காஸா மீது இஸ்ரேல் யுத்தத்தை ஆரம்பித்து இன்று 07 ஆம் திகதியுடன் மூன்று மாதங்கள் நிறைவடைகின்றன. இந்நிலையில், மூன்று மாதங்கள் நிறைவடைவதற்கு சில தினங்களுக்கு முன்னர், அதாவது டிசம்பர் 31 ஆம் திகதி காஸாவில் இருந்து ஐந்து படைப்பிரிவுகளை இஸ்ரேல் வாபஸ் பெற்றுள்ளது. 460 ஆவது கவசப்படை, 261 ஆவது படை, 828 ஆவது படை, 14 ஆவது ரிசர்வ் கவசப்படை, 551 ஆவது துணைப்படை ஆகியனவே வாபஸ் பெறப்பட்டுள்ள படைப்பிரிவுகளாகும்.
இஸ்ரேலின் இந்நடவடிக்கை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பில் இஸ்ரேல் விடுத்துள்ள அறிக்கையில், ‘2024 இல் நீண்ட சண்டைக்கான முன்னறிகுறிகள் உள்ளன. அதனால் ரிசர்வ் படையில் இணைந்தவர்கள் தங்கள் வழமையான பணிகளுக்குத் திரும்பி, நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும் வகையில் அவர்கள் அனுப்பப்படுகின்றனர்’ என்று குறிப்பிட்டுள்ளது.
இதன்படி காஸா மீதான யுத்தம், இஸ்ரேலின் பொருளாதாரத்தில் எவ்வளவு தூரம் தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்பது தெளிவாகிறது. அதன் விளைவாகவே இப்படைப்பிரிவுகள் மீளப்பெறப்பட்டு அவற்றில் இணைந்திருந்த ஆயிரக்கணக்கானவர்கள் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் பணிக்கு அனுப்பப்படுகின்றனர்.
காஸா மீதான போரில் பங்குபற்றவென ரிசர்வ் படையையும் இஸ்ரேல் திரட்டியது. அதற்கு ஏற்ப 3 இலட்சத்து 60 ஆயிரம் பேர் தத்தமது தொழில்களை கைவிட்டு யுத்தத்தில் ஈடுபடச் சென்றனர்.
அதன் ஊடாக நிரந்தப் படையினர் உட்பட ரிசர்வ் படையையும் உள்ளடக்கிய மூன்று இலட்சம் படையினரைக் கொண்டு யுத்தம் முன்னெடுக்கப்பட்டது. 365 சதுர கிலோ மீற்றர் பரப்பைக் கொண்ட காஸாவைச் சுற்றிவளைத்து வான்வழித் தாக்குதலோடு ஆரம்பமான இப்போர் ஆகாயம், தரை, கடல் என மூன்று வழிகளின் ஊடாகவும் மூன்று மாதங்களாக முன்னெடுக்கப்படுகின்றது.
இப்போரினால் இற்றைவரையும் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
இப்போரில் இஸ்ரேல் காஸாவை கடுமையாகத் தாக்கியழித்து வருகின்ற அதேநேரம், ஹமாஸும் இஸ்ரேல் பகுதிகளுக்குள் ஏவுகணைகளை வீசிக்கொண்டிருக்கின்றது. அத்தோடு காஸா மீதான யுத்தத்தை நிறுத்தி அம்மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தங்குதடையின்றிச் செல்ல இடமளிக்குமாறு கோரி லெபனானின் ஹிஸ்புல்லாக்களும், யெமனின் கௌதிக்களும் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்துகின்றனர்.
இப்போரினால் காஸா சாம்பல் மேடாகி வருகின்ற அதேநேரம், இஸ்ரேலின் பொருளாதாரம் பாரிய அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளதாக அந்நாட்டு பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இப்போர் எதிர்பார்த்ததை விடவும் கடுமையாக அமைந்துள்ளதாக அந்நாட்டு மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டிருக்கின்றார்.
இப்போரில் பங்குபற்ற இஸ்ரேல் விடுத்த அழைப்புக்கேற்ப அந்நாட்டின் 03 இலட்சத்து 60 ஆயிரம் ரிசர்வ் படையினர் யுத்தத்தில் கலந்து கொள்ள வந்தனர். இது அந்நாட்டு தொழிலாளர் படையில் 10 முதல் 15 சதவீதத்தினர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக இஸ்ரேலின் உற்பத்தி, சேவைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் 8 வீத தொழிலாளர் இழப்புக்கு முகம்கொடுத்துள்ளன. அதேநேரம் காஸா மீதான யுத்தத்திற்கு முன்னர் இஸ்ரேலில் தொழில் புரிந்து வந்த ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்களுக்கு இனிமேல் தொழில் வழங்குவதில்லை என நிலைப்பாட்டை இஸ்ரேல் எடுத்துள்ளது. இதனால் பாரிய தொழிலாளர் பற்றாக்குறையை இஸ்ரேல் எதிர்கொண்டுள்ளது.
02 இலட்சம் முதல் 02 இலட்சத்து 50 ஆயிரம் வரையான தொழில்கள் இன்னும் வெற்றிடமாகவே உள்ளன. இதனால் இஸ்ரேலின் சேவைகள் மற்றும் உற்பத்தித் துறையில் வீழ்ச்சிகள் ஏற்பட்டுள்ளதோடு வர்த்தகத் துறையிலும் பெரிதும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறு பெருந்தொகை தொழிலாளர்கள் திடீரென பணிகளில் இருந்து வெளியேறுவதன் ஊடாக ஏற்படக்கூடிய வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவது என்பது சாத்தியமானதல்ல.
இப்பின்னணியில் அந்நாட்டு மத்திய வங்கியின் ஆளுநர் அமிர் யரன், இப்போர் பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய அதிர்ச்சி என்றும், எதிர்பார்க்கப்பட்டதை விடவும் விலை அதிகம் என்றும் கூறியுள்ளதோடு, குறுகிய மற்றும் நீண்ட காலத்தில் கடுமையான விளைவுகளை இப்பொருளாதாரத் தாக்கம் ஏற்படுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த யுத்தத்தினால் 58 பில்லியன் டொலர்களுக்கும் மேற்பட்ட இழப்பு இற்றைவரையும் இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான நிலையில் காஸாவிலிருந்து வாபஸ் பெறப்பட்ட படைப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களை அவர்களது வழமையான பணிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவத்தினர் கூறியுள்ளனர்.
காஸா மீது யுத்தம் ஆரம்பமானது முதல் இஸ்ரேலிலும் அச்சம் நிலவி வருகின்றது. அதனால் சுமார் 5 இலட்சம் பேர் இஸ்ரேலை விட்டு வெளியேறியுள்ளதாக அந்நாட்டு சனத்தொகை மற்றும் குடியகல்வு அதிகார சபை தெரிவித்துள்ளது. அதேநேரம் இஸ்ரேலில் பணிபுரியும் வெளிநாட்டவர்களில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அச்சம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு வெளியேறியுள்ளவர்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தாய்லாந்து நாட்டினராவர்.
மேலும் இஸ்ரேலின் சுற்றுலாத் துறையிலும் இப்போர் தொடங்கிய முதல் மாதமே 76 வீத வீழ்ச்சி ஏற்பட்டதால், 89700 உல்லாசப் பயணிகள் வருகை தந்துள்ள அதேநேரம், நவம்பர் மாதம் வெறும் 38 ஆயிரம் உல்லாசப் பயணிகளே வந்துள்ளனர் என்று இஸ்ரேலின் புள்ளிவிபரவியல் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை இஸ்ரேலுக்கு தினமும் சுமார் 500 விமானங்கள் வந்து செல்வது வழக்கம். ஆனால் இப்போர் ஆரம்பித்த பின்னர் விமான சேவைத்துறையில் 80 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதோடு, சிவில் விமான சேவை நிறுவனங்கள் பலவும் இஸ்ரேலுக்கான விமான சேவைகளை மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தியுள்ளன. தற்போது சுமார் 100 விமானங்கள் அளவில்தான் தினமும் வந்து செல்வதாக இஸ்ரேலிய விமான சேவைகள் நிறுவனங்கள் கூறுகின்றன.
இவை இவ்வாறிருக்க, யெமனின் கௌதி படையினர் காஸா மீதான யுத்தத்தை நிறுத்தக் கோரி செங்கடல் வழியாக இஸ்ரேல் செல்லும் வர்த்தக் கப்பல்களுக்கும் இஸ்ரேலியர்களுக்குச் சொந்தமான வர்த்தகக் கப்பல்களுக்கும் தாக்குதல்களை நடத்துகின்றனர். அதனால் பல கப்பல் நிறுவனங்கள் இஸ்ரேலுக்கு பயணிப்பதை மறுஅறிவித்தல் வரை நிறுத்தியுள்ளதோடு, சில கப்பல்கள் மாற்றுவழிகளையும் பயன்படுத்துகின்றன.
கௌதிக்கள் இஸ்ரேலின் ஈழட் துறைமுகத்தின் மீதும் ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இதன் விளைவாக இத்துறைமுகம் பொருளாதார ரீதியில் பாரிய வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது. வருடத்திற்கு 95 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டும் இத்துறைமுகம், யுத்தம் ஆரம்பித்த முதல் மாதத்தில் மாத்திரம் 7 இலட்சம் கோடி ரூபா நஷ்டத்தை எதிர்கொண்டதாக துறைமுகத்தின் பணிப்பாளர் இடியோட் கோல்ட்பெக் அந்நாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். இத்துறைமுகத்திலும் ஆயிரக்கணக்கானவர்கள் தொழில்களை இழந்துள்ளனர்.
இஸ்ரேலுக்குத் தேவையான பொருட்கள் சேவைகளில் 70 சதவீதமானவை கடல் மார்க்கமாகவே பெறப்படுகின்றன. இந்நிலையில் கௌதிகள் இஸ்ரேலுக்கு பயணிக்கும் சரக்குக் கப்பல்கள் மேற்கொள்ளும் தாக்குதல் அச்சுறுத்தல்கள் காரணமாக கப்பல் காப்புறுதிக் கட்டணங்களை கப்பல் கம்பனிகள் அதிகரித்துள்ளன. அதன் விளைவாக இஸ்ரேலில் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.
சிறு தொழிலுக்கு வழங்கும் கடன்களை 8 சதவீதமாக இஸ்ரேலிய வங்கிகள் குறைத்துள்ளன. கட்டட நிர்மாணத்துறை மற்றும் உணவு வழங்கல் துறையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இப்போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள துறைகளில் தொழில்நுட்பத் துறையும் ஒன்றாகும்.
காஸா மீதான போரினால் இவ்வாறான பாரிய பொருளாதார இழப்புக்களையும் பாதிப்புக்களையும் சந்தித்து வருகின்ற இஸ்ரேல், நாளொனறுக்கு 220 மில்லியன் அமெரிக்க டொலர்களை யுத்தத்திற்காக செலவிடுகிறது. அத்தோடு யுத்ததாங்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 14 ஆயிரம் ஷெல்களை 106 மில்லியன் டொலர்களுக்கு டிசம்பர் 09 ஆம் திகதி கொள்வனவு செய்த இஸ்ரேல், m107 155mm projectiles and related equipments ஆயுத தளவாடங்களை டிசம்பர் மாத இறுதிப்பகுதியில் 147.4 மில்லியன் டொலர்களுக்கு அமெரிக்காவிடமிருந்து அவசர தேவையின் நிமித்தம் கொள்வனவு செய்துள்ளது.
இஸ்ரேலின் யுத்த செலவில் ஏற்பட்டுள்ள அபரிமித அதிகரிப்பு அந்நாட்டு மக்கள் மத்தியில் எதிர்மறையான கருத்துக்களையும் ஏற்படுத்தியுள்ளது. இப்போர் நீடிப்பதானது இஸ்ரேலைப் பொருளாதார ரீதியில் அதல பாதாளத்தில் தள்ளிவிடக்கூடிய அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது.
மர்லின் மரிக்கார்