Home » 2024 எப்படி?

2024 எப்படி?

by Damith Pushpika
January 7, 2024 6:59 am 0 comment

புத்தாண்டில் சர்வதேச விளையாட்டு அரங்கில் இலங்கைக்கு மிகவும் எதிர்பார்ப்புக் கொண்டு இரு போட்டி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. ஒன்று அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் டி20 உலகக் கிண்ணப் போட்டி நடைபெறவிருப்பதோடு மற்றது பாரிஸ் ஒலிம்பிக் போட்டி இடம்பெறவுள்ளது.

டி20 உலகக் கிண்ணத்தைப் பொறுத்தவரை இலங்கை கிண்ணத்தை வெல்வது தொடர்பில் ஓரளவுக்கேனும் எதிர்பார்க்க முடியும் என்றபோதும் ஒலிம்பிக் போட்டி என்று வரும்போது இலங்கை பதக்கம் ஒன்றை வெல்வதென்பது கனவு தான். கடந்த 24 ஆண்டுகளில் சுசந்திகா ஜயசிங்கவுக்குப் பின் யாரும் பாதக்கம் ஒன்றை வென்றதில்லை.

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை 2023 ஆம் ஆண்டு சாதகங்களை விடவும் பாதகங்கள் தான் அதிகமாக இருந்தன. போட்டிகளில் தோல்வி, மைதானத்திற்கு வெளியில் தடை என்று ஆண்டு நீடித்தது. அதுவே 2024 ஆம் ஆண்டில் அதிரடி மாற்றங்களுடன் இலங்கை அணி களமிறங்கும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

புதிய தேர்வுக் குழு, பயிற்சிக் குழாத்தில் மாற்றம், புதிய ஆலோசகர் என்று கட்டமைப்பே மாறிவிட்டது. ஒருநாள் அணிக்கு குசல் மெண்டிஸும், டி20 அணிக்கு வனிந்து ஹசரங்கம் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். சற்றுத் தாமதமாக டெஸ்ட் அணியின் புதிய தலைவராக தனஞ்சய டி சில்வா நிமிக்கப்பட்டார்.

எப்போதும் போல், இந்த ஆண்டும் இலங்கை அணிக்கு அதிக வேலைப்பலு கொண்ட ஆண்டாகவே இருக்கிறது. மொத்தம் 10 டெஸ்ட் போட்டிகள், 21 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 21க்கும் மேற்பட்ட டி20 சர்வதேச போட்டிகளில் இலங்கை அணி இந்த ஆண்டில் ஆடவுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணி உள்நாடு மற்றும் வெளிநாட்டு தொடர்களில் ஆடுகின்றபோதும் அனைத்துப் போட்டிகளும் 2023–2025 டெஸ்ட் சம்பியன்சிப் பருவத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதால் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது. அதன் புள்ளிகள் அடிப்படையிலேயே 2025 ஜூன் மாதத்தில் லண்டன் லோட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும்.

இலங்கை அணி டெஸ்ட் சம்பியன்சிப் புள்ளிப்பட்டியலில் இதுவரை ஆடிய இரண்டு போட்டிகளிலும் தோற்று புள்ளிகள் இன்றி கடைசி இடமான ஒன்பதாவது இடத்திலேயே உள்ளது.

இதில் எதிர்வரும் ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவது இந்த ஆண்டில் இலங்கை அணி முகம்கொடுக்கும் முக்கிய டெஸ்ட் தொடராகக் கருதலாம்.

இலங்கை டெஸ்ட் அணி ஸ்திரமானது என்றபோதும் புதிய தேர்வாளர்களின் வருகை மற்றும் புதிய அணித் தலைவரின் நியமனம் அணியில் எவ்வாறான தாக்கத்தை செலுத்தும் என்று உடன் கணிக்க முடியாது.

வரும் பெப்ரவரியில் இலங்கை வரும் ஆப்கானிஸ்தான் அணி இலங்கையுடன் ஆடவுள்ள ஒரு டெஸ்ட் போட்டியே இலங்கை இந்த ஆண்டில் ஆடும் முதல் டெஸ்ட் போட்டியாக அமையும். அப்போதே இலங்கையின் புதிய டெஸ்ட் அணித் தலைவரின் கீழ், அணியின் கட்டமைப்பு எவ்வாறு இருக்கும் என்று முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். டெஸ்ட் அணியின் உப தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்த ஆண்டு பெரிதாக முக்கியமான ஆண்டாக இல்லை. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இரு தரப்பு ஒருநாள் தொடர்களிலேயே இலங்கை அணி ஆடப்போகிறது.

இதில் வரும் ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் இந்திய அணி இலங்கை வரப்போவது முக்கியமானது. அப்போது இலங்கை மற்றும் இந்திய அணிகள் மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடவுள்ளன.

அண்மைக் காலத்தில் வேறு எந்த அணியை விடவும் இந்தியாவுக்கு முன் இலங்கை அணி கூனிக் குறுகுவதை பார்க்க முடிகிறது. ஒருநாள் போட்டி ஒன்றில் கடைசியாக இந்தியாவை வீழ்த்தி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. கடைசியாக ஆடிய ஆறு போட்டிகளிலும் தோல்விகளே மிச்சம். அதிலும் கடந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி 100 ஓட்டங்களைக் கூட பெறாமல் படு தோல்வியை சந்தித்தது.

எனவே இந்தியாவுடனான இந்த ஒருநாள் தொடர் இலங்கை அணிகயின் தரத்தை மதிப்பிடுவதற்கான ஓர் அளவுகோலாகப் பார்க்கலாம்.

இந்த ஆண்டு டி20 உலகக் கிண்ணப் போட்டி நடைபெறவிருப்பதால் டி20 கிரிக்கெட் முக்கியமானது. எதிர்வரும் ஜூன் 4 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 30 ஆம் திகதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் டி20 உலகக் கிண்ணப் போட்டி நடைபெறப்போகிறது.

அதற்கு முன்னர் இலங்கை அணி சிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுடன் மொத்தமாக 6 டி20 போட்டிகளில் ஆடும். புதிய அணித் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் வனிந்து ஹசரங்கவின் தலைமையின் கீழ் இலங்கை அணியின் செயற்பாட்டை மதிப்பிட இந்த ஆறு போட்டிகளைத் தான் பார்க்க வேண்டும்.

ஒருநாள் போட்டி போலன்றி டி20 கிரிக்கெட் என்பது அதிரடி மாற்றங்களைத் தரக் கூடியது. எனவே, இலங்கை அணிக்கும் உலகக் கிண்ணத்தை வெல்வதற்கான வாய்ப்பு மற்ற அணிகளைப் போன்றே சாதகமாக உள்ளது.

பங்களாதேஷுக்கு எதிராக இலங்கை அணி இந்த ஆண்டில் முழுமையான கிரிக்கெட் தொடர் ஒன்றில் ஆடப்போகிறது. எதிர்வரும் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 2 டெஸ்ட் மற்றும் தலா 3 ஒருநாள், டி20 போட்டிகளில் ஆடும். இதுவே இந்த ஆண்டில் இலங்கை அணி ஆடும் ஒரே ஒரு முழுமையான சுற்றுத் தொடராக இருக்கும்

மறுபுறம் 2023 ஆம் ஆண்டில் தடகள போட்டிகளில் இலங்கை அணி ஓரளவுக்கு சோபித்த நிலையில் இந்த ஆண்டிலும் பதக்கங்களை குவிக்கும் என்று எதிர்பார்க்கலாம். குறிப்பாக இளம் ஓட்ட வீராங்கனை தரூஷி கருணாரத்ன மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் உட்பட இலங்கை மெய்வல்லுனர்கள் இந்த ஆண்டில் மொத்தம் 28 சர்வதேச போட்டிகளில் பங்கேற்கலாம். என்றாலும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பது என்பது போட்டிகளின் முக்கியத்துவம் மற்றும் பதக்கம் வெல்வதற்காக சாத்தியம் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி எதிர்வரும் ஜூலை 26 ஆம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் 11 ஆம் திகதி வரை நடைபெறும். கடந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் இளம் வீராங்கனை தரூஷி தங்கம் வென்றபோதும் ஒலிம்பிக் மட்டத்தை எட்டுவதற்கு அது போதுமானதா? என்ற கேள்வி இருக்கிறது.

என்றாலும் அவருக்கு இன்னும் வயது இருப்பதால் தரூஷி மீதான எதிர்கால எதிர்பார்ப்பே அதிகம் உள்ளது.

எனினும் இலங்கையின் குறுந்தூர ஓட்ட வீரர் யுபுன் அபேகோன் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. தெற்காசியாவின் அதிவேக வீரரான யுபுனுக்கு 2023 ஆம் ஆண்டு பெரும் பின்னடைவை சந்தித்த ஆண்டாக மாறிவிட்டது.

கடந்த ஆண்டில் அவர் பிளோரன்ஸ் டயமன்ட் லீக், சவோனா கிராண்ட் பிரிக்ஸ், பாங்கொக் ஆசிய சம்பியன்சிப், புடபெஸ்ட் உலக சம்பியன்சிப் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டி என்று காயத்தால் முக்கிய போட்டிகளை இழந்துவிட்டார். இது அவரின் ஓட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது மாத்திரமல்ல ஒலிம்பிக் தகுதிக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தும்.

அதாவது பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடி தகுதியை பெறுவதற்கு உலக தரநிலையில் அபேகோன் 10.00 விநாடி அல்லது அதற்கு குறைவான காலத்தில் 100 மீற்றர் ஓட்டத்தை பூர்த்தி செய்திருக்க வேண்டும். என்றாலும் இந்தப் புள்ளியை எட்டுவதற்கு இந்த ஆண்டில் அவருக்கு இன்னும் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் தான் பங்கேற்க முடியுமாக இருக்கிறது.

என்றாலும் ஒலிம்பிக்கின் ஆடவருக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டி என்பது ஒட்டுமொத்த ஒலிம்பிக் விளையாட்டினதும் உச்சம். அதில் உலக அரங்கில் அதிக திறமையை வெளிப்படுத்தும் வீரர்களுக்கே இடமுண்டு. ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஆசிய வீரர்கள் ஒரு சிலர் தான் அதுவரை முன்னேறுவார்கள். எனவே அபேகோன் முன்னிருக்கும் சவால் என்பது இலகுவானதல்ல.

அதேபோன்று இலங்கையின் ஆடவர் மற்றும் கலப்பு 400 மீற்றர் அஞ்சலோட்ட அணிகளையும் ஒலிம்பிக்கில் பங்கேற்கச் செய்யவும் எதிர்பார்ப்பு உள்ளது. அதற்காக இந்த அணிகளை எதிர்வரும் மே 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் பஹாமாஸில் நடைபெறும் உலக அஞ்சலோட்ட சம்பியன்சிப் போட்டிகளில் பங்கேற்கச் செய்ய இலங்கை தடகள சம்மேளனம் திட்டமிடுகிறது.

அதாவது ஒலிம்பிக் தகுதிப் புள்ளியை பெறும் நோக்கத்திற்காகவே இந்த இரு அணிகளும் பஹாமாஸ் செல்லவுள்ளன. ஒலிம்பிக் நுழைவதற்கான தரத்தை காண்பிப்பதற்கான இறுதித் திகதி எதிர்வரும் ஜூலை 31 உடன் முடிகிறது. அதேபோன்று எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் பெரு நாட்டில் நடைபெறவுள்ள உலக இளையோர் மெய்வல்லுனர் போட்டி மற்றும் லஹூரில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் சாஃப் விளையாட்டுப் போட்டியும் இந்த ஆண்டில் இலங்கைக்கு முக்கியமானது. இதில் 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடத்த முடியாமல் போயிருக்கும் சாஃப் விளையாட்டுப் போட்டி இந்த ஆண்டிலும் 2025 வரை பிற்போடப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

சர்வதேச போட்டிகளுக்கு தயார்படுத்தும் வகையில் உள்நாட்டில் இந்த ஆண்டில் 11 மெய்வல்லுனர் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. எதிர்வரும் பெப்ரவரி 18 ஆம் திகதி நடைபெறும் தேசிய நடைப்போட்டியுடன் இந்த ஆண்டின் உள்ளுர் மெய்வல்லுனர் போட்டிகள் ஆரம்பமாகிறது.

இதில் 102 ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டி ஜூன் மாதத்திலும், 48ஆவது தேசிய விளையாட்டுப் போட்டி ஓகஸ்ட் மாதத்திலும் நடைபெறவுள்ளன.

ஆசிய இளையோர் (20 வயதுக்கு உட்பட்டது) மெய்வல்லுனர் போட்டியை இலக்கு வைத்து மார்ச் 1 ஆம் திகதி தொடக்கம் 3 ஆம் திகதி வரை தியகம மஹிந்த ராஜபக்‌ஷ அரங்கிலும், உலக இளையோர் மெய்வல்லுனர் போட்டியை இலக்கு வைத்து ஜூன் 7 தொடக்கம் 9 ஆம் திகதி வரை கொழும்பு, சுகததாச மைதானத்திலும் இறுதித் தேர்வுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

2024 மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி கால அட்டவணையில் இந்திய, ஐரோப்பிய மற்றும் ஜப்பான் கிரோன் பிரீ போட்டிகள் பலதும் உள்ளடக்கப்பட்டுள்ளன. 2018 ஆம் ஆண்டு கடைசியாக நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

2023 ஆம் ஆண்டு இலங்கை கால்பந்து தடையுடனேயே முடிந்தது. தடைகளும், தேர்தல்களும் என்று நீண்ட கடந்த ஆண்டில் இலங்கை தேசிய அணி இரண்டே இரண்டு சர்வதேச போட்டியில் யெமனுக்கு எதிராக ஆடி ஒன்றில் தோற்று மற்றதை சமன் செய்தது.

எனவே, 2024 ஆம் ஆண்டை இலங்கை கால்பந்தின் மீட்சிக்கான ஆண்டாக குறிப்பிடலாம். இலங்கை கால்பந்து அணியின் 2024 ஆம் ஆண்டுக்கான போட்டி அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும் இந்த ஆண்டில் இலங்கை கால்பந்து அணி மொத்தம் 6 சர்வதேச போட்டிகளில் ஆடவிருப்பதாக இலங்கை கால்பந்து சம்மேளம் கூறியது.

தவிர, வரும் ஓகஸ்ட் மாதத்தில் 20 வயதுக்கு உட்பட்ட தெற்காசிய கால்பந்து தொடர் இலங்கையில் நடத்தப்படவுள்ளது முக்கிய அம்சமாகும். எதிர்வரும் ஜுனில் நான்கு அணிகள் பங்கேற்கும் கால்பந்து தொடர் ஒன்றையும் நடத்த திட்டமிடப்படுகிறது. வழக்கம்போல உள்ளுர் கால்பந்து தொடர்களும் நடைபெறும்.

எது எப்படியோ தற்போது பெரும் வீழ்ச்சியை சந்தித்திருக்கும் இலங்கை கால்பந்து அணி பயணிக்க வேண்டி தூரம் நெடியது. அதற்கு 2024 ஆரம்பப் புள்ளியாக இருந்தால் நல்லது.

எஸ்.பிர்தெளஸ்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division