ஜனாதிபதித் தேர்தலுக்கான தினம் நெருங்கி வரும் நிலையில், மும்முனைப் போட்டியொன்றை எதிர்கொள்ள அரசியல்களம் தயாராகி வருகின்றது. எதிர்வரும் ஒக்டோபர் வரை தேர்தலுக்கான காலம் இருப்பதால் நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்களும் உள்ளன.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஏற்கனவே தம்மை ஜனாதிபதி வேட்பாளர்களாக அறிவித்துள்ளனர். மறுபக்கத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் தேர்தலில் போட்டியிடுவதற்கான அறிகுறிகள் கடந்த வாரத்தில் அரசியல் களத்தில் வெளிப்பட்டன.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்னும் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடாத போதும், அவர் பிரதிநிதித்துவம் செய்யும் ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழு கூடி இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடியிருந்தது. இக்கூட்டத்தின் முடிவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டதுடன், இந்தத் தீர்மானம் கோரிக்கையாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஆசீர்வாதம் இன்றி, ஐ.தே.க அத்தகைய கோரிக்கையை முன்வைப்பது சாத்தியமில்லை. எவ்வாறாயினும், ஜனாதிபதி இன்னும் தன்னை வேட்பாளராக அறிவிக்காததன் மூலம் களத்தில் இறங்கக் கூடிய போட்டியாளர்கள் சற்றுச் சிந்திப்பதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்திருந்தாலும், அது ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்திலா என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. மாறாக, அவர் பொதுவேட்பாளராகத் தன்னை முன்னிலைப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்றே கூற வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மாத்திரமே இருக்கும் நிலையில், தனக்கு ஆதரவானவர்களை ஒன்றிணைப்பதற்கான முயற்சிகளை ஐக்கிய தேசியக் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை ஜனாதிபதிக்கு ஆதரவாக இணைத்துக் கொள்வதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இது மாத்திரமன்றி, ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை ஜனாதிபதிக்கு ஆதரவாக இணைத்துக் கொள்வதற்கான திரைமறைவு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் நிமல் லான்சா தலைமையிலான கூட்டணியொன்றும் உருவாகியுள்ளது.
அதேபோல, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் தனக்கு ஆதரவானவர்களை இணைத்து வருகின்றார். சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரான ஷான் விஜயலால் உள்ளிட்டவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளனர். கடந்த பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுனவின் சார்பில் தெரிவுசெய்யப்பட்டு தற்பொழுது எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ள வியத்மக உறுப்பினர்கள் சிலர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
ஜீ.எல்.பீரிஸ், டிலான் பெரேரா, நாலக கொடஹேவா போன்ற உறுப்பினர்கள் இதில் உள்ளடங்குகின்றனர்.
மறுபக்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களைப் பொறுத்தவரையில் அவர்களின் தாய்வீடாக ஐக்கிய தேசியக் கட்சியே காணப்படுகிறது. எனவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்தத் தாய்க்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், அவருடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சில ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இருப்பதே இந்த குழப்பத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இருந்தபோதும், ஜனாதிபதியுடன் இணைந்து பயணிப்பதில் கட்சியின் தலைமைத்துவம் தயங்குவதால் உறுப்பினர்களுக்கும் கட்சித் தலைமைக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் தோன்றியிருப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பரந்த கூட்டணியொன்றை அமைக்கும் முயற்சிகளுக்கான முனைப்புக்களும் எடுக்கப்பட்டுள்ளன. இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சிகளும் இருக்கின்றபோதும் இவ்வாறான கூட்டணி பற்றிய இறுதி முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இன்னமும் பேச்சுவார்த்தை மட்டத்தில் இருப்பதையே காணமுடிகிறது.
ஜனாதிபதிக்கு ஆதரவாகப் பாரிய கூட்டணி அமைக்கும் பணிகளும், எதிர்க்கட்சித் தலைவருடன் இணைந்து மற்றுமொரு கூட்டணிக்கான முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன. இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில், தற்போதைய அரசாங்கத்தில் பிரதான வகிபாகத்தைக் கொண்டுள்ள பொதுஜன பெரமுன இன்னமும் தனது நிலைப்பாட்டை உறுதிபட அறிவிக்கவில்லை என்பதாகும்.
அக்கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தெரிவாகியுள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தமது கட்சியில் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் இருக்கின்றார்கள் என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டு வருகிறது. தருணம் வரும்போது வேட்பாளர் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என பொதுஜன பெரமுனவினர் கூறி வருகின்றனர்.
கடந்த கால கசப்பான அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு பொதுஜன பெரமுன கட்சி தனித்துப் போட்டியிடும் பட்சத்தில் அவர்களுக்கான மக்கள் ஆதரவு எந்தளவுக்கு இருக்கப் போகின்றது என்பது கேள்விக்கூறியேயாகும். எனவே, அவர்கள் பரந்த கூட்டணியொன்றின் ஊடாகச் செல்லும்போது மக்களின் ஆதரவை ஓரளவுக்குப் பெற்றுக் கொள்ள முடியும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது இவ்விதமிருக்க, மக்களின் ஆதரவு தமக்கே அதிகம் இருப்பதாக தேசிய மக்கள் சக்தி நினைத்துக் களமாடி வருகிறது. ஜனாதிபதித் தேர்தலில் அக்கட்சியின் சார்பில் அநுரகுமார திசாநாயக்க களம் இறங்குவார் என அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இக்கட்சி பல மாதங்களாக பிரசாரங்களை அடிமட்டத்தில் முன்னெடுக்கத் தொடங்கியுள்ளது. இவர்களைப் பொறுத்த வரையில் எவ்வித கூட்டணியும் அமைக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அனைத்துத் தரப்பினரையும் விமர்சித்துவரும் இக்கட்சியினரால் கூட்டணி அமைக்க முடியாது. இவ்வாறான பின்னணியில் தனித்துப் போட்டியிட்டு அவர்கள் எவ்வாறு வெற்றிபெறப் போகின்றனர் என்பது கேள்விக்குறியே. கடந்த தேர்தல்களிலும் இவர்களுக்கு ஆதரவாக மக்கள் அலை இருப்பதாக ஊடகங்களில் எதிர்வுகூறல்கள் முன்வைக்கப்பட்டபோதும், தேர்தல் முடிவுகள் முற்றிலும் மாறுபட்டவையாகவே இருந்தன. எனவே, இம்முறை தேர்தலும் அவர்களுக்கு அவ்வாறானதொரு அனுபவத்தை வழங்குமா அல்லது மாற்று அனுபவத்தை வழங்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இந்த அடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது நடைபெறக்கூடிய ஜனாதிபதித் தேர்தலானது நிச்சயம் மும்முனைப்போட்டிக்கான களமாகவே அமையும். இருந்தபோதும் தேர்தலுக்கு இன்னமும் காலம் இருப்பதால் அரசியல் நிலைமைகள் மாறுவதற்கான சாத்தியங்களும் அதிகமாகவே இருக்கின்றன.
பி.ஹர்ஷன்