Home » பொருளாதார சீர்திருத்த செயற்பாடுகளை முன்னெடுப்பதில் இலங்கை முன்னேற்றம்

பொருளாதார சீர்திருத்த செயற்பாடுகளை முன்னெடுப்பதில் இலங்கை முன்னேற்றம்

ஜனாதிபதிக்கு இலங்கை வந்துள்ள IMF பிரதிநிதிகள் பாராட்டு தெரிவிப்பு

by Damith Pushpika
January 14, 2024 6:10 am 0 comment

சவாலான பொருளாதார சீர்திருத்தங்களுடன் சர்வதேச நாணய நிதியத்தின் முதல் மதிப்பாய்வை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்காக ஜனாதிபதிக்கு IMF பாராட்டு தெரிவித்துள்ளது.

ஆசியாவிலேயே முதன்முறையாக ஆட்சியைக் கண்டறியும் அறிக்கையை (Governance Diagnostic Report) வெளியிடுவது குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை பணிப்பாளர்கள் இவ்வாறு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் சாதகமான முன்னேற்றங்கள் சர்வதேச உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன் வழங்குநர்களிடையே உலகளவில் நம்பிக்கையை அதிகரிக்கின்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுக்கிடையில் (11) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பொன்று நடைபெற்றது.

சர்வதேச நாணய நிதியத்துடனான முதலாவது மீளாய்வை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, ஜனாதிபதியின் தலைமையில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட சவாலான பொருளாதார சீர்திருத்தங்களைப் பாராட்டியது.

ஆசியாவின் முன்னோடி முயற்சியான ஆட்சியைக் கண்டறியும் அறிக்கையை (Governance Diagnostic Report) வெளியிடுவதில் இலங்கையின் முயற்சிகளை இதன்போது பாராட்டினர்.

குறிப்பாக, கொள்கை சார்ந்த விடயங்கள் மற்றும் நிதித்துறையில் ஸ்திரத்தன்மை ஆகியவை சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தால் ஊக்குவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூவர் (Peter Breuer) தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டின் இரண்டாம் காலப்பகுதியில் பணியாளர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைகளின்படி இலங்கை நம்பிக்கையுடன் அரசாங்க வருமானத்தை உயர்த்தியுள்ளதாக சமீபத்திய சந்திப்பில் தெரியவந்துள்ளதாகவும், அதன் மூலம் சர்வதேச சமூகம், உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் மற்றும் தனியார் கடன் வழங்குநர்களின் நம்பிக்கை அதிகரிக்க காரணமாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

பணவீக்கத்தை கணிசமாகக் குறைப்பதில் இலங்கையின் வெற்றியை, பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதாகவும், நிதியியல் கொள்கை மற்றும் செலவுகளைக் குறைக்கும் இலங்கை அரசின் கொள்கைகளே அதற்கு காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பு அதிகரிப்பு போன்ற சாதகமான முடிவுகள் தொடர்பிலும் சர்வதேச நாணய நிதியம் அவதானித்துள்ளது.

குறிப்பாக மூலதனம் மற்றும் பொறிமுறை உருவாக்கம், மூன்றாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்துள்ளதாகவும், தற்போதுள்ள ஆட்சிப் பொறிமுறையின் சீர்திருத்தங்களில் இது சாதகமான குறிகாட்டிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division