Home » இரண்டாம் உலகயுத்தத்தின் பின்னர் ஜேர்மனி போன்ற மோசமான அவலநிலையில் காஸா!

இரண்டாம் உலகயுத்தத்தின் பின்னர் ஜேர்மனி போன்ற மோசமான அவலநிலையில் காஸா!

by Damith Pushpika
January 21, 2024 6:17 am 0 comment

காஸா மீதான யுத்தம் ஆரம்பமாகி நூறு நாட்களும் கடந்து விட்டன. இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அனைத்துவித முயற்சிகளும் ஆரம்பம் முதல் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த வகையில் இப்போர் ஆரம்பிக்கப்பட்டு நூறாவது நாள் நிறைவடைந்ததையொட்டியும், காஸா மீதான யுத்தத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரியும் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் நடத்தப்பட்டுள்ளன. ஐ.நா. செயலாளர் நாயகம் மற்றும் உலகின் பல நாடுகளின் தலைவர்களும் இதே கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக சிலி நாட்டின் ஜனாதிபதி கப்றியல் பொறிக், ‘இரண்டாம் உலக மகாயுத்தத்திற்கு பின்னர் 1945 இல் ஜேர்மன் இருந்தது போன்ற மிக மோசமான நிலையை காஸா அடைந்து விட்டது. எல்லா வீடுகளும் அழிக்கப்பட்டுள்ளன. 15 இலட்சம் மக்களுக்கு உறங்கி எழும்பக்கூட ஒரு இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் உடனடியாக யுத்தம் நிறுத்தப்பட வேண்டும்’ எனக் கேட்டுள்ளார்.

அதேபோன்று சீனா, இலங்கை, சவுதி அரேபியா, கொலம்பியா, துருக்கி உள்ளிட்ட பல நாடுகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

ஆனால் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘சர்வதேச நீதிமன்றமோ வேறு எவருமோ எமது யுத்தத்தை தடுத்து நிறுத்த முடியாது’ என்றுள்ளார். இவரது கூற்று உலகின் அமைதி, சமாதானத்தை விரும்பும் அனைத்துத் தரப்பினரையும் அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்துக்கும் உள்ளாக்கியுள்ளது.

இந்த யுத்தம் காரணமாக காஸாவே உருக்குலைந்து சின்னாபின்னமாகி சாம்பல் மேடாகக் காட்சியளிக்கிறது. கடந்த நூறு நாட்களிலும் காஸா பேரழிவுக்கு உள்ளாகியுள்ள அதேநேரம் இஸ்ரேலிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பில் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, கடந்த நூறு நாட்களில் காஸாவில் 30 ஆயிரம் இலக்குகள் மீது 29 ஆயிரம் குண்டுகள் வீசப்பட்டுள்ளதோடு லெபனானில் 3400 இலக்குகள் மீதும் தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன. இக்காலப்பகுதியில் 11 ஆயிரம் ஏவுகணைகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டுள்ளன. அவற்றில் 9 ஆயிரம் ஏவுகணைகள் ஹமாஸினாலும் 2000 ஹிஸ்புல்லாவினாலும் ஏற்பட்டிருக்கின்றன. இப்போரில் இஸ்ரேல் தரப்பில் 12 ஆயிரத்து 415 பேர் காயமடைந்துள்ளனர். 1300 படையினர் கொல்லப்பட்டுள்ளதோடு, 2496 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 2 இலட்சத்து 49 ஆயிரத்து 263 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று அந்நாட்டு இராணுவம் கூறியுள்ளது.

இஸ்ரேல் மத்திய வங்கியின் மதிப்பீட்டின்படி, இக்காலப்பகுதியில் இந்த யுத்தத்திற்காக 6.6 பில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது.

அதேநேரம் காஸா சுகாதார அமைச்சு உள்ளிட்ட தரப்புக்களது தரவுகளின்படி, கடந்த நூறு நாட்களில் காஸாவில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 10,400 சிறுவர்களும் 7,100 பெண்களும் 337 மருத்துவர்களும் அடங்கியுள்ளனர். 117 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 7100 பேர் இடிபாடுகளுக்குள் சிக்குண்டு காணாமல் போயுள்ளனர். 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களில் 8663 சிறுவர்களும் 6723 பெண்களும் அடங்கியுள்ளனர். மேற்குக் கரையில் 347 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 4000 பேர் காயமடைந்துள்ளனர். 1208 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

23 இலட்சம் சனத்தொகையைக் கொண்ட காஸாவில் இப்போர் சுமார் ஒரு சதவீத மக்களை காவு கொண்டுள்ளது. 19 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 69 ஆயிரத்து 300 வீடுகள் அழிக்கப்பட்டும், 3 இலட்சத்து 59 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துமுள்ளன. 134 அரச கட்டடங்கள், 95 பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் சேதமடைந்துள்ளன. அத்தோடு 195 மரபுரிமை இடங்கள் அழிக்கப்பட்டுள்ளதோடு 145 பள்ளிவாசல்கள், 3 கிறிஸ்தவ தேவாலயங்கள், 121 அம்பியூலன்ஸ் வண்டிகள் என்பனவும் சேதமடைந்துள்ளன.

36 வைத்தியசாலைகளில் 15 வைத்தியசாலைகள் மாத்திரம் பகுதியளவில் இயங்குகின்றன. 5 இலட்சத்து 76 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பசி மற்றும் பட்டினிக்கு முகம்கொடுத்துள்ளனர். 6 இலட்சத்து 25 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை இழந்துள்ளனர். பெருந்தொகையான மக்கள் தொழிலையும் இழந்துள்ளனர். இப்போர் ஏற்படுத்தியுள்ள பொருளாதார இழப்புகள் பிராந்திய மற்றும் உலகளாவிய பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தியுள்ளன.

இதேவேளை காஸா மீதான போரை நிறுத்தக் கோரி லெபனானின் ஹிஸ்புல்லாஹ்களும், யெமனின் ஹுதிக்களும், ஈராக் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இஸ்ரேல் மீது முன்னெடுக்கும் தாக்குதல்கள் ஈரானின் பின்புலத்திலானவை என இஸ்ரேலும் அதன் நேச நாடுகளும் கூறுகின்றன. அக்குற்றச்சாட்டை ஈரான் மறுத்து வருகின்றது.

இந்நிலையில் ஈரான் குடியரசு காவல் படையின் சிரேஷ்ட தளபதி செய்யத் ராஷி முஸவி இஸ்ரேலின் விமானத் தாக்குதலில் டமஸ்கஸ்ஸில் கடந்த டிசம்பர் 25 ஆம் திகதியும், ஹமாஸின் அரசியல் குழு பிரதித்தலைவர் சலாஹ் அல் அரூரி லெபனானின் பெய்ரூட்டில் ஜனவரி 2 இல் ஆளில்லா விமானத் தாக்குதலிலும் கொல்லப்பட்டனர். ஈரானின் ஹெர்மான் நகரில் ஜனவரி 3 இல் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 90 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஈரான் இத்தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று கூறி வந்தது.

இவ்வாறான சூழலில் ஹுதிகளின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் கூட்டணி அமைத்த அமெரிக்கா, கடந்த 12 ஆம் திகதி முதல் பிரித்தானியாவுடன் இணைந்து ஹுதிக்களின் நிலைகள் மீது தாக்குதல்களை நடத்துகின்றது. முதல் நாளன்றே ஹுதிக்கள் தரப்பில் ஐவர் கொல்லப்பட்டு ஏழு பேர் காயமடைந்தனர். அதனால் ஹுதிக்களின் பேச்சாளர், இத்தாக்குதல்களால் இஸ்ரேல் செல்லும் கப்பல்களையும் இஸ்ரேலியருக்கு சொந்தமான கப்பல்களையும் தாக்குவதை ஒருபோதும் நிறுத்த மாட்டோம். காஸா மீதான யுத்தம் நிறுத்தப்படும் வரை தாக்குதல்கள் தொடரும்’ என்றுள்ளார். அதன்படி தாக்குதல்களும் இடம்பெற்ற வண்ணமுள்ளன.

மத்திய கிழக்கில் யுத்த அபாயம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சூழலில் கடந்த 15 ஆம் திகதி அதிகாலையில் ஈராக்கின் எர்பில் நகரிலுள்ள மொஸாட் உளவு நிலையத்தின் மீதும் சிரியாவின் இட்லிப் பிரதேசத்தில் இருந்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் நிலைகள் மீதும் மறுநாள் 16 ஆம் திகதி பாகிஸ்தானின் பலுச்சிஸ்தானில் உள்ள ஜயஸ் அல் அதல் பயங்கரவாதக் குழுவின் நிலைகள் மீதும் தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் கூறியுள்ளது. இத்தாக்குதல்கள் உலகின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ள அதேநேரம் ஈரானுக்கும் ஈராக்குக்கும் இடையிலும் ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலும் இராஜதந்திர முறுகல்கள் தீவிரமடைந்துள்ளன.

இத்தாக்குதலுக்கு எதிராக ஈராக் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் முறைப்பாடு செய்துள்ள அதேநேரம், பாகிஸ்தான் தம் தூதுவரை திருப்பி அழைத்துள்ளது. இந்நிலையில் ஈரான், ஈராக்கினதும், பாகிஸ்தானினதும் இறைமையை மதிப்பதாகக் குறிப்பிட்டுள்ளதோடு தங்கள் பாதுகாப்புக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தலாக இருக்க அனுமதிக்க முடியாது’ என்றுள்ளது.

இவ்வாறு மத்திய கிழக்கில் ஏற்பட்டுவரும் இக்கொந்தளிப்பு நிலைக்கு காஸா மீதான யுத்தம் நீடிப்பதே அடிப்படைக் காரணமாகும். அதனால் மத்திய கிழக்கே யுத்தம் களமாகும் நிலை நாளுக்கு நாள் தீவிரமடைகிறது. அமைதி, சமாதானத்தை விரும்பும் எவரும் காஸா மீது யுத்தம் நீடிப்பதை விரும்பவில்லை. இந்த யுத்தம் நிறுத்தப்பட வேண்டும். மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைய வேண்டும். பணயக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது தான் இஸ்ரேல் உட்பட உலக மக்களின் கோரிக்கையாகவும் வலியுறுத்தலாகவும் உள்ளது.

மர்லின் மரிக்கார்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division