் தெளிவாகச் சொல்லியிருந்தோம். என்னுடைய முழுமையான ஆதரவை தமிழரசுக் கட்சியின் தலைவர் சிறிதரனுக்கு வழங்குவேன்’ என சுமந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
தலைமைத்துவத்துக்குப் போட்டியிட்டிருந்தாலும் ஜனநாயக ரீதியில் வழங்கப்பட்ட தீர்ப்பை ஏற்று தனது பண்பை வெளிப்படுத்தியுள்ளார் சுமந்திரன்.
தலைவர்கள் தமக்கிடையிலான போட்டித் தன்மையை மறந்து ஒன்றிணைந்து செயற்படுவதற்கான நல்லெண்ணத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கும் நிலையில், தலைமைத்துவத்துக்கான போட்டிக் காலத்தில் சமூக ஊடகங்களில் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொண்டிருந்த அவர்களின் ஆதரவாளர்களும் ஜனநாயக முடிவுக்கு மதிப்பளித்து ஒன்றிணைந்து கட்சியைப் பலப்படுத்துவதற்கு இணைந்து செயற்பட வேண்டும் என்பதுதான் தமிழர் தரப்பின் உண்மையான வேண்டுதலாக உள்ளது.
அதேபோல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்து அவர்கள் மத்தியில் காணப்படும் சந்தேகங்களைக் களைந்து கூட்டணியாகச் செயற்படுவதற்கான முயற்சிகளையும் சிறிதரன் எம்.பி மேற்கொள்ள வேண்டும். தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்துக்கான போட்டியின் போது வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் தமிழ்த் தேசியம் குறித்த கட்சியின் உணர்வுகள் குறித்து பல்வேறு ஐயப்பாடுகளை ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியம் என்ற விடயத்தில் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைப்பதற்கு முன்னர் தமிழரசுக் கட்சி தனது கட்சிக்குள் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும். அவ்வாறு கட்சியை வலுப்படுத்திய பின்னரே ஏனைய கட்சிகளையும் ஒன்றிணைந்து பயணமொன்றை முன்னெடுக்க முடியும். எனவே, தமிழரசுக் கட்சியின் தலைவருக்குத் தற்பொழுது சவாலான பொறுப்பொன்றே வழங்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.
இது இவ்விதமிருக்க, தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைத்துவம் தொடர்பில் தென்னிலங்கையும் கவனம் செலுத்தியிருப்பதைப் பார்க்க முடிகிறது. அக்கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பது தொடர்பில் தென்னிலங்கை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தது. இவ்வாறான நிலையில் புதிய தலைவருக்கு தென்னிலங்கைத் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் முன்வைக்கும் விடயங்களை ஒருசில தென்னிலங்கை அரசியல்வாதிகள் இனவாதக் கண்ணோட்டத்தில் பார்க்கும் சந்தர்ப்பங்களைக் கடந்த காலத்தில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. எனவே, தமிழரசுக் கட்சியின் தலைவராக அவர் தெரிவு செய்யப்பட்டிருப்பதால், தமிழரசுக் கட்சி தொடர்பான தென்னிலங்கை அரசியல்வாதிகளின் பார்வையும் அதேபோன்றதாக இருக்குமா என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டியதாகின்றது.
தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இனவாத சிந்தனை கொண்டவர்கள் என்பதே அநேகமான தென்னிலங்கை அரசியல்வாதிகளின் நிலைப்பாடாக உள்ளது. இந்த நிலைப்பாட்டை அவர்கள் தமது தேர்தல் பிரசாரங்களுக்குப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்களும் அதிகம். எனவே, இதுபோன்ற சவால்கள் குறித்தும் தழிழரசுக் கட்சியின் புதிய தலைமை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறான சவால்களுக்குத் தலைவர் என்ற ரீதியில் அவரால் மாத்திரம் முகங்கொடுக்க முடியாது. இதற்கு அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவரினதும் ஒத்துழைப்பும் அவசியம். இந்த ஒத்துழைப்பை தமிழரசுக் கட்சியின் தலைவர் எவ்வாறு பெற்றுக் கொள்ளப் போகின்றார் என்பதிலேயே அக்கட்சியின் எதிர்கால ஒற்றுமை தங்கியுள்ளது.