இந்திய அரசினால் இலவசமாக வழங்கப்படும் ரயில் என்ஜின்கள் எதிர்வரும் 04ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்கு கிடைக்குமென ரயில்வே பொது முகாமையாளர் எச்.எம்.கே.டபிள்யூ. பண்டார கூறினார். இலங்கையில் ரயில் சேவையை அதிகரிக்க இந்திய அரசாங்கத்தினால் 23 என்ஜின்கள் கிடைக்கவுள்ளதாகவும், கடந்த மாதம் ரயில்வே பொறியியலாளர்கள் குழுவொன்று இந்தியா சென்று இது தொடர்பான பணிகளை மேற்கொண்டதாகவும், அதன்படி உரிய என்ஜின்களை இலங்கைக்கு கொண்டு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பெப்ரவரி 04 ஆம் திகதி சுதந்திர தினத்தன்று இலங்கையில் இயக்குவதற்கு இரண்டு என்ஜின்களை வழங்குமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி, போக்குவரத்து அமைச்சு மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முயற்சியின் கீழ் இம்மாதம் இறுதியில் 02 என்ஜின்கள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக பொது முகாமையாளர் தெரிவித்தார்.
மற்ற என்ஜின்கள் பின்னர் பெறப்படும். அந்த என்ஜின்களின் மொத்த மதிப்பு 3,000 கோடி ரூபாயை விட அதிகமென்றும், அனைத்து என்ஜின்களையும் இலவசமாக வழங்க இந்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.