இலங்கையில் தற்பொழுது நிலவிவரும் வானிலை நிலைமைகள் வழமைக்கு மாறான ஒன்றாகவே தோன்றுகின்றது. பிரதேச ரீதியான ஒழுங்கற்ற கடும் மழைவீழ்ச்சிப் போக்குகள் வெள்ளப்பெருக்குகள், வரட்சி நிலைமைகள் என வானிலைத் தோற்றப்பாடு மாறுபட்டுவருவதைக் காணலாம். இதனால் மக்கள் பல்வேறு இடர்களை எதிர்கொண்டுள்ளதுடன் பயிரழிவுகளும், வாழ்க்கைத் தொழிலில் பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளது. அயனப் பகுதியில் உருவாகும் தாழமுக்கங்களின் காரணமாகப் புயல்கள் தோன்றும் போது அவை தென்னாசியப் பகுதிகளில் பாரிய சேதங்களையும், உயிரிழப்புக்களையும் பயிரழிவுகளையும் உருவாக்குகின்றன. இலங்கையில் 1881/-1980 காலத்தில் ஏறக்குறைய 12 சூறாவளிகள் ஏற்பட்டுள்ளன. இக்காலத்தில் ஏற்பட்டுள்ள புயல்களில் 80 வீதம் நவம்பர், – டிசம்பர் மாதங்களிலேயே ஏற்பட்டன. இப்புயல்களுள் 1907, 1922, 1964, 1978 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட புயல்கள் மிக மோசமான பாதிப்பைக் கொண்டிருந்தன. 1978 நவம்பர் 23 ஆம் திகதி ஏற்பட்ட புயலினால் இலங்கையில் 915 பேர் உயிரிழந்தனர். செறிவான கடும் மழைவீழ்ச்சியுடன் கூடிய வெள்ளப்பெருக்கு பல பகுதிகளையும் மோசமாகப் பாதித்தது.
சூறாவளிகள் மூலம் நவம்பரிலும் வடகிழக்கு மென்சூன் பருவமாகிய டிசம்பர் தொடக்கம் பெப்ரவரி வரையுள்ள காலத்திலும் வடக்கு, கிழக்குப் பிரதேசம் மழைவீழ்ச்சியைப் பெற்றுக் கொள்ளாது விட்டால் அப்பிரதேசத்தில் நீர்ப்பற்றாக் குறை ஏற்படும் என ஜோர்ஜ் தம்பையாபிள்ளை (1959) என்பவர் முன்னர் குறிப்பிட்டிருந்தார். தென்மேல் மொன்சூனுடன் ஒப்பிடும் போது வடகீழ் மொன்சூன் காற்றுப் பருவமானது மழைவீழ்ச்சி செறிவு மற்றும் அதன் பொறிமுறை இயக்கத்தைப் பொறுத்த வரை குறைந்தளவான முக்கியத்துவத்தையே இதுவரை காலமும் கொண்டிருந்தது. ஆனால் இன்று பல்வேறு செயன்முறைகளின் காரணமாக குறிப்பாக பல்வேறு தோற்றப்பாடுகளின் இடைத் தாக்கம் காரணமாக இக்குறுகிய பருவகாலம் பல்வேறு சிக்கலான வானிலைத் தோற்றப்பாடுகளைக் கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது.
புவியின் மத்தியகோட்டுப் பகுதியில் வடகீழ் காற்றும், தென்கீழ் காற்றும் ஒன்றாகக் கலக்கும் பகுதியாகக் காணப்படுவது ‘இடை அயன ஒருங்கல் வலயம்’ எனப்படும். இவ்வலயம் தற்போது இலங்கைக்கு மேலாக நகர்ந்து தீவின் தென் பகுதியில் நிலை கொண்டிருக்கின்றது. இலங்கைக்கு மேலாக ஒக்டோபர், – நவம்பர் மாதத்தில் உருவாகும் இவ்வலயம் இரண்டாவது இடை மொன்சூன் பருவமாகக் கருதப்படுகின்றது. இவ் வலயம் தெற்கு நோக்கி நகரும் போது வங்காள விரிகுடாவிற்கு மேலாகக் காணப்படும் அதிக வெப்பத்தின் காரணமாக தாழமுக்கங்கள் உருவாகுவது வழக்கம். கடல் வெப்பநிலை அடிக்கடி உயர்வதனால் தாழமுக்கங்கள் தோற்றம் பெறுகின்றன.
இந்த ஒருங்கல் வலயத்தின் செல்வாக்கினால் நவம்பர் மாதத்தில் இலங்கையின் மலைநாட்டுப் பகுதிகளில் வழக்கமாக மழைவீழ்ச்சி அதிகமாக இடம்பெறுவதுடன் மாலை வேளைகளில் மிகக் குளிரான நிலைமையையும் உருவாக்குகின்றது. வடக்கு, வடமேற்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கும் மேற்பட்ட மழைவீழ்ச்சி இடம் பெறும். வடக்கிலும், கிழக்கிலும் குறிப்பாகக் கரையோரப் பகுதிகளில் இக்காலத்தில் மழைவீழ்ச்சி அதிகமாக இருப்பதனைக் காணமுடிகின்றது. வளிமண்டலத்தின் கீழ்ப்படையில் குழப்பங்கள் ஏற்படுவதுடன் மழையுடன் கூடிய இடி, மின்னல் தாக்கங்களும் காணப்படும்.
இந்தியாவில் எல்நினோவின் ஆதிக்கம் அண்மைக் காலங்களில் 2002/-03, 2004-/05, 2006-/07, 2009-/10, 2014/-16, 2018-/19 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்றிருந்தது. மொன்சூன் காற்றினைப் பலவீனமடையச் செய்து வரண்ட வானிலையை இந்தியாவிற்கு வழங்கும் எல்நினோவின் தாக்கம் 2023 இல் ஆரம்பித்து விட்டதுடன் அது 2024 மார்ச் வரை நீடிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இருப்பினும் 2023 இல் எல்நினோவின் எதிர்க்கணியத் தாக்கம் பெருமளவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தவில்லை. மழைவீழ்ச்சியில் அதன் பற்றாக்குறை 36 வீதமாகவே காணப்பட்டது. இதன் தாக்கம் குறைவாகக் காணப்பட்டதற்கும் கடந்த 2023 செப்டம்பரில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி கிடைத்தமைக்கும் இந்து சமுத்திர ‘இரு முனைவு’ (Indian Ocean Dipole) என்பதன் தாக்கமே காரணமாக இருந்தது. இதே போன்ற ஒரு நிலைமை 1997 இலும் அவதானிக்கப்பட்டது. எல்நினோ வருடமாக 1997 இருந்தாலும் கூட மொன்சூன் வழமையைப் போன்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மத்திய கோட்டுப் பகுதியில் பசுபிக் கடல் மேற்பரப்பு வெப்பநிலை படிப்படியாக உயர்வடைந்துள்ளது. 2023 ஜூலை – செப்டெம்பர் காலத்தில் குறிப்பாக, தென்மேல் மொன்சூன் காலத்தில் எல்நினோ விருத்தியடைவதற்கான நிகழ்தகவின் அதிகரிப்பு 50 வீதமாகக் காணப்பட்டது என இந்திய வளிமண்டலவியல் திணைக்களம் கூறியது.
சமுத்திர மற்றும் வளிமண்டலச் சுற்றோட்டங்களில் இடம்பெற்று வரும் பாரிய நகர்வுகள் தென்னாசியாவில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தலாம். எல்நினோ தென் ஊசலின் மூன்று வருட குளிர் நிலைமையைக் கொண்ட நீண்ட கால லாநினாவின் (La Nina) வின் தாக்கத்தின் பின்னர் பசுபிக்கில் தற்பொழுது வெப்பநிலைமைகள் உருவாகியுள்ளன. எல்நினோவின் வெப்பக் கட்டம் திரும்ப ஏற்பட்டுள்ளது என்பதனை இது எடுத்துக் காட்டுகின்றது.
பசுபிக் சமுத்திரத்தின் மத்திய கோட்டுப் பகுதியில் சமுத்திர வெப்பநிலைகள் நீண்ட கால சராசரிக்கு மேல் 0.50 C அதிகமாக இருக்கும் போதும் மழை, காற்றுகள் குறைவான வலிமை கொண்டதாகக் காணப்படும் போதும் எல்நினோ நிலைமைகள் இடம்பெறுகின்றன.
லாநினா நிகழும் காலத்தில் நீர் வெப்பநிலையானது வழமையான நிலைமைகளுக்கு மாறாக மிகக் குளிராக இருக்கும். இக்காலத்தில் கடலின் அடித்தளத்திலிருந்து குளிர் நீர் சுழற்சிக்குட்பட்டு பொங்கியெழுந்து மேற்பகுதிக்குக் கொண்டு வரப்படுகின்றது. இந்தியாவின் மாரிப் பருவத்தை உருவாக்கும் காற்றுக்களின் சுழற்சி வேகத்தினையும், திசையையும் மாற்றுவதற்கான ஆற்றலை லாநினா கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எல்நினோ மற்றும் லாநினோ என்பது தென் ஊசலியின் இரு பக்கங்களிலும் உள்ள கூறுகளாகும். வருடாந்தரீதியில் மொன்சூனில் ஏற்படும் மாறுதன்மையானது ஏறக்குறைய 30 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்படுவதுடன் பல காரணிகளிலும் அது தங்கியிருப்பதைக் காணலாம்.
எல்நினோ தென் ஊசலியின் தாக்கங்கள் இந்து சமுத்திர இருமுனைவு, அத்திலாந்திக் சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலை மாறுபாடு, வட அத்திலாந்திக்; ஊசலி, பசுபிக்கின் தசாப்தகால ஊசலி போன்றவற்றிலும் மற்றும் குறுங்காலத்தில் ஏற்படும் தூசு முகில்கள் மற்றும் நீர்ப்பாசனப் பாங்குகள் போன்ற உள்ளூர் காரணிகளிலும் தங்கியுள்ளதைக் காணலாம்.
எல்நினோ வானிலைப் பாங்குகளில் படிப்படியான முன்னேற்றம் காரணமாக மொன்சூன் மழை வீழ்ச்சியில் 2023 இல் இருந்து பற்றாக்குறை ஏற்படுமென நிபுணர்கள் எதிர்வு கூறி இருந்தார்கள்.
இதனால் ஏற்படும் காலநிலை மாற்றத்தின் காரணமாக சூழல் தொகுதியில் அழிவு தரும் பாதிப்புகள் ஏற்படலாம். இந்தியாவில் கடந்த 132 வருடங்களுக்கு மேலாகக் காணப்படும் மழைவீழ்ச்சிப் போக்குகளின் அடிப்படையில் பார்க்கும் பொழுது இந்தியாவின் மிக மோசமான வரட்சிகள் எப்பொழுதும் எல்நினோ நிகழ்வுகளுடன் இணைந்திருந்தமை தெளிவாகத் தெரிகின்றது.
1951-/2022 காலத்தில் 15 நிரந்தரமானதும் வலிமையானதுமான எல்நினோ நிகழ்வுகள் ஏற்பட்டன என்பதை வரலாற்று ரீதியான பதிவுகள் எடுத்துக்காட்டுகின்றன. இந்த வருடங்களில் இந்திய மொன்சூன் 8 வருடங்களில் பற்றாக்குறையாகவும், 3 வருடங்கள் மொன்சூன் மழைவீழ்ச்சி வழமைக்கு மாறாகக் குறைவாகவும், இருந்தது 2015 இல் நிகழ்ந்த எல்நினோ நிகழ்வில்
(மிகுதி அடுத்த வாரம்)
கலாநிதி எஸ். அன்ரனி நோர்பேட் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் கொழும்புப் பல்கலைக்கழகம்