Home » இந்தியாவிலிருந்து முதற் தடவையாக இலங்கைக்கு கிடைத்த 1600 கோடி ரூபா பெறுமதியான 20 புகையிரத என்ஜின்கள்

இந்தியாவிலிருந்து முதற் தடவையாக இலங்கைக்கு கிடைத்த 1600 கோடி ரூபா பெறுமதியான 20 புகையிரத என்ஜின்கள்

by Damith Pushpika
January 21, 2024 6:12 am 0 comment

புகையிரதப் பயணம் ஏனைய போக்குவரத்து முறைகளிலிருந்து வேறுபடுவது அதற்கேயுரிய பாதையில் பயணிப்பதனாலாகும், பயணப் பாதை அங்குமிங்கும் வேறுபடாமல் பயணிக்க வேண்டியிருக்கும். விமானங்கள் தவிர உலகின் அனைத்து போக்குவரத்து முறைகளையும் தாண்டிச் சென்று புகையிரம் முதலிடத்தைப் பெற்றிருப்பது அதன் அதிக வேகம் மற்றும் இலகுவான சொகுசான பயணத்தினாலாகும்.

குறிப்பாக ஜப்பானின் MLX01, Maglev புகையிரங்கள் தற்போது தரைவழி புகையிரதப் பாதையில் கடும் வேகமாகப் பயணிப்பதோடு, அது மணிக்கு 581 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கின்றது. பஸ் வண்டிகள் அல்லது ஏனைய தரைவழி வாகனங்களினால் இவ்வாறான வேகத்தில் பயணிப்பதை நினைத்தும் கூடப் பார்க்க முடியாது. ஒரு போதும் அங்குமிங்கும் மாறாமல் பயணிக்கக் கூடிய பாதையில் இவ்வாறு கடும் வேகத்தில் பயணிக்க வேண்டுமாயின் அந்தப் பாதையும், புகையிரதமும் உயர் தரத்தில் இருக்க வேண்டும். சில வேளை தசம கணக்கிலாவது பயணப்பாதை வேறுபடுமாயின் அதனால் ஏற்படும் அழிவுகளை கணக்கிட முடியாது.

எமது அயல் நாடான இந்தியாவிலும் கூட மணிக்கும் 180 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் புகையிரதங்கள் உள்ளன. அதில் ஒரு பிரதான புகையிரதமாக இருப்பது புதுடில்லி மற்றும் வாராணாசிக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் Vande Bharat “சுப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்” புகையிரதமாகும்.

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு புகையிரதப் பெட்டிகளை விநியோகிக்கும் ரைட்ஸ் நிறுவனமும், அவ்வாறான அதிவேக புகையிரத என்ஜின்களையும் தயாரித்துள்ளது. அத்துடன் அனேக புகையிரதப் பாதைகளை நிர்மானித்தல் மற்றம் பராமரித்தல் என்பன இந்தியாவில் உள்ள இந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனமான இர்கோன் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது.

எமது நாட்டின் புகையிரத கட்டமைப்பிற்காக இந்திய அரசாங்கம் ஆரம்பத்திலிருந்தே புகையிரதப் பெட்டிகள் மற்றும் புகையிரதத் தண்டவாளங்களையும் வழங்கியுள்ளது.

அதேபோன்று 90ஆம் ஆண்டுகளில் இருந்து, என்ஜின்களையும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்திய கடன் உதவியின் கீழ் இந்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பாரியளவிலான திட்டமாக இருப்பது சுனாமியினால் சேதமடைந்த தெற்கு புகையிரதப் பாதையினை அதிவேகப் புகையிரதப் பாதையாக மீள அமைத்ததாகும்.

அதன்பிறகு, இந்திய கடன் திட்டத்தின் கீழ் எஸ் 13 வகுப்பின் 6 இரட்டை பவர் தொகுதிகள் எமக்கு கிடைத்ததோடு, எம் 10 வகுப்பின் உயர் பவர் என்ஜின்களும் அவ்வப்போது வழங்கப்பட்டன. தற்போது புகையிரதக் கட்டமைப்பில் தூரப் பயணப் புகையிரதங்களுக்காக எம் 10 வகுப்பு மற்றும் சமீபத்தில் இறக்குமதி செய்யப்பட்ட எம் 11 வகுப்பு என்ஜின்கள் உயர் சேவையை வழங்குகின்றன.

அதேபோன்று, இந்திய கடன் திட்டத்தின் கீழ் மேலும் 160 புகையிரதப் பெட்டிகள் கடந்த 2022ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்டன. எனினும் அவை அனைத்தும் கடன் திட்டத்தின் கீழ் பெறப்பட்டவை என்பதோடு, ஒரு பெட்டி அல்லது ரயில்வேயின் ஒரு பகுதி கூட இலவசமாக வழங்கப்பட்டவையல்ல.

என்றாலும் அண்டை நாடான இந்தியாவிடமிருந்து எங்களுக்கு மகத்தான ஒத்துழைப்பு தற்போது கிடைத்துள்ளது. இந்திய புகையிரதப்

பாதைகளில் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட 23 டீசல் மின்சார என்ஜின்களை இந்த நாட்டுக்கு இலவசமாகவே வழங்க இந்திய அரசின் விருப்பம் தெரிவித்துள்ளதே அதுவாகும். இலங்கையில் புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட 160 வருடங்கள் ஆகிவிட்டது. அந்தக் காலப்பகுதியினுள் இந்தியாவிடமிருந்து எந்த என்ஜினோ அல்லது பெட்டியோ இலவசமாகக் கிடைக்கப் பெறவில்லை. வரலாற்றில் இதுபோன்ற என்ஜின்கள் பெறப்படுவது இதுவே முதல் முறையாகும். இதற்கான அடிப்படையாக அமைந்தது இந்திய புகையிரதச் சேவையிலிருந்து எரிபொருள் பாவனையில் இயங்கும் என்ஜின்களை அகற்றி, அதற்குப் பதிலாக முழுவதுமாக மின்சாரத்தில் இயங்கும் புகையிரதங்களைப் பயன்படுத்துவதற்கு இந்தியா நடவடிக்கை மேற்கொண்டதாகும். எனவே, தற்போது சேவையில் ஈடுபடும் எரிபொருளைப் பயன்படுத்தும் மின்சார என்ஜின்களைப் பயன்பாட்டிலிருந்து நீக்குவதற்கு இந்திய அரசாங்கத்தின் அறிவித்தலுக்கு அமைவாக இந்திய புகையிரத அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

அவ்வாறு சேவையிலிருந்து நீக்கப்பட்ட 20 என்ஜின்களை இலங்கை புகையிரதச் சேவைக்காக வழங்குமாறு தற்போதைய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இந்திய அரசாங்கத்திடம் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் திகதி இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பால்கேவிடம் ஒப்படைத்த கடிதத்தின் ஊடாக கோரிக்கை விடுத்தார்.

எமது புகையிரதச் சேவைக்காக இந்தியா ஆற்றிவரும் பங்களிப்பை பாராட்டுவதாகவும், 2011ஆம் ஆண்டு முதல் இன்று வரைக்கும் முன்னெடுக்கப்பட்ட புகையிரதத் திட்டங்கள் எமக்கு பெரும் பலமாக இருந்ததாகவும் அந்தக் கடிதத்தில் அமைச்சர் சுட்டிக்காட்யிருந்தார். வடக்கு புகையிரதப் பாதையினை முழுமையாகப் புனரமைப்புச் செய்தல், புகையிரதப் பெட்டிகள் மற்றும் என்ஜின்களை வழங்குதல் உள்ளிட்ட 466.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான திட்டங்கள் இந்நாட்டு புகையிரதப் போக்குவரத்தினை வலுப்படுத்துவதற்கு பங்களித்துள்ளதாக அமைச்சர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று எம் 11 என்ஜின்களை வழங்குவது தொடர்பிலும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பேசப்பட்டதைப் போன்று இந்திய அரசாங்கத்தினால் இலவசமாக என்ஜின்களை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு அமைச்சர் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

அதற்கு பதிலளித்த இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் முதலாவது செயலாளர் இரினா தாக்கூர், 2023 நவம்பர் 28ம் திகதியிடப்பட்ட கடிதத்தில், குறித்த புகையிரத என்ஜின்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக 5 பேர் கொண்ட குழுவை இந்தியாவின் தமிழ்நாடு திருச்சிராப்பள்ளி தெற்கு புகையிரத சேவை மையத்திற்கு அனுப்ப இந்திய அரசு வசதி செய்யும் என்று தெரிவித்திருந்தார்.

குறித்த புகையிரத என்ஜின்களைப் பெற்றுக் கொள்வதற்கு முன்னர் பூவர் பரிசோதனை நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக புகையிரத பொறியியலாளர்கள் உள்ளிட்ட புகையிரதத் தொழில்நுட்ப அதிகாரிகள் ஐவருக்கு இந்தியா சென்று வருவதற்குத் தேவையான விமான டிக்கட்டுக்கள், தங்குமிட வசதிகள் உள்ளிட்ட இந்தியாவில் போக்குவரத்து வசதிகள் போன்றவற்றை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றம் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் கடந்த வருடம் டிசம்பர் 18ஆம் திகதி புகையிரத மேலதிக பொது முகாமையளர் (நடவடிக்கைகள்) வஜிர பொல்வத்தகே, புகையிரத மேலதிக பொது முகாமைளர் (தொழில்நுட்பம்) – பிரதான புகையிரத பொறியியலாளர் கீர்த்தி ஹேவாவிதாரன உள்ளிட்ட ஐந்து பேர் இந்தியாவுக்குச் சென்று இந்நாட்டுப் பயன்பாட்டிற்குத் தகுதியான 23 புகையிரத என்ஜிகளைத் தெரிவு செய்துள்ளனர்.

இந்நாட்டுப் புகையிரத என்ஜின்களில் தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள எம் 10 புகையிரத என்ஜின் வகையைச் சேர்ந்த புகையிரத என்ஜின்களே தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றின் சிறப்பம்சம் என்னவெனில் எம் 10 புகையிரத என்ஜின்களை விட உயர் தொழில்நுட்பத்தைக் கொண்டிருப்பதேயாகும் என புகையிரத மேலதிக பொது முகாமைளார் (தொழில்நுட்பம்) – பிரதான புகையிரத பொறியியலாளர் கீர்த்தி ஹேவாவிதாரன தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து கிடைத்துள்ள 23 புகையிரத என்ஜின்களில் 20 என்ஜின்கள் பயணிகள் போக்குவரத்திற்காக ஈடுபடுத்தப்படவுள்ளதோடு, மீதி 3 என்ஜின்களும் உதிரிப்பாகங்களுக்காக கொண்டு வரப்பட்டவைகளாகும். அவற்றையும் குறுகிய காலத்திற்காவது சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் புகையிரத பொது முகாமையாளர் எச். எம். கே. டப்ளிவ். பண்டார தெரிவித்தார்.

வரலாற்றில் முதல் தடவையாக சுமார் 1600 கோடி ரூபாய் பெறுமதியான 20 புகையிரத என்ஜின்கள் இந்தியாவிலிருந்து இந்நாட்டிற்கு அன்பளிப்பாகக் கிடைத்துள்ளதாக இது தொடர்பில் கடந்த 14ஆம் திகதி அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன கூறினார். ஒரு என்ஜின் சுமார் 800 மில்லியன் பெறுமதியுடையது என்றும், சுதந்திரத்தின் பின்னர் இந்தியாவிலிருந்தோ அல்லது வேறு நாடுகளிலிருந்தோ இவ்வாறு புகையிரதங்கள் கிடைத்திருப்பது வரலாற்றில் முதல் தடவையாகும் என்றும் அமைச்சர் இதன் போது குறிப்பிட்டார். 20 புகையிரத என்ஜின்களைப் பெற்றுக் கொள்வதற்காக தான் இந்திய அரசாங்கத்திடமும், இந்நாட்டில் இருக்கும் இந்தியாவின் உயர் ஸ்தானிகரிடமும் எழுத்து மூலமான கோரிக்கையை விடுத்ததாகவும் குறிப்பிட்ட அமைச்சர், இது தொடர்பில் கவனம் செலுத்தியமை தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்நாட்டின் இந்திய உயர் ஸ்தானிகருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். இலவசமாக இந்தியா வழங்கிய புகையிரத என்ஜின்களைப் பார்வையிடுவதற்காக இலங்கையிலிருந்து 65 பேர் இந்தியாவுக்குச் சென்றதாகப் பொய்யான செய்தி பரப்பப்பட்டதாகவும், இந்தியா வழங்கிய 23 புகையிரத என்ஜின்களையும் பார்ப்பதற்காக இந்தியாவுக்கு ஐவர் மாத்திரமே சென்றதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

இதற்கான அனைத்துச் செலவுகளையும் மேற்கொண்டது இந்திய அரசாங்கமே என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

புகையிரத என்ஜின்களுக்குத் தட்டுப்பாடு இருப்பதால் புகையிரதங்களைக் கொள்வனவு செய்வதற்கு இச்சந்தர்ப்பத்தில் எந்தவித மூலதனச் செலவுகளையும் மேற்கொள்வதற்கு முடியாதிருப்பதாலும், கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளும் வரைக்கும் கடன் உதவிகள் கிடைக்காததாலும் உதவி என்ற வகையில் நன்றாகச் சேவையில் ஈடுபடும் 20 புகையிரத என்ஜின்களை வழங்கியதையிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட இந்திய அரசாங்கத்திற்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் கூறினார்.

எமக்கு இந்தியாவிடமிருந்து கிடைக்கும் இந்த 20 புகையிரத என்ஜின் தொடர்பில் ஒரு விடயத்தைக் கூற வேண்டும். அது பீ.டி.ரம்பாலவினால் 70ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்நாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட ஹைட்ரொலிக் புகையிரத என்ஜின் இறக்குமதிக்குப் பின்னர் 20 புகையிரத என்ஜின்கள் ஒரே தடவையில் இந்நாட்டிற்கு கொண்டு வரப்படுவது முதற்தடவையாகும். அதுவும் அரை நூற்றாண்டினுள் இந்நாட்டிற்கு ஒரே தடவையில் 20 புகையிரத என்ஜின்கள் கொண்டு வரப்படும் முதல் சந்தர்ப்பமாக இது வரலாற்றில் இடம்பெறும்.

தாரக விக்ரமசேகர தமிழில் - எம். எஸ். முஸப்பிர்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division