Home » சீசன் டிக்கட்டால் பயன்பெறும் மாணவர்கள்

சீசன் டிக்கட்டால் பயன்பெறும் மாணவர்கள்

by Damith Pushpika
January 21, 2024 6:29 am 0 comment

பாடசாலை மாணவர்கள் மாத்திரமின்றி நாட்டின் சிறுவர்களுக்கான கல்வி மற்றும் நலத்திட்டங்களுக்கு அரசு காட்டும் அர்ப்பணிப்பு கொஞ்ச நஞ்சமல்ல. ஆண்டுதோறும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் கல்விக்கு ஒதுக்கப்படும் தொகை, ஏனைய ஒதுக்கீடுகளை விடவும் குறைவானதல்ல. ஒதுக்கீடு குறைவானதாக இருக்குமாயின் அது சுகாதாரத் துறைக்கு மாத்திரமேயாகும். இது இன்னும் பலருக்கு தெரியாது. நாட்டின் கல்வி மேம்பாட்டுக்காக அரசு வழங்கும் மற்றுமொரு சிறந்த சேவைகளில் ஒன்று பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சீசன் டிக்கெட் மற்றும் மாணவர்களுக்கான சிசு செரிய பஸ் சேவைகளாகும்.

பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளின் மாணவர்களுக்கும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் மற்றொரு பாரிய நிவாரணமாக 2023ஆம் ஆண்டில் அரசாங்கம் பாரிய சுமையைத் தாங்கிக் கொண்டு சலுகை அடிப்படையின் கீழ் சுமார் 21,775 மில்லியன் ரூபா பெறுமதியான சீசன் டிக்கட்டுக்களை வழங்கியது, எவ்வித இலாப நோக்கங்களுமின்றியாகும். இதற்காக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மீது எவ்வித சுமையையும் சுமத்தாமல் மாணவர்களிடமிருந்து சீசன் டிக்ெகட்டுகளுக்காக அறவிடப்படும் மொத்தப் பெறுமதி 1,638 மில்லியன் ரூபாவாகும். அதாவது சீசன் டிக்கெட்டுக்கு ஒரு மாணவரிடமிருந்து 7% என்ற மிகக் குறைந்த தொகையே வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சுமை, அதாவது 93% அரச செலவாகும். பல்கலைக்கழக மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கும் இதேபோன்ற சேவைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்களிடமிருந்து சீசன் டிக்கட்டுக்களுக்காக 21% கட்டணத்தைப் பெற்று மீதி 79% தொகையை அரசு வழங்குகின்றது.

அரசாங்கத்தின் இந்த திட்டத்தின் கீழ் 2022ஆம் ஆண்டை விட 2023ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கும் பல்கலைக்கழக மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கும் வழங்கப்பட்ட சீசன் டிக்கட்டுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கான உதாரணமாக, 2022ஆம் ஆண்டில், பாடசாலை மாணவர்களுக்காக 285,000 மாதாந்த சீசன் டிக்கட்டுகள் வழங்கப்பட்டிருந்த போதும், 2023ஆம் ஆண்டில் இதன் மாத சராசரி எண்ணிக்ைக 40,000 ஆகும். அது மிகப்பெரியதொரு அதிகரிப்பாகும். அதேபோன்று 2022ஆம் ஆண்டில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கு 6,690 சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டாலும், 2023ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 15,260 வரை இருமடங்காக அதிகரித்துள்ளது. மற்றும் 2022ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு 6,052 சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், 2023ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 8,190 ஆக அதிகரித்துள்ளது.

2022ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 2023ஆம் ஆண்டில் சீசன் டிக்கட் விநியோக சதவீதம் 46% ஆக அதிகரித்துள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த கால பொருளாதார நெருக்கடி, மற்றும் தனியார் போக்குவரத்துக் கட்டணங்களின் அதீத அதிகரிப்பின் போது பல பெற்றோர் கட்டணத்தைச் செலுத்துவதில் நெருக்கடிகளை எதிர்கொண்டதோடு, அதற்குப் பரிகாரமாக தமது பிள்ளைகளை இலங்கை போக்குவரத்துச் சபைகளின் பஸ்களில் அனுப்புவதற்கு ஆரம்பித்திருப்பதே இந்த அதிகரிப்பிற்கு காரணம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இங்கு மாணவர்களின் கைகளில் சீசன் அட்டைகளை வழங்குவதில் பெற்றோருக்கு பெரும் நிவாரணம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

சீசன் டிக்கெட் வழங்கும் நடைமுறைகளின் பிரகரம், ஒவ்வொரு மாதத்திலும் அல்லது மாதத்திற்கும் குறைந்த நாட்களினுள் மற்றும் பாடசாலைகள் இடம்பெறும் குறைந்த நாட்களைக் கொண்ட மாதங்களிலும் மாணவர்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நோக்கிலேயே சீசன் டிக்கட்டுக்கள் வழங்கப்படுகின்றன. சீசன் டிக்கட்டுக்கள் வழங்கும்போது, ​​வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களைக் கழித்தே சீசன் டிக்கட்டுகளை வழங்க வேண்டியிருந்தாலும், தற்போதைய கல்வி நிலையை கருத்திற் கொண்டு மாதத்தின் ஒவ்வொரு நாளும் பயணம் செய்யும் வகையில் சீசன் டிக்கெட் வழங்கப்படுகிறது.

என்றாலும் கல்வி அமைச்சினால் வழங்கப்படும் பாடசாலை விடுமுறை மாதங்களில் திறைசேரியிடம் அதற்கான சட்ட ஏற்பாடுகள் எதுவும் இல்லாத காரணத்தினால் சீசன் டிக்கட்டுகள் வழங்கப்படுவதில்லை. பாடசாலை விடுமுறைக் காலங்களினுள் சிசு செரிய பஸ் சேவை செயற்படாத போதிலும் பரீட்சை இடம்பெறும் காலங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகையாக சிசு செரிய பஸ் சேவைகள் இடம்பெறுகின்றன.

இவ்வாறு, மாதாந்த சீசன் டிக்கட்டுகள் நாட்டின் எதிர்காலத்திற்கான முதலீடாகவும், பெற்றோர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சிரமங்களுக்கு தீர்வாகவும் வழங்கப்படுகின்றன.

எனவே, சீசன் டிக்கட்டுகளை வழங்குவதில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவதற்காக தேசிய வரவு செலவுத் திட்டத்தில் வருடாந்தம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. பாடசாலை மாணவர்களுக்கு சீசன் டிக்கட்டுக்களை வழங்கும் போது இல்லாமல் போகும் நிதி மாதந்தோறும் தயாரிக்கப்படும் சீசன் டிக்கட் விற்பனை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு திறைசேரியினால் வழங்கப்படுகின்றது. என்றாலும் சில வருடங்களில் மொத்த ஒதுக்கீட்டுத் தொகை கிடைத்தாலும் சில வருடங்களில் மொத்தத் தொகையும் கிடைக்காமல் இருப்பதுதான் பிரச்சனையான விடயமாகும்.

“பாடசாலை மாணவர்களுக்கு சீசன் டிக்கட் வழங்கும் திட்டம் 1970 களின் முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப கட்டத்தில், மாணவர்களிடமிருந்து இதற்காக டிக்கட்டில் 15% கட்டணமாக வசூலிக்கப்பட்டது. மீதி 85% யினை அரசு செலுத்தியது. பின்னர், இந்த தொகை 10% ஆகக் குறைவடைந்தது. தற்போது பாடசாலை மாணவர்களிடமிருந்து 7% மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மீதி 93% அரசு மானியமாக வழங்கப்படுவதோடு, இந்த தொகை வருடாந்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்படுகிறது. தொழில்நுட்ப மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு டிக்கட்டில் 21% வசூலிக்கப்படுகிறது. இதில் 79 சதவீதம் அரசாங்கத்தினால் வழங்கப்படுகிறது. ஆரம்ப காலங்களில் திறைசேரியினால் நாம் இழக்கும் இந்தத் தொகை முறையாக வழங்கப்பட்டது. ஆனால் சில சமயங்களில் இந்தத் தொகை முறையாக வழங்கப்படுவதில்லை. இதன் காரணமாக ஊழியர்களின் சம்பளம், மேலதிக நேர கொடுப்பனவுகள் போன்றவற்றை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. 2022ஆம் ஆண்டில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 7,688 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டது. 2023ஆம் ஆண்டில் 12,136 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டது. எங்கள் சேவைகளுக்கு ஏற்ற நிதி, திறைசேரியிலிருந்து கிடைக்கவில்லை. அதேபோன்று, கடந்த வருடம் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், சீசன் டிக்கட் விற்பனை 46% அதிகரித்தது. எமக்கு கிடைக்காமல் போகும் வருமானத்தில் பாதியாவது திறைசேரியிருந்து கிடைக்குமாயின் அது பெரும் நிம்மதியாகும். இல்லையெனில் சீசன் டிக்கட் கட்டணத்தை உயர்த்த வேண்டும்” என்றார் இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் லலித் அல்விஸ்.

பாடசாலை மாணவர்களுக்காக தற்போது வெற்றிகரமாக செயற்படுத்தப்படும் சிசு செரிய வேலைத்திட்டம் மாணவர்களுக்காகச் செயற்படுத்தப்படும் மற்றொரு திட்டமாகும். 2005ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட சிசு செரிய வேலைத்திட்டமானது இ.போ. சபை மற்றும் பதிவு செய்யப்பட்ட தனியார் பஸ் சேவை வழங்குநர்களின் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்படும் நடுத்தர, நம்பிக்கை மற்றும் சலுகையான பஸ் சேவையாகும். தற்போது இத்திட்டத்தின் கீழ் 790 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கல்வி அமைச்சு, போக்குவரத்து அமைச்சு, பொலிஸ் திணைக்களம், இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு போன்றவற்றின் ஒன்றிணைந்த முயற்சியாக ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தின் நோக்கம் குறிப்பாக பாடசாலைச் சீருடை அணிந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சலுகை ரீதியான மற்றும் உடல், மன துன்புறுத்தல்களுக்கு உட்படாமல் பாடசாலைகளுக்கும், பாடசாலைகளிலிருந்து வீடுகளுக்கும் பயணிக்கக்கூடிய விசேட பஸ் சேவையினை வழங்குவதாகும்.

இந்த பஸ் சேவையினை முன்னெடுத்துச் செல்லும் போது மற்றும் பயணத்தின் போது கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த சேவை பாடசாலைக்கு மற்றும் பாடசாலையிலிருந்து உரிய நேரத்திற்குப் பயணிப்பதற்கான சேவையினை வழங்குகின்றது. இந்த பஸ்கள் பாடசாலை ஆரம்பிப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் பாடசாலையை அடைவதோடு, மாணவர்களை ஏற்றிச் செல்வதற்கு பாடசாலை விடப்படும் நேரத்திற்கு முன்னரே பாடசாலைக்கு அருகில் செல்கின்றது. கல்வி என்பது ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் இருக்கும் உரிமையாகும். குறைந்த விலை போக்குவரத்து வசதிகளை உறுதி செய்வதற்காக சிசு செரிய சேவையில் சலுகைக் கட்டணம் அறவிடுவதன் மூலம் தமது பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு பெற்றோர்களை ஊக்குவிப்பதோடு, குடும்பங்களுக்கு பொருளாதார நிவாரணங்களையும் வழங்குகின்றது.

சுபாஷினி ஜயரத்ன தமிழில் - எம். எஸ். முஸப்பிர்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division