Home » ரஷீதா பாய் வீட்டுக்கு வந்த சம்பந்தம்

ரஷீதா பாய் வீட்டுக்கு வந்த சம்பந்தம்

by Damith Pushpika
January 21, 2024 6:00 am 0 comment

ரஷிதா பாய் தாமதமாகத்தான் விழித்தார்.

பேரன் ஹாரூனின் அழுகைச் சப்தம்தான் களைப்பான ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அவரை எழுப்பி விட்டது. நேற்று நோன்புப் பெருநாள் என்றதனால் நேற்றிரவு குடும்பம் சகிதம் ஈத் மீலன் (பெருநாள் சந்திப்பு) வைபவத்திற்கு சென்றிருந்தார்கள். அங்குதான் ரஷிதா பாய் ராபியாவை சந்தித்தார். ரஷிதா பாயை கண்டதும் ராபியா,

”நாளைக்கோ நாளாண்டைக்கோ உங்க வீட்டு வர வேண்டும் ”.

என்று சொன்னது தொடக்கம் ரஷிதா பாய்க்கு கவலை ஆரம்பித்து விட்டது. பொதுவாக ராபியா ஒரு மேமன் வீட்டு வருவதென்றால் நிச்சயமாக ஏதோவொரு கல்யாண பேச்சை எடுத்து வருவதாய் தான் இருக்கும். விதவையான ராபியா மேமன் சமூக வீட்டு வைபவங்களுக்கு விதமான உணவுகளைத் தயாரிக்கும் வேலையோடு, சந்தர்ப்பம் கிட்டும் பொழுதெலாம் கல்யாண புரோக்கர் வேலையும் செய்து கொள்வாள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அந்த ராபியா தன் வீட்டு வரப்போகிறாள் என்றால் நிச்சயமாகக் கல்யாண வயசில் இருக்கும் தன் மகள் ரோஷன் விஷயமாகத்தான் இருக்கும் என்றே ரஷிதா பாய் தீர்மானம் செய்து கொண்டார். நல்ல விஷயம் என்றாலும், எந்த விதமான கல்யாணப் பேச்சை ராபியா கொண்டு வரப் போகிறாளோ என்ற கேள்விக் குறி கலந்த ஆவலும் யோசனையும் தான் நேற்றிரவு ரஷிதா பாயின் தூக்கத்தை கெடுத்தது.

தன் கணவர் சக்கூர் பாயிடமோ, மகன் பாரூக்கிடமோ, மருமகள் பரீதாவிடமோ ராபியா வரப் போவதைச் சொல்லவில்லை.

ராபியா வரட்டும் பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று தீர்மானித்தவராக, யோசித்தவாறே இருந்தமையால் தாமதமாகத்தான் தூங்கினார்.

குசினியில் பரீதாவும், ரோஷனும் நஸ்டா தயாரிப்பதில் மும்முரமாய் இருப்பது தெரிந்தது. ஆட்டா மாவு ரொட்டியின் மணம் மூக்கை துளைத்தது. மீண்டும் பேரன் ஹாரூனின் அழுகைச் சப்தம் கேட்டது. ரஷிதா பாயும் மகள் ரோஷனும் உறங்கும் அறைக்கு முன்னால் இருந்த சக்கூர் பாயின் படுக்கையறையின் விளக்கு எரிந்து கொண்டிருப்பது தெரிந்தது. வழமையாகச் சக்கூர் பாய் அதிகாலை எழுந்து வீட்டருகே இருந்த பள்ளி வாசலுக்குச் சென்று சுபஹ் தொழுகை தொழுது வந்த கையுடன் படுக்கையறை விளக்கைப் போட்டுக் கொண்டுதான் உறங்குவது வழக்கம். சக்கூர் பாய் புறக்கோட்டை பஜாரில் பல வருடங்களாக ஸ்டேஸ்னரி சாமான்களுக்கான பிரபல தரகராக இருந்தார்.அதனால் காலை 10.00 மணி பிந்திதான் பஜாருக்கு வெளிக்கிடுவார்.

மகன் பாரூக்கின் அறை அவரது அறைக்குப் பக்கத்தில் இருந்ததனால் பேரன் ஹாரூனின் அழுகைச் சப்தம் அவரது தூக்கத்தை கெட்டுத்து விடுமோ என்ற பயத்தில், ஹாரூனை தன்னிடம் கொண்டு வருமாறு வீட்டுப் பெண்களுக்குப் பொதுவாகக் குரல் கொடுத்தார் ரஷிதா பாய்.

பரீதா தன் அறையில் தொட்டிலில் அழுதுக் கொண்டிருந்த ஹாரூனை தூக்கி வந்து ரஷிதா பாயின் கட்டிலில் கிடத்திப் போனாள். ஹாரூன் பசியில் அழுதாலும் யாராவது அவனைத் தூக்கி வைத்துக் கொண்டால் போதும். சாந்தமாகி விடுவான். பாரூக் ஹாலில் செய்திப் பத்திரிகையில் முழ்கி இருந்தான்.

ஹாரூனுக்கான பால் புட்டியுடன் பரீதா அறைக்குள் நுழைந்தாள். மற்ற நாட்கள் என்றால் சுபஹ் தொழுகைக்கு எழுந்துக் கொள்ளும் ரஷிதா பாய் பிறகு உறங்குவதில்லை. ஹாலில் உட்கார்ந்துக் கொண்டு திருகுர்ஆனை ஓதிக் கொண்டிருப்பார். 7.30 – -8.00 மணி அளவில்

”மா நஸ்டா தயாராகி விட்டது எனப் பரீதாவோ, ரோஷனோ குரல் கொடுப்பார்கள். அந்த அழைப்பைக் கேட்டதும் ஹாலில் வழமையாகத் தன் முன் அமர்ந்து பத்திரிகையில் முழ்கி இருக்கும் மகன் பாரூக் நஸ்டா செய்ய எழுந்து செல்வான். ரஷிதா பாயோ சக்கூர் பாய் எழுந்து நஸ்டாவுக்கு உட்காரும் பொழுதான் அவருடன் உட்காருவார். இன்று எழுந்து கொள்ள ஏற்பட்ட தாமதம், தாமதமாகத் தூங்கியதனால் ஏற்பட்ட உடல் களைப்பு அவரைக் கட்டிலை விட்டு நகர விடவில்லை. பாரூக் எழுந்து நஸ்டா செய்யக் குசினிப் பக்கம் போனான். அவன் புறக்கோட்டை பஜாரில் அப்துல் சத்தார் என் கம்பெனி எனும் புடவை கடையில் மனேஜராக வேலை செய்து வந்தான். சரியாக 9.30 க்குக் கடையைத் திறந்து விட வேண்டும். அவன் கையில்தான் அக்கடைக்கான சாவிகள் ஓப்படைக்கபட்டிருந்தன. அதனால் அந்த வீட்டில் அவன்தான் முதலில் நஸ்டா செய்து கொள்வது வழக்கமாக இருந்தது.

பரீதா ஹாரூக்கான பால் புட்டியுடன் ரஷீதா பாய் அறைக்குள் வந்து அவனைத் தூக்கிச் சென்று தொட்டிலில் கிடத்தினாள். `பால் புட்டியை அவனுக்குக் கொடுத்துத் தொட்டிலை ஆட்டி விட்டால் மௌனமாகத் தூங்கி விடுவான். அது பரீதாவுக்கு தன் பணிகளைச் செய்ய வசதியாக அமைந்து விடும்.

ரஷிதா பாய்கோ இன்னும் தூக்க கலக்கம் குறைந்திருக்கவில்லை. தூக்கமும் விழிப்புமான நிலையில் கட்டிலில் புரண்டு கிடந்தார்.

காலை 9.00 மணி தாண்டி இருந்தது.

தூக்கம் கலைந்து ஹாலுக்கு வந்த சக்கூர் பாய் வழமையாக ஹாலில் திருக்குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கும் மனைவியைக் காணாது ஆச்சரியப்பட்டுப் போனார். ”என்ன உங்கட உம்மா இன்னும் எழுந்திருக்கவில்லையா?” எனப் பொதுவாகக் குரல் கொடுத்தவாறே ஹமாமை நோக்கிப் போவதை கண்ட ரஷிதா பாய் எழுந்து குசினிப் பக்கம் போனார்.

வீட்டு ஆண்கள் இருவரையும் பஜாருக்கு அனுப்பி வைத்து அதிகாலையில் எழுந்து ஓத முடியாமல் போன திருக்குர்ஆனை ஓத உட்கார்ந்தார் ரஷிதா பாய். மருகளும் மகளும் சிறிது நேரத்துக்கு ஓய்வு எடுக்க ஹாலில் அமர்ந்திருந்தார்கள். இன்னும் சிறிது நேரத்தில் பகல் உணவு தயாரிக்கும் வேலைகள் ஆரம்பிக்க வேண்டும். ரஷிதா பாயின் வீடு பஜாருக்கு அருகாமையில் இருந்தமையால் சக்கூர் பாயும் பாரூக்கும் பகல் உணவை வீட்டுக்குச் சாப்பிட வந்திடுவார்கள். பாரூக் 12.30-1.00 மணி அளவில் சாப்பிட வருவான். சக்கூர் பாய் ளூஹர் தொழுகையை மேமன் பள்ளிவாசலில் முடித்து 2.00 மணி பிந்திதான் வருவார். அதனால், 1.00 மணிக்கு முன்னதாகப் பகல் உணவைப் பரீதாவும் ரோஷனும் ஆக்கி முடித்து விடுவார்கள்.

திருக்குர்ஆனை சிறிது நேரம் ஓதி முடித்து வழமை போல் இறைச்சியையும் ஓரிரு மரக்கறி வகைகளையும் வாங்கி வர ரஷிதா பாய் தயாரானார்.

இறைச்சிக் கடை முதலாளி வஹீத் நாநா மேமன் பாய்மார்களின் இறைச்சி ரசனை நன்கு அறிவார். 25 வருடங்களுக்கு மேலாக அவர்களுடன் வியாபாரம் பண்ணும் பழக்கதோஷம். ரஷிதா பாய் கடைக்கு வந்திருப்பதை கண்டு வஹீத் நாநா ”பாய்மாவுக்கு தனி இறைச்சியாக ஓரு கிலோ வெட்டு” என இறைச்சிக் கடைப் பையனுக்கு உத்தரவிட்டார்.

இறைச்சிக் கடைப் பையன் இறைச்சியை வெட்டிக் கொண்டிருக்கும்பொழுது, ரஷிதா பாய்க்கு ராபியா நினைவுக்கு வந்தாள்.

நாளைக்கு அல்லது நாளைக்கு மறு நாளோ வருவதாக ராபியா நேற்று சொல்லி இருந்தாலும் திடுப்பென்று வந்து நிற்பவள் அவள். அவளைப் பற்றி ரஷிதா பாய் நன்கு அறிவார். மூன்று வருடங்களுக்கு முன் மகன் பாரூக்குக்கு பரீதாவுடனான கல்யாணப் பேச்சை ராபியாதான் முடித்துவைத்தாள். தான் வீட்டில் இல்லாத வேளை ராபியா வந்து விடக் கூடாது என எண்ணிக் கொண்டார். ராபியா பற்றிய சிந்தனையுடன் இறைச்சியை எடுத்துக் கொண்டு மரக்கறிகள் வாங்க சாகுல் நாநாவின் கடைக்கு வந்து சேர்ந்திருந்தார் அன்றைக்கு தேவையான மரக்கறி வகைகளை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி நடக்கலானர் ரஷிதா பாய். இறைச்சிக் கடையும் மரக்கறி கடையும் ரஷிதா பாய் வீட்டு அருகே இருந்ததனால், அவருக்கு நடப்பதில் சிரமம் இருப்பதில்லை. மற்றப்படி முழு மாதத்திற்கும் தேவையான மளிகைச் சாமன்களை பஜாரில் உள்ள போரா பாய் கடையிலிருந்து மாதக் கடைசியிலோ, அல்லது பிந்தினால் மாதத்தின் ஆரம்பத்திலோ சக்கூர் பாய் வாங்கி வந்திடுவார். அதனால், ரஷிதா பாய்க்கு மார்கெட் ெசல்வதில் பெரும் சுமை என்று இருக்காததனால் நடப்பதில் அவருக்குச் சிரமமாக இருப்பதில்லை. நேற்று மழை பெய்ந்திருந்தாலும், இந்தக் காலை அடிக்கும் வெயிலின் உக்கிரம் அவரைச் சற்று களைப்படையச் செய்தது.

வீட்டு கேட்டைத் திறந்து உள்நுழைந்து மீண்டும் கேட்டை மூட, திரும்பிய ரஷிதா பாய், ராபியா அவர் வீட்டை நோக்கி வருவதைக் கண்டு ‘கேட்’ அருகே தரித்து நின்றார்.

”வா ராபியா” என வரவேற்று அவளை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார் ரஷிதா பாய். இருவரும் ஹாலில் அமர்ந்து கொண்டார்கள்.

ரஷீதா பாய் மார்கெட் சென்று திரும்பும்வரை பகல் உணவு தயாரிப்புக்கான ஆரம்ப வேலைகளில் பரீதாவும் ரோஷனும் மும்முரமாக இருந்தார்கள்.

ரோஷனை அழைத்து வாங்கி வந்த இறைச்சி மற்றும் மரக்கறிகள் அடங்கியப் பொதியைக் கொடுத்தார். அப்பொதியை வாங்க வந்த ரோஷனை புதிதாய் பார்ப்பது போல் ராபியா அவளை ஏற இறங்கப் பார்த்தாள். ரோஷனை ராபியா பார்க்கின்ற பார்வையே ராபியா தன் வீட்டுக்கு வந்த நோக்கம் ரஷிதா பாய்க்கு புரியத் தொடங்கி விட்டது.

மார்கெட் பொதியுடன் குசினிக்குள் நுழைந்து கொண்டிருந்த ரோஷனிடம் பரீதா, ”யார் வந்து இருக்கிறாங்க?” எனக் கேட்பதும், ”ராபியா மாசி” என ரோஷன் சொல்வதும் கேட்டது.

ரஷிதா பாய் ராபியா மாசிக்கு தேனீர் கொண்டு வருமாறு குரல் கொடுத்தார்.

ராபியா இன்று இங்கு வந்த நோக்கம் ரஷிதா பாய்க்கு புரியத் தொடங்கிய பொழுதும், பெண் பிள்ளை பெற்ற தான் இந்த இடத்தில் முந்திக் கொள்வது சரியாகாது என்ற எண்ணத்தில், ஓன்றுமே அறியாதவராக,

”ராபியா என்ன விஷேசம்?” எனப் பொதுவாகக் கேட்டார்.

திடுப்பென்று வீட்டுக்கு வந்து நிற்பது போல், ராபியா கல்யாண பேச்சு விஷயத்திலும் எந்த விதமான பீடிகைகளுமின்றி ஆரம்பித்து விடுவாள்

. ”மகள் ரோஷனுக்கு இப்போ என்ன வயசு” எனக் கேட்டாள்.

ரஷிதா பாய் ரோஷனின் வயதை கூறினார்.

மீண்டும் ஓரு கேள்வி ராபியாவிடமிருந்து;

”நல்ல சம்பந்நம் ஏதாவது பேசி வந்ததா?”

”ஓரு சில சம்பந்தங்கள் வந்தன தான். ஆனால், ரோஷனின் வாப்பாவுக்குதான் ஓன்றும் பிடிக்கவில்லை” என்றார் ரஷிதா பாய்.

பொதுவாக இந்தக் கல்யாணங்கள் பேசி முடிக்கும் பணியில், மேமன் சமூகத்தின் எந்தந்த வீட்டில் திருமண வயதில் ஆண்பிள்ளைகள், பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் போன்ற விபரங்களை ராபியா போன்றவர்கள் அறிந்து வைத்திருப்பார்கள். ராபியா தனது கற்பனையில் பொருத்தம் பார்த்துச் சேர்க்க நினைக்கின்ற ஜோடிக்குரிய பெண் வீட்டாரின் நாடித்துடிப்பை முதலில் அறியப் பார்ப்பாள். பெரும்பாலாகக் கல்யாண வயதில் உள்ள பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் அவர்களைக் கரையேற்றும் எண்ணத்துடன்தான் இருப்பார்கள். மாப்பிள்ளை வீட்டாரை பற்றி ராபியா சொன்னதும் அந்த வீட்டை தெரிந்திருந்தால் தங்களது சம்மதததை தெரிவிப்பார்கள். இல்லையென்றால் ஏதாவது சாட்டுச் சொல்லி மறுத்து விடுவார்கள். அவ்வாறான வேளையில் சில சம்பந்தங்கள் நிறைவேறி விடும். சிலதுகள் இடம் மாறி விடும். ஆனால் வேறுசில மாப்பிள்ளை வீட்டார்கள் ராபியா போன்றவர்களை அழைத்து இன்ன பெண் பிள்ளையுடன் சம்பந்தம் செய்ய வேண்டிய ஆர்வத்தை வெளிப்படுத்தி அதற்கு முயற்சிக்குமாறு தூது அனுப்புவார்கள்.

இன்று ராபியா ரஷிதா பாயின் மகள் ரோஷனுக்கெனக் கொண்டு வந்திருந்த சம்பந்தம் அவ்வாறான ஓன்றாகதான் இருந்தது. மாப்பிள்ளையின் தாயார் ரோஷனை குறிப்பிட்டே ரஷிதா பாய் வீட்டுக்கு ராபியாவை அனுப்பி இருந்தார்.

என்னிடம் நல்லதொரு இடத்திலிருந்து சம்பந்தம் வந்திருக்கு. குறிப்பாக ரோஷனைச் சொல்லியே வந்திருக்கு” என்றாள் ராபியா. ராபியா அப்படிச் சொன்னதும் ரஷிதா பாயின் முகம் சந்தோஷத்தால் மலர்ந்தது.

”யார்” எனக் கேட்டார் ரஷிதா பாய்.

”அமீனா பாயின் மூன்றாவது மகன் வஹீத் தான்” என்றாள் ராபியா.

அமீனா பாயென மொட்டையாக ராபியா சொன்னதும் மேமன் பாய் சமூகத்தில் பல அமீனாக்கள் இருந்த தன் காரணமாக ரஷிதா பாய் கேட்டார் ”எந்த அமீனா?”

ரஷிதா பாய் எந்த அமீனா எனக் கேட்ட போதுதான் ராபியா தன் தவறை உணர்ந்தாள். தான் கொண்டு வந்திருந்த சம்பந்தத்துக்குரிய அமீனா பாய் பற்றிய சரியான அறிமுகத்தைச் செய்வதற்கு சிறந்த குறிப்பு அவள்வசம் இருந்தது.

”அதுதான் உங்கட கூட்டாளி குல்சும் பாயின் சம்பந்தி அமீனா பாய்” என்றாள் ராபியா.

ரஷிதா பாயின் முகம் மாறியது.

தனது நெருங்கிய தோழி குல்சுமின் இரண்டாவது மகள் சயீதா

ராபியா கொண்டு வந்திருக்கும் அமீனா பாயின் இரண்டாவது மகன் சஹீத்துக்கு கொடுத்திருந்தாள். குல்சுமும் ரஷிதா பாயும் நெருங்கிய சிநேகிதிகள் என்பதனால் பரஸ்பரம் அவரவர் வீட்டு சுக தூக்கங்களைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தார்கள். அந்த வகையில் குல்சுமின் மகள் வாழ்க்கைப்பட்டுப் போன வழியில் எந்தவொரு பிரச்சினையும் இருக்கவில்லை என்பதை ரஷிதா பாய் அறிவார் ஆனால் அந்த அமீனா

பாயின் வீட்டோடு ரஷிதா பாய்க்கு சம்பந்தம் வைத்துக் கொள்வதில் பெரும் தடை ஓன்று இருந்தது. அத்தடையை பற்றி ராபியாவிடம் சொல்வதா வேண்டாமா என்ற மனப் போராட்டத்தில் ரஷிதா பாய் ஈடுப்பட்டு கொண்டிருந்த வேளை- ”பொடியன் கை நிறைய சம்பாதிக்கிறான். பஜாரில் சொந்தமாக ஓரு கடை வைத்திருக்கிறான். எந்தவொரு கெட்ட பழக்கமுமில்லை. நல்ல குடும்பம். உங்கட மகன் பாரூக் வேலை செய்கிறானே கடையின் சேட் சத்தார் பாய் அமீனா பாயின் கூடப் பிறந்த நாநாதான்”

என்றவாறு ராபியா தனது பணிக்கான குறிப்புக்களை அடுக்கிக்கொண்டிருந்தாள். ராபியாவை பொறுத்த வரை அவள் முயற்சித்து செய்து முடித்த வைத்த கல்யாணங்கள் பிழை போனது குறைவு. ரஷிதா பாய் அதனை அறிவாள். காரியம் மட்டுமே நடக்க வேண்டும், தனக்கான கமிஷன் மட்டுமே குறியென ராபியா கல்யாண விடத்தில் எந்தவொரு பொழுதும் செயற்பட்டதில்லை. இது வாழ்க்கைப் பிரச்சினை. அதில் விளையாடக் கூடாது என்ற தர்மம் அவளிடமிருந்தது. விதவையான அவளுக்குக் கூடக் கல்யாண வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தார்கள்.

அதன் காரணமாகவும், இப்பொழுது ராபியா கொண்டு வந்திருந்த சம்பந்தமான அமீனா பாயைப் பற்றியும், அவர் இரண்டாவது மகன் வஹீத்தைப் பற்றியும் அறிந்திருந்ததாலும், இந்தச் சம்பந்தத்தில் எந்தவொரு குறையும் இருக்காது என ரஷிதா பாய் உறுதியாக நம்பினாலும், அந்தப் பெரும் தடை நினைவுக்கு வர, இந்தச் சம்பந்தம் நடப்பது சாத்தியமில்லை என்றே பட்டது அவருக்கு. அந்தத் தடையைப் பற்றி ராபியாவிடம் சொல்லவதா? வேண்டாமா? என ரஷிதா குழப்பி போனாலும் இப்பொழுதுக்கு சொல்வதில்லையெனத் தீர்மானித்தார். அந்த அமீனா பாய்க்கு அந்தத் தடையைப் பற்றித் தெரிந்திருக்குமே. அதைப் பற்றி ராபியாவிடம் சொல்லி இருப்பாரா? அல்லது சொல்லாமல் மறைத்து விட்டாரா? அல்லது பல வருடங்களுக்கு முன் நடந்த அந்தச் சம்பவத்தை நினைவு வைத்துக் கொண்டிருக்க தேவை இல்லையென நினைத்தாரா? எனக் கேள்விகளுக்கு மேல் கேள்விகள் எழுந்தன ரஷிதா பாய்க்கு.

இந்தச் சம்பாஷணையின் இடையில் இன்னும் ராபியாவுக்கு தேனீர் வழங்கப்படவில்லையெனத் தெரிந்ததும், குசினிப் பக்கம் மீண்டும் குரல் கொடுத்தார் ரஷிதா பாய்.

ராபியா மாசி ஓரு மேமன் வீட்டுக்கு வருவதற்கான நோக்கத்தை அவருக்கான தேனீர் தயாரித்து கொண்டிருந்த பரீதாவும் அறிவாள். இப்படிதான் தன்னுடைய உம்மா வீட்டுக்கு மூன்று வருடங்களுக்கு ராபியா மாசி வந்ததன் பயன்தான் அவளை இந்த வீட்டுக்கு மருமளாக்கியது. அதனால் ராபியா மாசியின் இந்த வீட்டுக்குக்கான இன்றைய வருகையையும் கல்யாண வயசில் இருக்கும் தன் நாத்தனார் ரோஷனையும் பரீதாவின் மனம் தவிக்க முடியாமல் இணைத்துப் பார்த்துக் கொண்டது.

அந்த எண்ணம் பரீதாவின் மனதில் தோன்றியதன் காரணமாக ராபியா மாசிக்கு தேனீர் கொண்டு வருமாறு ரஷிதா பாய் குரல் கொடுத்தும் ரோஷன் கையில் தேனீர் தட்டைக் கொடுக்காது தானே எடுத்துக் கொண்டு போனாள். அங்கு ரஷிதா பாயும், ராபியா மாசியும் பேசிக் கொண்டிருந்தவை அவள் காதில் விழுந்ததும் ராபியா மாசியின் வருகையிட்டு தான் நினைத்தது சரியாகி விட்டது எனப்பட்டது.

பரீதாவை கண்டதும் ராபியா மாசி அவளது நலத்தை விசாரித்தாள். அவருக்குப் பதில் அளித்து மூத்தவர்கள் இருவர் பேசிக் கொண்டிருக்கையில் தான் அங்கு நிற்பது சரியாகாது என்ற எண்ணத்துடனும், நேரத்துக்குப் பகல் உணவைத் தயாரிக்க வேண்டும் என்ற பரபரப்பில் அங்கிருந்து அகன்றாள்.

ளூஹர் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.

பரீதா வைத்துப் போன தேனீரை அருந்தியபின், மேசையில் கிடந்த வெற்றிலை தட்டை எடுத்து வெற்றிலையைப் போட்டு எழுந்த வாறே,

”நாளைக்கு நான் வரேன். நல்ல முடிவு ஓன்று சொல்லுங்க. எனக்கும் நேரமாச்சி. மார்கெட்ல சாமான் வாங்கிப் போகிற வழியிலதான் உங்கிட்ட வந்தேன்” என்றவாறு வெளிகிட ஆயத்தமானாள்.

ராபியாவின் வீடு மூன்று தெருக்கள் தாண்டி இருந்தன.

”இல்ல ராபியா உனக்குத் தெரியும் இந்த விஷத்திலே அவசரப்பட ஏலாது. ரோஷன்ட வாப்பா, மகன் பாரூக் எல்லாத்தோட கலந்தாலோசிக்க வேண்டும்.

இன்று திங்கட் கிழமைதானே, நீ இப்படி செய்யே வெள்ளிக் கிழமை ஜூம்மாவுக்கு பெறகு வாயேன்” என்றார் ரஷிதா பாய்.

ராபியா ”இன்ஷா அல்லாஹ்” என வெளியேறினாள்.

பக்கத்து தெருவிருந்த பள்ளி வாசலிலிருந்து ளூஹருக்கான அதான் ஒலிக்கத் தொடங்கியது.

நல்லதொரு சம்பந்தம் ரோஷனுக்கு வந்தும், அதில் அப்படியான ஓரு தடை இருக்கிறதே. இனி என்ன செய்வது. இப்படியான ஓரு சம்பந்தம் வந்திருப்பதை வீட்டு ஆண்களுக்குச் சொல்லவதா? வேண்டாமா? அதிலும் அத்தடை உள்ள இந்தச் சம்பந்ததை பற்றிச் சக்கூர் பாயிடம் சொல்வதில் உள்ள மனப்பயம், சங்கடம் என்பவை பற்றி எல்லாம் யோசித்தவாறே ளூஹர்க்கான தொழுகைக்காக வுளூ செய்வதற்காக ஹமாமை நோக்கிப் போனார் ரஷிதா பாய்.

ளூஹர் தொழுகையை முடித்துக் கொண்டிருக்கையில் மகன் பாரூக் பகல் சாப்பிட வந்திருப்பதாக ரஷிதா பாய்க்கு தெரிந்தது. ராபியா மாசி ரோஷனுக்கான ஓரு சம்பந்தத்துடன் வந்திருந்தார் என்பது பரீதாவுக்கு சாடை மாடையாக விளங்கி இருந்தாலும் அதனையிட்டு மாமியாருடன் கதைப்பதற்கு சந்தர்ப்பம் கிட்டவில்லை. அத்தோடு மாமியார் தன்னிடம் அதைப் பற்றிப் பிரஸ்தாபிக்காது விட்டதும் பரீதாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. ரஷிதா பாயின் மனோ நிலையோ வேறு மாதிரியாக இருந்தது. ராபியா கொண்டு வந்திருந்த சம்பந்தத்தை பற்றி வீட்டு ஆண்கள் இருவரிடம் இப்பொழுதுக்கு பேசுவதில்லையென ரஷிதா பாய் தீர்மானித்தார். பாரூக் பகல் சாப்பாட்டை முடித்துக் கொண்டு பஜாருக்கு போக வெளிக்கிட்டு கொண்டிருக்கையில் சக்கூர் பாய் வந்து சேர்ந்தார். அவர் வழமை போல் பகல் சாப்பிட்டு, சிறிது நேரம் ஓய்வாகத் தூங்குவார். வீட்டுப் பெண்கள் பகல் சாப்பாட்டை முடித்து எழுகையில் சக்கூர் பாய் பஜார் போகத் தயாராவார்.

வீட்டு ஆண்கள் இருவரும் பகல் சாப்பாட்டை முடித்துக் கொண்டு போய் விட்டார்கள். வழமையாக ரஷிதா பாய் பகல் சாப்பாட்டுக்கு பின் அஸர் தொழுகை நேரம்வரை சிறிது நேரம் சாய்வார். நேற்றிரவு ராபியாவின் வருகையைப் பற்றிய யோசனையால் தாமதமாகத் தூங்கிய களைப்பு வேறு. ரஷிதா பாய்க்கு தூக்க கலக்கத்தில் கண்கள் சுழன்றன. அஸர் தொழுகை வரை தூங்கலாமென நினைப்பில் சாயத் தொடங்கியவர் மாலை ஆறு மணி அளவில் ”உம்மா எழுப்பவில்லையா” எனப் பரீதா குரல் கொடுத்த பொழுதுதான் கண் விழித்தார். மஃரிப் தொழுகைக்கு முன்னதாக அஸர் தொழுகையை தொழுது முடித்துக் கொள்ளும் அவசரத்தில் எழுந்தார்.

ரஷிதா பாய் அஸர் தொழுகையை தொழுது முடித்து மூஸ்சலாவில் இருந்து தஸ்பீஹ் ஓதிக் கொண்டிருக்கையில் மஃரிப்க்கான அதான் ஓலித்தது. மஃரிப் தொழுகையை பஜாரில் தொழுது முடித்து சக்கூர் பாய் வீடு திரும்பி இருந்தார். பாரூக் வேலையிருந்து வீடு திரும்பி இருந்தான். இனி சக்கூர் பாய் கை கால் அலம்பி கணக்கு வழக்குகள் சிறிது பார்த்து பக்கத்து தெருவில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்று இஷா தொழுகையை முடித்து கொண்டு திரும்பி வருகையில் இரவு சாப்பாட்டு வேளை நெருங்கி விடும். அதற்குள் ரஷிதா பாயும் இஷா தொழுகையை தொழுது முடித்திருப்பார். வழமையாக ரஷிதா பாய் வீட்டில் இரவு சாப்பாட்டை எல்லோரும் சேர்ந்துதான் சாப்பிடுவார்கள். அபூர்வமாக பாரூக்குக்கு கடையில் அதிக வேலை இருக்கும் பட்சத்தில் பகல் சாப்பிட்டுக்கு வரும் பொழுதே இரவு வீடு வர தாமதமாகும் முன் கூட்டியே சொல்லி போய் விடுவான். மற்றபடி எல்லோரும் சேர்ந்துதான் சாப்பிடுவார்கள். இரவு சாப்பிட்டு முடிந்திருந்தது. பாரூக்கும் பரீதாபிவும் அவர்களின் அறையில் இருந்தார்கள். ரோஷன் ரஷிதா பாயின் அறையில் பாரூக்கின் மகன் ஹாரூனுக்கு விளையாட்டு காட்டி கொண்டிருந்தாள்.

இரவு சாப்பாட்டுக்கு பின் ஹாலில் வானொலியை திருகிய படியே சக்கூர் பாய் ஓய்வாக உட்கார்ந்திருந்தார். இதுதான் சரியான தருணம் என எண்ணிய ரஷிதா பாய் அவர் முன் அமர்ந்தார்.

”இண்டைக்கு ராபியா வந்திருந்தா. ரோஷனுக்கு ஒரு கல்யாண பேச்சை கொண்டு வந்திருந்தா” என பேச்சை ஆரம்பித்தார். ரோஷனுக்கு ஓரு கல்யாண பேச்சு வந்திருக்கு என்ற சேதி சக்கூர் பாய்க்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியது. பெரும் சுமை என்று இருந்தது ரோஷனுடைய விஷயம் மட்டும்தான். ”யார்” எனக் கேட்டார். ரஷிதா பாய் முழு விபரத்தை கூறியதும் அவர் முகம் மாறியது.

”ரஷிதா உனக்குத் தெரியும் அந்த அமீனா யாரென்று. அதனால் இந்த சம்பந்தம் நமக்கு சரிப்பட்டு வராது” என உறுதியாகக் கூறினார்.

சக்கூர் பாயின் மனதில் ஓரு போரட்டம் தொடங்கி இருந்தது. ராபியா சம்பந்தம் கொண்டு வந்திருந்த அந்த அமீனா பாயின் சகோதரர் பாரூக்கின் முதலாளி சத்தார் பாய், சக்கூர் பாயின் ஒரே சகோதரி ரோஷன் ஹாராவின் கணவர் அத்ரீம் பாயின் தங்கை ஜெனாவை தலாக் செய்திருந்தார். சத்தார் பாய் மேமன் சமூகத்தில் அந்த நாட்களில் படித்தவர்களில் ஓருவர். நல்ல குணமுள்ளவர்தான். ஆனால் அவர் உம்மாவுக்கு ஓரே ஆண் பிள்ளை என்பதனால் உம்மா பேச்சை தட்ட முடியாதவராக இருந்தார். ஜெனாவுக்கும் அவளது மாமியாருக்கும் நடந்த தகராறு காரணமாக கொஞ்ச நாட்கள் அவள் பிறந்த வீட்டில் இருக்கட்டும். உம்மாவின் கோபம் தணிந்த பிறகு கூட்டிக் கொள்ளலாம் என அவள் பிறந்த வீடான அத்ரீம் பாயின் வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தார். ஆனால், சத்தார் பாயின் உம்மா. ஜெபூபாய் சரியான முரட்டுப் பெண்மணி. அவள் உனக்கு வேண்டாம் எனச் சொல்லி ஜெனாவுக்கு தலாக் கொடுக்கச் செய்து விட்டாள். இது ஜெனாவை ரொம்பவும் பாதித்தது. அந்த காரணமாக அவள் நோயுற்று இரு வருடங்களுள் மவுத்தாகியும் விட்டாள்.

இந்த சம்பவம் நடக்கையில் சக்கூர் பாய்க்கு திருமணம் நடந்திருக்கவில்லை. ரஷிதா பாய் திருமணத்திற்கு முன்னரே அதைப்பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருந்தார். மச்சான் அத்ரீம் பாய்தான் சக்கூர் பாயை வளர்த்தவர். சக்கூர் பாயின் திருமணத்தை கூட முன் நின்று நடத்தியவர். சக்கூர் பாயின் வியாபாரம் மற்றும் தொழிலில் உதவியவர். அதனை விட தன் சகோதரியின் கணவர், இப்படி பட்ட ஓருவரின் சகோதரிக்கு அநீதி நடந்த வீட்டுக்கா? தன் மகளை கொடுப்பது. இவ்வளவுக்கும் சத்தார் பாய் பற்றி நல்ல அப்பிராயம்தான் இருந்தது. சமீபத்தில் தற்செயலாக சத்தார் பாயை சந்தித்த பொழுது தனது உம்மாவின் பேச்சை கேட்டுத்தான் புத்தி கெட்டு போய் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டியதாயிற்று என்றும், அதற்கு தான் மனம் வருந்துவதாகவும், அதற்காக தன்னை மன்னிக்குமாறு அத்ரீம் பாயிடம் சொன்னார்.

பாரூக் ஹாலுக்கு வந்தான். வேலையிருந்து வந்த பாரூக்கிடம் பரீதா சாடை மாடையாக ராபியா மாசி வந்திருந்ததையும் ரோஷனுக்கென ஏதோவொரு கல்யாண பேச்சை கொண்டு வந்திருந்த தாகவும், அதைப்பற்றி தன்னிடம் உம்மா இன்னும் பேசவில்லை என்றும் சொல்லி வைத்திருந்தாள். அது சம்பந்தமாக உம்மாவிடம் கேட்கலாம் என ஹாலுக்கு வந்தவன், உம்மா வாப்பாவுடன் பேசிக் கொண்டிருப்பதை கண்டான். பாரூக் ஹாலுக்கு வரும்பொழுது வாப்பா நமக்குச் சரிப்பட்டு வராது எனச் சொல்லிக்கொண்டிருந்தார்.

”என்ன விஷேசம் உம்மா?” என ரஷிதா பாயை பார்த்துக் கேட்டான். ரஷிதா பாய் விபரத்தைச் சொன்னார். அந்தச் சம்பந்தம் செய்வதில் உள்ள தடையையும் கூறினார்.

பாரூக் வஹீதை அறிவான். முதலாளி சத்தார் பாயின் அக்கா மகன் என்றும் அறிவான். அந்த வகையில் வஹீத்தின் உம்மா அமீனா பாயையும் அறிவான். நல்ல குடும்பம். ஆனால் உம்மா சொன்ன இந்தச் சம்பந்தம் சம்மதமாக உள்ள தடையைப் பற்றிச் சொன்ன விஷயம் அவனுக்குப் புதிய தகவல்களாகவும் இருந்தோடு, அதிர்ச்சியாகவும் இருந்தது.

சக்கூர் பாய் எதைச் சொன்னாலும் அந்த வீட்டில் யாரும் எதிர்த்துப் பேசுவதில்லை. வெட்டு ஒன்று தூண்டு இரண்டாகப் பேசும் இயல்பு கொண்டவர். கல்யாண பேச்சு என முன் வேறு இடங்களிலிருந்து வந்த பொழுதெல்லாம் மற்றவர்களுடன் பேசிக் கலந்தாலோசித்துதான் முடிவுகள் எடுத்திருந்தார். ஆனால் இந்தச் சம்பந்தம் விஷயத்தில் மட்டும் தனது இயல்பான பிடிவாடித்தில் இருந்தார். வேறு ஏதேனும் சந்தர்ப்பங்கள் என்றால், சக்கூர் பாய் இயலாது என அடம் பிடிக்கின்ற விடயங்கள் என்றால் இவர்கள் மாமா அத்ரீம் பாயிடம் சொல்லிச் சாதித்துக் கொள்வார்கள். சக்கூர் பாய் அடங்கிப் போகிற ஓரே ஓரு ஆள் என்றால் அது அவரது மச்சான் மாமா அத்ரீம்தான். ஆனால் இந்தச் சம்பந்தம் செய்வதில் தடையோடு மாமா அத்ரீமே சம்பந்தப்பட்டு இருந்தார்.

இப்பொழுது ரஷிதா பாய்க்கு ஓரு யோசனை தோன்றியது. மதினி ரோஷன் ஹாரா வீட்டுக்குப் போக வேண்டும் என்பதுதான். அவர்களிடம் இந்தச் சம்பந்தம் சம்மதமான ஆலோசனை கேட்பதுதான் அவருக்குச் சரியெனப் பட்டது. சக்கூர் பாயிடம் தன் யோசனையைத் தெரித்தார். அவருக்கும் அந்த யோசனை சரியெனப் பட, ஓரு வண்டியைப் பேசி அத்ரீம் பாய் வீட்டுக்கு இருவரும் புறப்பட்டார்கள். அத்ரீம் பாயின் வீடு சற்றுத் தொலைவில் இருந்தது. இப்படியான நேரங்களில் அங்குப் போவது வழக்கம். அத்ரீம் பாயை இடைக்கிடை பஜாரில் உள்ள கடையில் சக்கூர் பாய் சந்தித்தாலும், அவரது மகன்மார்கள் வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருப்பதனால் ளூஹர் தொழுகையை முடித்த கையோடு அத்ரீம் பாய் வீட்டுக்குப் போய் விடுவார். அதுவும் இந்தச் சம்பந்தம் சம்பதமாகப் பேசும் பொழுதுச் சகோதரி ரோஷன் ஹாராவும் அருகே இருந்தால் நல்லது என அவருக்குப் பட்டது. அதனால் அவர்களின் வீட்டுக்குப் போய்ப் பேசுவதே சரியெனப் பட்டது.,

சக்கூர் பாயும் ரஷிதா பாயும் அத்ரீம் பாய் வீடு போய்ச் சேர்ந்தபொழுது அத்ரீம் பாய் இஷா தொழுகையில் இருந்தார். மதினி ரோஷன் ஹாராதான் அவர்கள் இருவரையும் வரவேற்றார். இப்படி சொல்லிக் கொள்ளாமல் தம்பி சக்கூரும், மதினி ரஷிதாவும் வந்திருப்பது அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதற்கிடையில் அத்ரீம் பாய் இஷா தொழுகைகை முடித்துக் கொண்டு ஹாலுக்கு வந்தார். மதினிமார்கள் இருவரும் வேறு அறைக்குச் சென்று விட்டார்கள். சக்கூர் பாய் மிகுந்த தயக்கத்துடன்தான் விஷயத்தைச் சொன்னார். அதைக் கேட்டதும் அத்ரீம் பாயின் முகம் மலர்ந்தது. இந்த முக மலர்ச்சியினை சக்கூர் பாய் சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை. ”சக்கூர் இப்போ அத பத்தி யோசிப்பது சரியில்லை. அது நடந்து எத்தனையோ வருஷங்கள் ஆகி விட்டது. உனக்குத் தெரியும் சத்தாரும் நம்மோடு நல்ல முறையிலதான் பேசுகிறார். உறவு வைத்திருக்கிறார்.” என்றார் அத்ரீம் பாய்.

”இல்ல ஹாஜி என் மனம் சம்மதிக்க மாட்டேன் என்றுகிறது. நம் ஜெனா வாழ முடியாம போன வீட்டிலே நம் பொம்புள்ள புள்ளைய கொடுப்பதா? என யோசிக்கிறேன்” என்றார் சக்கூர் பாய். இதற்கிடையில் மதினிமார்கள் இருவரும் ஹாலுக்கு வந்தார்கள். மதினி ரோஷன் ஹாராவுக்கு அது சம்பந்தமாக ரஷிதா பாய் சொன்னபொழுது அந்தச் சம்பந்தம் செய்வதில் தப்பு ஓன்றுமில்லை என்றும், வேண்டுமானால் உங்கள் திருப்திக்காக உங்கட நாநா(அத்ரீம் பாய்) கிட்ட ஓரு வார்த்தை கேட்டுக் கொள்ளுமாறும் சொல்லி அழைத்து வந்தார்.

ரஷிதா பாயை கண்டதும் அத்ரீம் பாய்,”பாபி நானும் இதான் சொன்னேன். இப்பொ இதயெலாம் பார்க்க ஏலாது. நம் ரோஷனுக்கு அது நல்ல இடம். பொடியனும் நல்லவன். ஏற்கனவே நமக்குத் தெரிச்ச இரண்டு பொம்புள்ள புள்ளைகள் அமீனா வீட்ல வாழ்க்க பட்டு இருக்காங்க. நா மனசார சொல்லுரேன் அந்தச் சம்பந்தத்தை முடித்துப் போடுங்க” என்றார் அத்ரீம் பாய்.அவர் அப்படி சொன்னதும் ரஷிதா பாயின் முகம் மலர்ந்தது. இனி அந்தச் சம்பந்தத்தை முடிப்பதில் எந்தத் தடையும் இல்லையெனத் தீர்மானித்தார். ஆனால் சக்கூர் பாய் என்ன முடிவுக்கு வந்திருக்கிறார் என்பது ரஷிதா பாய்க்கு கேள்வி குறியாக இருந்தது. கணவர் அப்படிச் சொன்னதும் மதினி ரஷிதாவின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்ததை கண்டு ரோஷன்ஹாராவின் மனம் நிம்மதியானது.

அத்ரீம் பாய் வீட்டை விட்டுச் சக்கார் பாய் புறப்படும்பொழுது இரவு 11.00 மணியை நெருங்கி இருந்தது. சக்கூர் பாய் வேண்டாம் என்று தடுத்தும் கேட்டாமல், அத்ரீம் பாய் தன் மகன் சலீமுக்கு அவர்கள் இருவரையும் காரில் விட்டு வருமாறு பணித்தார். மருமகன் சலீம் இருந்ததனால் ரஷிதா பாயால் காரில் ஓன்றும் பேச முடியவில்லை. மாமாவும் மருமகனும் வீடு போய்ச் சேரும் வரை ஏதோ பொது விஷயங்களைப் பேசிக் கொண்டு வந்தார்கள். வீடு திரும்பிச் சக்கூர் தனது படுக்கை அறைக்குப் போய்க் கொண்டிருந்தவர் ஹாலில் களைப்பாற உட்கார்ந்து இருந்த ரஷிதா பாயை பார்த்து,

”அத்ரீம் மாமா இந்தச் சம்பந்தம் செய்வதில் தனக்கு எந்த விதமான ஆட்சேபணையும் இல்லை என்று சொன்னாலும் ஏனோ என் மனம் அதுக்கு சம்மதிக்க மாட்டேன் என்றுகிறது” எனக் கூறியவாறே தனது அறைக்குள் சென்று விட்டார். என்னடா இது. இந்த மனுஷனை வழிக்குக் கொண்டு வருது பெரிய கஷ்டமாக இருக்கிறதே. என்ற யோசனையில் உறங்கப் போன ரஷிதா பாயின் தூக்கம் அன்று இரவும் கெட்டது.

வழமையாகச் சக்கூர் பாய் பஜாருக்கு போகும் நேரத்தைவிட இன்று சற்று முன்னதாகவே புறப்பட்டார். இன்று வியாபார நிமித்தம் நண்பன் கப்பாரை சந்திக்க வேண்டி அவனது அலுவலகம் போக வேண்டி இருந்தது. கப்பார் மருமகள் பரீதாவின் தாய்மாமன். பரீதா சிறு வயதாக இருக்கும் பொழுதே அவளது வாப்பா கனி பாய் மவுத்தாகி விட்டார். கப்பார் பாய் தான் பரீதாவின் உம்மா வீட்டைப் பராமரித்தவர். சக்கூர் பாய்வுடனான கப்பாரின் நட்பு உறவு கூட, பாரூக்குடனான பரீதாவின் கல்யாணம் நடப்பதற்கான காரணங்களில் ஓன்றாக இருந்தது.

சிறு வயது முதலே சக்கூர் பாய்க்கு கப்பாருடன் நட்பு இருந்தது. வாழ்க்கையில் சக்கூர் பாய்க்கோ கப்பாருக்கோ நெருக்கடிகள் வரும் பொழுதோ பரஸ்பரம் ஓருவருக்கு ஓருவர் ஆறுதலாகவும் உதவியாகவும் இருந்தார்கள். சிறுவயதிலிருந்தே சக்கூர் பாயுடன் நண்பராகக் கப்பார் பாய் இருந்ததனால் சத்தார் பாய்- ஜெனா விவகாரம் கூட அவருக்குத் தெரிந்திருந்தது. சக்கூர் பாய் கப்பாரின் அலுவலகம் வந்தபொழுது கப்பார் பாயும் வந்து சேர்ந்திருந்தார். சக்கூர் பாய் வியாபார விடயத்தைப் பேசுவதற்கு முன்னதாக ரோஷனுக்கு வந்த அமீனா பாய் வீட்டு சம்பந்தத்தை பற்றியும் அதில் உள்ள தடையைப் பற்றியும் அது சம்பந்தமாக மச்சான் அத்ரீம் பாயுடன் பேசி வந்ததை பற்றியும் விலாவாரியாகக் கப்பார் பாயிடம் சொன்னார். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட கப்பார் பாய்,

”பிறகென்ன சக்கூர் அத்ரீம் பாய் தனக்கு ஆட்சேபணை இல்லை என்று சொல்லிட்டார். இந்த விஷயத்தில் அவருடைய நிலைப்பாட்டைப் பற்றித்தான் நமக்குக் கவலையாக இருந்திருக்கும். அவரே ஒகே சொன்னபின் உனக்கு என்ன தயக்கம்?” எனக் கேட்டார். சக்கூர் பாய் மௌனம் சாதித்தார். ”சக்கூர் உனக்கு இன்னொரு விஷயம் சொல்லட்டுமா? ” எனக் கேட்டார் கப்பார் பாய். கப்பார் என்னவோ புதுக்கதை சொல்லப் போகிறாறென்ற எதிர்பார்ப்பில் அவரை ஆழமாக நோக்கினார் சக்கூர் பாய். கப்பார் பாய் தொடந்தார் ”எங்கட பரீதாவுக்கு உன் மகன் பாரூக்கு கேட்டு நீங்கப் பேச்சைப் போட்டபொழுது உன்னுடைய குடும்பத்தைப் பற்றி எனக்கு நல்ல தெரிஞ்சு இருந்ததனால் நாங்க யாரும் பாரூக்கை பற்றி எங்கும் விசாரிக்க இல்ல ஆனா, அந்த நேரத்தில் ஓரு நாள் தற்செயலாகச் சத்தார் பாயிடம் நான் போய் இருந்தபொழுது நான்தான் சத்தார் பாயிடம் சொன்னேன். உங்கட கடையிலே வேலை செய்கிற என்ட கூட்டாளி சக்கூர் பாயின் மகன் பாரூக்கு என்ட மருமக பரீதாவை கேட்டு வந்திருக்காங்க என்று அதற்குச் சத்தார் பாய் என்ன சொன்னார் தெரியுமா?” என நிறுத்தினார் கப்பார் பாய்.

சக்கூர் பாய்க்கு ஆவல் அதிகரித்தது. சத்தார் பாய் என்ன சொல்லி இருப்பார் என்று; கப்பார் பாய் தொடர்ந்தார். சத்தார் பாயை அன்று சொன்னதை அப்படியே சொன்னார். ”கப்பார் பாரூக் நல்ல பையன். பொறுப்பாக வேலை பார்க்கின்றவன். சக்கூர் பாய் மேலே எனக்கு எப்பொழுதும் மதிப்பு உண்டு நல்ல குடும்பம். எதைப்பற்றியும் நீங்க யோசிக்க தேவையில்லை. உங்க மருமகள் பரீதா சக்கூர் பாய் வீட்டுக்கு மருமகளாய் போறதுக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றுதான் என்னிடம் சொன்னார்.” என முடித்தார் கப்பார் பாய்.

கப்பார் சொன்ன சேதி சக்கூர் பாயை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அத்தோடு சத்தார் பாய் மீதான மதிப்பு கூடியது. சத்தார் பாயின் குடும்பத்தைப் பற்றிய பயம் மெல்ல மெல்லமாகக் குறையத் தொடங்கியது.

”எதையும் பற்றி யோசிக்காம அந்தச் சம்பந்தத்திற்கு சரி என்று சொல்”எனக் கப்பார் பாய் அழுத்தமாகச் சொன்னார். இனியும் தான் மனத் தடுமாற்றம் கொள்ள தேவையில்லையெனச் சக்கூர் பாய்க்கு பட்டது. எல்லோரும் அந்தச் சம்பந்தத்தை முடிக்கத் தைரியம் கொடுக்கிறார்கள். மச்சான் அத்ரீம் பாய் உட்பட்ட, கப்பார் வேறு இன்னும் அதிகமாகவே தைரியம் கொடுத்து விட்டான். ஓரு முடிவுக்கு வந்தவராக, வியாபாரம் சம்பந்தமான வேலைகளை முடித்துக் கொண்டு ளூஹர் தொழுகையை முடித்துப் பகல் சாப்பட்டுக்கு வீட்டுக்குப் புறப்பட்டார்.

பகல் சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போன சக்கூர் பாய் வழமைக்கு மாறாக, ரஷிதா பாயை தன் அறைக்கு அழைத்தார். அந்தச் சம்பந்தம் சம்மந்தமாகதான் ஏதோ பேசக் கூப்பிடுகிறார் என்பது ரஷிதா பாய்க்கு உறுதியானாலும், என்ன பேசப் போகிறாரோ என்ற கவலை தோய்ந்த கேள்வியுடன் சக்கூர் பாயின் அறையில் நுழைந்தார் ரஷிதா பாய். சக்கூர் பாய் சொன்னார் ”ரஷிதா ராபியாவிடம் சொல்லி அவங்கள வரச்சொல்லு” என்றார். சக்கூர் பாயிடம் திடீரென்று ஏற்பட்ட மாற்றத்திற்கான காரணத்தைக் கண்டு பிடிக்க முடியதவராக ஆச்சரியத்தில் முழ்கிப் போய்ச் சக்கூர் பாயை பார்த்துக் கொண்டு நின்றார் ரஷிதா பாய்.

மேமன்கவி

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division