இலங்கையின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனமான டயலொக் ஆசியாட்டா (Dialog Axiata), இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் உத்தியோகபூர்வ அனுசரணையாளர்களாக தமது ஆதரவினை இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டுக்காக விரிவுபடுத்தியுள்ளது .
கடந்த ஒரு தசாப்தமாக இலங்கையின் விளையாட்டுத்துறைக்கு பல்வேறு வகைகளில் பங்களிப்புச் செய்து வருகின்ற டயலொக் ஆசியாட்டா நிறுவனம் மீண்டும் ஒரு தடவை தேசிய கிரிக்கெட் அணிக்கு அனுசரணையாளர்களாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
டயலொக் ஆசியாட்டா நிறுவனமானது இலங்கை கிரிக்கெட் அணியின் அனுசரணையாளர்களாக மாறிய விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கையின் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டுக்கு இந்த ஆதரவானது எண்ணற்ற வாய்ப்புக்கள் உருவாக வழிவகுக்கும் எனக் குறிப்பிட்டதோடு, டயலொக் நிறுவனம் கடந்த காலங்களில் இலங்கையின் விளையாட்டு வளர்ச்சியடைய பல்வேறு வழிகளில் உதவியிருந்ததையும் நினைவு கூர்ந்திருந்தார். டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) காணப்படும் சுபு வீரசிங்க புதிய அனுசரணை குறித்து கருத்து வெளியிட்டிருந்த போது, இலங்கை கிரிக்கெட்டுக்கு தாம் வழங்கும் இந்த ஆதரவு மூலம் நீண்ட காலமாக இலங்கை கிரிக்கெட்டுக்கு பங்களிப்புச் செய்திருந்தமையை பெருமையாக கருதுவதாக கூறியிருந்தார்.
டயலொக் நிறுவனமானது இலங்கை கிரிக்கெட் அணி மாத்திரமின்றி இலங்கை வலைப்பந்து, கரப்பந்து மற்றும் ஈ–ஸ்போர்ட்ஸ் (E- Sports) ஆகிய அணிகளுக்கும் அனுசரணையாளர்களாக செயற்பட்டு வருவதோடு தேசிய அளவில் நடைபெறுகின்ற பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளுக்கும் தங்களது பங்களிப்பினை வழங்கியிருந்ததும் சுட்டிக்காட்டத்தக்கது.