இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்தின் படி கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு குகதாசன் சண்முகம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மத்திய குழு வின் தீர்மானம் நேற்று பொதுச் சபையின் தீர்மானத்துக்கு விடப்பட்ட போது அவருக்கு 102 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் அவருக்கு 112 பேர் ஆதரவு தெரிவித்தனர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 17ஆவது தேசிய மாநாடு இன்று திருகோணமலையில் ஏற்படாகியிருந்தபோதும் மாநாடு மற்றுமொரு தினத்தில் நடாத்துவதென நேற்று தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, தமிழரசுக் கட்சியின் மாநாடு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா உத்தியோகபூர்வமாக தலைமைப் பொறுப்பை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் ஒப்படைக்கவுள்ளார்.
இதனிடையே கட்சியின் 17ஆவது தேசிய மாநாடு இன்று நடைபெறுவதை முன்னிட்டு மத்திய செயற்குழுவுக்கான தெரிவுகள் நேற்று (27) திருகோணமலை ஜேக்கப் பீச் றிசோட்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பொதுச் செயலாளராக சண்முகம் குகதாசன், சிரேஷ்ட துணைத் தலைவராக சி.வி.கே.சிவஞானம், ஐந்து துணைத் தலைவர்கள், துணைப் பொதுச் செயலாளர் குலநாயகம், இரண்டு இணைப் பொருளாளர்கள், ஆறு துணைச் செயலாளர்கள் மற்றும் 13 மத்திய குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டன. இறுதியில் மாநாட்டுப் பிரேரணைகளும் தீர்மானங்களும் முன்மொழியப்பட்டன.
பொதுச்சபைக் கூட்டத்துக்கு முன்பாக காலையில் மத்திய குழுக் கூட்டம் நடைபெற்ற போதே இந்த தெரிவுகள் இடம்பெற்றன. எனினும் பொதுச் சபைக் கூட்டம் ஆரம்பமானதையடுத்து கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. மத்திய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தெரிவு தொடர்பிலேயே இவ்வாறு குழப்பநிலை ஏற்பட்டது.
பொதுச் செயலாளரை தெரிவுசெய்வதற்காக கட்சியின் பொதுச் சபைக் கூட்டம் நேற்றுக் காலை நடைபெற்ற போதே, திருகோணமலையை சேர்ந்த குகதாசனை அந்தப் பதவிக்கு நியமிக்க பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில், பொதுச் செயலாளர் பதவிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசனின் பெயர் ஏற்கெனவே பரிந்துரைக்கப்பட்டது.
341 பேரை கொண்ட பொதுச் சபையில் நேற்றைய கூட்டத்தில் ஓரிருவரை தவிர, அனைவரும் கலந்துகொண்டுள்ளதாக அறிய முடிகிறது. மத்திய குழு மாநாட்டில் எடுக்கப்பட்டுள்ள முடிவின் பிரகாரம் பொதுச் செயலாளராக குகதாசனின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
சிரேஷ்ட உப தலைவராக சி.வி.கே சிவஞானம், இணை பொருளாளர்களாக ஞா.சிறிநேசன், கனகசபாபதி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. துணைத் தலைவர்களாக கே.வி.தவராசா, சார்ள்ஸ் நிர்மலநாதன், கலையரசன், அரியநேந்திரன், சத்தியலிங்கம் ஆகியோரும் இணை செயலாளர்களாக சாந்தி சிறிஸ்கந்தராஜா, ரஞ்சனி கனகராஜா, சரவணபவன், சாணக்கியன், சிவமோகன் ஆகியோரின் பெயர்களும் முன்மொழியப்பட்டுள்ளன.
கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு இருவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதாலேயே இருதரப்பினருக்கு இடையில் முறுகல் நிலை தோன்றியது. நிலைமையை விளக்கிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், மத்திய சபையின் தீர்மானத்துக்கு பொதுச் சபையில் ஆதரவானவர்களை கை உயர்த்துமாறும் எதிரானவர்களை கை உயர்த்துமாறும் கேட்டுக் கொண்டார். இந்நிலையில் மத்திய குழுவில் பொதுச் செயலாளர் பதவிக்கு குகதாசன் சண்முகம் தெரிவு செய்யப்பட்டமைக்கு ஆதரவாக 112 பேரும் எதிராக 102 பேரும் கை உயர்த்தினர். இதனையடுத்து பொதுச் செயலாளர் பதவிக்கு குகதாசன் சண்முகத்தை நியமிப்பதென முடிவு செய்யப்பட்டது.
மட்டக்களப்பு விசேட நிருபர்