Home » காஸா மக்களை வெளியேற்றும் உரிமை இஸ்ரேலுக்கு கிடையாது!

காஸா மக்களை வெளியேற்றும் உரிமை இஸ்ரேலுக்கு கிடையாது!

by Damith Pushpika
January 14, 2024 6:30 am 0 comment
காஸா அகதிகள் தங்கியிருக்கும் முகாம்கள்

காஸா மீதான யுத்தம் ஆரம்பமாகி நாளையுடன் (15 ஆம் திகதி) நூறு நாட்களாகின்றன. இப்போரை உடனடியாக நிறுத்துமாறும், காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தங்குதடையின்றிச் செல்ல இடமளிக்குமாறும் ஆரம்பம் முதல் முழுஉலகமுமே இஸ்ரேலைக் கோரி வருகின்றன.

இதன் பொருட்டு ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் சபை அதற்கான தீர்மானங்ளை நிறைவேற்றியுள்ளது. இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளைப் பல நாடுகள் துண்டித்துள்ளன. இப்போருக்கு இஸ்ரேலுக்கு முதலில் ஆதரவு நல்கிய நாடுகளும் இக்கோரிக்கையை விடுத்துள்ளன. இதே கோரிக்கையை முன்வைத்து லெபனானின் ஹிஸ்புல்லாவும், யெமனின் ஹுதிக்களும், ஈராக்கின் போராளிக்குழுக்களும் ஆயுதரீதியான தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றன.

கண்டனத்துக்குரிய கருத்துக் கூறிய இஸ்ரேல் அமைச்சர்கள் இருவர்

கண்டனத்துக்குரிய கருத்துக் கூறிய இஸ்ரேல் அமைச்சர்கள் இருவர்

இஸ்ரேல் இவை எதனையும் கருத்தில் கொள்ளாது யுத்தத்தை முன்னெடுத்து வரும் நிலையில், அந்நாட்டின் இரண்டு அமைச்சர்கள் முன்வைத்துள்ள யோசனை அல்லது கருத்து முழு உலகினதும் எதிர்ப்புக்கும் கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ளது. அவர்களது கருத்துக்கள் இரண்டு வாரங்களுக்கும் மேலாக உலகில் பெரும் பேசுபொருளாகியுமுள்ளன.

‘காஸா மக்களை வேறு இடத்திற்கு இடமாற்ற வேண்டும். அவர்கள் காஸாவிலிருந்து வெளியேற வேண்டும். அவர்களைப் பொறுப்பேற்க நாடுகள் முன்வர வேண்டும். 23 இலட்சம் பலஸ்தீனியர்கள் இருக்க வேண்டிய பிரதேசமல்ல காஸா. அங்கு ஒரு இலட்சம் இரண்டு இலட்சம் பலஸ்தீனியர்கள் இருந்தாலேயே போதும்’ என்பதே அவர்களது கருத்தாகும்.

இஸ்ரேலிய நிதியமைச்சர் பெஸாலெல் ஸ்மோட்ரிச், தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடமர் பென் க்விர் ஆகிய இருவருமே இக்கருத்தை முன்வைத்துள்ளனர். இதனை ஹமாஸும் பலஸ்தீன அதிகாரசபையும் மாத்திரமல்லாமல் பலஸ்தீன மக்களும் முற்றாக நிராகரித்து, கடும் கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர்.

காஸாவானது பலஸ்தீனின் ஒரு பகுதியாகும். இது மத்திய தரைக்கடலை அண்மித்த ஒரு கரையோரப்பகுதி. 365 சதுர கிலோ மீற்றர் பரப்பைக் கொண்ட இப்பிரதேசத்தின் கிழக்கு எல்லையாக மத்திய தரைக்கடலும், தென்மேற்காக எகிப்தும், கிழக்கு மற்றும் வடக்காக இஸ்ரேலும் எல்லையாக உள்ளன.

முதலாம் உலகப் போர் காலத்தில் அன்றைய பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஆதர் ஜேம்ஸ் பெல்போர் யூதர்களுக்காக இஸ்ரேல் என்ற நாட்டை பலஸ்தீனில் அமைத்துத் தருவதாக 1917 இல் உறுதியளித்தார். அதற்கான எழுத்துமூலக் கடிதத்தை அதேயாண்டு நவம்பர் 2 இல் அவர் வழங்கினார். அதுவே பெல்போர் பிரகடனமாக அறியப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மேற்குநாடுகளைச் சேர்ந்த யூதர்கள் 1920 முதல் பிரித்தானிய ஆதரவுடன் பலஸ்தீனில் கட்டம் கட்டமாக குடியேறலாயினர். இதன் விளைவாக பலஸ்தீனியர்கள் தம் இருப்பிடங்களை இழக்கும் நிலைமை உருவானது. யூதர்களது குடியேற்றத்தின் தாக்கங்களை உணரத் தொடங்கிய பலஸ்தீனியர்கள், 1929 முதல் வேலைநிறுத்தம் உள்ளிட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடலாயினர். அந்நடவடிக்கைகள் வெற்றியளிக்காத நிலையில் 1948 ஆகும் போது இலட்சக்கணக்கான பலஸ்தீனர்கள் தத்தமது பூர்வீக வாழிடங்களை இழந்து அகதிகளாகினர்.இந்நிலையில் ஐ.நா. 1948 மே 15 இல் இஸ்ரேலை அங்கீகரித்தது. 1948 இல் ஏற்பட்ட வெளியேற்றமே ‘நக்பா’ என வருடா வருடம் அனுஷ்டிக்கப்படுகிறது.

பலஸ்தீனில் இஸ்ரேலை நாடாக அங்கீகரித்தமைக்கு அரபு-இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, முதலாவது அரபு- இஸ்ரேல் யுத்தம் 1948 இல் ஏற்பட்டது. அதனால் காஸா பகுதியை எகிப்து கைப்பற்றியது. அதன் பின்னர் 1967 இல் இடம்பெற்ற ஆறு நாட்கள் அரபு- இஸ்ரேல் யுத்தத்தின் ஊடாக இஸ்ரேல் காஸாவை தம்வசப்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து 2006 வரையான 39 வருடங்கள் காஸா இஸ்ரேல் வசமிருந்தது. ஒஸ்லோ உடன்படிக்கையின் மூலம் உருவான பலஸ்தீன அதிகார சபையின் கீழ் காஸா கொண்டு வரப்பட்டதோடு அங்கிருந்து இஸ்ரேல் வெளியேறியது.

23 இலட்சம் மக்களைக் கொண்ட காஸாவில் 17 இலட்சம் பேர் அகதிகளாவர். இவர்கள் காஸாவிலுள்ள 08 பாரிய முகாம்களில் தங்கியுள்ளனர். ஜபாலியாவில் 116,000, சாட்டியில் 90,000, புரைஜ்ஜில் 90,000, நுசெய்ரத்தில் 85,000 டெய்ர் அல் பலாஹ்வில் 26,000, மகாஸீயில் 33,000, கான் யூனுஸில் 88,000, ரபாவில் 133,000 என்றவாறு எட்டு முகாம்களில் பலஸ்தீனியர்கள் தங்கியுள்ளனர்.

இம்முகாம்கள் உட்பட காஸாவிலுள்ள அனைத்துக் குடியிருப்புக்களும் கடந்த 3 மாதங்களாக நீடிக்கும் யுத்தத்திற்கு இலக்காகியுள்ளன. இதனால் இற்றைவரை 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

தரைவழி யுத்தத்தின் ஊடாக காஸாவுக்குள் நுழைந்த இஸ்ரேலியப் படையினர் முதலில் காஸா மக்களை வடக்கில் இருந்து மத்திய காஸாவுக்கு இடம்பெயருமாறும், அதன் பின்னர் மத்திய காஸா மீது படையெடுத்ததும் அங்கிருந்து தெற்கு நோக்கிச் செல்லுமாறும் கூறினர். அதனால் 19 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்தவர்களாக உள்ளனர்.

இடம்பெயர்ந்து செல்லும் காஸா மக்கள்

இடம்பெயர்ந்து செல்லும் காஸா மக்கள்

இவ்வாறான சூழலில் காஸா மக்களை ருவண்டா, சாட் மற்றும் கொங்கோ குடியரசு ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. ஆனால் “அவ்வாறான பேச்சுக்கள் எதுவும் இடம்பெறவில்லை. அவை பிழையான தகவல்கள்” என்று ருவண்டா வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. அதேபோன்று சாட்டும் கொங்கோ குடியரசும் இதனை ஏற்கனவே மறுத்துள்ளன. ஆனால் காஸா மக்களை வெளியேற்றும் திட்டத்தைத் தடுத்து நிறுத்த ஐ.நாவும் சர்வதேச சமூகமும் முன்வர வேண்டும் என்று ஹமாஸ் அழைப்பு விடுத்துள்ள அதேநேரம், பலஸ்தீன அதிகார சபை ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், பலஸ்தீனியர்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தும் எந்த நடவடிக்கையையும் நிராகரிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இந்த அமைச்சர்களின் கூற்றுக்களை முற்றாக நிராகரித்துள்ள இஸ்ரேலிய நட்பு நாடான அமெரிக்கா, “காஸா பலஸ்தீனின் நிலம். அது பலஸ்தீன நிலமாகவே இருக்கும். அதில் நாங்கள் தெளிவாகவும், உறுதியாகவும் சந்தேகத்திற்கு இடமின்றி இருக்கிறோம்” என்று கூறியுள்ளது.

காஸா மக்களை பலவந்தமாக வெளியேற்றி வேறு நாடுகளில் குடியேற்றும் யோசனையை நிராகரித்துள்ள ஐரோப்பிய நாடுகள், காஸாவில் யூத குடியேற்றங்களை முன்னெடுக்கும் திட்டங்களையும் எதிர்த்துள்ளதோடு இவை ஜெனீவா சமவாயத்தையும் ரோம் சட்டத்தையும் அப்பட்டமாக மீறும் செயல் எனவும் கண்டித்துள்ளன. காஸா மக்களை பலவந்தமாகப் புலம்பெயரச் செய்யவோ அவர்களது தலைவிதியைத் தீர்மானிக்கவோ இஸ்ரேலுக்கு உரிமை கிடையாது. பலஸ்தீன மக்கள் எங்குவாழ வேண்டும் என்பதை இஸ்ரேலிய அரசாங்கம் தீர்மானிக்க முடியாது என்று பிரான்ஸ் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, ஐரோப்பிய யூனியன் மற்றும் பிரித்தானியா, துருக்கி, ஜோர்தான், சவுதி அரேபியா, கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் இந்த யோசனையை நிராகரித்து கண்டித்துள்ளன. இவ்வாறான சூழலில் மத்திய கிழக்குக்கு விஜயம் செய்த அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் அந்தோனியோ பிளிங்கன் துருக்கி, ஜோர்தான், கட்டார், சவூதி, ஐக்கிய அரபு இராச்சியம், இஸ்ரேல் ஆகியவற்றின் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போது, ‘சுதந்திரமான பலஸ்தீன நாட்டை உருவாக்க வேண்டும். மேற்குக் கரையும் காஸாவும் பலஸ்தீனத் தலைமையின் கீழ் ஒன்றுபட்டிருக்க வேண்டும்’ என்றுள்ளார்.

ஆகவே காஸா மக்களை அவர்களது வாழிடங்களில் இருந்து வெளியேற்றும் யோசனை, கருத்தை உலகம் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது. அதன் பிரதிபலிப்பே இந்த கண்டனங்களும் எதிர்ப்புக்களுமாகும். அதனால் சர்வதேச சட்டங்களையும் மனிதாபிமான சட்டங்களையும் உலகளாவிய கோரிக்கைகளையும் மதித்து செயற்பட வேண்டிய பொறுப்பு இஸ்ரேலுக்கு முன்பாக உள்ளது எனலாம்.

மர்லின் மரிக்கார்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division