Home » டிஜிட்டல் மயமாகும் போக்குவரத்துத் துறை

டிஜிட்டல் மயமாகும் போக்குவரத்துத் துறை

பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு!

by Damith Pushpika
January 14, 2024 6:51 am 0 comment

தற்போது நாம் முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு நேரடியாகவே தாக்கத்தைச் செலுத்தும் காரணிகளிடையே பிரதான துறையாக போக்குவரத்துத் துறையைக் குறிப்பிட முடியும். தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமாயின் போக்குவரத்துத் துறையில் பாரிய மாற்றங்களைச் செய்ய வேண்டியது அத்தியாவசியமானதாகும். நிலையான அபிவிருத்தி மூலோபாயத்தின் கீழ் இந்தச் செயற்பாட்டை எவ்வாறு அர்த்தமுள்ளதாக்கிக் கொள்வது என்பது தொடர்பில் இத்துறையில் பரந்த அனுபவங்களைக் கொண்ட மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் விநியோக தொடர் கற்கைகள் திணைக்களத்தின் பேராசிரியர் அமல் குமாரகே தெரிவித்த கருத்துக்களிலிருந்து இக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.

மொரட்டுவை பல்கலைக்கழக போக்குவரத்து முகாமைத்துவ மற்றும் 
விநியோக கற்கை நெறிப் பிரிவின் 
பேராசிரியர் அமல் குமாரகே.

மொரட்டுவை பல்கலைக்கழக
போக்குவரத்து முகாமைத்துவ மற்றும்
விநியோக கற்கை நெறிப் பிரிவின்
பேராசிரியர் அமல் குமாரகே.

நாட்டில் தற்போது அனைத்து மக்களும் பொருளாதார ரீதியாக மிகவும் கடினமான காலகட்டத்தை கடத்திக் கொண்டிருக்கின்றனர். எனவே, இந்த நிலையில் இருந்து எப்படி விரைவில் மீள்வது என்பது பலரது எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இது தொடர்பில் அவதானத்தைச் செலுத்தும் போது இதற்கு அடிப்படையாக அமைந்த பல காரணிகள் உள்ளன. இவற்றை அரசியல், பொருளாதாரம், சமூகம் என வகைப்படுத்தி அதற்கேற்ப தீர்வு காண்பது மிகவும் அவசியமாகும். இங்கு, நான் எனது கவனம் செலுத்தப்பட்டிருப்பது பொருளாதாரத்தை நேரடியாகப் பாதித்த ஒரு விடயத்திலாகும். அதுதான் இந்த நாட்டின் போக்குவரத்துத் துறையாகும். குறிப்பாக மக்களாகிய நாம் இடத்திற்கு இடம் பயணம் செய்ய விரும்புகிறோம். போக்குவரத்து என்பது அதற்குத் தேவையான வசதிகளை எவ்வாறு வழங்குவது என்பதற்கான கட்டமைக்கப்பட்ட முறையாகும். அதன்பிரகாரம் காலத்துக்குக் காலம், இத்துறை உள்நாட்டிலும், உலக அளவிலும் விரிவடைந்து முன்னேறி வருகிறது.

இதனடிப்படையில் நாம் பணத்தை ஈட்டுவதற்கும் அதேபோன்று பணத்தைச் செலவு செய்வதற்கும் போக்குவரத்து அவசியமாகும். இந்த இரண்டு செயல்பாடுகளுக்கும் இடையில் சமநிலையை பேணுவது அவசியமாகும். எனினும் கடந்த காலத்தை நோக்கும் போது இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வருடாந்தம் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணி செலவிடப்பட்டுள்ளது. அப்படியானால், செலவழித்த இந்த தொகைக்கு ஏற்ப நாம் வருமானத்தையும் ஈட்ட வேண்டும். ஆனால் பொருட்களை உற்பத்தி செய்து அவற்றை ஏற்றுமதி செய்வதன் மூலம் எம்மால் இந்த தொகையை நாம் சம்பாதிக்க முடியாது. எனவே, மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணியே இதற்கு செலவிடப்படுகிறது.

இவ்வாறு ஈட்டப்படும் அந்நியச் செலாவணியில் 8 சதவீதம் வாகனங்கள் மற்றும் உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்வதற்கு ஆண்டுதோறும் செலவிடப்படுகிறது. அதேபோன்று இதற்குத் தேவையான மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு ஆண்டுதோறும் 16 முதல் 17 சதவீதம் செலவிடப்படுகிறது. காரணம் ஒரு பெரல் மசகு எண்ணெய் விலை 80 முதல் 90 அமெரிக்க டொலர்கள் வரை உள்ளதாலாகும். அதன்படி, மசகு எண்ணெயின் விலை உயர்வு மற்றும் வீழ்ச்சியைப் பொறுத்து இந்த மதிப்பு வேறுபடும். அதேபோன்று நெடுஞ்சாலைகளை நிர்மாணித்தல் மற்றும் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் 3-4 வீத அன்னியச் செலாவணியை செலவிடுகிறோம். இதன்பிரகாரம் இலங்கைக்கு வருடாந்தம் இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் 25 முதல் 30 வீதம் வரை போக்குவரத்துத் துறைக்கே செலவிடப்படுகிறது. உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்த மதிப்பு மிக அதிகமாகும். இதற்கு பிரதான காரணமாக அமைந்திருப்பது நாட்டில் மோட்டார் வாகனங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை இல்லாததேயாகும்.

அப்படி இருந்தும் நாம் அதிகளவில் வாகனங்களை இந்நாட்டிற்குள் இறக்குமதி செய்யும் நாடாக ஆகியிருக்கின்றோம். தற்போது இலங்கையில் தனியார் வாகன உரிமையாளர்களின் எண்ணிக்கை 1000 பேரில் 257 ஆக உள்ளது. உலகின் அபிவிருத்தி அடைந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது, ​​4000 டொலருக்கும் குறைவான தனிநபர் வருமானத்தைக் கொண்ட நாடு என்ற வகையில், வாகனங்களை இறக்குமதி செய்வதில் நாம் அவர்களை விட முன்னால் இருக்கின்றோம். இதன்மூலம் எமது பொருளாதார மட்டத்தைத் தாண்டி நாம் வாகனங்களை வைத்திருப்பதாகத் தெரிகிறது. எனினும் எமது நாடு வாகனங்களை உற்பத்தி செய்யும் நாடு அல்ல. அத்துடன் மசகு எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடும் அல்ல. இவை அனைத்தையும் நாம் எமது அந்நியச் செலாவணியைச் செலவழித்தே இறக்குமதி செய்ய வேண்டும். அத்துடன் நெடுஞ்சாலைகளைப் பராமரிப்பதற்காக நாங்கள் பெறும் கடன் பணத்தையே செலவிடுகிறோம்.

அதன்பிரகாரம், எமது அந்நியச் செலாவணி பற்றாக்குறை பாதிக்கப்பட்டதன் முக்கியக் காரணம், இத்தகைய செலவினங்களைக் குறைக்க திட்டமிடாததேயாகும் என்பது தெரிகிறது. மறுபுறத்தில் எமது வருமானத்தை விடவும் செலவுகள் அதிகரித்த வாழ்க்கை முறையும் இதற்கு காரணமாக அமைந்துள்ளது. சமூகத்தில் வாழும் பெரும்பாலான மக்கள் தங்கள் சமூக பெறுமதியைக் கட்டியெழுப்புவதற்கு முயற்சிப்பது நெறிமுறையான வாழ்க்கையை நடத்துவதன் மூலம் அல்லாமல் விலையுயர்ந்த நுகர்வோர் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலமேயாகும். நாட்டுக்கு கிடைக்கும் டொலர் வருமானத்தில் அதிக சதவீதத்தை அதற்காக செலவிட வேண்டியுள்ளது. அவ்வாறு பார்க்கும் போது வாகனங்கள், வாகன உதிரிப்பாகங்கள், எரிபொருள் மற்றும் வீதிகளைப் பராமரிக்க என செலவிடப்படும் நிதி எமது உணவு, பால்மா, மருந்துகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களுக்குச் செலவிடப்படும் அந்நியச் செலாவணியை விடவும் அதிகமாகும்.

போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இந்த டிஜிட்டல் போக்குவரத்துத் துறை தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள நிலையில், இதற்கான புதிய கொள்கையை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பில் செயற்படுவதற்கு எனக்கும், இன்னும் சில நிபுணர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நாங்கள் இந்த பணிகளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு செயற்படும் போது, நாம் கண்டது போக்குவரத்தை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் நாம் மேலே குறிப்பிட்டுள்ள செலவை மிகக் குறைந்த நிலைக்கு கொண்டு வர முடியும் என்பதாகும். அதாவது போக்குவரத்து துறையை நாட்டின் பொருளாதாரத்தில் சுமையாக இல்லாமல் பராமரிக்க முடியும் என்பதாகும்.

இந்த டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறையை பொதுப் போக்குவரத்துக்காகப் பயன்படுத்துவது காலத்திற்குத் தேவையான ஒரு நடவடிக்கையாகும். இதன் மூலம் அதிக மக்களை ஈர்க்கக்கூடிய போக்குவரத்து சேவையை உருவாக்க முடியும். எனவே, டிஜிட்டல் பஸ் சேவையினை இத்திட்டத்தின் ஆரம்ப கட்டமாக முன்னெடுப்பது உத்தமம் என நாம் சுட்டிக்காட்டியுள்ளோம். எனினும் டிஜிட்டல் பஸ்களை மாத்திரம் ஈடுபடுத்தி இதனை முன்னெடுப்பது சிரமமானதாகும். டிஜிட்டல் பஸ்களுடன், பஸ் சேவையை நவீனமயப்படுத்துவதும் அவசியமானதாகும். டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கால அட்டவணையினைப் பார்த்துக் கொள்ளுதல், உரிய நேரத்திற்கு பஸ்கள் வருவது, ஒழுக்கமுள்ள பணியாளர்கள், வீதியில் போட்டித் தன்மையுடன் பயணிக்காமை போன்ற விடயங்களும் இதனுடன் மாற்றமடைய வேண்டும். நாம் இப்போதுள்ள முறையிலேயே வாகனங்களை இறக்குமதி செய்து, அவற்றை பெட்ரோலுக்குப் பதிலாக மின்சாரத்தில் இயங்கக் கூடியதாக இருந்தால், எரிபொருளுக்கான செலவைக் குறைத்துக் கொண்டாலும், வாகனங்கள் மற்றும் அதற்கான உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்வதற்குமான செலவை வழமைபோலவே செய்ய வேண்டியிருக்கும். அதேபோன்று வாகன நெரிசல்களின் போது ஏற்படும் எரிபொருள் எரிப்பு மற்றும் கார்பன் வெளியேற்றம் அவ்வாறேதான் இருக்கும். எனவே, பெற்றோல் வாகனங்களை மின்மயமாக்குவதை விட அதன் நன்மைகளை முழுமையாகப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் முழுமையாகவே மின்சார போக்குவரத்திற்கு செல்ல வேண்டும்.

மறுபுறம் பொதுப் போக்குவரத்துச் சேவையிலிருந்து விலகி சொந்த வாகனங்களைப் பெற்றுக் கொள்வதற்கு காட்டும் அக்கறையை இங்கு மாற்றத்திற்கு உட்படுத்த வேண்டும். மேல் மாகாணத்தினுள் மக்கள் சனத்தொகை அடர்த்தியைக் கருத்தில் கொள்ளும் போது, போக்குவரத்துத் துறையில் சுமார் 60 வீதமானது பொதுப் போக்குவரத்தாக இருக்க வேண்டும். ஏனெனில் மக்கள் தொகை அடர்த்தி அதிகரிக்கும் போது சிறந்த பயணிகள் சேவையை வழங்குவது எளிதாகும்.

வாகனம் இருப்பவர்களாக இருந்தாலும் சிறந்த பொதுப் போக்குவரத்துச் சேவை ஒன்று இருக்குமாயின் தனது வாகனத்தைச் செலுத்திக் கொண்டு கொழும்பு நகருக்குச் செல்வதற்கு விரும்பமாட்டார்கள். இதற்கு காரணம் தற்போதைய வாகன நெரிசல்களில் சிக்கி, வாகனத்தை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்கான தரிப்பிடங்களைத் தேடி அலைவதை விட இந்த பொதுப் போக்குவரத்து இலகுவானதாக இருப்பதேயாகும்.

எனினும் உரிய நேர காலத்தில் வருவதற்கும் போவதற்கும் பொதுப் போக்குவரத்துச் சேவை இல்லாத காரணத்தினால்தான் அவர்கள் அவ்வாறான சிரமங்களையும் தாங்கிக் கொண்டு தமது வாகனங்களில் கொழும்புக்கு கொண்டு வருகின்றார்கள். இந்த நிலைமையை மாற்றுவதற்காக தரமானதாக பொதுப் போக்குவரத்துச் சேவையை புதிய முறையில் ஆரம்பித்தால் வாகன நெரிசல், காபன் வெளியீடு, போக்குவரத்திற்காகச் செலவாகும் பணம் என்பன குறைவடைவதோடு, மனித உறவுகளும் இதனை விடவும் மேம்படும்.

2000ஆம் ஆண்டு ஆரம்பத்தில் 70 வீதமாக இருந்த பொதுப் போக்குவரத்துப் பெறுமானம் தற்போது வரலாற்றில் முதற்தடவையாக 39 வீதமாகக் குறைவடைந்துள்ளது. இவ்வாறான நெருக்கடியினுள் நாம் இன்று வீழ்ந்திருப்பதற்கான காரணமாக இருப்பது இவ்வாறான நிலைமைகளை உரிய முறையில் முகாமைத்துவம் செய்யாமையாகும். எனினும் இந்த புதிய மூலோபாயத்தின் ஊடாக உள்நாட்டுக் கைத்தொழிலைக் கட்டியெழுப்புவதற்கு எமக்கு வாய்ப்பு கிடைக்கின்றது.

ரசிக கொட்டுதுரகே தமிழில் எம். எஸ். முஸப்பிர்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division