Home » TIN இலக்கம் என்றால் என்ன?

TIN இலக்கம் என்றால் என்ன?

அது ஏன் உங்களுக்கு அவசியம்?

by Damith Pushpika
January 14, 2024 6:12 am 0 comment

‘டின் இலக்கம் தொடர்பாக மக்களிடம் போதிய தெளிவு இல்லை. ஊடக வெளிச்சம் போதுமானது அல்ல’

‘அவசியமற்றது எனக் கருதப்பட்ட அடையாள அட்டை பின்னர் அத்தியாவசியமானது போலவே வரி எண்ணும் பிற்காலத்தில் அவசிய இலக்கமாக கருதப்படலாம்’

இலங்கையில் உயர் பதவி வகிக்கும் ஒரு பெண்மணி சமீபத்தில் பீஜிங் சென்றுள்ளார். அங்கே சீன அதிகாரிகள் “உங்கள் டின் இலக்கம் என்ன? சொல்லுங்கள்” என்று கேட்டிருக்கிறார்கள். அவர் அதிர்ச்சி அடைந்தவராக, “டின்னா? அப்படி ஒரு இலக்கம் என்னிடம் இல்லையே!” என தயக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தற்போதுள்ள 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு டின் இலக்கங்களை வழங்கத் தொடங்கி இருக்கிறது. Taxpayers Identification Number அதாவது வரி செலுத்துநர் அடையாள இலக்கம் என்பதன் சுருக்கமே (TIN) டின். வரி செலுத்தும் அனைவருக்கும் இந்த டின் இலக்கம் வழங்கப்படுகிறது. எனினும் முதல் தடவையாக 18 வயதுக்கும் மேற்பட்ட சகல இலங்கைவாசிகளுக்கும் வரி அடையாள இலக்கம் வழக்கப்படுவது இதுவே முதல் தடவை. கடந்த ஆண்டின் முற்பகுதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் வருமானவரிக் கோவை திறக்கப்பட வேண்டும் என்றும் இதன்மூலம் நாட்டில் வசிக்கும் அனைவரின் வருமான நிலைகளை கணிக்க முடியும் என்றும், மாணவர்கள், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள், சொந்தத் தொழில் செய்பவர்கள், உத்தியோகம் பார்ப்போர், வர்த்தகர்கள் என சனத்தொகையை பல்வேறு பிரிவுகளின் கீழ் வைக்க முடியும் என்றும் கூடவே வரி ஏய்ப்புச் செய்பவர்களை அடையாளம் காண்பதற்கும் உதவும் என்றும் டின் வழங்கப்படுவதற்கான காரணங்கள் கூறினார்.

வருமானத்துக்கு ஏற்ற வரியை செலுத்துவோர் இந் நாட்டில் குறைவு. ஒரு தடவை பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே சபையில் உரையாற்றும்போது, இந் நாட்டின் மிகப் பெரும் வர்த்தகர்கள் வரியே செலுத்துவதில்லை என்று குற்றம் சாட்டினார். வரி செலுத்த வேண்டியவர்களின் பத்து சதவீதமானோரே வரி செலுத்துகின்றனர் என்றும் ஐம்பது சதவீதமானோர் வரி செலுத்தினால் வருடாந்த துண்டு விழும் தொகையை பெரிய அளவுக்கு சரிக்கட்டிவிட முடியுமென்றும் வருமானவரி வட்டாரத் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. வரி ஆலோசகர்களாக விளங்குவோர் பெரிய அளவில் சம்பாதிக்கிறார்கள். அதன் அர்த்தம் என்ன தெரியுமா? வரி கொடாமல் அல்லது வரியை மிகக் குறைவாக அரசுக்கு செலுத்துவது எப்படி என்பதை ஆலோசனையாக பண முதலைகளுக்கு சொல்லித் தருவதே இவர்கள் தொழில். வரி ஏய்ப்பை அகப்படாமல் செய்வது எப்படி என்பதை சொல்லித் தருகிறார்கள்.

டின் இலக்கம் மற்றும் பின் இலக்கங்களை வயதுக்கு வந்த மற்றும் வாக்களிக்கத் தகுதியான அனைவருமே ைவத்திருக்க வேண்டும் என்பது அரசின் ஏற்பாடு. இதன்மூலம் வரி ஏய்ப்புச் செய்பவர்களை அடையாளம் காண முடியும், வரி செலுத்துவோரை ஒரு ஒழுங்கு முறைக்குள் கொண்டுவர முடியும் என அரசு இதன்மூலம் எதிர்பார்க்கிறது. நாம் பொருட்களை கொள்வனவு செய்யும் போது அப்பொருளின் அடக்க விலைக்குள் வரி உள்ளது. இது மறைமுக வரி. வருமானத்தின் மீது செலுத்தப்படும் வரி. நேரடி வரி. இந்நேரடி வரியை ஒழுங்கமைத்து ஒரு கண்காணிப்புக்குள் கொண்டு வரவே டின்முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எழுபதாம் ஆண்டுகளின் ஸ்ரீமாவோ அரசு அடையாள அட்டை முறையை நடைமுறைக்கு கொண்டுவந்தபோது அதைப் பலர் அவசியமற்ற வேலை என வர்ணிக்கவே செய்தனர். 1971 ஜே.வி.பி. ஆயுத போராட்டத்தை நடத்தியது. அதன் பின்னரேயே இலங்கை சனத்தொகை தொடர்பிலான விவரங்களை அரசு தன் கையில் வைத்திருக்க வேண்டும் எனக் கருதியது. இதன்மூலம் ஒருவருடைய முழுப் பெயர், அவர் வாக்களிக்கும் தகுதி உடையவரா இல்லையா என்ற விபரம், வதிவிடம், அவருடைய புகைப்படம் மற்றும் அவரை அடையாளப்படுத்தும் இலக்கம் என்பனவற்றை அடையாள அட்டை கொண்டிருந்தது. அது வழங்கப்பட்ட காலத்தில் பெரும்பாலானோர் தமது அட்டைகளை வீடுகளிலேயே வைத்திருந்தனர். வங்கிகளிலும் அவை கேட்கப்படுவதில்லை. பொலிசாரும் கேட்பதில்லை. பலர் அதை மறந்தே போயினர். வடக்கு கிழக்கில் ஆயுதம் உயர்த்தப்பட்ட பின்னரேயே அடையாள அட்டையின் அவசியத்தை அரசு உணர்ந்தது. விசாரிக்கப்படும் நபர் தமிழரா, சிங்களவரா, எத்தனை வயது, என்ன பெயர், எந்த ஊர் போன்ற முக்கியமான தகவல்களை உடனடியாக அறிந்து கொள்ள அது உதவியது. அடையாள அட்டையை கையோடு எடுத்துச் செல்வது கட்டாயமானது. இன்று அதன் முக்கியத்துவத்தை நாம் அறிவோம். அடையாள அட்டைக்கு முன்னர் குடும்ப அட்டை மற்றும் அரிசி கூப்பனும் ஒரு அவசிய ஆவணமாக பயன்பாட்டில் இருந்ததையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

சிலர் கருதலாம், வருமானம் கைக்கும் வாய்க்குமே போதாமல் இருக்கையில் வருமானவரிக்கான டின் இலக்கம் நமக்கெதற்கு என்று. ஒரு காலத்தில் தேவைப்படாத ஒரு ஆவணமாகக் காணப்பட்ட அடையாள அட்டை, பின்னர் மிக அவசியமான ஒரு அட்டையாக மாறியது போலவே எதிர்காலத்தில் டின் இலக்கமும் மாறும் என்பதை மறக்க வேண்டாம். மேலும் மிக எளிமையான ஒரு நடைமுறையைப் பயன்படுத்தியே முற்றிலும் இலவசமாக உங்களுக்கு டின் இலக்கம் பெற்றுத் தரப்படுகிறது. இது எதிர்காலத்தில் முக்கிய ஆவனமாக வருமான ரீதியாக உங்களை அடையாளப்படுத்தும் இலக்கமாக மாறும் என்பதை மறக்க வேண்டாம்.

ஒரு அதிகாரிக்கு டின் தொடர்பாக ஏற்பட்ட சீன அனுபவத்தை கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதற்கான காரணம், உலக நாடுகளில், குறிப்பாக அபிவிருத்தியடைந்த நாடுகளில் டின் இலக்கம் பயன்பாட்டில் உள்ளதை சுட்டிக் காட்டுவதற்காகத்தான். மேலும் இன்று ஓட்டாண்டியாக இருக்கக் கூடியவர் அடுத்துவரும் காலத்தில் வர்த்தகராக, செல்வந்தராக ஆக முடியும். குறைகளை எவ்வகையிலும் சொல்ல முடியும் நிறைகளையும் எதிர்கால பயன்பாட்டைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்.

டின் தொடர்பான புதிய சட்டம் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதுவரை 10 லட்சம் பேர் வரை டின் இலக்கங்களைப் பெற்றுள்ளனர். ஆனால் இலங்கையில் மொத்த மக்கள் தொகை 2 கோடியே 18 லட்சத்து நான்காயிரத்து 221. தற்போது புதிய சனமதிப்பீடு ஆரம்பிக்கப்பட்டிருப்பதால் இலங்கையின் புதிய சனத்தொகை எண்ணிக்கை இவ்வருட இறுதிக்குள் தெரியவரும். தற்போது உள்ள சனத்தொகை மதிப்பீடுகளின் பிரகாரம் 15 வயதுக்குக் குறைவானோர் தொகை 54 லட்சத்து 34 ஆயிரத்து 569. 15க்கும் 64 வயதுக்கும் இடைப்பட்ட உழைக்கக் கூடிய மக்கள் தொகை ஒரு கோடியே 46 லட்சத்து 54 ஆயிரம் பேர். 64 வயதுக்கு மேற்பட்டோர் தொகை 17,11,820 பேர். டின் இலக்கத்தைப் பெற வேண்டியவர்கள் தொகை ஒரு கோடியே 80 லட்சத்துக்கும் சற்று அதிகமாக இருக்க வேண்டும். இவ்வளவு பேருக்கு, இன்றைய நடைமுறைகளின் கீழ், அடுத்த ஆறு மாதத்துக்குள் டின் இலக்கங்களை வழங்குவது சாத்தியமற்றது.

இறைவரித் திணைக்களத்துக்கு கொழும்பு மத்தி, கொழும்பு தெற்கு மற்றும் கொழும்பு நகரில் அலுவலகங்கள் உள்ளன. ரீகல் பட மாளிகையைத் தாண்டி மக்கள் வங்கி தலைமைக் காரியாலயத்துக்கு அண்மித்ததாக இதன் தலைமையகம் அமைந்துள்ளது. மேலும் பதுளை, காலி, களுத்துறை, மாத்தறை, நுவரெலியா, இரத்தினபுரி, அநுராதபுரம், கம்பஹா, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கண்டி, கேகாலை, குருணாகல், தம்புளை மற்றும் நீர்கொழும்பு நகரங்களில் அதன்கிளை அலுவலகங்கள் உள்ளன. இங்கெல்லாம் நீங்கள் டின் இலக்க விண்ணப்பப்படிவங்களை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் வழங்கப்பட வேண்டிய மக்கள் தொகையை கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்த 18 தலைமை மற்றும் கிளைக் காரியாலயங்களினால் டின் வழங்கும் செயற்பாட்டை விரைவாகவும் எளிமையாகவும் முன்னெடுக்க முடியும் எனக் கருத முடியவில்லை. முதலாவதாக, டின் இலக்கம் என்றால் என்ன, ஏன் பெற வேண்டும் என்பதில் பொதுமக்களுக்கு போதிய தெளிவில்லை. பலருக்கு அது தொடர்பாக எந்தத் தகவலும் தெரியாது. இது தொடர்பாக ஊடக வெளிச்சம் போதியதாக இல்லை. திணைக்களம் மக்களைத் தெளிவுபடுத்தும் வகையில் விளம்பரங்கள் செய்த மாதிரியும் தெரியவில்லை. எனவே மக்களைத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியமே தவிர, இந்த இலக்கத்தை பெற்று வைத்திருக்காவிட்டால் ஐம்பதாயிரம் தண்டப் பணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று பயமுறுத்துவது, பாவம் செய்தால் நரகத்துக்கு போவாய் என பயமுறுத்துவதற்கு ஒப்பானது. ஏனெனில் ஒருகோடி பேருக்கு டின் இலக்கம் வழங்கப்பட்ட பின்னரேயே தண்டனை வழங்கப்படுவது பற்றி பேச முடியும். கொழும்பில் வசிப்பவர்கள் லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில் இருந்து கொம்பனி வீதி பக்கமாக நீளும் சேர் சிற்றம்பலம் கார்டினர் வீதியில் மக்கள் வங்கி தலைமையகத்துக்கு அருகில் அமைந்திருக்கும் இறைவரித் திணைக்களத்தின் (Inland Revenue Department) தலைமையகத்துக்கு காலை சுமார் 8.15 அளவில் செல்வது நல்லது. காலை 8.30 க்கு அலுவல்கள் ஆரம்பமாகின்றன. டின் விண்ணப்பங்கள் இரண்டாம் மாடியில் கிடைக்கின்றன. ஒரு பேனையையும் தேசிய அடையாள அட்டை, அதன் போட்டோ பிரதி மற்றும் உங்கள் வங்கி கணக்கு இலக்கம் என்பனவற்றை உங்களுடன் வைத்திருங்கள்.

உங்களுக்கு வழங்கப்படும் படிவம் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை இலக்கம், ஆணா, பெண்ணா, ஆங்கிலத்தில் உங்கள் பெயர், அதுவே தமிழ் அல்லது சிங்களத்தில், வருமானத்துக்கான மார்க்கம், இணைய முகவரி, வீட்டு முகவரி போன்றன, எவ்வாறான வர்த்தகம், BOI பதிவு, வர்த்தக நிலைய முகவரி போன்ற தகவல்கள் கோரப்படுகின்றன. நீங்கள் வர்த்தகர் இல்லை என்றால் இதை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை.

இது நான்கு பக்க விண்ணப்பப் படிவம், நான்காம் பக்க மேலே உள்ள கட்டத்தில், நீங்கள் இப் படிவத்தை நிரப்பி வேறு ஒருவர் மூலம் சமர்ப்பிக்க விரும்பினால் அவரது பெயர், பதவி, அடையாள அட்டை எண் என்பனவற்றை குறிப்பிட வேண்டும். அடுத்த பிரிவில் உங்கள் பெயர், பதவி அடையாள அட்டை விபரங்களைக் குறிப்பிட்டு திகதியிட்டு கையொழுத்திட வேண்டும். இவ்வாறு நிரப்பப்பட்ட படிவத்தை அங்குள்ள அலுவலரிடம் கொடுத்தால் அந்த விபரங்களை சரிபார்த்து, தன் கணினியில் பதிவேற்றி உங்களை போகச் சொல்வார்கள். ஆரம்பத்தில் நீங்கள் டோக்கன் இலக்கத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். நிரப்பப்பட்ட படிவத்தை பொறுப்பேற்றவரிடம் உங்கள் அடையாள அட்டையையும் டோக்கனையும் கையளிக்க வேண்டும். உங்கள் டோக்கன் இலக்கத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

தலைமை அலுவலக இரண்டாம் மாடியில் பெரிய அளவில் கூட்டம் இல்லை. இளைஞர்களையும் சாதாரணமானவர்களையும் அரிதாகப் பார்க்க முடிகிறது. டின் தொடர்பான செய்தி பரவலாக மக்களை சென்றடையவில்லை என்பதையே இது காட்டுகிறது. எனவே நீங்கள் காலை 8.30க்கு கொழும்பு தலைமையகம் அல்லது கிளை அலுவலகங்களுக்கு சென்றீர்களானால் அடுத்த ஒரு மணித்தியாலத்தில் படிவத்தை கையளித்துவிடலாம். மேலும் இரண்டு மணித்தியாலங்களுக்கு அங்கேயே ஒரு இருக்கையைப் பிடித்து அமர்ந்தீர்களானால் டின் இலக்கம் வழங்கப்பட்டுவிடும். டின் இலக்கத்துடன் ஒரு பின் இலக்கமும் தருவார்கள் அங்கேயே அமர்ந்திருக்க விரும்பாதவர்கள் வெளியே சென்று அலுவல்கள் முடித்துக் கொண்டு, மாலை நான்கு மணிக்கு முன் அலுவலகம் திரும்பினால் உங்கள் டோக்கன் இலக்கத்தை குறிப்பிட்டு இலக்கத்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஒன்லைனிலும் படிவத்தை நிரப்பி பதிவேற்றம் செய்தால் இலக்கம் உங்களை வந்தடையும்.

இந்த இலக்கம், நீங்கள் வீடு, காணியை வாங்கும், விற்கும் போது அவசியப்படும், வாகனங்களை வாங்கும் போது, பதிவு செய்யும் போது கேட்கப்படும். பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது கேட்கப்படும். எதிர்காலத்தில் மேலும் பல தேவைகளுக்கு இந்த வரி இலக்கம் உங்களுக்கு உபயோகமாக இருக்கும். வரி என்றால் என்ன என்பதை நம்மைவிட வெளிநாடுகளில் வசிப்பவர்கள் அறிவார்கள். அந் நாடுகளில் வரிகளை ஒழுங்காக அறவிட்டு விடுகிறார்கள். வரி அதிகம் அறவிடப்படுகிறது என்பதால் சில செல்வந்தர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி வரி அறவீடு குறைவாகக் காணப்படும் நாடுகளில் குடியேறுவதுண்டு.

இங்கிலாந்தில் வாழ்ந்த நகைச்சுவை நடிகர் சார்ளி சப்ளின் சுவிட்சர்லாந்தில் குடியேறி மரணித்ததும் அம்மண்ணில் தான். ஏனெனில் இங்கிலாந்தில் வரி அதிகமாம். ஆனால் வரி அறவீட்டில் கராறாக இருக்கும் நாடுகள் அல்லது மாநிலங்கள், வரிகள் மூலம் கிடைக்கும் பணத்தை கொள்ளையடிப்பதில்லை. விரயம் செய்வதில்லை. மக்கள் நலத் திட்டங்களாக அவற்றை திருப்பிச் செலுத்துகின்றன. தொழில் அற்றவர்களுக்கு சகாய நிதி. இலவச மருத்துவம், ஓய்வூதியம், முதியோர் கவனிப்பு என திருப்பி வழங்கப்படுகிறது. வரிகளை ஒழுங்காக அறவிட முடியுமானால் இலங்கையிலும் மேம்பட்ட மற்றும் அர்த்தமுடைய சமூக நலத் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தலாம்.

எனவே வரி அறவீடு, ஏன் டின் நம்பர் முதன்மைபடுத்தப்படுகிறது என்பதை மக்கள் மத்தியில் மேலும் தெளிவுபடுத்தப்பட வேண்டும். டின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் அலுவலகங்கள் போதியனவாக இல்லை. இப்பணி பிரதேச செயலகங்களுக்கு விஸ்தரிக்கப்பட்டால் மட்டுமே கிராமவாசிகளை இச் செயலகங்களுக்கு அழைத்தவர முடியும்.

-அருள் சத்தியநாதன்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division