நாட்டிலுள்ள மக்களின் வீட்டுப் பிரச்சினையை தீர்க்கும் நோக்கில் 12 வீதம் குறைந்த வட்டியில் வீடுகளை வழங்கும் (செமட்ட நிவஹன) ‘அனைவருக்கும் வீடு’ என்ற பெயரிலான வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் ரஜீவ்சூரியஆராச்சி தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டுக்கு பின்னர் வீட்டுக் கடனுக்கான வட்டி வீதங்கள் வேகமாக அதிகரித்தன. அந்த வட்டி வீதங்கள் 20 வீதத்தையும் தாண்டின. ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 15,000 பேருக்கு வீட்டுக்கடன் வழங்கப்படும்.
‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஒரு தேர்தல் தொகுதியில் 100 விண்ணப்பதாரர்கள் வீட்டை புதுப்பிப்பதற்கு அல்லது புதிய வீடொன்றை கட்டுவதற்கு 10 இலட்சம் ரூபாவரை கடன் பெறலாம் என்றும் தலைவர் தெரிவித்தார்.
ஆனால் 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிக கடன் தொகையைக் கூட விசேட அனுமதிகளுக்கு உட்பட்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். வீட்டுக்கடன் திட்டத்தின் கீழ் குறைந்த வட்டியில் கடன் வழங்குவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 2 மாதங்களுக்குள் வீட்டுக்கடன்கள் வழங்க முடியும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட அலுவலகங்கள் ஊடாக விண்ணப்பதாரர்களுக்கு வீட்டுக்கடன் வழங்கப்படுவதால், விரைவாக கடன் வசதிகளை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார். வீடமைப்பு அபிவிருத்திக்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு 7,650 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.